ஈழத் தமிழர் அரசியல் கட்சிகளின் அரசியல் கூட்டுக்கள் பற்றிய உரையாடல்கள் கூடுவதும் கலைவதுமாக காலத்தை நகர்த்திச் செல்கின்றன. கட்சி உறுப்பினர்களின் நலன்களை மட்டும் கொண்டு இயங்கும் அரசியலையே 2009 க்கு பின்னான சூழலில் காணமுடிகின்றது. கூட்டு முன்னணிகள் பற்றிய உரையாடல் மக்களாலும் தென்னிலங்கியாலும் பிராந்தி அரசுகளாலும் உலக சக்திகளாலும் கோருகின்ற அம்சமாக காணப்படுகிறது. ஆனால் அதற்கான முயற்சிகள் அனைத்தும் வாக்குகளை பெறுவதற்கான உத்திகளோடு உரையாடல்களும் உரையாடப்படுகின்ற முயற்சிகளும் நகர்கின்றன. இக் கட்டுரையும் தமிழரசுக் கட்சியினர் அண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு மேற்கொண்ட உரையாடலை மையப்படுத்தி தமிழ் அரசியல் கட்சிகளின் ஐக்கியம் பற்றிய எண்ணத்தை புரிந்து கொள்ள முயலுகிறது.
உலக வரலாறு முழுவதும் ஐக்கியம் என்பது ஒருமைப்பாட்டின் அல்லது ஒன்று சேர்ந்து இயங்குகின்ற தன்மையை குறிக்கும் கோட்பாட்டு புரிதலாகும். உலக அரசுகளும் ஆட்சி முறைகளும் ஐக்கியத்துக்குள்ளால் கட்டி எழுப்பப்பட்ட வடிவங்களாகவே காணப்படுகிறன. போர்களையும் சமாதானத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் பாதுகாப்பு அரண்களையும் ஐக்கியத்திற்குள்ளாலேயே உலகம் வடிவமைத்துள்ளது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் அமெரிக்கா ஐக்கியத்திற்குள்ளாலேயே நாடுகளுக்கு எதிரான போர்களையும் ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொண்டு வருகிறது. அரசற்ற இனமான ஈழத்தமிழர் தமது இருப்பையும் பாதுகாப்பையும் ஐக்கியத்திற்குள்ளால் கட்டிவளர்ப்பதே தேசியமாகும். தேசியம் என்பது ஐக்கியத்தின் அடையாளமாகும். இன, மத பிரதேச வேறுபாடுகளைக் கடந்து வளர்ச்சியடைவதே தேசியமாகும். அதன் அடிப்படையில் தமிழரசு கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி என்பன அண்மைக்காலமாக ஐக்கியம் பற்றி உரையாடல்களை மேற்கொண்டு வருகிறன. 2024 ஆம் ஆண்டு ஜே.வி.பி.கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்த பிற்பாடு ஐக்கியம் சார்ந்த அவசியமொன்று தமிழ் கட்சிகளிடையே ஏற்படத் தொடங்கியது. அதுக்கு முன்னர் வடக்கு கிழக்கு இயங்கும் சிவில் அமைப்புகள் ஐக்கியத்திற்கான வலியுறுத்தலையும் உரையாடல்களையும் முதன்மைப்படுத்தி இருந்தன. சில உடன்பாடுகளையும் எட்டியிருந்தன. ஆனாலும் 2024 தேர்தலுக்குப் பின்னரே தமிழ் அரசியல் கட்சிகள் ஐக்கியம் பற்றிய உரையாடலை தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன. இத்தகைய உரையாடல்களின் அடிப்படைகளை விளங்கிக் கொள்வது அவசியமானது.
முதலாவது ஈழத்தமிழர் ஐக்கியம் பற்றிய உரையாடலை தமிழ் கட்சிகளிடம் கோருவதென்பது அரசியல் கட்சிகளிடம் காணப்படுகின்ற அடிப்படை முரண்பாடுகளை சார்ந்த ஒன்றாகும். சிறிய தேசிய இனத்தின் இருப்பை அல்லது கோரிக்கையை கூட்டாக முன்வைக்கின்ற போது பலமான தீர்மானங்களை நோக்கிய முடிவுகளை சாத்தியப்படுத்தக்கூடிய விதத்தில் அமையும் என்ற எதிர்பார்க்கையில் நிகழ்வதாகும். அத்தகைய ஐக்கியங்கள் ஈழத்தமிழருடைய அரசியலின் கடந்த கால வரலாற்றில் வெற்றிகரமான பக்கங்களை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றவை கடந்த காலத்தில் ஆரோக்கியமான கூட்டணிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. அத்தகைய ஒரு சூழலுக்குள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விதத்தில் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை முன்வைக்கின்ற சூழல் ஒன்று காணப்பட்டது. ஆனால் 2024க்கு பின்னர் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள இனப் பிரச்சனைக்கான கோரிக்கைகளை ஜே.வி.பி. இல்லாமல் செய்வதற்கான உத்திகளை தென்னிலங்கையிலும் ஜெனீவாவிலும் முன்னிறுத்தி வருகிறது. தேசிய இன பிரச்சனை ஒன்று இல்லை என்பதை தனது தேர்தல் வெற்றிகள் மூலம் உறுதிப்படுத்த முயற்சிக்கிறது. இந்த சந்தர்ப்பத்திலேயே ஈழத்தமிழர்களிடம் ஐக்கியம் தேவைப்பாடு தவிர்க்க முடியாததாக காணப்படுகிறது. ஐக்கியத்தை நோக்கிய ஈழத் தமிழர்கள் அரசியல் கட்சிகள் மீதும் அதன் தலைமைகள் மீதும் விண்ணப்பங்களை மீள வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசியல் கட்சிகளோ தமது நலனை நிறைவு செய்வதற்கான ஒன்றாக மட்டுமே ஐக்கியத்தில் வரையறுக்க முயற்சிக்கின்றனர். தேர்தல் அரசியல் என்பது ஐக்கியத்திற்கான தந்திரோபாயத்தை கொண்டது. ஐக்கியம் என்பது தேர்தல் நலன்களுக்கு மட்டுமே என தமிழ் கட்சிகள் கருதுகின்றனர். ஈழத் தமிழருக்கு அவசியமானது தேர்தல் அரசியலைக் கடந்து தேசிய இன பிரச்சனைக்கான கோரிக்கைகளையும் அதன் அடிப்படைகளையும் முன் வைப்பதாகவே தெரிவு அமைய வேண்டும். தேர்தல் இல்லாது அரசியல் இல்லை என்பதை ஏற்கும் அதே நேரம் அத்தகைய தேர்தல் அரசியலால் விடுதலை அரசியல் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
இரண்டாவது ஈழத் தமிழர்களின் அரசியல் கட்சிகள் தமக்குள்ளே ஒரு ஐக்கியத்தை வரையறுப்பது என்பது தேர்தலை இலக்கு வைத்ததாகவே உள்ளது. தேர்தலுக்கான கூட்டணிகளைப் பலப்படுத்துவதும் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்துவதும் அவர்களது இயல்பான அரசியலாக காணப்படுகிறது. இதன் உள்ளார்ந்த அர்த்தம் ஈழத்தமிழர்களது கோரிக்கைகளை வலுப்படுத்துவது அன்றி கட்சிகளும் அதன் உறுப்பினர்களுக்கும் நலன்களை உத்தரவாதப்படுத்துவதாகவே தெரிகின்றது. இதன் அடிப்படைகளுக்குள்ளால் ஈழத்தமிழர்களுடைய அரசியலை வெற்றி கொள்ள முடியாது. ஐக்கியமும் ஓன்று சேர்தலும்; ஈழத் தமிழர்களுக்கு அவசியம். தமிழர்களின் கோரிக்கைகளை உறுதிப்படுத்துகின்ற விதத்தில் வெளிப்படுத்தக்கூடிய அரசியலே முக்கியமானதாகும். அவ்வகை கூட்டு முன்னணிகளை நோக்கி ஈழத் தமிழர்கள் ஒன்றிணைதல் என்பது வரலாற்றின் நிபந்தனையாகும். அதனை கருத்தில் கொள்ளுகின்ற அரசியல் கட்சிகளே தற்போது அவசியமானவையாக காணப்படுகின்றது.
மூன்றாவது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழரசு கட்சியின் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அல்லது 2024க்கு பின்னான காலப்பகுதி முழுவதும் கூட்டு முண்ணணிகள் பற்றியும் அதற்குரிய அடிப்படைகளை பற்றியும் உரையாடி வருகிறன. இருதரப்பும் ஒன்றை ஒன்று குற்றச்சாட்டுவது போல் இரு தரப்பும் கூட்டு முன்னணிகள் பற்றி உரையாடலை ஒரு அரசியலாக பின்பற்றத் தொடங்கியுள்ளன. இத்தகைய அரசியலின் வெளிப்பாடு ஆரோக்கியமான கூட்டுக்களுக்கு பதிலாக முரண்பாடுகளையும் பகைமைகளையும் மேலும் பலப்படுத்துவதோடு கூட்டுக்களின் உண்மை தன்மைகளை மக்கள் முன் வெளிப்படுத்துவதில் அவர்களது தந்திரோபாயம் தெளிவாகத் தெரிகின்றது. அத்தகைய தந்திரோபாயம் மக்களை மேலும் தமிழ் கட்சிகளிடமிருந்து அந்நியப்படுத்துமே அன்றி கூட்டுக்களோடு சேர்ந்து பயணிக்கின்ற எண்ணத்தை ஒருபோதும் உருவாக்காது. அவ்வகையான ஒரு சூழலுக்குள்ளேயே ஈழத்தமிழர்களின் அரசியல் நகர்த்தப்படுகிறது. பலவீனமான சூழலை நோக்கிய ஆரோக்கியமற்ற அரசியல் நிலைப்பாடு ஜே.வி.பி. நோக்கி தமிழ் மக்களின் நகர்வை அதீதமானதாக ஆக்குகின்ற வாய்ப்பை அடையவே உதவும். கூட்டு முண்ணணிகள் பற்றிய உரையாடல் போலித்தனமானது என்பதை கடந்த காலத்தில் தமிழ் கட்சிகளின் நகர்வுகள் தெளிவுபடுத்துகின்றன. கட்சிகள் தமக்குள்ளேயே ஐக்கியப்பட உரையாட வேண்டிய நிர்பந்தத்துக்குள் ஏனைய கட்சிகளை ஐக்கியமாக இணைப்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்க முயல்வதும் போலித்தனமான நடைமுறை என்பதை திரும்பவும் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திட்டமிட்டு தகர்த்துவிட்டு அது பற்றிய உரையாடலை செய்வதென்பது போலித்தனத்தை உறுதிப்படுத்துவதாகவே தெரிகின்றது. ஈழ தமிழர்களை பொறுத்தவரையில் தமிழ் அரசியல் கட்சிகள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை மேலும் பலவீனப்படுத்துகின்ற போக்கையே கட்சிகளும் அதன் கட்சியின் தலைமைகளும் வெளிப்படுத்துகின்றன.
எனவே தமிழ் தேசியம் பற்றி உரையாடல் எது என்பதை புரிந்து கொள்ளாத அரசியல் கட்சிகள் மத்தியில் ஆரோக்கியமான அரசியலை கட்டி வளர்ப்பது என்பது கடினமானது. ஈழத் தமிழர்கள் புதிய புரட்சிகரமான கட்சி அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கான எண்ணத்தையே இத்தகைய போலித்தனமான ஐக்கியம் பெற்ற உரையாடல்கள் கூட்டுமுன்னணி பற்றிய உரையாடல்கள் ஏற்படுத்தக் கூடியது. அவ்வாறு கூட்டு முன்னணிகளை உருவாக்க வேண்டுமாயின் கட்சிகளைக் கடந்து சிவில் அமைப்புகளுக்கூடாகவும் அரசியல் அபிலாசைகளை முன் கொண்டு செல்லக்கூடிய சக்திகளுக்கு ஊடாகவும் முன்மொழியப்பட்டு உடன்பாடுகள் எட்டப்பட்டு கூட்டு முன்னணிகள் உருவாக்கப்படுதலே பொருத்தப்பாடு உடையது. அரசியல் கட்சிகள் சமூகத்துடன் தெளிவான புரிந்துணர்வு உடன்பாடுகளை முன்வைக்கின்ற மரபு என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே உலக நாடுகளில் காணப்படுகின்ற ஒரு அம்சமாகும். அதனை நொக்கி தமிழ் கட்சிகள் நகர்தல் வேண்டும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ் தினக்குரல்)
