அரசியல் கட்டுரைகள்

இந்திய-பாகிஸ்தான் இராஜீக பதற்றம் போராக மாறுமா?

இந்தியா-பாகிஸ்தான் போர் ஒன்றை உலகம் எதிர் கொள்ள இருக்கிறது என்று கேள்வியை அண்மைய வாரங்கள் தீவிரப்படுத்தி வருகின்றதைக் காணமுடிகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தானால் திட்டமிடப்பட்டது என்பதை உறுதிப்படுத்திவருகின்ற நிலையில் இரு நாட்டுக்குமான இராஜிக உறவுகள் பாதிக்கப்பட்டதோடு எல்லையில் பதற்றம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றது. கார்க்கில் யுத்தத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு யுத்தத்தை இந்திய பாகிஸ்தான் எதிர்கொள்ளும் நிலை பலமடைந்து வருகிறது. ஆனாலும் இத்தகைய பதற்றம் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்துவிடுமா என்ற சந்தேகத்தையும் தருகிறது. இக்கட்டுரையும் பஹல்காம் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதலின் விளைவுகள் பற்றிய தேடுவதாக அமைய உள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது லக்ஷரி இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதில் இஸ்லாமியர் தவிர்க்கப்பட்டதோடு அத்தாக்குதலின் முன்னர் சுற்றுலா பயணிகள் அவமதிக்கப்பட்டிருக்கின்ற சம்பவம் அதிக வெறுப்போடு நோக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் இஸ்லாமியர்களா? இந்துக்களா? என்ற பரிசோதனை அவர்களது ஆடைகளை அகற்றி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் உண்டு. அவ்வளவுக்கு தீவிரவாதத்தின் மத வெறித்தனம் தென்னாசிய அரசியல் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த தாக்குதல் பாகிஸ்தானின் இராணுவத்தின் திட்டமிடலோடு மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்கான பதில் நடவடிக்கைகளை இந்தியா இராணுவ ரீதியில் அணுக முயற்சிப்பதாகவும் ஊடகங்கள் அதிகம் விவாதிக்க முயலுகின்றன. இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பதில் தாக்குதல் ஒன்றுக்கான முன்னாயத்தங்களை மேற்கொண்டு இருக்கின்றது. அதேவேளை இராஜிக உறவுகளே முற்றாகவே முடிவுக்கு கொண்டுவரும் வெளிபாட்டையும் ஏற்படுத்திவருகிறது. ஆனால் இத்தகைய இராஜிக முரண்பாடு என்பது இரு நாட்டுக்கு வழமையான தொன்றும் எல்லை நிகழும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் எப்போதும் அரங்கேறும் சம்பவம் என்றும் குறிப்பிட்டுக் கொள்ள முடியும். ஆனால் உலக நாடுகளில் சில இந்தியாவின் நட்புச் சக்திகள் தாக்குதலுக்கு பதில் வழங்க வேண்டும் என்ற எண்ணமும் ஒரு பக்கம் காணப்படுகிறது. மறுபக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களது தாக்குதலுக்கு பின்னான கருத்துக்கள் ஆழமான நீண்ட பழிவாங்கும் நகர்வுகளை பயங்கரவாதம் மீது நிகழ்த்தப் போவதாக உலகத்துக்கு அறிவித்துள்ளார். எனவே இத்தகைய தாக்குதலுக்கு பதிலிடான ஒரு போரை நிகழ்த்துவது இந்தியாவுக்கு அவசியமானதா என்ற கேள்வியும் அதன் பொருத்தப்பாடு எந்த அளவுக்கு சாதகமானது என்ற வினாவும் தவிர்க்க முடியாது இதனை சற்று விரிவாக நோக்குதல் அவசியம்.

முதலாவது பஹல்காம் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலை அடுத்து இந்தியா 1960 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் மேற்கொண்ட சிந்து நதி உடன்பாட்டை ஒருதலைப் பட்சமாக விலக்கிக் கொள்வதாகவும் அது தற்காலிகமான விலகலானது என்றும் அறிவித்துள்ளது. இதற்க்கு பதில் கொடுக்கும் விதத்தில் பாகிஸ்தான் 1972 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சினிமா உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளதுஇ அது மட்டுமின்றி சிந்து நதி உடன்பாட்டை இந்தியா தன்னிச்சையாக விலகிக் கொள்வதற்கான முடிவை அதிகம் விமர்சித்துள்ள பாகிஸ்த்தான் பலலட்சம் பாகிஸ்தான் மக்களுடைய வாழ்வாதாரத்தை மற்றும் அவர்களது உயர்வாழ்வை இந்தியா மீறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது. அது அடிப்படையில் உலக வங்கியின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவ்வாறு ஒருதலைப் பட்சமாக இந்தியா விலக முடியாது என்றும் எச்சரிக்கை செய்துள்ளது. பதிலுக்கு இந்தியா இந்த உடன்பாட்டை முழுமையாக கைவிடும் நிலை ஒன்றை அதிகம் கொண்டிருப்பதற்கு ஏற்பவகையில் பாகிஸ்தானின் எச்சரிக்கை அமைந்துள்ளது.

இரண்டாவது காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் என்பது காஷ்மீரில் பொருளாதாரத்தை முறையாக சிதைக்கின்ற ஒரு நடவடிக்கையாகவே தெரிகின்றது. அடிப்படையில் காஷ்மீர் சுற்றுலா துறையை அதிகம் தங்கி இருக்கின்ற பிரதேசமாக காணப்படுகிறது. காஷ்மீர் மீதான தீவிரவாதிகளின் தாக்கத்தில் அடிப்படையில் அந்த மக்களையும் பொருளாதாரத்தையும் சிதைப்பது மட்டுமின்றி பாகிஸ்தான் மீதான பாரதீய ஜனதா கட்சியின் அண்மைக்கால அணுகுமுறைகளை எதிர்ப்பதற்கான ஒரு நகர்வாகவும் தெரிகின்றது. வெளிப்படையாக கூறுவதுதானால் அசாத் காஷ்மீரை ஜம்மு காஷ்மீரோடு ஒன்று சேர்ப்பதற்கு பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கை ஒன்றாகவே இதனை நோக்குதல் வேண்டும். பதிலுக்கு இந்தியாவும் இரு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைப்பது மட்டுமின்றி பாலுஸ்தானையும் தனித் தேசமாக பாகிஸ்தானில் இருந்து பிரித்தெடுப்பதற்கான உத்திகளையும் இந்த தாக்குதல் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இருதரப்பும் மிக நீண்ட காலமாக நிகழ்த்திவருகின்ற காஷ்மீரை மையப்படுத்திய இஸ்லாமிய தீவிரவாதத்தை முதன்மைப்படுத்திய தாக்குதல்களையும் போர்களையும் ஒரு புதிய வடிவத்தில் அணுகுவதற்கான திட்டமிடலை இந்திய அரசாங்கம் மேற்கொள்வதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்திய இராணுவத்தின் வளர்ச்சி பாரதீய ஜனதா கட்சியின் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான அணுகுமுறைகள் இத்தகைய உத்திகளை சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்பாக பஹல்காம் தாக்குதலை கட்டமைப்பதாகவே தெரிகின்றது. காஷ்மீரின் பொருளாதாரம் பாதிப்படைதல் ஒரு பக்கம் அமைய மறுபக்கத்தில் பாகிஸ்தான் ஒரு நீண்ட நெருக்கடி மிக்க சூழலை கையாளுவதற்கு முயலுகின்றது. இரு நாடுகளும் அணு ஆயுத சக்திகள் என்ற அடிப்படையில் பிரச்சனைக்குரிய இராணுவ தீர்வுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே காணப்படுவதற்கான வாய்ப்பை அதிகம் கொண்டிருக்கிறது. இரு தரப்பும் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் காஷ்மீரை மையப்படுத்தி அதன் புவிசார் அரசியல் கட்டமைப்பின் புதிய கோடுகளை வரைவதற்கு திட்டமிடுவதாக தெரிகின்றது.

மூன்றாவது இரு நாட்டுக்குமான பதற்றமான சூழல் ஒரு போரை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்பது இந்திய ஆதரவு சக்திகள் அதிக கரிச்சனை கொள்வது போல் தெரிகிறது. குறிப்பாக இஸ்ரேல் ரஷ்சியா ஆகிய இரு நாடுகளும் இந்தியாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இராணுவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதன் பிரகாரம் உலக அரசியலில் மூன்றாவது போர் ஒன்றை திட்டமிட இரண்டு நாடுகளும் முயலுகின்றது போன்றே அவர்களது ஆலோசனை உணர்த்துகிறது. இரண்டு நாடுகளும் முடிவற்ற ஒரு போரை நிகழ்த்தி வருகின்ற சூழலில் அத்தகைய போர்கள் எல்லாவற்றுக்கும் அமைதி வேண்டும் என்று விவாதித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடம் ஒரு போரை மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்குவதாகவே தெரிகின்றது. அவ்வாறான ஒரு சூழல் ஏற்படுமாக இருந்தால் இந்தியாவும் கால வரையறையற்ற ஒரு போரை பாகிஸ்தானோடு மேற்கொள்ள வேண்டிய துயரம் தவிர்க்க முடியாததாகும். போர் இரு நாட்டுக்குமான பொருளாதாரத்தின் அடிப்படையாக இருந்தாலும் பொருளாதாரத்தின் வாய்ப்புகளை தகர்க்கின்ற ஒன்று என்ற புரிதல் உலக வரலாறு முழுவதும் உணர்த்தப்பட்டுள்ளது. அதனால் இப்போரை ஒரு முழு நீள போராக அன்றி ஒரு இராஜதந்திர போராக அல்லது மட்டுப்படுத்தப்பட்ட போராக முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகமானது. அதுவே இரு தரப்பின் இருப்புக்கும் எதிர்காலத்துக்கும் ஆரோக்கியமானதாக அமையும். மாறாக இருநாட்டுக்கு இடையே போர் தொடங்குமாய் இருந்தால் அது நீண்ட போராக மாற்றுவதற்கான சூழல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமதூரத்தில் புரிந்து கொள்வதாக அமெரிக்கா ஜனாதிபதி ரொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் ரஷ்சியாவும் இஸ்ரேலும் பாகிஸ்தான் மீது ஒரு போரை நிகழ்த்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதாகவே தெரிகிறது. அத்தகைய சூழல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆரோக்கியமானதாக அமையுமா என்ற கேள்வி முக்கியமானது.

எனவே இந்திய பாகிஸ்தானிய பதற்றமானது குறுகிய காலத்தில் முடிவுக்கு வரக் கூடியது என்ற அவதானிப்பு பொதுவாகவே காணப்படுகிறது. ஆனால் இந்தியா பாகிஸ்தானில் அமைந்துள்ள லக்ஷரி இ தொய்பா முகாம்களையும் அதன் இருப்புக்களையும் நோக்கி ஒரு தாக்குதலை நிகழ்த்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவே தெரிகிறது. அது ஒரு முழு நீளப் போராக சாத்தியமாகுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. அடிப்படையில் போருக்கான முன்னேற்றங்கள் சமாதானத்துக்கான வாய்ப்புகளை உருவாக்கக் கூடியதாகவே தெரிகின்றது. பாரதீய ஜனதா கட்சியின் அடுத்து வரும் ஆட்சிக்கான அனைத்து நகர்வில் ஒன்று இந்த தாக்குதலுக்கு ஊடாக ஏற்படுத்தப்படும் என்ற சந்தேகமும் நிலவுகிறது. இராஜீக ரீதியான பதற்றம் இரு நாட்டுக்கும் வழமையானது என்பதும் அதே நேரம் தீவிரவாதத்தின் கொடுமையான விளைவு என்ன என்பதும் இதில் கண்டு கொள்ளக்கூடியது. போரை அதிகம் முதன்மைப்படுத்தாத ஆனால் தாக்குதல்களை இந்தியா மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை பதற்றம் இரு நாட்டுக்குமான நகர்வுகள் கொண்டிருக்கிறதாகவே தெரிகின்றது.

-பேராசிரியர் கே ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)