August 17, 2026
அரசியல் கட்டுரைகள்

இந்திய நிதி அமைச்சரது இலங்கை வருகையும் சீன ஆய்வுக் கப்பலும்!

இலங்கை அரசியல் இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளது நலன்களூடாக நகர்கிறது. ஏனைய நாடுகளின் வகிபாகம் காணப்பட்டாலும் மேற்குறித்த மூன்று நாடுகளுமே பிரதான சக்திகளாக விளங்குகின்றன. தென் இலங்கை ஆட்சிகளும் அத்தகைய மூன்று பிரதான சக்திகளையும் கையாளுவதன் வாயிலாக வெற்றிகரமான அரசியல் இருப்பினை பாதுகாத்து வருகிறது. இதுவொன்றும் இலங்கையின் தந்திரோபாயம் மட்டுமல்ல ஒரே அயல் நாடான இந்தியாவின் இருப்பும் அதன் சந்தையும் மூலோபாயமும் சார்ந்ததாகவே உள்ளது. பிற சக்திகளுக்கு இந்தியா மீதான நட்பும் இந்தியா மீதான எதிர்ப்பும், அச்சுறுத்தலும் இலங்கையின் அரசியலை பாதுகாத்துவருகிறது. இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்போ, இராணுவ உதவிகளோ, புலனாய்வு ஒத்துழைப்போ மட்டுமல்ல இந்தியாவினது மூலோபாய முக்கியத்துவமும் இலங்கைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவருகிறது. இக்கட்டுரையும் இந்திய மத்திய நிதியமைச்சரது வருகையின் விளைவுகளைத் தேடுவதாக உள்ளது.

சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷி யான்-6 இன் வருகை(25.10.2023) பிராந்திய மற்றும் பூகோள அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு 31.10.2023 முதல் கடலாய்வை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. ஷி யான்-6 தனது ஆய்வை இலங்கையின் மேற்கு கரையோரப் பகுதியில் நாரா மற்றும் றுகுணப்பல்கலைக்கழமும் இணைந்து மேற்கொண்டுவருகின்றன. இதன் பிரதான நோக்கம் இலங்கையின் கரையோரக் கடற்பகுதியில் அமைந்துள்ள வளங்களைத் தேடுவதாகும். ஏறக்குறை 80 நாட்கள் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபடும் எனவும் சுமார்12,000 கடல் மைல்களை கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இதற்கு அமைவாக பாதுகாப்பு மற்றும் கடல் போக்குவரத்து சார்ந்த விடயங்களிலும் சீனக்கப்பல் ஆய்வுகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக ஆய்வுகளும் விமர்சனங்களும் உண்டு.

சீனக்கப்பலது வருகைக்கு இந்தியா அமெரிக்கத் தரப்பு எதிர்ப்பு வெளிப்படுத்தியதாகவும் அதனையும் மீறி ஷி யான்-6 வருகை தந்துள்ளதாகவும் விமர்சனங்கள் உண்டு. அத்தகைய எதிர்ப்பின் ஓரங்கமாகவே இந்திய வெளியுறவு அமைச்சரது இந்து சமுத்திர விழிம்பு நாடுகளின் (9-11.09.2023) மகாநாட்டிற்கு வருகைதர மறுத்ததாகவும் பின்னர் சீனக்கப்பலது வருகையை தாமதப்படுத்தியதன் பிரகாரமே ஜெய்சங்கரது மகாநாட்டுக்கான வருகை சாத்தியமானதெனவும் தகவல்கள் உண்டு. எது எவ்வாறாயினும் சீனாவின் இலங்கை மீதான செல்வாக்கு இந்திய பிராந்திய அரசியலை பாதிக்கும் ஒன்றாகவே தெரிகிறது. அதில் பூகோள அரசாக அமெரிக்காவும் பங்கெடுத்துக் கொண்டுள்ளது. சீன-அமெரிக்க உலகளாவிய அதிகாரப் போட்டியின் அங்கமாக இந்து சமுத்திரமும் இலங்கைத் தீவும் அங்கம் பெற்றுள்ளது. இதில் இந்தியாவின் நிலை மேற்குக்கு சார்பானதாகவே தென்பட்டாலும் இலங்கைத் தீவு விடயத்தில் தனித்துவமான முடிபுகளுக்கு உட்பட வேண்டிய நிலையில் இந்தியா உண்டு. இந்தியாவின் பிராந்திய அதிகாரம் சார்ந்தும் அத்தகைய முடிபை நோக்கி நகர்த்த வேண்டியுள்ளது. இஸ்ரேல் ஆதரவு நிலைக்கு பின்னர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் போக்கில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. பாரதீய ஜனதாக்கட்சி 2024 தேர்தலில் வெற்றி பெறுமாயின் இந்தியாவின் வெளியுறவில் தீவிரத் தன்மைக்கான வாய்ப்பு ஏற்படுமென்றே எதிர்வு கூறப்படுகிறது. இஸ்ரேலுக்காக இந்தியக் கடற்படையினர் உளவு பார்க்குமளவுக்கு இரு நாட்டுக்குமான நெருக்கம் நிலவுகிறது. இந்தியா முழுமையாக மேற்கு சார்பான நாடாக மாற்றமுறும். அத்தகைய மாற்றம் இந்தியாவை ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும்.

இத்தகைய புறச்சூழலிலேயே இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் இலங்கையில் நடைபெறும் ‘நாம் 200’ எனும் நிகழ்வுக்காக வருகை தந்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்ன் ஏற்பாட்டில் மலையக மக்களின் இலங்கைக்கு வருகை தந்ததை நினைவு கொள்ளும் நாம் 200 எனும் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது வருகை இலங்கை அரசியலில் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் இலங்கை பொறுத்த போக்கில் மாறுதல் உள்ளதாகவே தெரிகிறது. அதனை சற்று விரிவாக விளங்கிக் கொள்ளவது அவசியமானது.

01.11.2023 இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்த இந்திய நிதி அமைச்சர் இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரங்க பாலசூரிய அமைச்சர் ஜீவன் தொண்டமான் கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே ஆகியோர் கட்டுநாயக்காவில் வரவேற்றனர். அதன் பின்னர் கண்டிக்கான அவரது விஜயம் அமைந்திருந்தது. அவர் முதலில் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரை சந்தித்ததுடன் வரக்கொட சிறி ஞானரத்னதேரரிடம் ஆசிபெற்றதுடன் இரு நாட்டுக்கும் இடையிலான கலாசார உறவுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். பதிலுக்கு மகாநாயக்கர் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா ஆற்றிய உதவிக்கு நன்றி தெரிவித்திருந்தார். அடுத்து கண்டித்தலதா மாளிகைக்கு விஜயம் செய்த நிதி அமைச்சர் தியவடன நிலமே திலங்க பிரதி தேரர் வரவேற்றதுடன் நினைவு பரிசையும் பெற்றுக் கொண்டார். பின்னர் மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் சிறி சித்தாத்த சுமங்கல தேரரை சந்தித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டதுடன் இந்த சந்திப்பை தான் பாக்கியமாகக் கருதுவதாகவும் மும்மணிகளின் ஆசீர்வாதம் அவரூடாக கிடைக்கும் என நிதியமைச்சர் தெரிவித்தார். அப்போது இலங்கையின் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் இலங்கையிலுள்ள பௌத்த விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்கு 15 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டதாகவும் விகாரைகளில் சூரியசக்தி திட்டத்தினை முன்னெடுக்க 10 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கண்டிப்பயணத்தை அடுத்து அனுராதபுரத்தின் மகாபோதி விகாரைக்கு சென்று வழிபாடுகளை நடாத்திய பின் திருகோணமலைக்கு சென்றிருந்தார். அங்கு இந்தியா அமைத்துள்ள எண்ணெய் குதங்களை பார்வையிடுவதுடன் திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. அதனை அடுத்து நாம் 200 நிகழ்வில் கலந்து கொள்ளவதுடன் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் சந்தித்துள்ளார். 03.10.2023அன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

ஏறக்குறைய இந்திய நிதி அமைச்சரின் விஜயம் இலங்கையின் அனைத்துப் பாகங்களையும் இலக்கு வைத்ததாக அமைந்துள்ளது. அவ்வாறாயின் இந்தியா இலங்கையை முழுமையாக தனது செல்வாக்குக்குள் வைத்துக் கொள்ள முனைகிறதாகவே தெரிகிறது. அத்தகைய கொள்கையை நீண்டகாலமாக கடைப்பிடித்துவரும் இந்தியா அதற்கான தந்திரோபாயம் எதுவுமின்றி செயல்படுகிறதாகவே தெரிகிறது. ஏற்கனவே இந்திய பாதுகாப்பு அமைச்சரது விஜயம் இரத்தானது மற்றும் வெளியுறவு அமைச்சர் திருகோணமலை விஜயத்தை கைவிட்டு நாடு திரும்பியமை என்பன கவனத்திற்குரியதாகும். ஆனால் அவற்றுடன் ஒப்பிடும் போது இந்திய நிதி அமைச்சரது வெற்றிகரமான விஜயங்கள் இந்தியாவுக்கு அவசியமான மாறுதலைத் தரக்கூடியதாக அமையுமா என்ற சந்தேகத்தை தந்துள்ளது. தவிர்க்க முடியாது இந்தியா நீண்டகாலக் கொள்கையாக இலங்கைத் தீவு மீதான செல்வாக்கு சீனாவினால் ஏற்கனவே பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அழுத்தங்களைக் கடந்தும் இலங்கை சீனாவுடனான ஒத்துழைப்பினை அதிகப்படுத்தி வருகிறது. அதனை தடுப்பதற்கு பதிலாக அதற்கு மேலாக அல்லது அதிகமாக நெருக்கமடைவதை உபாயமாக இந்தியா கடைப்பிடித்துவருகிறது. அதில் இலங்கை இந்தியாவுடன் ஒத்துழைப்பது போன்றே செயல்படுகிறது. இறுதியில் சீனாவுடனான உறவை வலுப்படுத்துவதில் கவனம் கொண்டு செயல்படுகிறது. இலங்கை விடயத்தில் இந்தியாவின் உத்திகள் அனைத்துமே நெருக்கடிக்குள்ளாகி வருவதாகவே தெரிகிறது. அதனை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. இலங்கையில் சீனாவின் நகர்வுகளைக் கண்டு கொள்ளும் திறன் இந்தியத் தரப்புக்கு இல்லாதுள்ளதுடன் இந்தியத் தேசிய நலனைவிட இந்திய ஆட்சியாளர் தமது நலனிலேயே கவனம் கொள்வதனால் அத்தகைய நெருக்கடியை வெற்றி கொள்ள தயாராக இல்லாத நிலை காணப்படுகிறது.

இந்திய நிதி அமைச்சரது இலங்கை விஜயம் அதிக குழப்பங்களை தந்துள்ளதாகவே தெரிகிறது. அவர் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் பற்றிய உரையாடலை ஏற்படுத்தியதுடன் இலங்கை அரசியலை ஆளுகை செய்யும் மகாசங்கங்களை முதன்மைப்படுத்தியுள்ளார். தென் இலங்கை ஒரு தேர்தலை நோக்கி நகரும் போது சீனாவின் இலங்கையுடனான நெருக்கத்தை அழுத்தம் கொடுத்து தவிர்க்க முடியாத நிலையில் ஆட்சிமாற்றங்களை நகர்த்த திட்டமிடுவதாக சந்தேகம் ஏற்படுகிறது. தற்போதைய ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை தேர்தல் மூலம் நீடிக்க திட்டமிடும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத் தேர்தலை நிகழ்த்தும் நோக்கத்தை பொதுஜனப் பெரமுன முன்வைத்துள்ளது. எனவே இத்தகைய குழப்பங்கள் அதிகமான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியை எதிர்கொள்வதில் இந்தியா அதிக குழப்பம் அடைவதை அவதானிக்க் கூடியதாக உள்ளது. இதனை தொடர்ந்து எதிர் கொள்வதைக் காட்டிலும் மாற்றங்களை நோக்கி நகர்வதையே இந்தியா அதிகம் கருத்தில் கொள்ள வாய்ப்புள்ளது. அதற்கான ஒரு நகர்வாக இந்திய நிதி அமைச்சரின் விஜயம் அமைந்திருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே இந்தியா இலங்கை உறவானது சீனாவின் நடவடிக்கையால் திட்டமிடப்படுவதுடன் இலங்கையின் நெருக்கடிகால சூழலை இந்தியா அதிகம் எதிர் கொண்டுள்ளது. இந்தியா தனது தந்திரோபாயத்தை மாற்றிக் கொள்ளாதவரை நெருக்கடிகால சூழல் தவிர்க்க முடியாததாகவே அமையும். சீனா ஆய்வுகளையும் அதற்கான இராணுவ கட்டமைப்புக்களையும் வலுப்படுத்தும் போது இந்தியா இராஜதந்திர விஜயங்களையும் உரையாடல்களையும் மட்டுமே மேற்கொள்வதனால் அதிக மாற்றத்தை அடைந்துவிட முடியாது என்பதை கடந்த பல தசாப்தங்கள் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கு மாற்றீடாக இந்திய நிதியமைச்சரது விஜயத்தை கருதலாமா என்பது சந்தேகத்திற்குரியதே.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)