April 20, 2026
அரசியல் கட்டுரைகள்

அரசியலமைப்பை பாதுகாக்க இந்திய இராணுவம் இலங்கைக்குள் அனுப்ப வாய்ப்புள்ளதா?

தென் இலங்கை அரசியல் அரங்கு அதிக வன்முறைக்களமாக காட்சிமாறுகிறது. முற்போக்குத்தனத்துடன் அமைதியான முறையில் நிகழ்த்தப்பட்ட காலிமுகத்திடல் போராட்டம் 09.05.2022 முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களால் வன்முறைக்களமாக மாற்றப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷhவின் வீடு உட்பட அனேக ஆளம் தரப்பினரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் இறக்கப்பட்ட குண்டர்கள் பிடிக்கப்பட்டு அவர்கள் மீதான தண்டனை அரங்கேற்றப்பட்டுள்ளது. அவர்களது நிர்வாணக் கோலங்கள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்பட்டுள்ளது. 1983 இல் தமிழ் இளைஞன் ஒருவன் புறக்கோட்டையிலுள்ள பஸ்நிலையம் ஒன்றுக்குள் நிர்வாணமாக்கப்பட்டு கொல்லப்பட்டது போல் 1971 இல் ஜே.வி.பி. கலகத்தின் போது மனம்பெரி பிரேமாவதி நிர்வாணமாக்கப்பட்டு வீதியில் நடத்தி கொல்லப்பட்டது போல் ஊடகவியலாளர் இசைப்பிரியா கொல்லப்பட்டது போல் இவர்கள் கொல்லப்படாது விட்டாலும் அதற்கு சமமானதாக தண்டனையாகவே தெரிகிறது. அது மட்டுமல்ல 2009 பின்னான கட்டுப்பாட்டுக்கு வருகை தந்த தமிழர்கள் நிர்வாணமாக்கப்பட்டு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது போன்ற காட்சிகளாகவே தெரிகிறது. இலங்கைத் தீவில் புத்தபிரான் மட்டுமல்ல அனைவரும் நிர்வாணமாக்கப்பட்டு அவமதிக்கப்படும் அரசியல் காலாசாரம் நீடிகிறதாகவே தெரிகிறது. இது ஒரு முற்போக்குத் தனமான போராட்டத்தின் செல்நெறியாகத் தெரியவில்லை. இதே நேரம் தற்போதைய இலங்கைத் தீவின் போக்குத் தொடர்பில் பிராந்திய சர்வதேச சக்திகளது நிலைப்பாட்டையும் அது ஏற்படு:த்தக் கூடிய விளைவுகளையும் தேடுவது அவசியமானது.

காலிமுகத்திடல் போராட்ட சக்திகள் மீது முன்னாள் பிரதமரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலை மேற்கு நாடுகள் அதீதமாக எச்சரிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யூலி சுங் ‘அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறையை கடுமையாகக் கண்டிப்பதாகவும் இது குறித்து உரியவாறு விசாரணை முன்னெடுப்பதுடன் வன்முறையுடன் தொடர்புபட்டவரை கைது செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் அமைதியை நிலைநாட்டுமாறும் கோட்டுக் கொள்ளவதாக தெரிவித்துள்ளார். அதே போன்று பிரித்தானியா, நோர்வே, ஜேர்மன், சுவிஸ்லாந்து மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தமது கண்டனங்களை முதன்மைப்படுத்தியிருந்தன. இதே நேரம் இலங்கையில் சட்ட ஒழுங்கை பேணும் பணிக்கு இராணுவத்தை ஈடுபடுத்துவதை அமெரிக்க வெளியுறவுச் செயலாளரது செய்தி தொடர்பாளர் நெட்பிரைஸ் கண்டித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது அமைதி வழியில் எதிர்ப்பை தெரிவிப் போர் மீது இராணுவத்தால் அல்லது குண்டர்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். மேலும் இலங்கை இராணுவத் துருப்புக்களின் நிலைப்பாட்டை நாம் உன்னிப்பாக கண்காணித்துவருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் இத்தகைய போராட்டங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த நிகழ்ந்த வன்முறை தொடர்பில் இந்தியபா தனது நிலைப்பாட்டை நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளிப்படுத்தியுள்ளது.வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்ட இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையில் இந்தியா இலங்கையின் ஜனநாயக ஸ்திரத்தன்மை பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கு முழுமையாக ஆதரவளிகிறது என இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடும் போது ஜனநாயக நடைமுறைகள் மூலம் வெளிப்படுத்தப்படும் இலங்கை மக்களின் சிறந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டே இந்தியா செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதே நேரம் இந்திய அரசிலில் முக்கியமானவரான சுப்பிரமணியம் சுவாமி அரசியலமைப்பை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் எனவும் தற்போதைய இலங்கை மக்களின் சீற்றத்தை இந்தியாவுக்கு எதிராக வெளிநாட்டுச் சக்திகள் சாதகமாகப் பயன்படுத்துகின்றன. இதனால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துமென தனது டூவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எனவே இத்தகைய அணுகுமுறைகள் மூலம் பிராந்திய அரசான இந்தியாவின் வெளிப்பாடுகள் தற்போதைய அரசாங்கத்தை பாதுகாப்பதாவே தெரிகிறது. அதனை மீண்டும் ஒரு தடவை இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அதனையே சுப்பிரமணியம் சுவாமியும் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்பை பாதுகாப்பதென்பது ஆட்சியைப் புhதுகாப்பதே அன்றி போராட்டக்காரரைப் பாதுகாப்பதல்ல. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷhவின் செயலைக் கண்டிக்காது இந்தியா இலங்கையின் ஜனநாயக ஸ்திரத்தன்மையையும் பொருளாதார மீட்சியையும் பாதுகாக்கப் போவதாக தெரிவித்துள்ளது. அப்படியாயின் தற்போதைய ஆட்சியை மறைமுகமாகப் பாதுகாப்பதாகவே தெரிகிறது. இலங்கையின் ஜனநாயக ஸ்திரப்பாட்டை சீர்குலைப்பவர்கள் காலிமுகத்திடலில் போராடுபவர்களே என்பதையும் அவர்களது அடிப்படைப் பிரச்சினை பொருளாதாமே என்பதையும் இந்திய வெளியுறவின் பேச்சாளர் தெளிவுபடுத்த முயலுகிறார். ஜனநாயகப் போராட்டத்தை இந்தியா ஆதரிக்கவும் இல்லை இவ்வாறே ஜனநாயகப் போராட்டக்காரர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கவும் இல்லை என்றடிப்படையில் இந்தியாவின் அணுகுமுறை தெளிவாக தெரிகிறது. கடந்த காலங்களிலும் இந்தியாவின் போக்கு அவ்வகையானதாகவே அமைந்திருந்தது.

அதாவது ஒரு இலட்சம் படைகளை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் இந்தியா அமைதிப்படை என கூறிக்கொண்டு மேற்கொண்ட படை நடவடிக்கையால் தென் இலங்கையில் எழுச்சியடைந்திருந்த ஜே.வி.பி. இன் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உதவியது. இலங்கை இராணுவம் ஜே.வி.பி.ஐ முழுமையாக அழிக்கும் வரை வடக்கு கிழக்கில் இன்னோர் இராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டிருந்தது. அவ்வாறே 1971 இலும் சீனாவின் படைகள் இலங்கைத் தீவுக்குள் நுழைந்துவிடும் என்பதனாலும் அரசாங்கம் வீழ்ச்சியடைந்துவிடும் என்பதனாலும் ஒர் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.2009 களில் ஆயுத தளபாடங்களையும் செயற்கைக்கோள்கள் மூலமான தகவல் பரிமாற்றங்களையும் இலங்கை இராணுவத்திற்கு வழங்கி முள்ளிவாய்க்கால் போரை முடிபுக்கு கொண்டுவந்ததன் மூலம் தென் இலங்கை ஆட்சியை பாதுகாத்தது. அப்போதும் இலங்கை பாரிஜய பொருளாதார நெரு;ககடிக்குள் தள்ளப்பட்டிருந்தது. சர்வதேச நாணயநிதியத்திடம் இலஙட்கை நிதி கோரிய போது இந்தியாவே அனுசரணை வழங்கி இலங்கையின் நெருக்கடியிலிருந்து இலங்கையை அப்போது பாதுகாத்தது. அவ்வாறான வரலாற்று தொடர்புகளைக் கொண்ட இலங்கையின் அயல் நாடு இந்தியா என்பது கவனத்திற்குரியதாகும். இந்தியா எப்போது இலங்கைத் தீவின் ஆட்சியாளரை பாதுகாப்பதன் மூலம் அரசை பாதுகாத்துவருகிறது என்பது புரிந்து கொள்ளபட்பட வேண்டியதாகும். இது இந்தியாவின் புவிசார் அரசியல் நலன் என்பதுவும் கவனத்திற்குரியதாகும். இந்தியா தனது நலனுக்குட்பட்டே செயல்படுகிறது. அதுவே ஓர் பிராந்திய வல்லரசின் அடிப்படை உபாயமாகும்.

இதில் சுப்பிரமணியம் சுவாமி குறிப்பிடுவது போல் அந்நிய சக்திகளது இலங்கை மக்களின் சீற்றத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தினால் அது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானதாக அமைந்துவிடும் எஎன்ற விடயம் கவனத்திற்குரியதாகும். இதனை சற்று விரிவாக விளக்குவது அவசியமானது.

ஒன்று இந்தியப் படைகள் இலங்கைத் தீவுக்குள் மீளவும் இறங்குவதற்கான வாய்ப்புக்கள் தென்படுவதற்கான சூழல் இருக்கின்றதா என்ற கேள்வி அதிகமுண்டு. இலங்கைக்கான இந்தியாத் தூதுவர் அதனை முற்றாக நிராகரிகிறார். அதே நேரம் அமெரிக்கா ஒருபுறமும் சீனா மறுபுறமாக செயல்படுவதை அவதானிக்க முடிகிறது. அமெரிக்கா உன்னிப்பாக கண்காணிப்பதாக தெரிவித்துள்ளது. சீனா மௌனமாக செயல்படுகிறது. ஆனால் சீனாவின் நெருக்கமான சகா என்று அறியப்பட்ட முன்னாள் பிரதமருக்கு அதிக சட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சீனாவுடனான இலங்கையின் நெருக்கம் அற்றுப் போனதென முடிபுக்கு வரமுடியாது. சீனா மௌனமாக இருக்கிறது என்பதற்காக செயல்படாது இருக்கிறதெனக் கூறிவிட முடியாது. அதே நேரம் அமெரிக்காவும் இலங்கைத் தீவின் அரசியலில் அழுமான நகர்வுகளை மேற்கொள்ள முனைகிறதை அதன் அறிக்கைகள் உணர்த்துகின்றன. இதில் அமெரிக்காவும் சரி சீனாவும் சரி எதுவானாலும் இலங்கைத் தீவுக்குள் செல்வாக்குப் செலுத்துவதென்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானதே. அவ்வாறு சீனாவையோ அமெரிக்காவையோ முந்திக் கொண்டு இந்தியா செயல்பட வேண்டியது அவசியமானது. தற்போது அதனையே இந்தியா பொருளாதார ரீதியாக மேற்கொண்டுவருகிறது. அப்படியான சூழல் வலுக்குமாக இருந்தால் இந்தியா இராhணுவத்தை இறக்க வேண்டிய நிலை தவிர்க்க முடியாதது என்பதையே சுவாமி கோடிட்டுக் காட்டியுள்ளதாகவே தெரிகிறது. இந்தியாவுக்கு இலங்கைத் தீவு மீது படைஇறக்குவது ஒன்றும் புதியதோ நெருக்கடியானதோ இல்லை. ஆனால் அதனையும் ஒரு அயல்நாடு என்றடிப்படையிலேயே மேற்கொள்ளும். இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதில் சுப்பிரமணியம் சுவாமியினது டூவிட்டர் கருத்து முக்கியமானதாகவே இருந்ததென்பதை மறுக்க முடியாது.

இரண்டு ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையில் புதிய அரசாங்கம் இடைக்காலத்திற்கு அமையப் போவதாக தென் இலங்கை செய்திகள் அதிகம் வெளியாகியுள்ளன. அது சாத்தியமாகலாம் அல்லது சாத்தியமற்றும் போகலாம். ஆனால் அப்படியான ஒர் ஆட்சி சாத்தியப்படுவது இந்தியாவை விட மேற்கு நாடுகளுக்கு அதிக இலாபகரமானதாக அமையவாய்ப்புள்ளது. இதில் சீனாவும் திருப்தி கொள்ளக் கூடியதாகவே புதிய ஆட்சியின் அணுகுமுறை அமையவாய்ப்புள்ளது. கடந்த காலத்தில் மேற்கும் சீனாவுமே அதிக இலாபங்களை நல்லாட்சியில் அடைந்தவை என்பது நினைவு கொள்ளத்தக்கது. இது இந்தியாவுக்கே சவால்மிக்க சூழலை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. ஆனால் இராணுவத்தின் ஆட்சியில்லாத சூழல் என்பது இந்தியாவுக்கும் அதன் தேசிய பாதுகாப்புக்கும் பாதகமில்லாதென்றே உணரவாய்ப்புள்ளது. இந்த ஆட்சியில் தமிழ் தேசியப் பரப்பிலிருந்தும் ஓரமைச்சு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக உரையாடப்படுகிறது. அதற்கான செய்திகள் முதன்மைப்படுத்தப்பட்டாலும் உறுதிப்படுத்தப்பட முடியவில்லை. அவ்வாறான சூழல் ஏற்பட்டால் அது ஒரு புதிய சகாப்தமாக அமைவதுடன் அதன் விளைவுகளும் புதியதாகவே அமையும். எதிர்கட்சித் தலைமையால் எட்டப்பட்ட விளைவுகள் போன்றதாக அமைந்துவிட வாய்ப்பு அதிகமுள்ளதாகவே தெரிகிறது. ஆனால் இந்த ஆட்சி தராள ஜனநாயகத்தின் கேலிகூத்தை நன்கு புரியவைக்கக் கூடியதாக அமையும்.

எனவே தென் இலங்கையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அதிகமான குழப்பங்களை உள்நாட்டில் மட்டுமல்ல பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளிடமும் ஏற்படுத்திவருகிறது. புதிதாக அமையவுள்ள ஆட்சியையும் அதனால் ஏற்படப் போகும் மாற்றங்கள் பற்றிய போராட்டகாரரின் அணுகுமுறையைப் பொறுத்ததாகவே அதன் இருப்பும் உறுதிப்பாடும் தங்கியுள்ளது. தற்போதைய ஆட்சியாளரது இருப்பை புதிய ஆட்சி பாதுகாக்கும் என்றவாதம் வலுவடையுமாயின் மீளவும் குழப்பம் நீடிக்க வாய்ப்புள்ளது. அப்போது பிராந்திய சர்வதேச சக்திகளது அணுகுமுறை வேறுபட்டதாக அமைய வாய்ப்பு உண்டு.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)