April 20, 2026
அரசியல் கட்டுரைகள்

தென் இலங்கை ஆட்சியாளர்களை பாதுகாப்பதில் இந்தியா அதிக கரிசனை கொள்கிறதா?

இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடிக்கான போராட்டங்கள் ஒருபுறமும் மறுபக்கத்தில் அதனை சரிசெய்யும் அணுகுமுறைகளும் அதிதீவிரமாக நிகழ்ந்து வருகிறது. சர்வதேச நாணயநிதியம் மட்டுமன்றி சீனா இந்தியா ரஷ்சியா போன்ற நாடுகளும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் விதத்தில் நலத்திட்டங்களையும் நிதி உதவிகளையும் அறிவித்துவருகின்றன. பெற்றோலியப் பொருட்கள் மட்டுமன்றி உணவுப் பொருட்களையும் நாடுகள் தமது உதவிகளுக்குள் உள்ளடக்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவின் உதவிகள் மட்டுமன்றி தமிழ்நாட்டு அரசாங்கத்தின் உதவிகள் அதிக முதன்மையானவையாக காணப்படுகின்றன. இக்கட்டுரையும் தமிழகத்தின் உதவிகளும் இந்தியாவின் பெரியளவிலான நிதி உதவிகளுடன் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்புக்கள் அனைத்தும் இலங்கை மக்களின் கோரிக்கைகளைக் கடந்து தென் இலங்கை ஆட்சியாளரை பாதுகாக்கும் உத்தியைக் கொண்டதாக அமைந்துள்ளதா என்பதை தேடுவதாக உள்ளது.

முதலாவது தமிழ் நாட்டின் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமை அண்ணாமலை கடந்த 30.04.2022 முதல் 04.05.2022 வரை இலங்கைக்கு வருகை தந்திருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. பி.ஜே.பி. இன் தமிழ்நாட்டுத் தலைவராக அவர் அடையாளப்படுத்தப்பட்டாலும் ஏறக்குறைய பி.ஜே.பி. இன் முக்கியஸ்தராகவே இலங்கையின் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார். மலையகத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ்ன் மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஏனைய ஊடக சந்திப்புகளின் போதும் இலங்கைக்கு இந்தியா பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் விதத்தில் நிதி உதவிகளை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் குறிப்பிட்டது போல் இந்தியா இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக உதவும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளுமெனக் குறிப்பிட்டது போல் அண்ணாமலை தனது மே தின உரையிலும் ஊடகங்கள் மத்தியிலும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இரண்டாவது இலங்கைக்கு இந்தியா மீளவும் பெற்றோலிய பொருட்கள் கொள்வனவுக்காக 500 மில்லியன் டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதற்காக பெற்றோலியப் பொருட்களுடன் கொழும்புத் துறைமுகத்தில் கப்பல் ஒன்று தரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அதே நேரம் தமிழநாட்டு அரசாங்கம் மனிதாபிமான உதவிகளை வழங்கும் விதத்தில் 123 கோடி ரூபா நிதிக்கான பொருட்களை வழங்குவதற்கு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அவ்வாறே இலங்கை மக்களுக்கு நிதி மற்றும் மனிதாபிமான உதவி வழங்கும் நோக்குடன் தமிழக மக்களிடம் தமிழக அரசு நிதி கோரி அழைப்புவிடுத்துள்ளது. அவ்வாறே ஏனைய திராவிடக் கட்சிகளும் இலங்கை மக்களுக்கு நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துவருவதைக் காணமுடிகிறது. அத்தகைய செயலைக் கண்டித்து மே-18 இயக்கம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

மூன்றாவது இந்தியா போர்க்காலத்திலும் தற்போதைய சூழலிலும் சர்வதேச நாணயநிதியத்திடம் இலங்கைக்காக பரிந்து பேசிவருவதைக் காணமுடிகிறது. தற்போதும் கூட இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் வழங்க சில நிபந்தனைகளை முன்வைத்த போதும் அதற்கான உத்தரவாதத்தை இந்தியா வழங்க முன்வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் நிதி வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நான்காவது சீனா மீளவும் 300 மில்லியன் யுவான இலங்கை அரசாங்கத்தின் உணவு மறட்றும் மருத்துவதட் தேவைகளுக்காக வழங்கியுள்ளதாக இலங்கைக்கதான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. மொத்தமாக 500 மில்லியன் யுவான் வழங்கியுள்ளதாகவும் அதன் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

எனவே காலிமுகத்திடல் முதல் ஆளும் எதிர் தரப்புக்களுகட்கிடையே நிலவிய போராட்டங்கள் அனைத்துமே தற்போதைய ஆட்சியாளரை அகற்றுவதற்கான முனைப்பாகவே அமைந்திருந்தது. குறிப்பாக ஜனாதிபதியும் பிரதமரும் ஆட்சியைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. அத்தகைய நோக்கத்தை தோற்கடிக்கும் விதத்தில் ஆட்சியாளர்கள் நகர்வுகள் அமைந்துள்ளன. அதில் அதிக வெற்றியையும் கண்டுவருகின்றனர். தற்போதைய ஆட்சியையும் பாதுகாக்க வேண்டுமாயின் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு அவசியமானது. அத்தகைய தீர்வை வழங்கும் நாடாக இந்திஜயா காணப்படுகிறது. இந்தியாவின் பலத்திலேயே இலங்கை ஆட்சியாளர்கள் உள்நாட்டுக்குள்’ எழுந்துள்ள அரசியல் நெருக்கடியையும் கையாண்டுவருகின்றனர். அதாவது ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பலமான நெருக்கடியையும் எதிர்கொண்டு வெற்றிகரமான கையாண்டுவருகின்றனர். தற்போதைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தாம் எதிர்கொள்ளத் தயார் என பிரதமரது அறிவிப்பும் பதவியிலிருந்து விலக முடியாது என ஜனாதிபதியின் பதிலும் ஏதோ ஒரு பலத்தின் அடிப்படையிலேயே அரங்கேற்றப்படுகிறது. அத்தகைய பலத்தை வழங்குவதில் இந்தியா பிரதான பங்குதாரராக காணப்படுகின்றனர். இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உடன்பாடுகளும் முதலீடுகளும் பாதுகாக்கபட்படுவதில் இந்தியாவின் நலனும் புவிசார் அரசியல் நலனும் ;;உள்டக்கப்பட்டு;ள்ளது. அதனைப் பாதுகாப்பதன் மூலம் இந்தியாவின் பிராந்திய செல்வாக்கு பேணப்படுவதுடன் இலங்கை மீதான பிற வல்லரசுகளது தலையீடு தடுக்கப்பட முடியுமென இந்தியா கருதுகிறது. மிக அண்மைக்காலத்திலேயே இந்தியாவுக்கும் -இலங்கைக்குமான நெருக்கம் அதிகரித்ததுடன் சீனாவின் ஈடுபாட்டை தவிர்க்க இலங்கை முயன்றது. தற்போது கூட சர்வதேச நாணயநிதியத்துடனான இலங்கையின் ஈடுபாட்டை தவிர்க்கும் விதத்திலான கருத்துக்களை சீனத் தூதுவர் முன்வைத்தமையும் பின்னர் நிதி மற்றும் நீதி அமைச்சரது உரையாடலை அடுத்து அத்தகைய எண்ணத்தை சீனா விலக்கிக் கொண்டதாக அமைச்சரது செய்தியறிக்கை அமைந்திருந்தது. ஆனாலும் சீனாவின் அணுகுமுறையில் மாற்றம் நிகழ்ந்ததாக உறுதிப்படுத்த முடியவில்லை.எதுவாயினும் இந்தியா -இலங்கை நெருக்கமானது தற்போதைய ஆட்சியாளரைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டுக்குள் இந்தியா உள்ளது. .இந்த அரசாங்கம் தோல்வியடையுமாயின் இந்தியாவுக்கான நகர்வானது பாதிப்படைவதுடன் பிறசக்திகளது எழுச்சி தவிர்க்க முடியாததாக அமைய வாய்ப்புள்ளது.ஆனால் இந்தியாவின் தயவில் நிமிரும் இலங்கை அரசாங்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றும் திறன் இந்தியாவுக்கு உண்டு. நீண்டகால முரண்பாடான இனப்பிரச்சினை.க்கு இலகுவான தீர்வொன்றை முன்வைப்பதன் மூலம் இலங்கைத் தீவில் எழுந்துள்ள பொருளாதார முரண்பாட்டை தீர்க்க முடியும். இனப்பிரச்சினையின் நீட்சியே பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படைக் காரணமாகும். அத்தகைய சூழலை தீர்ப்பதன் வாயிலாகவே நீண்ட நிலையான பொருளாதார சுபீட்சத்தை இலங்கைத் தீவில் அடைய முடியும். இதனை இந்தியா நகர்த்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கான உதவியுடன் அரசியல் ரீதியான இனப்பிரச்சினைக்கான தீர்வையும் ஏற்படுத்த முடியுதம். ஆனால் அத்தகைய கரிசனை தமிழ் நாட்டு பி.ஜே.பி தலைமைக்கும் இல்லை. இந்திய வெளியுறவு அமைச்சுக்கும் இல்லை என்பது அவர்களது நடவடிக்கைகளையும் செய்திக் குறிப்புகளையும் வைத்தப் பார்க்கின்ற போது தெளிவாக தெரிகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வை விட இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதில் கவனம் கொள்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியத் தரப்பு கருதுவது போல் இந்த அரசாங்கம் வீழ்த்தப்பட்டால் வேறு ஒரு அரசாங்கத்தை தேடுவது கடினம் என்பது மட்டுமல்ல ஒர் இராணுவ ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவே உணரப்படும் நிலையில் இந்தியாவின் அணுகுமுறை நியாயமானதே. இந்தியாவின் அயல்நாடுகள் இராணுவ ரீதியாகவோ இந்தியாவுக்கு எதிஜரானதாகவோ காணப்படுவது ஆபத்தானது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியவாதமாகும். ஆனால் நீண்ட காலமாக ஒரு தேசிய இனமாக வடக்கு கிழக்கை பூர்வலீகமாகக் கொண்ட தமிழர்கள் எந்தவித அரசியல் தீர்வுமின்றி தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருப்பது பிராந்திய அமைதிக்கும் சகவாழ்வுக்கும் நெருக்கடியானதாகவே உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டிய தருணம் தற்போதைய காலமாகவே தெரிகிறது. நெருக்கடியின் போதே தீர்வுகளை சாத்தியப்படுத்த முடியும். அதுமட்மன்றி தென்இலங்கையில் ஒருசாரார் தமிழர் மீது இழைக்கப்பட்டதை நினைத்து வருந்துமளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த அரசாங்கத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய தமிழர் கோரிக்கையை முன்வைக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டள்ளது. அதற்கான ஒர் அழுத்தத்தை முன்நிறுத்துவது இந்தியாவுக்கு பொறுப்பான பணியாகும். ஆயுதப் போராட்டத்திலும் இலங்கை இந்திய உடன்படிக்கையிலும் அத்தகைய பொறுப்பையே இந்தியாவே எடுத்துக் கொண்டது. 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு 35 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலையை இந்தியா புரிந்து கொள்ளுதல் வேண்டும். மீளவும் 13 க்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை உரையாடுவதை விடுத்து ஆரோக்கியமான தீர்வை முன்மொழிவது பொருத்தமானது. இவை அனைத்தையும் மேற்கொள்ளும் வாய்ப்பினை இந்தியா கொண்டுள்ளது.

இந்தியாவின் எதிர்பாக்கையின் படி தென் இலங்கை ஆட்சியாளர்கள் செயல்படுவார்களா என்பதை கடந்த கால அனுபவத்துடனேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். 2009 போருக்கு பின்னரும் இந்தியா ஒரு அனுபவத்தை இலங்கை அட்சியாளர் பொறுத்து பெற்றுக் கொண்டது. மீளவும் அதே அனுபவத்திற்குள் இந்தியா செல்கிறதா என்ற குழப்பம் தருகிறது. சீனாவின் மௌனம் அதனையே அதிகரிகிறது. மறுபக்கத்தில் காலிமுகத்திடல் போராட்டம் மட்டுமன்றி அனைத்து ஜனநாயகப் போராட்டங்களை ஆதரிக்கும் இலங்கைக்கான அமெரிக்காத் தூதுவரது நகர்வுகளும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இதனை அவதானிக்கும் போது அரசாங்கத்துடன் இந்தியாவும் போராட்ட களத்தில் அமெரிக்காவும் என்ற போக்கினை வெளிப்படுத்துவதமாகவே தெரிகிறது. மறுபக்கத்தில் சீனாவின் மௌனமும் அரசாங்கத்துடனான இரகசிய நடவடிக்கைகளும் கவனம் கொள்ளப்பட வேண்டிய விடயமாகவே தெரிகிறது.

எனவே அமெரிக்கா சீன என்பவற்றுடன் ஒப்பிடும் போது இந்தியா இலங்கையுடனான பொருளாதார ஒத்துழைப்பும் அதனால் ஏற்படக் கூடிய தாக்கமும் அதீதமானதாகவே தெரிகிறது. இந்தியாவின் நலன்களுடன் ஈழத்தமழிருக்கான தீர்வுக்குரிய அழுத்தத்தை கொடுப்பதற்கான காலப்பகுதியாக உள்ளது. இதன் போதும் இந்தியா தனது முதலீடுகளையும் உடன்படிக்கைகளையும் மற்றும் புவிசார் நலன்களையும் பாதுகாக்க முனையுமாயின் பிற சக்திகளது தலையீட்டினாலும் பொருளாதார மீட்சி இல்லாமலும் இலங்கைத் தீவ அதிக நெருக்கடியை எதிர்கொள்ளும். அவை இந்தியாவின் நலன்களை முழுமையாகப் பாதிப்பதாக அமையும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.-

(நன்றி: தினக்குரல்)