November 15, 2026
அரசியல் கட்டுரைகள்

ஜே.வி.பி. அரசாங்கத்தின் கடுமையான சட்டங்கள் மீதான நம்பிக்கையும் போலியான இடதுசாரிக் கொள்கையும்;?

இலங்கை தீவின் அரசியல் பௌத்தமதத்திற்கு உட்பட்டது என்பதை பௌத்தத் துறவிகளின் போராட்டம் உணர்த்துகிறது. இதுவே இலங்கை வரலாறும் முழுவதும் நிகழ்ந்து முடிந்தது. ஆட்சி மாற்றத்தை நோக்கி நகரும் எல்லாவகை உபாயங்களும் நெருக்கடி மிக்கதாக மாற்றப்படுகின்றது. ஆனால் அவை எதற்கும் நிரந்தர தீர்வு எட்டப்படுவதாக தென்படவில்லை. பௌத்த துறவிகள் தொடரும் போராட்டங்களை நிகழ்த்துவதன் மூலம் அரசாங்கத்தை தமது விருப்புக்கு உட்படுத்த முனைகின்றனர். என்பதும் இதன் மூலம் உணர முடிகின்றது. ஆனால் அரசாங்கமோ சட்டங்களுக்கு ஊடாகவே இவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று கருதுகின்றது. இது சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஓரம்சம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இக்கட்டுரையும் சட்டத்துக்கு உட்பட்ட தீர்வுகளை நோக்கிய இடதுசாரி அரசாங்கத்தின் போக்கினை மதிப்பீடு செய்வதாக உள்ளது.

முதலில் ஜே.வி.பி. அரசாங்கத்தின் அமைச்சர் வெளிப்படுத்திய கருத்தினை நோக்குவது அவசியமானது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைக் கட்டுப்படுத்துவதற்கு வலுவான சட்டங்கள் அவசியமெனவும். எந்தவொரு சட்டமூலமும் உடனடியாக நிறைவேற்றப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தமது கருத்துகளை முன்வைப்பதற்கும், நாடாளுமன்றக் குழுநிலை விவாதங்களின் போதும் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடும் போது நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் சர்வதேசத் தொடர்புகளைக் கொண்ட குற்ற வலைப்பின்னல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குக் கடுமையான சட்டங்கள் அவசியமாகின்றன என்றார். இவ்வாறு ஜே.வி.பி. முன்வைக்கும் உரையாடல்களின் உண்மை தன்மைகளையும் அதன் போக்கினையும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

முதலாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என தம்மைக் கூறிக் கொண்டாலும் அடிப்படையில் ஜே.வி.பி. அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. இது இடதுசாரி பண்பு கூடாக கட்டமைக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதனையே பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் வாக்களித்தோர் அது ஒரு சோசியலிஸ முகாமாகவே உரையாடல்களை முன்வைக்கின்றனர். ஆனால் அத்தகைய உரையாடல்களுக்கு பின்னால் இருக்கும் நடைமுறைகளை பார்த்தால் முழுமையாகவே முதலாளித்துவ கட்டமைப்புக்குள்ளும் தராளவாத அரசியலமைப்புக்குள்ளும் காணப்படுகிறது. அதன் பொருளாதார வடிவங்களும் அபிவிருத்தி உபாயங்களும் சட்டத்தின் தன்மைகளும்; அணுகுமுறைகளும் முற்றிலும் இடதுசாரிக் கொள்கைக்கு அப்பாற்றபட்டதாகவே தெரிகிறது. ஜே.வி.பி.இனர் இடதுசாரி; என்று கூறிக்கொண்டாலும் அதன் நடைமுறை அனைத்துமே முதலாளித்துவ தளத்தில் நின்று கொண்டு சமூகம் சார்ந்த விடயங்களை கடுமையான சட்டங்களுக்குள்ளால் மட்டுமே அணுகுகிறது. ஒரு நாடு ஆளப்படுவதற்கு சட்டத்தின் ஆட்சி அவசியமானது என்பது தாராண்மை ஜனநாயகம் கண்டறிந்த உயரிய அம்சமாகும். ஆனால் அத்தகைய உயரிய சட்டத்துக்கூடாக மட்டும் ஒரு நாட்டின் சமூகங்களை அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்திவிட முடியுமா என்ற பிரதானமான கேள்வி உள்ளது. அதுவும் இடதுசாரிகளிடம் அத்தகைய எண்ணங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படும். அவற்றின் உள்ளார்ந்த நியமங்கள் ஒன்றையும் கிராம மட்டத்தில் சமூக மட்டத்தில் தேசத்தின் கட்டமைப்பு மட்டத்திலிருந்து அது புரட்சிகரமான சிந்தனைகூடாக உருவாக்கப்பட வேண்டும். ஜே.வி.பி. அரசாங்கத்தை ஜனநாயக முறைப்படி கைப்பற்றிய பின்னரும் ஜனநாயகத்தின் மீதும் தாராண்மைவாதப் பொருளாதார சக்திகள் மீதும் முதலாளித்துவ பொருளாதார அணுகுமுறைகள் மீதும் அதிக நம்பிக்கை கொண்டதாகவே விளங்குகிறது. இதுவே ஜே.வி.பி. அரசாங்கத்தின் இடதுசாரி முகத்தின் பலவீனமான பக்கமாக உள்ளது.

இரண்டாவது இடதுசாரி முகங்களை கொண்ட உலக நாடுகளில் உற்பத்தி உழைப்பு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் போன்ற பல தாராள பொருளாதார முறைக்குள் இயங்கினாலும் அரசின் திட்டமிடல் ஒன்று ஆழமான பிரதிபலிப்பைத் தரக்கூடியதாக விளங்குகிறது. திட்டமிடல் என்பது முதலாளித்துவத்துக்கும் உரியது. தராண்மைவாதத்திற்கு உரியது. சோஸலிஸத்திற்கு தவிர்க்க முடியாததொன்றாகும். ஆனால் சோசஸலிஸ்டுகளின் திட்டமிடல் என்பது இலாபத்தை இலக்காக கொள்ளாது சமூக மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் மக்களின் அடிப்படை உணர்வுகளின் மட்டத்திலும் ஓர் ஆரோக்கியமான வளர்ச்சி ஒன்றுக்கான பின்புலம் கட்டமைக்கப்படும். அது விழிப்புணர்வு ஊடாகவும் புரட்சிகரமான எண்ணங்களுக்கு ஊடாகவும் வளர்த்தெடுக்கப்படும். உள்நாட்டினுடைய பொருளாதார உற்பத்தியை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வை புரட்சிகரமான அணுகுமுறை மூலம் சுதேச கட்டமைப்புக்களின் வலுவான வளர்ச்சியை சாத்தியப்படுத்தக் கூடியது. ஆனால் ஜே.வி.பி. யைப் பொறுத்தவரையில் அது ஏற்கனவே முதலாளித்துவ தாராள அரசாங்கங்கள்; கொண்டிருந்த இயல்பான நியமங்களுக்குள் தொடர்ந்து பயணிப்பதற்கு முனைகிறதாகவே தெரிகிறது. அதுவே இலகுவானதாக உள்ளது.

மூன்றாவது பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர குமாரதிஸநாயக்கா முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் சுதேச உற்பத்தி மீதான கவனத்தையும் சுதேச மக்கள் மத்தியில் சமமான வளப் பங்கீடு பற்றிய உரையாடல் எதனையும் முதன்மைபடுத்தவில்லை. மாறாக இலங்கையின் முதலாளித்துவ மார்க்கங்களைக் கொண்ட ஏற்றுமதி இறக்குமதியையும் அதனால் கிடைத்த வருமானங்களையும் முதன்மைப்படுத்தியுள்ளது. அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார விளைவுகள் பற்றிய உரையாடலே முக்கியம் பெற்றது. வரி தொடர்பில் மக்களிடம் வசூலிக்கப்பட்டவற்றின் தொகுப்பாகவே வரவு செலவுத் திட்டம் வாசிக்கப்படுகிறது. முதலாளித்துவத்தின் செல்நெறிகளை கட்டமைத்துக் கொண்டு தொழில்படுகின்ற ஒரு போக்கை உணர்த்துகிறது. வறுமையின் நிலை சமூக மட்டத்தில் மக்களின் நிலை உற்பத்தினுடைய அளவீடு சுதேச உற்பத்திக்கான வாய்ப்புகள் என்ற இடதுசாரி மரபின் உள்ளார்ந்த அடிப்படை அம்சங்கள் பெருமளவுக்கு வரவு செலவு திட்டத்தில் உரையாடப்படவில்லை. அவ்வாறாயின் ஜே.வி.பி. அரசாங்கம் ஓர் இடதுசாரி மரபுகளோடு செயல்படுகின்றது என்பதை எவ்வாறு முடிபாகக் கொள்வது. பொருளாதார திட்டமிடலை அது உள்வாங்வில்லை என்பதை வரவு செலவுத் திட்டம் படம் பிடித்து காட்டுகிறது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து காலம் முழுவதும் எந்த திட்டமடலையும் கொண்டுள்ளது என்பதைக் காட்டவில்லை. ஏற்கனவே இருந்த அரசாங்கங்களைப் போன்று இது செயல்படுகின்றது. இது ஒரு புரட்சிகரமான மாற்றத்தையோ ஒரு செழுமைமிக்க பொருளாதார கட்டமைப்பையோ திட்டமிடலையோ ஏற்படுத்தவில்லை. மக்களது வறுமை அதிகரித்திருக்கிறது. உற்பத்தியனுடைய அளவீடு பலவீனமடைந்துள்ளது. சமமற்ற வளப்பகிர்வு அதிகரிக்கின்றது. உள்நாட்டில் வன்முறைகளும் தீவிர மோதல்களும் முரண்பாடுகளும் அதீதமாக வளர்ந்திருக்கின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு சட்டம் தான் ஒரே மார்க்கம் என இந்த அரசாங்கம் கருதுகிறது. இது ஓர் இடதுசாரியாகவோ, சோஸலிஸமாகவோ, மார்க்ஸிஸமாகவோ கட்டமைக்கப்படவில்லை. மாறாக தாராள முதலாளித்துவத்தின் எச்சங்களை தீவிரமாக பின்பற்றுவதன் மூலம் அதனை சோசியலிசம் அல்லது இடதுசாரித்துவம் என்று விவாதிக்க முயற்சிக்கின்றது. இதனால் எத்தகைய மாற்றங்களும் புதியதாக தோன்றப்போவதில்லை.

நான்காவது சட்டத்திற்கு அப்பால் சமூகங்களை நல்லிணக்கத்துக்குரியதாகவும் உழைப்புக்குறியதாகவும் முதன்மைப்படுத்துவது அவசியமானது. 1949 ஆம் ஆண்டு சீனா புரட்சியினூடாக வெற்றி பெற்றது. அதன் பிற்பாடு தீபெத்தின் மீது படையெடுப்பை நிகழ்த்தியது. தீபெத்தின் மீதான படையெடுப்பின் போது தலைலாமாவின் ஆட்சியையும் அதற்கு காரணமான பிக்குகளையும் அழித்த ஒழிப்பதில் கம்யூனிஸ சீன எந்த தயவுதாட்சணியமும் பார்க்கவில்லை. அது பற்றி கம்யூனிஸ்ட்களின் மதிப்பீடு சீனாவின் வரலாற்றை, சீனாவின் உழைக்கும் வர்க்கத்தை, சீனாவின் புரட்சிகரமான மாற்றங்களை மதம் அழித்து ஒழித்து விடும் என்பதற்காகவே தீபெத் ஆட்சி முடிபுக்குக் கொண்டுவரப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் சீன மக்கள் தமது உழைப்பையும் தேசத்தின் மீதான பற்றுறுதியையும் முதன்மைப்படுத்துவார்கள் என்று சீன கம்யூனிஸத்தின் வரலாறு கூறுகின்றது.

எனவே சட்டத்தை மட்டும் முதன்மைப்படுத்திக் கொண்டு புரட்சிகரமான தேசத்தை கட்டி எழுப்ப முடியாது. புரட்சிகரமான தேசம் என்பது அந்த நாட்டின் அரசியல் சமூகம் பொருளாதாரம் பண்பாடு என்ற அடிப்படையில் அது மாற்றங்களை நோக்கி வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதனை வளர்த்தெடுக்கப்படுவதற்கான அணுகுமுறைகளை சட்டத்தினால் மட்டும் தீர்ப்பதை விட சமூக மட்டத்தில் கிராமிய மட்டத்தில் தேசாபிமானத்தை கட்டமைப்பதன் ஊடாக மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தேசம் கட்டி எழுப்பப்படவேண்டுமாயின் அந்த மக்கள் சட்டத்துக்குகட்டுப்படுவது என்பதை கடந்து தேசத்தின் மீதும் தனது உழைப்பின் மீதும் தனது வாழ்வியல் மீதும் வாழ்வியலுக்கான பண்பாட்டின் மீதும் கரிசனை கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செயல்பட தவறுகின்ற பட்சத்தில் அந்த தேசம் புதியதாக எழுச்சி பெற முடியாது. இலங்கையின் ஜனாதிபதி குறிப்பிடுவது போல் மகிழ்ச்சியான வாழ்க்கையும் சுபிட்சமான தேசமும் என்ற அந்த இலக்கு போலியான உச்சரிப்பாகவே அமையும்.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:தினக்குரல்)