அரசியல் கட்டுரைகள்

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு உள்ளாட்டுப் பொறிமுறைக்குள்ளால் தீர்வுகாண முடியுமா?

ஐக்கிய நாடுகள் சபையின் 58 வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நிகழ்ந்து(24.02.2025) வருகிறது. மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி விவாதமும் புதிய அரசாங்கத்தின் அணுகுமுறையின் பதிவுகள் நிகழ்வில் பிரதிபலித்துள்ளது. முன்னை அரசாங்கங்கள் போன்று உள்நாட்டு பொறிமுறைக்குள் மனித உரிமை மீறல்கள் பொறுத்து தீர்வுகளை எட்டுவதற்கு புதிய அரசாங்கமும் முனைப்புக் காட்டியுள்ளது. அதற்கான நல்லிணக்க பொறிமுறையை இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை வரவேற்றுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் காணப்படும் நல்லிணக்கம் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறைக்குள் தீர்வுகளை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இக்கட்டுரையும் அத்தகைய அம்சத்தை புதிய இடதுசாரி ஆட்சியாளர்கள்(?) முன் வைப்பது பொருத்தப்பாடுடையதாக அமையுமா என்பதை தேடுவதாக அமையவுள்ளது.

ஜெனிவா அரங்கின் நிகழ்வுகளின் பிரகாரம் இலங்கையில் நீண்ட காலமாக நிலவிவரும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து பொறுப்பு கூறலை உறுதிப்படுத்துவதும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கட்டி எழுத்துவதற்கும் இதுவே சரியான தருணம் என ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க் தெரிவித்துள்ளார.; இக் கூற்றுக்கு நிகராக இலங்கைக்கான ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹிமாலி அருணத்திலக இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்ட விதத்தில் உள்நாட்டு பொறிமுறை மூலம் மனித உரிமை சவாலை எதிர்கொள்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை தெரிவிப்பதாக மனித உரிமைப் பேரவையில் உரையாற்றுகின்ற போது வெளிப்படுத்தியுள்ளார். இது மட்டுமல்லாது புதிய ஆட்சியாளர்களும் அதன் வெளிவிவகார அமைச்சரும் உள்நாட்டு பொறிமுறைக்குள் இனங்களுக்கு இடையிலான பிரச்சினை தீர்த்துக்கொள்வதற்கு தமது அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் பொறுப்பு கூறலை உறுதிப்படுத்தும் நல்லிணங்க்க செய்முறையையும் மேற்கொள்வதாக மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்கள் ஆழமான புரிதலும் உரையாடலும் அவசியமானது. அதனை தெளிவாக விளங்கிக்கொள்வது முக்கியமானது.

முதலாவது இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருப்பது குறிப்பாக இனங்களுக்கு இடையில் நிகழ்ந்து கொண்டிருப்பது மனித உரிமை பிரச்சனையா என்ற கேள்வி பலமானதாக உள்ளது. மனித உரிமை என்பது பிறப்பால் இயற்கையாக அமைந்திருப்பவையும் வளர்ச்சியால் ஏற்பட்ட அடிப்படைத் தேவைகளையும் மனிதனாக வாழ்வதற்குரிய அங்கீகாரம் மிக்க அம்சங்களும் மீறப்படுகின்ற போது அதற்கு எதிராக நியாயப்பாட்டை ஏற்படுத்த முயல்கின்ற பிரகடனமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இன நல்லிணக்கம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் அடிப்படையான அம்சம் தேசிய இனம் சார்ந்த ஏற்பட்டிருக்கும் நெருக்கடியாகும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழும் அடக்குமுறைகளும் தாக்குதல்களும் குடியேற்றங்களும் தனித்து மனித உரிமை என்ற அம்சத்துக்குள் தமீர்வு கண்டு கொள்ள முடியாது. ஆவ்வாறே வரையறுக்கவும் முடியாது. இனங்களுக்கிடையிலான மனித உரிமை மீறல் என்பது தேசிய இனப்பிரச்சினையின் ஒரு அங்கமே அன்றி இலங்கையில் நிகழும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைக்கான தீர்வாக கொள்ள முடியாது. இதனை மனித உரிமை பிரச்சனையாக மட்டும் கருத்தில் கொள்ள முடியாது. காரணம் நிலம் மீதான உரிமை வாழ்விடம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு மொழி பண்பாடு அது சார்ந்திருக்கும் பொருளாதாரம் போன்றவற்றுக்கு எதிராக எழுந்திருக்கும் ஆக்கிரமிப்பு என்பது தமிழர்கள் தேசிய இனமாக அடையாளப்படுவதற்கான அடிப்படை கூறுகளை அழித்தொழிப்பதற்கான செய்முறையாகும். அதுவே இலங்கையில் காணப்படும் இனப் பிரச்சனையாகும். அத்தகைய இனப்பிரச்சனை தேசிய இனமாக தமிழ் மக்கள் வாழ்வதற்கான உரிமையை இல்லாது செய்வதாகும். அத்தகைய தேசிய இன சார்ந்து ஏற்பட்டிருக்கும் நீண்ட கால நெருக்கடியை மனித உரிமை மீறல் என்ற அடிப்படைகளுக்குள் முடிவுக்கு கொண்டு வர முடியாது. மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினை தேசிய இனப்பிரச்சினையின் ஓர் அங்கமே அன்றி அதுவே முழுமையான அம்சமாக கொள்ள முடியாது.

இரண்டாவது 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் கீழ் போர்களும் அழிப்புகளும் தமிழ் மக்கள் மீதான பயங்கரவாத அடக்குமுறைகளும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய அரசியலமைப்பின் கீழே 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரமும் அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு மீதான போரும் முள்ளிவாய்க்கால் வரையிலான அழிப்புகளும் நிகழ்ந்து முடிந்தன. அத்தகைய நிகழ்வு அடிப்படையாக அமைந்திருப்பது 1978 ஆம் ஆண்டு வரையப்பட்ட அரசியல் அமைப்பின் பிரகாரமே. 1972 ஆம் ஆண்டு 1947 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இரு அரசியல் யாப்புக்களுடாகவும் அத்தகைய ஆக்கிரமிப்புகளும் குடியேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஒட்டுமொத்தத்தில் இலங்கையின் அரசியல் அமைப்பு என்பது பெரும்பான்மை பௌத்த-சிங்கள மக்களின் கட்டமைப்பை முதன்மைப்படுத்துவதோடு தமிழர்களை அவ் அரசியலமைப்பின் பங்குதாரர்களாகவோ அல்லது அங்கமாகவும் கொள்ளப்படாத ஒரு நிலையில் அத்தகைய அரசியலமைப்புக்குள் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு தீர்வு சாத்தியப்படுத்துவது என்பது கடினமானது. இத்தகைய அரசியலமைப்பின் கீழே 2024 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் ஆக்கிரமிப்புகளும் கலாச்சாரம் மீதான துடைத்தெளிப்புகளும் நிகழ்ந்து வருகின்றது. ஊள்ளாட்டு பொறிமுறைக்குள்ளால் தீh’;க்க முடியுமென கூறும் அரசாங்கத்தால் அஇதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. அவ்வாறாயின் இந்த அரசியல் அமைப்பு கீழே ஒரு தீர்வு கொண்டு வர முடியும் என புதிய அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் கருதுவது என்பது எந்த அளவுக்கு நியாயமானதாக கொள்ள முடியும்?

மூன்றாவது தேசிய இன பிரச்சினைக்கான தீர்வு என்பது உள்நாட்டு முறைக்குள் தீர்வை எட்ட முடியாத சூழலில் தேசிய இனங்கள் தமக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குரிய தீர்வை சர்வதேச பொறிமுறைகளிடமும் சர்வதேச நாடுகளிடமும் அவற்றின் அரசியலிடமும் தீர்த்துக் கொள்ள முடியும் என கருதுவதே தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வாக கொள்ளப்படுகிறது. தேசிய இனப் பிரச்சினை என்பது ஓரு சர்வதேச பிரச்சினை என்ற அடிப்படையில் சர்வதேச நாடுகளிடமும் சக்திகளிடமும் நிறுவனங்களிடமும் தீர்வுகளை எதிர்கொள்ளுகின்ற வழிமுறை ஒன்றை தேசிய இன பிரச்சனை கொண்டிருக்கும் நாடுகளில் அனுபவமாக கொள்ளப்படுகிறது. அத்தகைய அனுபவத்தையே இலங்கை தமிழர்களும் எதிர்கொள்கிறனர். இலங்கையினுடைய இனப் பிரச்சினை என்பது ஒரு மனித உரிமை பிரச்சனையாக அன்றி அது ஒரு தேசிய இன பிரச்சினையாக கருதப்படுகிறது. ஒரு தேசிய இனத்தின் இருப்பு அதன் வாழ்விடம் வாழ்விடம் மீதான இறைமை அதன் மீதான சுயநிர்ணயம் அதனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார கலாச்சார பாதுகாப்பு என்பவை உலகளாவிய ரீதியில் தேசிய இன பிரச்சினைக்குரிய மூலங்களாக கொள்ளப்படுகிறது. இலங்கை தமிழர்கள் நீண்ட காலமாக வடக்கு கிழக்கை பூர்வீகமாகவும் தமிழ் மொழியை தமது பாரம்பரிய மொழியாகவும் கொண்டிருப்பதுடன் வடக்கு கிழக்கு ஒரு தனித்துவமான பொருளாதரத்தையும் பண்பாட்டையும் கொண்டு வாழ்கின்றனர். அதனை பாதுகாப்பதே தமிழ் மக்களின் தேசிய இருப்பினை பாதுகாப்பதாகும். அத்தகைய தேசிய இருபுக்கு உள்நாட்டு அரசாங்கங்களால் நெருக்கடி ஏற்படுகிற போதே தீர்வினை நோக்கி சர்வதேசத்தை நாடுகின்றனர். உள்நாட்டு பொறிமுறைக்குள் தீர்வு எட்டப்பட முடியாது என்ற நிலை தோன்றிய பின்னரே தமிழர்கள் சர்வதேசத்திடம் சர்வதேச அரசியலிடம் தீர்வை கோரியுள்ளனர். தீர்வு உள்நாட்டு முறைக்குள் ஏற்படுத்த முடியாது என்பது முப்பது வருட கால போரில் மட்டுமின்றி போருக்குபின்னான 15 வருடங்களில் தமிழ் மக்கள் கண்டு கொண்டுள்ளனர். இதனாலே சர்வதேச மட்டத்தில் அப்பிரச்சினைக்கான தீர்வினை சாத்தியப்படுத்த முனைகின்றனர்.

புதிய அரசாங்கம் கூறுவது போல் தற்போது இருக்கும் அரசியலமைப்புக்குள் தீர்வினை சாத்தியப்படுத்துவது என்பதும் தேசிய இனப்பிரச்சினையை மனித உரிமை பிரச்சினையாக கருதுவது என்பதும் இலங்கை தமிழர்களின் தேசிய அடையாளத்தை சிதைப்பதாகவே தெரிகின்றது. அதனால் தமிழர்களுடைய பிரச்சினையை உள்நாட்டு பொறிமுறை கொண்டு அல்லது உள்நாட்டு அரசாங்கங்களின் பொறுப்பு கூறலுக்குள்ளே தீர்த்துக் கொள்ள முடியாது என்பது கடந்த கால அனுபவமாக உள்ளது. ஒட்டுமொத்தத்தில் தீர்வு என்பது உள்நாட்டு பொறிமுறைகூடாக மேற்கொள்ள முயலும் புதிய அரசாங்கத்தின் உத்தி என்பது பழைய அரசாங்கங்களின் முயற்சியாகவே தெரிகிறது. இடதுசாரிகள் என்றும் இலங்கை தீவில் பெரஸ்ரொய்க்கா, கிளாஸ்நோட்ஸ்க்கு நிகராக மாற்றம் ஒன்று நிகழ்வதாக கூறிக் கொள்ளும் சூழலில் உள்நாட்டு பொறிமுறையை 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் இருந்து அணுகுவது என்பது புதிய அரசாங்கத்தின் போலி தன்மையை அடையாளப்படுத்துகிறது. அத்தகைய அடையாளப்படுத்லூடாக புதிய அரசாங்கமும் தீர்வினை அல்லது சுமூகமான நல்லிணக்கத்தினை சாத்தியப்படுத்தக் கூடியதாக அமையும் என்பதில் நம்பிக்கை அற்றுப் போகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி:தினக்குரல்)