சர்வதேச அரசியலின் போர்க்களம் நெருக்கடிமிக்க சூழலை எதிர்கொண்டுள்ளது. ரஸ்சியாவின் உக்ரையின்; மீதான போரும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்;ரேலியப்; கூட்டு தாக்குதலும்; தொடர்ந்து நகர முடியாத இக்கட்டுநிலைக்குள் அகப்பட்டுள்ளது. அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகள் திட்டமிட்டுத் தொடங்கிய இரு போர்களும் மேற்குலக நாடுகளின் உலகளாவிய அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது. இப் போர்களின் பிரதான உத்தியாக கடல் ஆதிக்கத்தை மேற்குலகம் இழந்து விடக்கூடாது என்பதற்கான போராகவே தொடங்கப்பட்டது. சீனாவின் கடலாதிக்கு எழுச்சியை எதிர்கொள்வதற்கு மேற்குலக நாடுகளுக்குள் மேற்கொண்ட நகர்வாகவே இரு போர்களும் தெரிகிறது. அத்தகைய பரிமாணத்துக்குள்ளேயே போரின் முனைப்பிற்கான அடிப்படைகள் காணப்பட்டன. இஸ்ரேலை முன்னிறுத்தி ஈரானையும் உக்ரையினை முதன்மைப்படுத்தி ரஸ்சியாவையும் எதிர்கொள்ள மேற்குலகம் நிகழ்த்திய போராகவே இரு போர்களும் அமைந்துள்ளன. இதில்; ஈரான்-சீன -ரஸ்சிய-வடகொரியா என்பனவற்றால் ஏற்பட்ட சவாலை முறியடிக்கும் உத்தியாகவே போர்கள் அமைந்திருந்தன.
உக்ரைன் மீதான போர் என்பது மேற்குலகத்தின் போராகவே தொடங்கப்பட்டது. அப்போது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் ஏற்பட்ட குழப்பம் மேற்கைரோப்பாவை மையப்படுத்தியதாக மாறியது. ரஸ்சியாவின் எழுச்சி உடனடியாகவே மேற்கு ஐரோப்பாவை பாதிப்பு உள்ளாக்கும் என்ற அடிப்படையிலே இப்போர் அரண்மைக்கப்பட்டது. ரஸ்சியா மீதான பொருளாதாரத் தடைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளும் அதிக மாற்றத்தை ஏற்படுத்தாதபோது உகரையினை ஒரு கருவியாக கொண்டு மேற்குலகம் திரட்சி பெற்று ஆள் யுத்தம் ஒன்றை (Proxy war) ரஸ்சியா மீது நிகழ்த்தியது. ஆனால் அப்போரின் போக்கு ரஸ்சியாவின் வலுவான புவிசார் அரசியலாலும் உலகளாவிய பொருளாதார இராணுவ மாற்றங்களாலும் ரஸ்சியாவின் இருப்பு வடிவமைக்கப்படும் நிலை தோற்றுவிக்கப்பட்டது. அது பெரஸ்ரொய்க்கா காலத்திலிருந்து ரஸ்சியா மீளமைக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவுகளே இன்றைய ஐரோப்பாவின் நெருக்கடிக்கும் உலக ஒழுங்கின் மாற்றத்துக்கும் பின்னால் இருந்த காரணியாகும். ஐரோப்பா போரை நேரடியாக எதிர் கொள்ளாது உக்கரையின் ஊடாக நகர்த்தி தோல்வி கண்டது. அதனால் மீளவும் ரஸ்சியாவை எதிர்கொள்ள கிழக்கை ஐரோப்பிய நாடுகளை தூண்டிவிட்டு ரஸ்சியா மீதான போரை நீடிக்கத் திட்டமிடுகிறது. அதற்கு அமைவாக ரஸ்சியாவின் அயல் நாடுகளை ஒன்றிணைத்து போர்ப் பயிற்சிகளும் ஆயுத தளபாடங்களையும் வழங்கி பலப்படுத்தி வருகிறது. போரை மேற்கு ஐரோப்பாவுக்குள் கொண்டு வராமல் தடுக்கும் சுவராக கிழக்கு ஐரோப்பாவை திட்டமிட்டு நிறுத்த மேற்கு ஐரோப்பிய ஆட்சியாளர்கள் முனைகின்றனர்.
பொருளாதார அழுத்தங்கள் தீவிரம் பெறுகின்ற போது ஐரோப்பா நெருக்கடிக்கு உள்ளாகத் தொடங்கியது. அண்மைய மாதங்களில் பிரான்சிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் எழுச்சி பெற்றுவரும் இளையோரின் போராட்டம் (Gen-Z) அதீத பொருளாதார நெருக்கடியின் பிரதிபலிப்பாக உருவானது என்பதை மறுக்க முடியாது. அதற்கு பின்னால் ரஸ்சியா-உக்ரையின் போர் பிரதான காரணமாகவே உள்ளது. ஐரோப்பாவின் நெருக்கடிக்குப் பின்னால் ரஸ்சியாவின் பெற்றோலியத்தின் மீதான தடைகளும் காரணமாக கொள்ளப்படுகிறது. இதன் விளைவுகளை ஐரோப்பியர்கள் மட்டுமின்றி ஐரோப்பாவில் தங்கி இருக்கும் உலக நாடுகளும் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கால பகுதியில் ஐரோப்பாவுக்கு மாற்றான மேற்குலகத்துக்கு மாற்றான சக்திகளின் எழுச்சி தென்பூகோள நாடுகளின் பொருளாதார சமூக இருப்பை புதிதாக கட்டமைப்பதில் வெற்றி பெற்று வருகின்றன. ஆனால் ரஸ்சியா-உக்ரையின் மீதான போரை தற்காலிகமாக முடிபுக்கு கொண்டுவர ஐரோப்பா எடுத்த சமாதான முயற்சியை ரஸ்சியா முறையடித்ததோடு நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றுக்கான நடவடிக்கை வலியுறுத்தி வருகிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளின் தூண்டுதலின் விளைவாக சமாதானபூர்வமான உரையாடலை தொடக்கி தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை உருவாக்க முனைந்தது. ஆனால் அதன் விளைவுகளை புரிந்து கொண்ட ரஸ்சிய ஜனாதிபதி புட்டின்; முற்றாகவே தடுத்து நிறுத்தியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலும் நெருக்கடி மிக்க சூழலை அடைந்திருக்கிறது. காரணம் அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் நடந்த தேர்தல் முடிபுகள் போரை தொடர முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. தவிர்க்க முடியாமல் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி நெருக்கடிக்குள் அகப்பட்டதும் அமெரிக்க ஜனாதிபதி அடுத்து வரும் இரண்டு வருடங்களில் காங்கிரஸ்சினதும் செனட் சபையினதும் இருப்பை இழந்திருப்பது பாரிய பொருளாதார நெருக்கடியின் பிரதிபலிப்பாக உருவானதாகவே தெரிகின்றது. இதனால் முழுமையாக ஈரான் மீதான போரை மேற்கொள்ள முடியாத நிலைக்குள் இரு நாடுகளும் தள்ளப்பட்டன. அதற்கான அடிப்படைகளை எதிர்கொள்ளுகின்ற விதத்தில் ஈரானின் ரஸ்சிய-சீன-வடகொரியக் கூட்டும் பலமான இராணுவ தொழில்நுட்ப வலுவையும் சாத்தியப்படுத்தி உள்ளது. ஈரானிய மக்களின் தேசியத்தின் மீதான நேசிப்பும் இராணுவ தொழிநுட்பத்தின் வளர்ச்சியும் நட்பு நாடுகளின் ஒத்துழைப்பும் அதன் இராணுவ ரீதியான வல்லமையை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் இப்போரின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்ற நிலையை அமெரிக்கா இஸ்ரேலியக் கூட்டு எதிர்கொண்டுள்ளது. இதிலிருந்து ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்திக் கொள்ளவே போர் நிறுத்தம் பற்றிய உரையாடலை மேற்குலகம் உருவாக்க முயலுகிறது. ஆனால் அடிப்படையில் அது நிராகரிக்கப்பட்டதன் விளைவு போரை இறுதி நிலையை நோக்கி நிகழ்த்த முடியாத நிலைக்குள் அமெரிக்காவில் உள்நாட்டு சூழல் வலுவடைந்துள்ளது.
ஆனால் இவ்விரண்டு போர்களின் மையம் சீனாவின் கடலாதிக்கத்தின் எழுச்சியை முறியடிப்பதேயாகும். 18 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் மேற்குலகம் தமது கடல் ஆதிக்கத்தின் மூலம் உலகத்தை ஆளுகை செய்து வருகிறது. இதற்கு எதிராக இதுவரையும் எந்த சக்தியும் எழுச்சி பெறவில்லை. ஆனால் சீனா பட்டி மற்றும் பாதை திட்டத்தை(Belt & Road Initiative) கடல் சார்ந்து முன்வைத்த போது அதனை முறியடிக்கும் விதத்தில் இத்தகைய போர்களை அமெரிக்காவும் மேற்குலகமும் திட்டமிட்டு நகர்த்தினர். போருக்குள் இழுத்து விடுவதன் மூலம் அதன் கடலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முனைந்தது. ஹார்மூஸ் என்பது கப்பல் போக்குவரத்துக்கான நீர் நிலை மட்டுமல்ல. அது இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் கடலாதிக்கத்தின் பிரதான பகுதி. அவ்வகை பகுதிகளை அமெரிக்காவும் மேற்குலகமும் இழக்கமாக இருந்தால் உலகத்தின் போக்கு மாறுவதுடன் மேற்குலகத்திடமிருந்து காணாமல் போய்விடும். தென்பூகோள நாடுகள்; மீது ஆதிக்கம் செய்து தமது பொருளாதார தேவைகளையும் நலன்களையும் நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்படும். இதற்காகவே உருவாக்கப்பட்ட போராகவே உக்ரைன்-ரஸ்சியப் போரும் ஈரான் மீதான போரும் காணப்பட்டது.
எனவே மேற்குலகத்தின் இரு போரும் ஒரு நெருக்கடி மிக்க சூழலுக்குள் அகப்பட்டிருகிறது. இது தனித்து போரிடும் நாடுகள் மட்டுமின்றி மேற்குலக ஆதிக்க சக்திகளையும் அவற்றின் நலன்களையும் குழப்பத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இத்தகைய நெருக்கடியை கடந்து செல்வதற்கு அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் தொடர்ந்து முயற்சிக்கின்றது. அது ஒரு போதும் மேற்கின் மேலாதிக்கத்தை இழந்து போவதை அனுமதிக்காது. அதற்கான முனைப்புகளையே போர், சமாதானம் மற்றும் பேச்சுவார்த்தை என்று மேற்குலகம் முயன்று வருகிறது. ஆனாலும் ரஸ்சியாவும் ஈரானும் மேற்காசியப் பிராந்தியமும் கிழக்கைரோப்பாவும் போரினால் பாரிய சிதைவுகளை எதிர் நோக்கியுள்ளன என்பதை நிராகரித்துவிட முடியாது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினகரன்)
