September 27, 2026
அரசியல் கட்டுரைகள்

இலங்கை-அமெரிக்க நெருக்கமும் இந்திய-இலங்கை நெருக்கடியும்?

இலங்கை அமெரிக்க உறவு பலமடைய சூழலை தென்னிலங்கை அடைந்து வருகிறது இலங்கை தீவில் அரசியல் அமைவிடம் ஏற்படுத்தியுள்ள கேந்திர முக்கியத்துவம் மேலும் தெளிவாகியுள்ளது. அதுவே உலக வல்லரசுகளின் ஈடுபாட்டை இலங்கைத் தீவில் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. அமெரிக்கா இலங்கையோடு கொண்டிருக்கும் பொருளாதார அடிப்படையிலான நெருக்கம் வெறும் பொருளாதார உறவாக மட்டும் கருத முடியாது. அது அரசியல்-இராணுவ மற்றும் இராஜதந்திர முக்கியத்துவத்தைக் கொண்டது. அமெரிக்க-இலங்கை உறவு இலங்கைக்கு இலாபகரமானதே அன்றி அமெரிக்காவுக்காவுக்கானது அல்ல. மாறாக அமெரிக்காவுக்கு அரசியல்-இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு அம்சமாகும். இவ்வாறு அமெரிக்கா இலங்கையோடு கொண்டிருக்கும் நெருக்கத்துக்கான அடிப்படை காரணம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இக் கட்டுரையும் அமெரிக்க இலங்கை உறவின் நெருக்கத்தை தேடுவதாக உள்ளது.
முதலில் அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேஜர் இலங்கை ஆட்சியாளருக்கு வழங்கிய ஆலோசனை அவதானிக்க வேண்டிய அம்சமாகும்.

இலங்கையின் பொருளாதார மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் வெளிநாட்டு முதலீடுகளும் சர்வதேச வர்த்தகமும் மிகவும் முக்கியமானவை என எரிக் மேயர் (21.09.2026) தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கும் நிதியியல் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளையும் அவர் பாராட்டியுள்ளார். இலங்கைக்கு அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பிலும் இலங்கைத் தரப்பினருடன் உரையாடியுள்ளார். .இலங்கையின் இத்தகைய முயற்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவை வழங்குவதற்கு அமெரிக்கத் தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கையின் டிஜிற்றல் மாற்றத்துக்கு அமெரிக்கா வழங்கவுள்ள புதிய ஆதரவு குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும்; கணனி உட்கட்டமைப்பு மற்றும் துறைமுகங்களை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவின் ஆதரவு வழங்கப்படவுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகள் அமெரிக்க நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்களும் இலங்கைத் தரப்புடன் கலந்துரையாடப்பட்டதாக தூதுவர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளினதும் நலன்களை முன்னேற்றுவதற்கான விரிவான செயற்பாட்டு நிகழ்ச்சி நிரல் காணப்படுவதாகவும் அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வகை முக்கியத்துவத்தை ஏன் அமெரிக்கா இலங்கை தீவுக்கு வழங்கும் முன்வந்திருக்கின்றது என்பது ஆழமாக் அவதானிக்க வேண்டிய அம்சமாகும்.

முதலாவது இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியில் இருப்பதனால் இலங்கையுடனான உறவை அமெரிக்கா முதன்மைப்படுத்துகிறது என்ற வாதம் காலங்காலமாக புரிந்து கொள்ளப்படுகின்ற ஓரம்சமாகும். அது மட்டுமன்றி மேற்காசியாவில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட ஈரானின் நெருக்கடி தென்னாசியாவை நோக்கிய தீவிர நகர்வை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பதும் கடந்த காலங்களில் புரிந்து கொள்ளப்பட்ட ஓரம்சமாகவே உள்ளது. ஆனால் தென் இலங்கையைப் பொறுத்தவரை இலங்கைத் தீவின் அரசியல் எதிர்காலம் அதிகமான நெருக்கடிக்குள் அகப்பட்டு இருக்கிறது என்பதும் அதிலிருந்து இலங்கை தீவை மீட்பதற்கு பிற வல்லரசுகளை ஒத்துழைப்பையும் உதவிகளும் இலங்கை அவசியமானதாக கருதுகிறது. அதனை நோக்கியே இலங்கை அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்தி வருகின்றது. மறுபக்கம் ஏனைய வல்லரசுகளது உதவியின் மூலம் இந்தியாவைக் கையாளுகிறதாகவே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இரண்டாவது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு வருகை தந்த பிற்பாடு இந்துசமுத்திர கடல் பரப்பில் இந்தியா இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியை ((SLIEX-26) நிகழ்த்தியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்தியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. அத்தகைய நிகழ்வுக்கு பின்னால் இலங்கை தீவின் மீதான இந்தியாவின் அணுகுமுறை அதிகம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு அம்சமாக தெரிகின்றது. அது 13 வது கடற்படைப் பயிற்சி என்பது தெரிந்த விடயம். ஆனால் அதன் முக்கியத்துவம் வேறுபட்டதாகவே பார்க்கப்படுகிறது. கப்பல் ஓட்டும் பயிற்சிகள், வான்வழி நடவடிக்கைகள், கடலில் இரவு நேர எரிபொருள் நிரப்புதல் மற்றும் , போர்க்கால ஊர்ந்து செல்லும் நுட்பங்கள் நடவடிக்கைகள் உள்ளிட்ட சிறப்புப் படைகளின் பயிற்சிகளை மேற்கொண்டன. இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பும் பரஸ்பர நம்பிக்கையும் ஆழமடைந்து வருவதை கோடிட்டுக் காட்டுவதோடு இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பையும் வலுப்படுத்துகிறது. இந்த முன்னேற்றங்கள் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனையும் செயல்பாட்டுக் கட்டமைப்பையும் மேம்படுத்திகிறது. நீடித்த இந்தியா–இலங்கை கடல்சார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துகின்றன என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. தென்னிலங்கையை பொறுத்தவரை இந்தியாவை நிராகரிக்கவும் முடியாது அதே நேரத்தில் இந்தியாவுக்கு கட்டுப்பட்டு செயல்படவும் முடியாத ஒரு நிலைக்குள் காணப்படுகிறது. இந்தியாவை எதிர்கொள்வதற்கு பிற சக்திகளுடனான அல்லது வல்லரசுகளுடனான நெருக்கத்தை அதிகரிக்கும் போது இயல்பாகவே இந்தியாவை எதிர்கொள்ள முடியும் என்பதை கடந்த காலங்களில் இலங்கை வெளிப்படுத்தியிருந்தது. அதனை இந்தியா அனுபவித்திருந்ததையும் கண்டுகொள்ள முடியும். இலகுவில் இலங்கையை எதிர்கொள்வது என்பது கடினமானது.

மூன்றாவது தென்னிலங்கையின் ஆட்சி அல்லது ஜே.வி.பி. இன் ஆட்சி குறுகிய கால அனுபவத்தை கொண்டிருந்தாலும் தென்னிலங்கையின் அரசியலின் வெளிவகார அனுபவம் இராஜதந்திர தேர்ச்சியும் முதிர்ச்சியானது. ஒரு நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. அனைத்து தரப்புகளையும் எதிர்கொண்டு அரசியல் நகர்த்தும் திறனுடையது. அதனால் அதனை எதிர்கொள்வது சாதாரணமான விடயம் கிடையாது. இந்தியர்கள் எல்லா சந்தர்ப்பத்திலும் நெருக்கடி மிக்க சூழலையே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை தீவின் அரசியல் இந்திய தேசம் இரண்டு பிரதமர்களை இழந்துள்ளது. அத்தகைய இழப்பின் ஊடாக பிராந்திய ஆதிக்கத்தை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அதற்குப் பின்னால் இலங்கையின் இராஜதந்திர பாரம்பரியமே அடிப்படையாக உள்ளது. அது தனித்து இலங்கை தீவினால் நிகழ்த்தப்பட்ட அரசியல் கிடையாது. இலங்கையின் இராஜதந்திரம் உலக நாடுகளை கையாண்டதன் மூலம் சாத்தியப்படுத்தியது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் நலன்களுக்கு விட்டுக் கொடுத்து கையாண்டதன் விளைவாக சாத்தியப்பட்டதாகவே தெரிகின்றது.இது இந்தியாவின் தோல்வியல்ல. இலங்கையின் இராஜதந்திர வெற்றியாகும்.

நான்காவது இலங்கைத் தீவின் நிலைதிருப்புக்கு பின்னால் அதன் வெளியுறவு பாரம்பரியம் அடிப்படையானது. உலக அரசியலில் சில தீவுகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தை கொண்டு இருக்கின்றன. அதில் இலங்கை தீவும் ஒன்று. அதனால் இலங்கை தீவு உலக நாடுகளோடும் உலக வல்லரசுகளோடும் பிராந்திய வல்லரசான இந்தியாவோடும் முரண்பட்டும் சில சந்தர்ப்பத்தில் நெருக்கமாகவும் செயல்பட வேண்டிய தேவை காணப்படுகிறது. ஜே.வி.பி. ஆட்சிக்கு வரும்போது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திடமும் அமெரிக்கா போன்ற வல்லரசுகளிடம் அச்சம் ஒன்று நிலவியது. அத்தகைய அச்சத்தின் பின்புலம் ஜே.வி.பி. ஓர் இடதுசாரி பாரம்பரியத்தோடு ஆட்சியை கைப்பற்றியதாக கருதப்பட்டது. அதே இடதுசாரி பாரம்பரியம் சீனாவுடன் நெருக்கத்தில் பால்பட்டது என்றும் புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால் ஜே.வி.பி. தனது பாரம்பரியத்தை கைவிட்டு மிக நீண்ட காலமாகவே அது ஒரு தாராள முதலாளித்துவ முறைமைக்குள் பயிற்றப்பட்டிருந்ததோடு அத்தகைய மரபுக்குள்ளால் இலங்கை தீவை கட்டமைக்க முடியும் என்ற எண்ணத்தை கொண்டிருக்கிறது. அதனாலும் உலகத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகவும் ஜே.வி.பி. இலகுவாகவே அமெரிக்காவை ஈர்த்துக் கொண்டது. அமெரிக்காவுக்கு ஏற்ற ஆட்சியை இலங்கையில் கொண்டிருப்பது என்பது ஜே.வி.பி இன் இலக்குகளில் ஒன்றாக தெரிகின்றது. காரணம் இந்தியாவின் வெளியுறவு கொள்கை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் உறவு அவசியமானது. அந்த அடிப்படையில் இலங்கை அமெரிக்க உறவு புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

ஐந்தாவது அப்படியாயின் அவ்வாறான அம்சங்களை அமெரிக்கா-இலங்கை உறவில் கண்டுகொள்ள முடியவில்லை என யாரும் கேள்வி எழுப்பலாம். ஆனால் அமெரிக்காவின் புதிய தூதுவர் முன் வைத்திருக்கும் பிரதானமான அம்சம் இலங்கை சர்வதேச வர்த்தகத்துக்குள் ஈடுபடுத்துவதும் டிஜிட்டல் பொருளாதார செய்முறை கவனம் குவிப்பதுமாக உள்ளது. இத்தகைய அம்சங்களும் இலங்கையின் அரசியல் பொருளாதார இயங்கு நிலையில் நேரடி கட்டுப்பாட்டுக்குள்ளும் கையாளுகைக்குள்ளும் அமெரிக்கா கொண்டு வருவதற்கான வாய்ப்பான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. துறைமுகங்கள் அனைத்தும் நவீன மயப்படுத்தப்படுகிற போது அவற்றின் இருப்பு அனைத்தும் அமெரிக்காவினது கம்பெனிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்தக் கூடியது. போதை பொருள் கடத்தல் பயங்கரவாத நடவடிக்கை கரையோரப் பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் பற்றி அமெரிக்கா உரையாடினாலும் ஆழமாக இலங்கையில் சீனாவின் இந்தியாவின் அணுகுமுறைகளை கண்காணிப்பதில் கவனம் கொள்வதோடு இலங்கை தீவை நோக்கி அமெரிக்காவின் இலக்கை நிறைவு செய்யக்கூடியது. மிலேனிய உடன்படிக்கை மேற்கொள்ள எடுத்த முயற்சியை முன்னாள் ஜனாதிபதி கோதபாய ராஜபக்~ நிராகரித்ததன் விளைவுகளை கையாளும் திறன் கொண்ட அமெரிக்கா அதனை பொருளாதார குறிகாட்டிகளுடன் அடைவதற்கு திட்டமிடுகின்றது. அதற்கான வாய்ப்புகளை நோக்கி இலங்கைத் தீவின் பொருளாதாரம் செழுமைப்படுத்தல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பக்கத்தை சர்வதேச நாணய நிதியமும் அதற்கு அனுசரணை வழங்கும் அமெரிக்காவும் இலங்கையின் முழு எழுச்சிக்கான திட்டங்களை பாராட்டும் அமெரிக்க தூதுவரும் ஒரே இடத்தில் சந்திக்கின்ற சூழல் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதனால் வேகமாக இலங்கை தீவை அமெரிக்கா கண்காணிப்புக்குள் உட்படுத்துவதற்கு வாய்ப்பை தரக்கூடியதாக அமைகிறது. இதனை வெளிப்படையாக பார்த்தால் கண்டு கொள்வது கடினம். ஆழமான அவதானிப்புகளை செலுத்துகின்ற போது மட்டுமே அரசியல் பொருளாதாரம் இராணுவம் மற்றும் சமூக நலத் திட்டங்கள் அனைத்துமே ஒரு புள்ளியில் தொடங்கி ஒரு புள்ளியில் முடிவடையும் தோற்றப்பட்டைக் கண்டு கொள்ள முடியும். இவற்றை தனித்தனியே மதிப்பீடு செய்வது அதன் பலவீனத்தை புரிந்து கொள்ளவைக்குமே அன்றி உண்மைத்தன்மையை கண்டு கொள்ள உதவாது.

எனவே இலங்கை அமெரிக்க நெருக்கம் பொருளாதார அடிப்படையில் இலங்கை தீவுக்கானது. இலங்கை தீவின் வளர்ச்சிக்கு அவசியமானதும் கூட. ஆனால் அத்தகைய வாய்ப்புகள் ஏற்படுத்தும் போது புறவயமான விளைவுகள் இந்திய-இலங்கை உறவையும் சீன-இலங்கை உறவையும் பாதிப்புக்கு உள்ளாக்கலாம். ஆனால் சீன இலங்கை உறவை விட இந்திய இலங்கை உறவே அதீத பாதிப்புக்கு உள்ளாக கூடியது. சீனா கூட 99 வருடத்திற்கு நிரந்தரமான பலத்தை இலங்கைத் தீவில் நிலை நாட்டியுள்ளது. இதனால் அதிக பாதிப்பை எதிர்கொள்ள போகும் நாடாக இந்தியாவே காணப்பட போகிறது. ஜே.வி.பி.இன் ஆட்சி குறுகிய காலப்பகுதியாக இருந்தாலும் அது தலைமை தாங்கும் தென் இலங்கையின்; இராஜதந்திர பாரம்பரியமும் வெளிவிவகார பாரம்பரியமும் 2800 ஆண்டு காலப் பாரம்பரியத்தையும் முதிர்ச்சியையும் கொண்டது என்பதை மறுக்க முடியாது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
( நன்றி: தினக்குரல்)