அரசியல் கட்டுரைகள்

கனடா-இந்திய இராஜதந்திர முறுகலும் இலங்கையின் போக்கும்?

இலங்கையின் அரசியல் முழுவதும் பிராந்திய, உலகளாவிய தளத்தைக் கருத்தில் கொண்டு இயங்குவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கைக்கூடாகவே உலகத்தையும், பிராந்தியத்தையும் கையாளும் போக்கைக் கொண்டுள்ளது. அத்தகைய கொள்கைகள் அனைத்தும் சிங்கள பெரும்பான்மைத் தேசியத்தை கருத்தில் கொண்டதாகவே அமைந்துள்ளது. அது ஏனைய தேசியங்களுக்கு எதிரானதாகவே தெரிகிறது. இதனையே பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட இத்தகைய செய்முறையானது அரச கட்டுமானத்திற்கான தன்மையாகவும் தேசிய அரச கட்டுமானத்திற்கான அடிப்படையற்ற வடிவமெனவும் குறிப்பிடுகின்றார். இலங்கை ஆட்சியாளர்கள் இலங்கைத் தேசியத்தை கட்டுவதற்கு மாறாக இலங்கை அரசை மட்டுமே கட்டுபவர்களாக விளங்குகின்றனர். அது சிங்களத் தேசியமாகவே கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அத்தகைய சிங்கள பெரும்பான்மைத் தேசியத்திற்கும் விரோதமான செயல்பாடுகளை ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது கடந்த காலத்தில் வடக்கு கிழக்கு மீதான போரினால் மறைக்கப்பட்டிருந்ததே அன்றி அடிப்படையில் சிங்கள சமானியனுக்கு விரோதமான அரசாகவே ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர். அதில் ஒன்றாகவே தற்போதைய புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும், சமூக வலைத்தளங்களுக்கு எதிரான சட்டவரைபின் முன்மொழிவுமாக உள்ளது. இக்கட்டுரை இலங்கை ஆட்சியாளர்களது இந்திய ஆதரவையும் கனேடிய எதிர்ப்புணர்வையும் அதன் உள்ளார்ந்த அரசியலையும் தேடுவதாக உள்ளது.

இந்தியா-கனடா விவகாரத்தில் இலங்கை இந்தியாவுக்கு அதரவளிக்கும். சீக்கிய பிரிவினைவாதி கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என்று கனடா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு இந்தியா வழங்கியுள்ள பதில் உறுதியானது. நாங்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம் பயங்கரவாதம் குறித்து சிறிதளவு கூட சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தக் கூடாது என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் போன்றே தற்போது எந்தவித ஆதாரமும் இன்றி சில குற்றச்சாட்டுக்களை இந்தியா மீது கனடா முன்வைத்துள்ளது.பயங்கரவாதிகள் சிலர் கனடாவில் பாதுகாப்பான புகலிடத்தை கண்டுபிடித்துள்ளனர்.கனேடியப் பிரதமர் எந்தவித ஆதாரமும் இன்றி சில மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுக்களை இந்தியா மீது முன்வைத்துள்ளார். இலங்கைக்கும் கனடா இதே விதமான விடயத்தை செய்துள்ளது எனவும் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயம் எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த யூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இந்தியாவால் தேடப்படும் பிரிவினைவாதி எனவும் இந்தியாவிலிருந்து தப்பி கனடாவில் குடியேறிவர். இந்த கொலையுடன் இந்திய அரச முகவர்களின் தலையீடு உள்ளதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் இந்தியா தொடர்பில் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இத்தகைய குற்றச்சாட்டை அடுத்து கனடா இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை வெளியேறுமாறு கனடா உத்தரவிட்டது. பதிலுக்கு இந்தியாவும் கனடா நாட்டு அதிகாரியை 5 நாட்கள் அவகாசத்தில் வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே கனடாவில் வசிக்கும் இந்துக்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டுமென சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே நேரம் 2017 இல் போலிக்கடவுச் சீட்டு மூலம் பஞ்சாப்பிலிருந்து தப்பிச் சென்ற காலிஸ்த்தான் பிரிவினைவாதியான சுக்தூல் சிங் 21.09.2023 சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் குழுக்களுக்கிடையிலான மோதலாக கருதப்பட்டாலும் தற்போது இந்திய அரச அதிகாரிகளில் நடவடிக்கை என்றே உரையாடப்படுகிறது. இதே நேரம் கனேடிய பாதுகாப்பு அமைச்சு இந்தியாவுடனான உறவு கனடாவுக்கு அவசியமானதென தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் கனடாவும் இராஜதந்திர முறுகலை சரிசெய்ய அதிக முனைப்புச் செலுத்திவரும் சந்தர்ப்பத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் முண்டியடித்துக் கொண்டு இந்தியாவை ஆதரிப்பதென்பது அடிப்படையில் கனடா மீதான வெறுப்புணர்வேயாகும். காரணம் கனடா இலங்கைக்கு எதிராக ஈழத்தமிழருக்கு சார்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை அனைவரும் தெரிந்த விடயமே. அத்தகைய குற்றச்சாட்டானது இலங்கையில் ஈழத்தமிருக்கு எதிராக நிகழ்ந்த இனப்படுகொலை எனவும் அதற்கு எதிராக இலங்கை தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் முதன்மைப்படுத்தியிருந்தது. அதனையும் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை இலங்கை-கனடிய இராஜதந்திர மட்டத்தில் அதிக முரண்பாட்டை ஏற்படுத்தியது. அதனால் அத்தகைய குற்றச்சாட்டை எதிர் கொள்ளவேண்டிய சூழலைக் கருத்தில் கொண்டே இலங்கை ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். எதிர்காலத்தில் இலங்கை மீதான இனப்படுகொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கும் போது அதனை இந்தியாவுடன் சேர்ந்து முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை மட்டுமல்ல ஈழத்தமிழருக்கு சாதமாக இந்தியா நகர்ந்துவிடக் கூடாது என்பதிலும் தென் இலங்கை ஆட்சியாளர்கள் கவனமாக செயல்படுகின்றனர். கனேடிய -இந்திய உறவு ஆரோக்கியமானதாக அமையுமாயின் எதிர்காலத்தில் இலங்கை ஆட்சியாளர் மீதான குற்றச்சாட்டு இலகுவாக சாத்தியமாகிவிடும் என்ற அச்ச உணர்வு காணப்படுகிறது. தென் இலங்கை ஆட்சியாளர்கள் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு நிரந்தரமாகவே முறிவடைய வேண்டுமென கருதுகின்றனர். அதற்கான வாய்ப்புக்களாகவே தற்போதைய முரண்பாட்டை கூர்மைப்படுத்துகின்றனர்.

அது மட்டுமன்றி இந்தியாவுடன் செயல்படுவதென்பது இலங்கை தீவில் ஆபத்துக்கள் அனைத்தையும் இந்தியா கவனத்தில் கொண்டு தீர்வு எட்டும் என்ற நீண்டதூர நோக்குடனாகும். இந்தியா இலங்கைத்தீவு சார்ந்து தனது புவிசார் அரசியலை கருத்தில் கொண்டும் செயல்படுகிறது. இலங்கைத் தீவை இந்தியா தனது கொல்லைப்புற (Backyard State) அரசாகவே வைத்துக் கொள்ள முனைகிறது. அதற்காகவே அதீதமான ஒத்துழைப்பினை வழங்கிவருகிறது. அரசியல், பொருளாதார, இராணுவ ஒத்துழைப்புக்களை எல்லையின்றி வழங்குவதில் இந்தியா கொண்டுள்ள கரிசனை முதன்மையானது. இலங்கைத் தீவின் ஆயுதப் போராட்டத்தை முடிபுக்கு கொண்டுவருவதிலும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும், பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதிலும் இந்தியாவின் அக்கறை அனைத்தும் தனது கொல்லைப்புறம் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் அமைய வேண்டும் என்பதேயாகும். ஆனால் அது ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது கேள்விக்குரியதே.

இலங்கை ஆட்சியாளர்கள் இத்தகைய உரையாடல் மூலம் இந்தியாவை கையாளுவதாகவே கருதுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் அத்தகைய கையாளுகை நிகழ்ந்துவிடுகிறது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். காரணம் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் ஆட்சியாளர்களும் இலங்கையின் உத்திகளை எதிர்கொள்ளாது இசைந்து பயணிக்கும் நிலை காணப்படுகிறது. அத்தகைய நகர்வு நிரந்தரமானதாக அமைய வாய்புள்ளது என கூறிவிட முடியாது. இந்தியாவின் போக்கிலும் மாற்றங்கள் அதிகமானதாக காணப்படுகிறது. சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சிக்கு பதிலாக பொருளாதார கொரிடோர் (Economical Corridor) ஒன்றினை மேற்காசியா ஊடாக ஐரோப்பாவுடன் ஏற்படுத்த புதுடில்லி ஜி-20 மகாநாடு திட்டமிட்டுள்ளது. அவ்வாறே தென்னாசியாவுக்குள் இயங்கிய இந்தியப் புலனாய்வுத் துறையானது கண்டங்களைக்கடந்து கனடா வரையும் நகர்ந்துதுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அப்படியாயின் இந்தியா உலகளாவிய அரசியல் பொருளாதாரத்தில் மட்டுமல்ல புலனாய்விலும் இராணுவத்திலும் நகர்வை மேற்கொள்ள திட்டமிடுவதாகவே தெரிகிறது. இது தென்னாசியப் பிராந்திய நாடுகளுக்கும் உரிய எச்சரிக்கையாகவே தெரிகிறது.

இவ்வாறு இந்தியா பிராந்திய ரீதியில் தனது புலனாய்வுத் துறையை முதன்மைப்படுத்தி செயல்பட்டதென்பதை ஜே.என்.டிக்சித் தனது Assignment Colombo என்ற நூலில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வங்களாதேஷ் மீதான 1971 ஆம் ஆண்டுத் போரை அடுத்து அங்கு நிகழ்ந்த மாற்றங்களுக்கு பின்னால் இந்தியப் புலனாய்வுத் துறை அதிக பங்குவகித்துள்ளது. இதனையே இலங்கைத் தீவிலும் நிகழ்த்தியுள்ளதாக விமர்சனங்கள் உண்டு. ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் அதன் பின்னரும் இந்தியப் புலனாய்வுத் துறையின் பங்கு இலங்கைத்தீவில் நிலவுவதாக விமர்சனங்கள் உண்டு. அது மட்டுமன்றி இலங்கைத் தீவின் அரசியலில் இந்தியாவின் அனைத்து செல்வாக்கும் உள்ளதென்பது தெளிவான விடயமாகும். தற்போது இந்திய சீனப் போட்டி மட்டுமல்லாது அமெரிக்கப் போட்டியும் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே இந்திய-கனேடிய முரண்பாட்டை இலங்கை ஆட்சியாளர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்த முனைகின்றனர். அதனால் கனடாவின் ஈழத்தமிழருக்கான ஆதரவை எதிர்ப்பதோடு இந்தியாவுடன் இணைந்து கொள்வதன் மூலம் எதிர்ப்புக்கான பலத்தை அதிகரிக்க திட்டமிடுகிறது. இலங்கையின் நீண்ட வெளியுறவின் உள்ளார்ந்த இருப்பும் செயல்பாடும் ஈழத்தமிழருக்கு எதிரானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவுடன் இணைந்து கனடா முன்வைத்த இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்கொள்ள முனைகிறதாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இந்திய-கனேடிய உறவை அமெரிக்கா சுமூகமாக்குவதில் கவனமாக செயல்படுகிறது. அதற்குப் பின்னால் உள்ள பொருளாதார வர்த்தக மற்றும் சந்தை உறவே அடிப்படையானதாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)