இலங்கை அரசியல் வல்லரசுகளது விளையாட்டு திடலாக மாறி நீண்ட காலமாகியுள்ளது. ஆரம்பத்தில் இருந்த வல்லரசுகளை விட தற்போது சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் களமாக மாறியுள்ள போதும் சீனாவே அதிக செல்வாக்குச் செலுத்திவருகிறது. 2005 களுக்குப் பின்னர் தென் இலங்கையுடன் தனது நலன்களை அடைந்த சீனா தற்போது வடக்கு கிழக்கிலும் தனது செல்வாக்கினை வலுப்படுத்தி வருகிறது. அல்லது அதற்கான உபாயங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 28.12.2022 இல் மன்னாரில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டியதுடன் பொருளாதார அடிப்படையில் உணவுப் பொதிகளையும் வழங்கியிருந்தது. அது மட்டுமன்றி சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் மாணவர்களுக்கான உதவிகளையும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உணவுப் பொதிகளையும் வழங்கியுள்ளது. இலங்கைக்கான சீனத் துணைத் தூதுவர் ஹீவெய் வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டு வடமாகாணத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த முயன்றுள்ளார். கடந்த வாரம் இதே பகுதியில் சீனா மீதான ஈழத்தமிழரது மனோநிலை எதுவென்பதை அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கட்டுரையும் ஈழத்தமிழரது கட்சி அரசியலை கடந்து தேசமாகவும், தேசியமாகவும் சீனாவை அணுகுவதை பற்றியதாகவே அமையவுள்ளது.
ஈழத்தமிழரது அரசியல் கட்சிகளும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும் உயர் கல்வி நிறுவனங்களும் ஊடகங்களும் சீனா மீதான அதீத எச்சரிக்கையையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தி வருகின்றன. சீனாவின் தேசியங்கள் பற்றிய அணுகுமுறைகளையும் தேசிய விடுதலைப் போராட்டத்தை கையாளும் முறைமைகளையும் மையப்படுத்தியே அத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. சீனாவின் சோஸலிஸம் பற்றிய எண்ணங்கள் மீது அதிக அதிருப்தி ஈழத்தமிழர் மத்தியில் உண்டு. அதனால் சீனாவையும் அது அடைந்துள்ள வளர்ச்சி நிலையையும் கருத்தில் கொள்ளாது செயல்பட முடியுமா என்பது முக்கியமானது. அது மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் சீனாவின் பலத்தை கருத்தில் எடுக்காது சீனாவை நிராகரிக்க முடியுமா என்ற கேள்வி நியாயமானதாகவே தெரிகிறது. அதனை ஆழமாகத் தேடுதல் வேண்டும்.
முதலாவது, சீனா உலகளாவிய வல்லரசு என்ற நிலையை நோக்கி கணிசமான அடைவை எட்டியுள்ளது. அமெரிக்கா எதிர் சீனா எனும் நிலை மட்டுமன்றி மீண்டும் ஒரு பனிப் போர் நிகழுமாயின் அது சீனா எதிர் அமெரிக்காவாகவே இருக்க வாய்ப்புள்ளது. இரு தரப்பின் அரசியல்-பொருளாதார பலம் மட்டுமன்றி இராணுவ வலுவும் அவ்வாறதென்றாகவே அமைந்துள்ளது. சீனாவின் பொருளாதார வலு இராணுவ வலுவை ஊக்குவிப்பதுடன் எதிர்கால இராணுவ நிலையினை அடைய உதவும். பொருளாதார ரீதியில் முதல் நிலையில் அமெரிக்காவும் அடுத்த நிலையில் சீனாவும் அமைந்திருப்பது வலுவான இராணுவச் சமநிலைக்கு அடிப்படையாகவே தெரிகிறது. அமெரிக்காவுக்கு நிகராக இராணுவ கடற்படை வலு சீனாவிடமத் இல்லாது விட்டாலும் அதனை அடைவதற்காக போட்டியிடும் அரசாக சீனாவின் பாதுகாப்புச் செலவீனம் காணப்படுகிறது. எனவே அடுத்துவரும் தசாப்தங்கள் சீனாவின் செல்வாக்கும் அரசியல் பரம்பலும் விஸ்தரிக்கப் போகின்றது என்பது தெளிவாக தெரிகிறது.
இரண்டாவது, சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சிக்கான நகர்வுகள் அதி தீவிரமாக உலகளாவிய மட்டத்தில் வளர்ந்து வருகிறது. பட்டி மற்றும் பாதை முன்முயற்சிகள் கடல்களையும் துறைமுகங்களையும் கண்டங்களையும் இணைக்கு முன்முயற்சியாக தெரிகிறது. நாடுகளை மையப்படுத்திய சர்வதேச உறவில் புதிய பரிமாணத்தை சீனா வடிவமைத்து வருகிறது. பழைய பட்டுப் பாதைக்கு பதிலாக புதிய பட்டுப் பாதையை உருவாக்கிவரும் சீனா உலகத்தை வர்த்தகத்தால் இணைத்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் இராணுவ பலமுடைய வர்த்தக சந்தைக கட்டமைப்பைக் கொண்ட பெரு வல்லரசாக மாற்றம் அடையும் திறன் கொண்டதாக விளங்கும் என்ற மதிப்பீடு மேற்குலக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்படுகிறன.
மூன்றாவது, இந்து சமுத்திரம் சீனாவின் செல்வாக்குச் செலுத்தும் கடலாகவும் அதுவே அதன் திறவுகோல் கடலாகவும் அமைய உள்ளது. பசுபிக் சமுத்திரம் சீனாவின் தளமாகவும் அதாவது பின் தளமாகவும் அதன் வளர்ச்சிக்கும் சுதந்திரமான விரிவாக்கத்திற்கும் இந்துசமுத்திரமே அடிப்படையானதாக அமையவுள்ளது. அதற்கான நகர்வுகளாகவே இந்து சமுத்திர நாடுகளில் சீனாவின் துறைமுகங்கள் கட்டப்பட்டு வருவதுடன் பிற வல்லரசுகள் நுழையாதவாறு இந்துசமுத்திரத்தை கட்டி வைத்திருக்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டு வருகிறது. கடல்களே எதிராக நாடுகள் மற்றும் கண்டங்களுக்’கு இடையிலான உறவுகளுக்கான மையங்களாகும். வசர்த்தகம் கடலாலும் கடல்சார்ந்த இலக்குகளாலும் கைமாற்றப்படும் நிலை தற்போது வளர்ந்துள்ளது. அது எதிர்காலத்திலும் வலுவடைய வாய்புள்ளது. சந்தையும் வர்த்தகமுமே பொருளாதாரம் என்ற நிலை வளர்ச்சியடைந்துள்ளது. இதுவே இருப்பத்தியோராம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரமாகும். அதற்கு தலைமை தாங்குவதிலேயே சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான போட்டியாகுனும். அதனை முழுமைப்படுத்தும் நகர்வுகளே இந்து சமுத்திரத்திலும் பசுபிக் சமுத்திரத்திலும் இரு நாடுகளாலும் அரங்கேற்றப்படுகிறது. ஏறக்குறைய சீனா இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் வலுவான நிலையை எட்டியுள்ளது. அமெரிக்காவின் கூட்டு பலம் அதனை முறியடிக்க தயாராகிவருகிறதே அன்றி என்னும் சீனாவை தோற்கடிக்க முடியவில்லை. ஆனால் மேற்குலகம் ஒரு போட்டிக்கு போகுமே அன்றி முழுமையாக முன்னாள் சோவியத் யூனியன் போன்று விட்டுக் கொடுத்துவிடாது. அல்லது முற்றாக தோல்வியடைந்துவிடாது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
நான்காவது, இந்தியா-சீனாப் போட்டி என்பது கருத்தில் கொள்ள முடியாத நிலையிலுள்ளது. காரணம் இந்தியா சீனாவுடன் போட்டியிடக் கூடிய சக்தியாக இல்லை என்பதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. ஏறக்டகுறைய இந்தியா சீனாவை விட இருபது மடங்கு அல்லது வளர்ச்சி நிலையில் இருபது வருடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது என்ற முடிபை முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் தனது நூல்களில் ஒன்றான இருபர்க்கு இருபது-இந்தியா என்பதில் குறிப்பிட்டுள்ளார் அந்த நிலை என்னுமே மாறவில்லை. இந்தியா பொருளாதாரமாக எழுச்சியடைந்திருக்கலாம் ஆனால் சமூக உறுதிப்பாடாக, ஒரு பல்தேசிய தேசமாக, தேசிய பிரஞ்ஞைபூர்வமான அரசாக எழுச்சி பெறவில்லை. சமூக இடைவெளியென்பது மீட்டெடுக்க முடியாத நிலையில் உள்ளது. அவ்வாறே அரசியலும் சட்ட ஒழுங்கும் ஜனநாயகமும் காணப்படுகிறது. மக்களே தேசிய அதிகாரத்தின் பிரதான பலமாகும். அதனை இந்தியாவில் காணவே முடியாதுள்ளது. நடுநிலமை எனும் போலித்தனத்தால் அல்லது கொள்கையால் இந்திய தேசம் தனது அரசியல் முழுமையை இழந்துள்ளது. இந்தியா நவீனத்துவத்தையோ பின் நவீன சிந்தனையையோ முழுமையாக உள்வாங்கவும் இல்லை அதனை பின்பற்றக் கூடிய திறனும் வளர்ச்சியடையவில்லை. அங்கொன்று இங்கொன்றாக உச்சரிக்கலாமே அன்றி இந்தியாவாக உருவாகவில்லை. எல்லாமே அரைகுறையானது. இந்தியாவிடமிருந்து பிரிக்க முடியாதது ஊழலாகும். இது சீனாவிடம் இல்லை என்பதல்ல. ஆனால் சீனா கட்டுப்படுத்திவிட்டது. சீனாவை விட இந்தியா சுதந்திரமானதும் தனிமனிதனின் இருப்பு முதன்மையானதுமான நாடாகும். ஆனால் தேசமாகவோ தேசியமாகவோ இந்திய கட்டமைக்கப்பட வில்லை. சாதியமாகவே அல்லது வர்ணமாகவே இந்தியா வடிவமைக்கப்பட்டு;ள்ளது.இதுவே அறிவியலிலும் விஞ்ஞானத்திலும் விளையாட்டிலும் சினிமாவிலும் ஊறிப் போயுள்ளது. இனமாக, மொழியாக, மதமாக சிந்திப்பவர்களும் சிந்தனைகளுமே இந்தியாவை ஆள்படுத்தியுள்ளது. கற்பனைகளுக்கே அதிக முக்கியத்துவம் இந்தியா கொடுத்துள்ளதே அன்றி யதார்த்தத்தை (Myth and Reality) ஒருபோதும் கொண்டிருக்காத நாடாக உள்ளது. இவற்றை எல்லாம் ஒற்றைவரியில் சீனா கடந்துள்ளது. அதனால் சீனாவுடன் இந்தியாவை போட்டியரசாகவோ சமமான அரசாகவோ கருதி ஒப்பீடு செய்ய முடியாது. ஐக்கிய நாடுகளது வலுவான பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமையை கொண்டு;ளள சீனா உலகளாவிய ஆதிக்கத்தை ஒரு வீட்டோவால் நிரப்பீடு செய்துவிடும் வலிமையுடன் இருக்கும் நாடாகும்.
ஐந்தாவது, இத்தகைய புறச்சூழல் அமெரிக்க-இந்தியக் கூட்டின் முக்கியத்துவத்தை இலங்கைத் தீவில் சீனாவுக்கு எதிரானதாக விபரணப்படுத்துகிறது. இந்திய சீனா மோதல் மட்டுமல்ல அமெரிக்க சீன மோதலும் முதன்மையானதாக விபரிக்கப்படுகிறது. ஆனால் அத்தகைய விபரிப்பில் இந்திய-ரஷ்சிய உறவும், ரஷ்சிய-சீன உறவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். உக்ரையின் போருக்கு பின்னரான ரஷ்சிய-இந்திய-சீன் கூட்டு வலுவானதாகவே தெரிகிறது. இதற்கு ஆதாரமாக அதாவது இந்தியா சீனாவுடன் ஒத்துழைக்காது விட்டாலும் அரசியல் முகாமை செய்ய முயலுகிறதென்பதை உணர முடிகிறது. ஏனெனில் உலகம் ஒரு புதிய யுகத்திற்குள் நகருகிறது. அதாவது உலகளாவிய அரசியல் முகாமை யுகமாக மாறிவருகிறது (Global Political Management Era) இதற்கு ஆதாரமாக ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ளுதல் சிறப்பானதாக அமையும். சீனாவுடன் இந்திய எல்லையில் குவித்துள்ள இராணுவத்தை கொண்டு தள்ளுமுள்ளுப் படுகிறதே அன்றி ஒரு போரை 1962 பின்னர் பாரியளவில் மேற்கொள்ளவில்லை. சீனாவால் 1962 இல் இந்தியாவின் நிலப்பரப்பில் கைப்பற்றப்பட்ட பகுதியை இன்னுமே மீட்கவில்லை என்ற விமர்சனமும் உண்டு. ஆனால் ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் சீனாவுக்கு எதிராக அறிக்கையிடும் போதும் விமர்சனம் செய்யும் போதும் இந்தியா சீனாவின் எதிரி நாடு என்றெல்லாம் குறிப்பிட முயலுகிறார்கள். இரு நாட்டுக்குமான வர்த்தகம் ஆரோக்கியமானதாகவே உள்ளது. தற்போது ஷங்ஹாய் கூட்டமைப்பின் தலைமையும் இந்தியாவிடமே உண்டு. பிரிக்ஸ் நாடுகளின் கூட்டுக்குள் இந்தியா பிரதான அங்கத்துவ நாடாக உள்ளது. இத்தகைய வலிமையுடைய நடான சீனாவின் மடியிலேயே தென் இலங்கை ஆட்சியும் அதிகாரமும் உக்காந்திருகிறது. தென் இலங்கை பலமான தளத்தில் உள்ளது என்பதோடு சீனாவும் அதனை நோக்கியே அரசுக்கும் அரசுகடகுமான உறவைப் பற்றியே முதன்மைப்படுத்துகிறது. அதனால் ஈழத்தமிழரும் அவர்களது அரசியலும் வெளியுறவும் இந்தியாவுடனும் மேற்குடனும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஒரு வாய்ப்பு ஏற்படும் என்ற விவாதம் இல்லாமலில்லை. ஏனெனில் ஒரு தேசிய இனத்தின் இருப்பானது சர்வதேச அரசியலில் தங்கியுள்ளது. ஈழத்தமிழரது அரசியல் புவிசார் அரசியல் சக்தியான இந்தியாவிடமே அதிகம் தங்கியுள்ளது. இந்தியாவின் பலத்திலும் அதன் கூட்டுக்களின் வலுவிலுமே சார்ந்துள்ளது. இதனை இலங்கைக்கான சீனாவின் தூதரகங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சீனாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு அரசுக்கும் -அரசுக்குமான உறவை முதன்மைப்படுத்துகிறதோ அவ்வாறே ஈழத்தமிழருக்கும் அவர்களது வெளியுறவுக்குமான தனித்துவம் உண்டு. இவற்றை எல்லாம் கடந்து ஈழத்தமிழர் செயல்பட வேண்டுமாயின் சினாவின் நகர்வு ஈழத்தமிழரை நோக்கியதாக அமைதல் வேண்டும்.
எனவே இந்தியா சீனாவை மோதவிடுவதல்ல ஈழத்தமிரது அரசியலின் இலக்கு மாறாக இரு நாட்டையும் முகாமை செய்து கொண்டு எப்படி நிலத்தையும் மக்களையும் வளங்களையும் அவர்களது அடிப்படைகளையும் பாதுகாப்பதென்பதிலேயே அரசியல் தங்கியுள்ளது. இதற்கு சீனா ஈழத்தமிழரை நோக்கி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அதில் தெளிவான முடிபுகளை எடுப்பதோடு அதற்கான சமிஞ்ஞைகளை காட்டுதல் வேண்டும். வெறும் நிவாரண அரசியலை மேற்கொள்வது தமிழர் அரசியலுக்கு தீர்வாகாது. தமிழரது நீண்ட போராட்டமும் அதன் விளைவுகளும் எந்தவகையான அரசியல் மாற்றத்தையும் தமிழருக்கு சாதகமாக ஏற்படுத்தவில்லை. மாறாக அதனை முதன்மைப்படுத்திக் கொண்ட ஏனைய தரப்புக்கள் அதிக நலன்களையும் அரசியல் பயன்களையும் அடைந்துள்ளனர். அதனைத் தான் சீனா மேற்கொள்ள முயலுகிறதா அல்லது சாதகமாக தமிழரது அரசியல் அபிலாசைகளை அங்கீகரிக்கப் போகிறதா என்பது அவசியமானதாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

