June 25, 2026
அரசியல் கட்டுரைகள்

இந்திய தூதுவரது வடக்கு வருகையும் தென்இலங்கையின் இந்திய எதிர்ப்புவாதமும்?

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பகிரங்கமாகத் தெரிவித்துள்ள செய்தி தென் இலங்கையில் அதிக அதிர்வலைகளை வெளிப்படுத்தியுள்ளது. அமைச்சருக்கு எதிராக நீதிமன்றை நாடும் தரப்புக்களும் அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதுமாக ஒரு பக்கம் அமைய மறுபக்கத்தில் இந்திய எதிர்ப்புவாதம் மீண்டும் வெளிப்படையாக மேலெழும் நிலை காணப்படுகிறது. இலங்கை ஆட்சியாளர்கள் இந்திய எதிர்ப்புவாதத்தை கொண்டுள்ள போதும் அதனை அமைதியாக நகர்த்துவதற்கு இத்தகை எதிர்ப்பு உரையாடல்கள் அவசியமானவையாகவே இருந்துள்ளன. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுராகுமாரவின் இந்திய விஜயம் தந்துள்ள விளைவுகளாகக் கூட இவற்றை அளவீடு செய்ய வேண்டியுள்ளது. இக்கட்டுரையும் அண்மையில் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் சந்தோஷ் ஜாவின் வடக்கு விஜயமும் அது வெளிப்படுத்திய செய்தியையும் தேடுவதாக அமையவுள்ளது.

முதலில் இலங்கைத் தீவானது இந்தியாவின் ஒரு பகுதியாக சோழர் ஆட்சிக் காலம் முதல் அவ்வப்போது அமைந்துள்ளது என்பதை வரலாற்றின் ஊடாக கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. பின்னர் பிரிட்டிஷ்-இந்தியர் காலத்தில் சென்னை நிர்வாகத்தின் கீழ் இலங்கை இந்தியாவின் கீழ் ஆளப்பட்டது. அவ்வாறே 1940ஆம் ஆண்டு இலங்கைத் தேசிய காங்கிரஸ் சார்ப்பில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்திய தலைவரான ஜவகர்லால் நேருவுக்கு சுதந்திர இந்தியாவுடன் சுதந்திர இலங்கை ஒரு சமஷ்டி ஆட்சி முறையோ அல்லது நெருக்கமான கூட்டாட்சி முறையோ அமைப்பது பற்றி கலந்துரையாட விரும்புவதாக யூலை 20 ஆம் திகதி கடிதமொன்றை வரைந்துள்ளார். அதற்கு 1940 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7ஆம் திகதி பதிலளித்த நேரு சிறிய அரசுகளின் காலம் முடிந்துவிட்டது.சமஷ்டி அமைப்பு முறையிலான பெரிய அரசுகளோ அன்றி இறுக்கமான பிணைப்புக்களைக் கொண்ட சாம்ராட்சியங்களோ எதிர்காலத்தில் தப்பிப் பிழைக்க முடியும். ஏதிர்கால உலகத்தில் தனித்து நிற்க முடியாத அளவுக்கு இலங்கை அரசியல் பொருளாதார ரீதியில் மிகச்சிறிய அரசே ஆகும். இத்தகைய சூழலில் மிகப் பெரும் ஆபத்து எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்படும் என்ற வகையில் உங்களின் கருத்தை ஏற்கிறேன் என்றார். அதே வேளை Times of India எனும் பத்திரிகைக்கு 1942 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி டி.எஸ்.சேனநாயக்க வழங்கிய நேர்காணலில் பெரிய பலம் பொருந்திய இந்திய சமஷ்டிக்குள் ஓர் அங்கமாக இலங்கை இணைவது இலங்கையின் நலனுக்கு உகந்தது என்றார். ஆனால் பிரித்தானியரும் டி.எஸ்.சேனநாயக்கவின் ஆலோசகருமாக பணிபுரிந்த ஐவர். ஜெனிங்ஸ் இந்தியாவும் இலங்கையும் இணைக்கப்பட்டால் அவ்விணைப்பானது சமத்துவ அடிப்படையில் அமையாது எனவும் இந்திய சமஷ்டி இணைப்பினுள் இலங்கை விழுங்கப்பட்டுவிடும் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டாவது, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா வடக்குக்கு 18.02.2024 விஜயம் மேற்கொண்டிருந்தார். அவர் தனியார் விடுதியொன்றில் அரசியல் தலைவர்கள் ஊடகவியலாளர்கள் சிவில் தரப்பினர் மற்றும் பல்கலைக்கழக புலமையாளர்களைச் சந்தித்து உரையாடினார். அவரது உரையாடலில் இரு பிரதான அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அவற்றை ஆழமாக விளங்குதல் அவசியமானது.

ஒன்று, தமிழ் மக்களின் சுதந்திரம் சமத்துவம் சகவாழ்வு பொறுத்து இந்தியா ஆழமான கரிசனை கொண்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படத்துமாறு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்காவிடம் எடுத்துரைத்துள்ளார். 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா இலங்கை அரசாங்கத்துடனான அனைத்துச சந்திப்புகளிலும் வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை மறுதலிக்கவில்லை. ஆனால் அவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்ப்பிக்கவில்லை. எனினும் இந்தியா தொடர்ச்சியாக அந்தவிடயத்தில் கவனம் செலுத்துகிறது என்று குறிப்பிட்டார்.
இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா இந்தியாவின் நிலையை மட்டுமல்ல இலங்கை ஆட்சியாளரது போக்கினையும் தெளிவாக ஏற்றதோடு அதனை தெளிவுபடுத்தியுமுள்ளார். இதுவே இலங்கை ஆட்சியாளரின் இராஜதந்திரம். இதனை இந்திய தரப்பு புரிந்து கொள்ளவோ வெளிப்படுத்தவோ நீண்டகாலம் தேவைப்பட்டுள்ளது. இது இலங்கை ஆட்சியாளர் இந்தியாவை மட்டுமல்ல உலகளாவிய தலைவர்களையும் ஈழத்தமிழ் தலைவர்களையும் கையாள பயன்படுத்திய உத்தியாகவுள்ளது. எல்லாவற்றையும் மேற்கொள்வதாக ஒப்புக் கொள்வதில் மட்டுமல்ல அதனை அமுலாகாத வகையில் அத்தகைய ஒப்புதலை நிகழ்த்துவார்கள். இலங்கையின் அரசியலமைப்பு உட்பட அனைத்தையும் அவ்வாறே கையாளுகிறார்கள். பெரும்பான்மை மேலாதிக்கத்திற்கு உரியதையும் தேவையானதையும் மட்டுமே அமுலாக்குவார்கள். ஈழத்தமிழர் அரசியலை முழுமையாக சிதைத்ததில் இத்தகைய தந்திரமான நகர்வே தென் இலங்கைக்கு வாய்ப்பாக அமைந்தது. அதில் எந்தச சிங்களத் லைவர்களும் சளைத்தவர்கள் அல்ல. அதற்கான ஆலோசகர்களும் வழிகாட்டிகளும் சிங்களத் தரப்பிடம் உண்டு. இலங்கைத் தீவின் 2500 ஆண்டுகால வெளியுறவின் பாரம்பரியம் அத்தகைய தந்திரோபாயத்தினாலேயே கட்டிவளர்க்கப்பட்டுள்ளது. தேவநம்பியதீசன் முதல் ரணில்விக்கிரமசிங்ஹா வரை அத்தகைய பாரம்பரியம் இலங்கையின் வெளியுவில் குவிந்துள்ளது. அதற்குள் பௌத்தப் பாரம்பரியமும் மகாவம்ச குறியீடும் உள்ளது.

இந்தியா இலங்கை ஆட்சியாளரின் இயல்பை கண்டறியவும் கண்டறிந்ததை வெளிப்படையாகக் கூறவும் இவ்வளவு காலம் தேவைப்பட்டுள்ளது. இந்தியாவும் இலங்கையும் அரசுகள் என்ற அடிப்படையில் அழுத்தங்களை மட்டுமே கொடுக்க முடியும். அத்தகைய அழுத்தத்திற்கும் எல்லை உண்டு. இந்தியாவின் அழுத்தங்களை இலங்கை இறைமையுடைய அரசு என்றவகையில் ஏற்பது நடைமுறைப்படத்துவது அதற்குரியது என்ற விவாதம் புலமைத்தளத்தில் உண்டு. ஆனால் 1972இல், 1989இல், 2009 இல், 2023இல் இந்தியாவின் ஒத்துழைப்பும் உதவியும் எல்லை கடந்தது. 1983, 1984 இல் ஈழத்தமிழருக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு எல்லை எதுவும் இருக்கவில்லை. இந்தியா அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியில் இலங்கைத் தீவுக்கு எல்லையில்லாத உதவிகளையும் ஒத்துழைப்பினையும் கொடுத்துள்ளது. ஈழத்தமிழர் ஓர் தேசிய இனம் என்ற அடிப்படையில் இந்தியாவுடன் சேர்ந்து பயணித்தவர்கள். இந்தியாவுக்காக அர்ப்பணிப்புகளையும் தியாகங்களையும் செய்தவர்கள். இன்னுமே தென் இலங்கை ஆட்சியாளர்கள் ஈழத்தமிழரை அழிப்பதுவும் புலம்பெயரச் செய்வதுவும் இந்தியா மீதான அச்சமேயாகும். அதனை தற்போது தென் இலங்கையில் கண்டுகொள்ள முடிகிறது. ஈழத்தமிழர் புலம்பெயர்வதென்பது வடக்கு கிழக்கு வாழ் ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் ஆபத்தானதே.

இரண்டாவது, இந்தியத் தூதுவரது விண்ணப்பமாக அமைந்திருந்தது ஈழத்தமிழரது ஐக்கியம் பற்றியது. தமிழ் அரசியல் கட்சிகளது பிரிவினையை தவிர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக தமிழ் கட்சிகள் மேலும் பிளவடைவதை தவிர்க்குமாறும் ஐக்கியத்தை வலியுறுத்தும் விதத்திலும் அவரது ஆலோசனை அமைந்திருந்தது. அது மிகச்சரியானதாகவே தென்படுகிறது. தமிழரது அரசியல் இருப்பானது முரண்பாடுகளினால் தனித்தன்மையை இழந்துவருகிறது. சிறிய தேசிய இனம் தனிப்பட்ட நலனினால் மக்களது நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாதுள்ளதுடன் ஒரு விடயத்தில் அல்லது விவகாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்களுக்கு உட்பட வேண்டிய நிலை தவிர்க்க முடியாது உள்ளது. அதனால் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி செயல்பட முடியாதுள்ளது. இந்தியாவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளையோ அல்லது தமிழரது அரசியல் செல்நெறியை ஒழுங்குபடுத்த முடியாதுள்ளது. வேறுபட்ட அணிகளின் வேறுபட்ட தீர்மானங்களால் அவற்றை இந்திய நலனுக்கு அனைத்து தரப்புக்களையும் உட்படுத்த முடியாதுள்ளது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை கட்சிகள் முரண்பாடுடையவையாக உள்ளவே அன்றி மக்கள் அல்ல என்பதை பல சந்தர்ப்பங்களில் நிறுவியுள்ளனர். அவ்வாறே கட்சிகளும் தமிழ் தேசியம் பற்றிய எண்ணத்துடனேயே செயல்பட முனைகின்றன. அதே நேரம் தனித்தனிக் கட்சிகளாக இயங்குவதனால் அதிக முரண்பாடு நிலவுவதாகவே உணரப்படுகிறது. அதே நேரம் கட்சிக்குள் மோதுவது போலியான முகத்தை அசல் எனப்பிரச்சாரம் செய்வது மக்களைவிட கட்சியும் கொள்கையும் பெரிதென்று பிரச்சாரப்படுத்துவது அபத்தமான அரசியல் மட்டுமல்ல இயலாமையாகவே தெரிகிறது. கட்சி ஜனநாயகத்தைக் கொண்டிருக்கிறதாகவும் கட்சியில் தனிப்பட்ட நலன்களுக்காக நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வது என்பன எல்லாம் அரசியலாகக் கருதும் வங்குரோத்து அரசியலே தமிழர் கட்சிகளிடம் அதிகம் காணப்படுகிறது. கட்சிக்கு முதன்மையானது மக்களும் அவர்களது ஆதரவும் அதற்கான மக்கள் நலத்திட்டங்களுமேயாகும். அத்தோடு அந்த மக்களது அபிலாசைகளை உயிரைக் கொடுத்தேனும் மீட்டுக் கொடுப்பதே கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் உரிய விடயமாகும். இவை எதுவும் நிகழவில்லையாயின் இந்தியத் தூதுவர் மட்டுமல்ல எல்லோரும் தமிழ் கட்சிகளுக்கு வேளை தவறாது வகுப்பெடுப்பார்கள். இதனை கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை தவிர்க்க முடியாதது. தமிழரசுக் கட்சிக்குள் எழுந்திருக்கும் குழப்பத்திற்கு மக்களாக திரட்சி பெற்று அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே முக்கியமானது. அது வெறும் கட்சி உறுப்பினர்களதோ அல்லது அதன் தலைவர்களினதோ கிடையாது. அது தமிழ் மக்களது கட்சி என்பதை எல்லோரும் உணர வேண்டும். தமிழ் மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். அதனை ஊடகங்கள் வெளிப்படுத்த சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். அப்படியான நகர்வுகளை தமிழ் மக்கள் செய்யத் தவறும் பட்சத்தில் தனிமனிதர்கள் தேசத்தையும் தேசியத்தையும் தமது தனிப்பட்ட நலனுக்கு பயன்படுத்திவிட்டு செல்வார்கள். யூதர்கள் பற்றி ஒரு முதுமொழியுண்டு. நான்கு யூதர்கள் ஒன்றுசோர்ந்தால் ஐந்து கட்சிகளைக் கட்டுவார்கள் என்பதை நினைவு கொள்வது பொருத்தமானதாகும்.

எனவே அமெரிக்க இராஜாங்கத் திணைக்கழத்திலிருந்து வருகைதந்துள்ள அதிகாரிகள் மற்றும் எதிர்காலத்தில் வருகைதரத்திட்டமிடப்பட்டுள்ள இராஜதந்திரிகள் அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு நகர்வதாகவே தெரிகிறது. இலங்கையின் இறையாண்மையை பாதுகாப்பதில் அமெரிக்கா எப்போதும் கருசனையாக இருப்பதாக உதவி இராஜாங்கச் செயலாளர் டொலாட்லூ அலன் தெரிவித்துள்ளார். இந்தியத் தூதுவரது வருகை அமெரிக்க இராஜதந்திரிகளது வருகை என இலங்கைத் தீவு தேர்தல் நகர்வில் அதிக பொறிக்குள் சிக்கியுள்ளதைக் கண்டு கொள்ள முடிகிறது. ஆனால் ஒரே நேரத்தில் இந்தியாவையும், அமெரிக்காவையும் பகைக்கும் செயல்பாட்டில் தென் இலங்கை இயங்காது. அதனால் அமெரிக்காவை அணைத்தக் கொண்டு இந்தியாவை எதிர்ப்பதும் இந்தியாவை அணைத்து கொண்டு அமெரிக்காவை கையாளுவதிலும் கவனம் கொண்டுள்ளது. இதனை இந்தியத் தரப்பு உணரும் காலத்தை நோக்கியே தமிழ் தரப்பு காத்திருக்க வேண்டியுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)