அரசியல் கட்டுரைகள்

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் இலங்கைத் தீவு கண்டு கொள்ளாத இந்திய ஆட்சியாளர்கள்?

இலங்கை இந்திய உறவு பற்றிய தேடல் சமகாலப்பகுதியில் அதிகமாகதாக காணப்படுகிறது. காரணம் ஈழத்தமிழர் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த முடியாத நிலையில் தென் இலங்கை ஆட்சியாளர்களும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் இந்தியாவை கையாளுவதில் வெற்றிகரமாக இயங்குவதாக விவாதங்கள் உண்டு.சிங்கள் அரசியல் களம் சீனாவை முதன்மைப்படுத்திக் கொண்டு இந்தியாவை வளைத்துப் போடுவதில் வெற்றி பெறுகின்றனர். அதே நேரம் சீனாவை முன்னிறுத்தி ஈழத்தமிழர்கள் இந்தியாவை கையாளமுடியாதவர்களாக காணப்படுகின்றனர் அதற்கு இந்தியாவின் வலுவானது சீனாவுக்கு நிகரானதாக இல்லாமையே பிரதானமான காரணமாக தெரிகிறது. இலங்கைக்குள் சீனாவின் வருகையை தாம் பார்த்துக் கொள்வதாக ஈழத்தமிழர்களுக்கு தெரிவிக்கும் இந்தியா சீனாவின் இலங்கை நெருக்கத்தை தடுக்க பொருளாதார ஒத்துழைப்பையும் இலங்கையுடனான உறவையும் அதிக புரிதலுடன் மேற்கொண்டுவருகிறதை காணமுடிகிறது. இக்கட்டுரையும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மிலிந்த மொறகொட வெளியிட்ட அறிக்கை தொடர்பிலான தேடலாகவே அமையவுள்ளது.

முதலில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மிலிந்த மொறகொட புதுடில்லியில் ஊடகங்களுக்கு இலங்கை-இந்திய உறவு பற்றி தெரிவிக்கும் போது, இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக பயன்படுத்தப்படுவதை இலங்கை அனுமதிக்காது என்றும் 1987ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு இலங்கை இந்த உறுதிமொழியை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டடிருந்தார். ஆனால் 1987 ஆம் ஆண்டு முதல் இலங்கை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மேற்கொண்ட விடயங்கள் அதிகமானவை. அவை அனைத்தையும் மறைத்துவிட்டு அல்லது மறந்துவிட்டு தூதுவர் 1987 முதல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலுக்காக இலங்கைத்தீவை பயன்படுத்தப்படுவதை அனுமதிக்காமைக்கான உறுதிமொழி அளித்துள்ளதாக குறிப்பிடுகின்றார் 1987 களுக்கு பின்னர் இலங்கைத் தீவ இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படுத்திய அச்சுறுத்தலை நோக்குவது பொருத்தமானதாக அமையும்.

முதலாவது, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் வரவுக்கு காரணமாக அமைந்த விடயம் அமெரிக்க-இலங்கை நெருக்கமாகும். குறிப்பாக 1984 ஆம் ஆண்டு கொழும்புக்கு வடக்கே அமைந்துள்ள அமெரிக்க வானொலி நிலையத்தை விஸ்தரிக்கவும் மேம்படுத்தவும் அமெரிக்காவுடன் ஓர் உடன்பாட்டை இலங்கை மேற்கொண்டிருந்தது. அப்போது நிலவிய பனிப்போரில் அமெரிக்க எதிர் இந்தியா என்ற நிலைப்பாடு நிலவிய காலம். இது உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய அமெரிக்க வானெலி நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.ஏனெனில் ஜே.ஆர்.ஜெயவர்தனா-ராஜீவ்காந்தி பரிமாறிக் கொண்ட கடிதத்தின் பிரகாரம் இந்தியாவின் ஒப்புதலின்றி இலங்கையின் கடல் மற்றும் ஆகாய பிரதேசத்தை வேறு எந்த நாட்டுக்கும் வழங்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதனை எல்லாம் மீறிய இலங்கை அரசாங்கம் இலங்கை-இந்திய உடன்பாட்டை கைவிட திட்டமிட்டது. ஜனாதிபதி ஆர். பிறேமதாஸா விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்டு இந்திய இராணுவத்தை வெளியேற்றியது. தென் இலங்கையில் எழுச்சி பெற்ற ஜே.வி.பி இன் கிளர்ச்சியையும் வடக்கு கிழக்கில் தனிநாட்டுக்கு பேராடிய ஆயுதப் பேராட்டத்தையும் ஒரே நேரத்தில் தோற்கடிக்க உதவிய இந்தியாவை தென் இலங்கை ஆட்சியாளர்கள் எதிர்ப்பு அரசியலுக்குள்ளால் வெளியேற்றினர்.

இரண்டாவது, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியை இராணுவ அணிவகுப்பின் போது விஜயவீரா என்ற கடற்படைச் சிப்பாய் தாக்கிய போதும் மூளை சுகயீனத்தினாலேயே அவர் ராஜீவை தாக்க முயன்றார் என்று குறிப்பிட்டதோடு பின்னர் ஜனாதிபதியான பிறேமதாஸால் விஜயவீரா விடுதலை செய்யப்பட்டார்..அவர் பின்னர் தேர்தலிலும் போட்டியிட்டதுடன் விஜயவீரா தனது தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவை தாக்கிய ஒளிப்படத்துடன் இந்திய எதிர்ப்பு வாதத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒரு நாட்டின் தலைவரை கொல்ல முயற்ச்சித்தமை கொலைக்கு ஒப்பானதே. அத்தகைய செயல் இந்தியாவுக்கு அச்சுறுத்தனாதே. ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை முதன்மைப்படுத்தும் இந்தியா விஜயவீராவின் முயற்சியை முற்றாகவே மறந்துவிட்டது.

மூன்றாவது, 2002 இல் ரணில்விக்கிரமசிங்ஹா தலைமையிலான தேசிய அரசாங்கம் இலங்கையின் வடக்குக் கிழக்கின் துறைமுகங்களையும், வான்பரப்பினையும் அமெரிக்கா பயன்படுத்தலாமென ஓர் உடன்படிக்கையினை மேற்கொண்டது. அத்துடன் அமெரிக்கக் கப்பல்கள் பல இலங்கையின் துறைமுகப் பகுதிகளில் வருகை தந்ததை அறிய முடிந்தது. இந்தியாவையும் அமெரிக்காவையும் மட்டுமன்றி சீனாவையும்; வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் செல்வாக்குச் செலுத்த ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கை வாய்ப்பளித்தது. அக்காலப் பகுதியில் வடக்குக் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் சீனா மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்குரிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய சர்ச்சைகளில் பாராளுமன்றத்தில் ஐ.தே.மு அரசாங்கம் கூறிய விடயம் நினைவுகோரத்தக்கது. ‘இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு பொருளாதார இராணுவ மட்டத்தில் பாரம்பரியம் மிக்கது. தேசிய பொருளாதாரத்திலும் தேசிய அபிவிருத்தியிலும் சீனாவின் உதவிகள் இலங்கைக்கு நீண்டகாலமாகக் கிடைத்துள்ளது. இலங்கையில் நிகழும் சமாதான நடவடிக்கைகளில் தலைமைத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் சீன அரசாங்கத்திற்கத் தெரியப்படுத்தியதுடன் சீனாவின் ஆதரவை எமது அரசாங்கம் கோரியிருந்தது எனத் தெரிவித்தது.

நான்காவது, 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டமானது சீனாவுடனான கடல்பாதுகாப்புக் கொள்கையை விரிவாக்க உதவியது. இதன் அபிவிருத்தியானது 2017 முழுமையாக நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் சீனாவுக்கு 99 வருடத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இது ஒன்றும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாக இல்லையா என்பது பிரதான கேளிவியாகும். இலங்கை 2010ஆம் ஆண்டு சீனாவுடன் இணைந்து கொண்டு கிழக்கு மகாணத்திலுள்ள கடல் பிரதேசத்தின் இராணுவ ஒத்திகையை மேற்கொண்டமை எதுவும் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தாத விடயமாக கொள்ள முடியுமா?. இந்த இராணுவ ஒத்திகையில் இலங்கை, பாகிஸ்தான், வங்களாதேசம், மாலைதீவுகள் ஆகிய நாடுகளின் படைகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 2012ஆம் ஆம் ஆண்டு யூன் மாதம் 29ம் திகதி ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியங் குவாங்லி இலங்கை வந்திருந்தார். சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும். இதன் போது அவருடன் இணைந்து 23 உயர் அதிகாரிகள்வருகை தந்திருந்தார்கள். இலங்கை மீது சீனாவிற்குள்ள உச்சமட்ட நலன்களை எடுத்துக்காட்டும் விடயம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாகத் தெரியவில்லையா? என்பதையும் அவதானிக்க வேண்டி உள்ளது.

ஐந்தாவது, இறுதிக்கட்ட ஈழப்போர் 2009 இல் நிகழ்ந்த போது சீனாவின் ஆயுததளபாடங்கள் உட்பட கடல் தரை சார்ந்த கண்காணிப்பினை மேற்கொள்ள ராடர்கள் போர் விமானங்கள் ஆட்லறிகள் ஆகியவற்றை பெற்றதோடு பாகிஸ்த்தான் வங்களாதேஷ் போன்ற நாடுகளின் ஆயுததளபாடங்களையும் இலங்கை கொள்வனவு செய்தது.

ஆறாவது, 2014 இல் சீனாவின் கடல் பாதுகாப்புக் கொள்கையின் ஒன்றான பட்டி மற்றும் சாலை முன்முயற்சியில் இலங்கை இணைந்து கொண்டமையும் அதன் ஓரங்கமாக ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமை ஒன்றும் இந்தியாவுக்வின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லாத விடயங்களாக கொள்ள முடியுமா?. அதே காலப்பகுதியில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருந்தமை இந்தியப் பாதுகாப்புக்கு விரேதமான விடயமாக கொள்ள முடியாதா?. அண்மையில் யுவான் வாங்-5 ஆய்வுக்கப்பலானது கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தமை இந்து சமுத்திரத்திற்கும் இந்தியாவுக்கும எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கருத வாய்ப்புள்ளதா? அமெரிக்காவுக்கான இந்தியத் முன்னாள் தூதுவர் ஆவிரி குறிப்பிடும் போது, இலங்கைத் தீவில் சீனாவின் இராணுவ தளம் சாத்தியமாகுமாயின் இந்தியாவின் பிரதான நிலத்திலுள்ள மையங்கள் அனைத்தையும் சீனா ஒரு மணி நேரத்தில் ஏவுகணைத் தாக்குதலால் மட்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடும் என்கிறார்.

இலங்கைத் தீவு சுதந்திரத்திற்கு பிந்திய காலம் மட்டுமல்ல ஆரம்ப காலத்திலிருந்தே இந்தியாவுக்கு எதிரான கொள்கையுடைய நாடாகவே செயல்பட்டுள்ளது. சுதந்திரத்தின் போது பிரித்தானியாவுடனும் பின்பு அமெரிக்காவுடனும் தற்போது சீனாவுடனும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. இந்த நாடுகளுடனான இலங்கையின் உறவின் போது அந்த நாடுகள் இந்திய எதிர்ப்பினைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தியா மீதான எதிர்ப்பினைக் கொண்டே இலங்கைத்தீவின் இருப்பும் வெளிவல்லரசுகளது இந்து சமுத்திர நலனும் காணப்படுகிறது. இரண்டும் ஒன்றேடென்று பிணைக்கப்பட்டுள்ளது.எனவே மிலிந்த மொறக்கொட குறிப்பிடுவது போல் அல்லாது இந்தியாவுக்கு விரேதமான போக்கினையே தென் இலங்கை ஆட்சியாளர்கள் பின்பற்றிவருகின்றனர் இதனை கண்டுகொள்ளாத இந்திய தலைவர்களும் கொள்கைவகுப்பாளர்களும் இந்தியாவை தோற்கடிக்க வழியமைத்துக் கொண்டுள்ளனர். இதற்கான காரணம் இந்தியத் தலைவர்களதும் கொள்கை வகுப்பாளர்களது மேலாதிக்க உணர்வு அல்லது இந்தியாவின் இயலாமையை மறைப்பதற்கான நடவடிக்கைகளாக உள்ளன. எது எவ்வாறாயினும் தென் இலங்கை இந்திய எதிர்ப்புவாதத்தையே கொண்டுள்ளது. அதுவே இலங்கைத் தீவின் இருப்பும் பாதுகாப்புமாகும். மிலிந்த மொறக்கொடவினது கருத்துப் போன்றே டி.எஸ். சேனநாயக்கா முதல் ரணில் விக்கிரமசிங்ஹா வரை இந்தியாவை கையாள பயன்படுத்தும் உரையாடலாக உள்ளன. தற்போது அமெரிக்காவினது ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ஒன்று இலங்கை கடற்படையில் இணைப்பதற்காக கொழும்புத் துறைமுகத்தை நோக்கி வருகை தருகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)