அரசியல் கட்டுரைகள்

அமெரிக்காவை சீனாவிடம் மண்டியிட வைத்தாரா ட்ரம்ப்?

ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் இருப்பில் ஏற்பட்டுவரும் நெருக்கடிக்கு முதன்மைக் காரணம் தற்போதைய ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பே என குறிப்பிடுவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அவர் ஒரு முதலீட்டாளராகவும் பெரும் வர்த்தகராகவும் அதே நேரம் ஆலோசகரது கருத்தினை ஏற்காது தனித்து தானே முடிவுகளை அறிவிப்பவராகவும் காணப்படுகின்றார். அவரது டுவிட்டர் மட்டுமன்றி பத்திரிகையாளரை சந்திக்கும் போது வெளிப்படுத்துகின்ற செய்திகள் மற்றும் பொது வெளியில் ஆற்றும் உரைகள் அனைத்துமே முரண்பாடுடையதாகவும் பலவீனமானதாகவும் அமைகின்றன. அமெரிக்காவின் ஜனாதிபதி பதவி என்பது தனித்து அமெரிக்காவுக்கு மட்டுமுரியதல்ல. முழு உலகத்திற்கும் தலைமை தாங்கும் பதவி என்பதனால் அதற்கான ஆலோசனை முக்கியமானதும் தவிர்க்க முடியாதுமாகும். இக்கட்டுரையும் அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜோன் போல்டன் எழுதிய நூல் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை தொடுவதாக அமைந்துள்ளது.

ஜோன் போல்டன் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக 2018 ஏப்ரல் முதல் 2019 செப்ரெம்பர் வரை ட்ரம்ப்ன் நிர்வாகத்தில் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக இக்காலப் பகுதியில் ஜோன் போல்டன் ஈரான் ஆப்கானிஸ்தான் வடகொரியா போன்ற முக்கிய சர்வதேச விவகாரங்களில் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். மேற்கு நாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பின் முடிவுகளுடன் முரண்பட்டு விலகினார். ஆனால் தனது கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு செயல் படவில்லை என்பதற்காக போல்டனை பதவியிலிருந்து நீக்கியதாக டிரம்ப் அறிவித்தார். உண்மையிலேயே போல்டன் ஒரு கடும் போக்காளர் எனவும் அமெரிக்கா மேற்குறித்த நாடுகளுடன் போருக்கு போக வேண்டும் என்ற எண்ணத்துடன் காணப்பட்டார் என்பதும் அவர் பற்றி பொதுவாக வெளிவரும் புரிதலாக உள்ளது.

இதனைத் தொடர்ந்தே இருவருக்குமான மோதல் உருவாகியது. The Room Where it Happened: A White House Memoir” எனும் தலைப்பில்; ஜோன் போல்டன் நூல் ஒன்றினை வெளியிட்டார். இந்த நூல் இம்மாதம் (யூன் 2020) 23ம் திகதி அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. எனினும் அதற்கு முன்பே நூலின் சில தலைப்புக்கள் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியாகி விட்டது. இந்த நூலின் உள்ளடக்கத்தில் ட்ரம்ப்ன் நடவடிக்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விடயங்களை நோக்குவோம்.

முதலாவதாக இரண்டாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அமெரிக்காவின் பிரதான எதிரி நாடான சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உதவியை டிரம்ப் கோரியுள்ளார் என்பது தீவிரமான குற்றச்சாட்டாக உள்ளது. டொனால்ட் டிரம்ப் சீன ஜனாதிபதியிடம் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற உதவுமாறு கேட்டுக்கொண்டதாக போல்டன் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். 2019 இல் ஜப்பானில் நடைபெற்ற ஜி – 20 மாநாட்டின் போது ஜின்பிங்கை சந்தித்த டிரம்ப் அமெரிக்காவிலிருந்து சோயா பீன்ஸ், கோதுமை ஆகியவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்ய வலியுறுத்தியதாக போல்டனின் குற்றம் சாட்டுகிறார். இவற்றினால் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என்பதற்காக சீன ஜனாதிபதி ஜின்பிங்கிடம் கெஞ்சியதாக கண்டனம் செய்கிறார். ஏறக்குறைய தனது வெற்றிக்காக அமெரிக்காவின் சுயகௌரவத்தை இழக்க வைத்துள்ளதாக அந்த கண்டன விபரம் அமைந்துள்ளது..

இது தொடர்பில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில் குறித்த செய்தியில் உண்மையில்லை. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையிடுவதற்கு தமக்கு எவ்வித நோக்கமும் இல்லையென மறுத்துள்ளார். இதனை அவர் வேறு ஒரு கோணத்தில் பார்க்க முனைகிறார்.

இரண்டாவதாக உக்ரைனுக்கு அழுத்தம் தருவதற்காகவே அங்கிருந்த அமெரிக்க படைகளை திரும்ப பெற்றதாகவும் போல்டன் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கும் அவரது மகனுக்கும் எதிராக உக்ரையின் அரசாங்கத்தை பயன்படுத்தும் விதத்தில் தொலைபேசியில் மிரட்டியதாக ட்ரம்ப் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது கவனிக்கப்பட வேண்டிய தகவலாகும். ஜோன் போல்டன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியிலிருந்த போது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகள் இல்லாமல் ட்ரம்ப் எந்த முடிவையும் எடுத்ததில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாவதாக ஜனாதிபதி ட்ரம்ப்க்கு உலகம் பற்றியதும் நாடுகள் பற்றியதுமான தகவல்கள் எதுவும் தெரியாது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். குறிப்பாக பிரிட்டன் அணு ஆயுத வல்லமை பெற்ற நாடு என்றும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது ​ேஜார்ஜ் புஷ்ஷின் முட்டாள்தனம் என அவர் விமர்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். எல்லாவிடயமும் ஜனாதிபதி ஒருவருக்கு தெரிய வேண்டும் என்பது முக்கியமில்லை. அதற்காகவே ஆலோசகர்களை உயர் பதவியிலுள்ளவர்கள் அமர்த்துவதுண்டு. அது ஜோன் போல்ட்டனின் பணிகளில் ஒன்றாகும்.

நான்காவதாக வடகொரியத் தலைமையுடன் பேசும் முன்பே அவரை கேவலமானவர் என்ற கணக்கினை ட்ரம்ப் போட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டை அந் நூலில் ஜோன் போல்ட்டன் குறிப்பிடுகின்றார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வடகொரிய ஜனாதிபதி கிம்மை முதல் முதலில் சந்தித்த போது வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் ​ெபாம்பியோ தனக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜங் உன் மிகவும் கேவலமானவர் என எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாவதாக தென் அமெரிக்கா நாடான வெனிசுவேலா மீது படையெடுப்பது சுவாரசியமானதொன்றாக இருக்கும் என்று ட்ரம்ப் கூறியதாகவும் அண்மைய கொரனோ காலத்திலும் தனியார் இராணுவத்தினைக் கொண்டு ஒர் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமையும் கவனத்திற்குரியதாகும்.

ஆறாவதாக சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வீகர் முஸ்லிம்களுக்காக நன்னடத்தை முகாம்களை அமைத்த அந்நாட்டு அரசின் செயலை ட்ரம்ப் பாராட்டியிருந்தார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்;களுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான நன்னடத்தை முகாம்களில் சுமார் 10 இலட்சம் வீகர் முஸ்லிம்களும் பிற சிறுபான்மை இனத்தவரும் அடைத்து வைக்கப்பட்டு பலவந்தமாக அவர்கள் வாழ்க்கை முறை மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு மனித உரிமையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. அவர்களுக்கு அங்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை என்று கூறும் சீனா அவர்களை நல்வழிப்படுத்துவதாகவே அத்தகைய நடவடிக்கையினை மேற்கொள்வதாக கூறுகிறது. ஆனால் ஜின்ஜியாங் மாகாணத்திலுள்ள நன்னடத்தை முகாம்கள் அமைப்பது சரியான செயல் என்று ஜி ஜின்பிங்கிற்கு ட்ரம்ப் நற்சான்றிதழ் வழங்கியிருந்தார் என்று அந் நூல் குற்றம் சாட்டுகிறது.

ஏழாவதாக ஈரான் எண்ணெய் கொள்முதல் தொடர்பான அமெரிக்க பொருளாதாரத் தடைகளிலிருந்து இந்தியா போன்ற நாடுகளுக்கு கூடுதல் விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது முக்கிய அதிகாரிகளிடம் 2019 ஏப்ரல் மாதம் நடந்த விவாதத்தில் கடும் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இந்தியா மிகவும் முக்கியமான நாடாக ட்ரம்ப் புரிந்து கொள்ளக் கூடிய இராஜதந்திரியாக இல்லாதது மட்டுமன்றி அதனை யாராவது குறிப்பிட்டால் அவர்களை பதவியிலிருந்து அகற்றி விடுவார் எனக் குற்றம் சாட்டியுள்ளது. அந் நூல்.

எட்டாவதாக பத்திரிகையாளர்கள் தங்களுக்கான செய்திகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்ற ஆதாரத்தை வெளியிட வேண்டும் இல்லையென்றால் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என ட்ரம்ப் மிரட்டியதாகவும் தான் விரும்பிய சர்வாதிகாரிகளுக்கு தனிப்பட்ட உதவிகளை வழங்கவும் அவர்கள் மீதான குற்றவியல் விசாரணையை நிறுத்தவும் ட்ரம்ப் விரும்பினார் என்றும் ஜோன் போல்டன் குறிப்பிடுகிறார். இவற்றை விட இந்நூலில் ட்ரம்பின் நெருங்கிய மற்றும் விசுவாசமான உதவியாளர்கள் அவரை முதுகுக்குப் பின்னால் கேலி செய்ததாகவும் போல்டன் எழுதியுள்ளார்.

எனவே ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுக்களில் அதிக நியாயம் இருப்பது தெரிகிறது. அடிப்படையில் சீன எதிர்ப்புவாதத்தினால் ஆட்சிக்கு வந்த ட்ரம்ப் மீளவும் அதே உத்தியுடன் ஆட்சிக்கு வர முனைகிறார் என்பது கவனத்திற்குரியதாகும். கொரனோ அரசியல் காலம் முழுவதும் அவர் அமெரிக்காவையும் அமெரிக்க மக்களையும் உச்சரித்ததை விட சீனாவையும் வூஹானையும் உச்சரித்ததே அதிகமாகும். அதனாலேயே அமெரிக்கா அதிக இழப்புக்களை சந்தித்தது என்ற பதிவும் உண்டு.

-கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)