ஜே.வி.பி. அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமாரதிஸநாயக்காவால் முன்மொழியக்கப்பட்டுள்ளது. அதற்கான விவாதங்கள் இந்த ஆண்டின் இறுதி பகுதி வரை நிகழ்ந்து நிறைவேற்றப்படும். இத்தகைய வரவு செலவுத் திட்டம் அதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்கியிருந்தாலும் மிக குறைந்த அளவிலான உற்பத்தி பொருளாதாரத்திற்கான நிதியிடல் காணப்படுவதாக விமர்சனங்கள் உண்டு. இதே நேரம் வடக்கு மாகாணத்திற்கான அதிகமான நிதி ஒதுக்கீடுகள்; காணப்படுவதாக மதிப்பீடு உள்ளது. அது ஒரு ஆரோக்கியமான நகர்வாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. வடக்குக்கு ஜே.வி.பி. அரசாங்கம் பெரியளவிலான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களை இக்கட்டுரை உரையாட முனைகிறது.
வடக்குக்கான அபிவிருத்தி திட்டங்களில் அதிக கரிசனை கொண்டுள்ள வரவு செலவுத் திட்டமாக அமைந்துள்ளதாகவே தெரிகிறது. காங்கேசந்துறை துறைமுகவிருத்தி, தீவுகளை உள்ளடக்கிய காற்றாலை மின்சாரத் திட்டம், அரசு அலுவலகங்களில் கட்டுமானத்துக்கான நிதி ஒதுக்கீடு, போரினால் பாதிக்கப்பட்ட குடும்பஙற்களுக்கான வீடமைப்புத் திட்டம், கிளிநோச்சி குடிநீர் வினியோகத் திட்டம், பேசாலை மீன்பிடி துறைமுக விருத்தித் திட்டம், கிளிநொச்சி-ஹபரணை மின்சாரத்திட்டம், யாழ்ப்பாண மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலை புணரமைப்புத் திட்டம், தென்னை முக்கோணவலையம், யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் போன்ற இன்னும் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சராசரியாக 27.3 பில்லியன் ரூபா வடக்கு-கிழக்கு வீடமைப்பிற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணங்களுக்கு அதிக நிதியும் வாய்ப்புக்களும் வழங்கப்பட்டுள்ளதாக விவாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல 30 வருடங்களுக்கு மேலாக போரில் சிதைந்து போன வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான தேவை காணப்படுகிறது. இவ்வாறு வடக்கு கிழக்கை அதிகம் முதன்மைப்படுத்தி இருக்கும் வரவு செலவுத்திட்டத்தின் நோக்கம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
முதலாவது இரட்டைக் குடியுரிமை பொறுத்து அரசாங்கம் விதித்திருக்கும் தடைகளை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கை நிகழ்ந்துள்ளது. இது வடக்கு கிழக்கு முதலீடுகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. அதிக முதலீடு தனித்து நிதி சார்ந்த இல்லாமல் அறிவியல் சார்ந்த முதலீடுகளை முதன்மைப்படுத்த வாய்ப்பு உள்ளது என்று உரையாடப்படுகிறது. இதுதான் வடக்கு கிழக்குக்கானது என்று கூறுவதை விட முழு இலங்கைக்குமான வாய்ப்புக்களை உருவாக்கக் கூடியது. இலங்கையை மீளக்கட்டமைக்க தேவையான ஒன்றாக உள்ளது. இதன் மூலம் உலகளாவிய விஞ்ஞான தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை இலங்கைக்குள் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் புலம்பெயர்ந்ததளத்தில் அதிக முதலீடுகளை கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் அதற்கான வாய்ப்புகளை பயன்படுத்துவதன் மூலம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய முடியும் என நீண்ட தூர நோக்கில் அரசாங்கம் கருதுகிறது. அது நேரடியான இலாபங்களை அரசாங்கத்திற்கு வழங்குவதை விட மறைமுகமாகவும் இலாபமளிக்க கூடிய ஒன்றாக காணப்படுகிறது. அது ஒரு வகையில் ஆரோக்கியமானதாக இருந்தாலும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காத சூழலில் அபிவிருத்தியை முன்னிறுத்தி நகர முயலுகின்றதன் விளைவை எதிர்காலத்தில் அனுபவிக்கும் நிலை தவிர்க்க முடியாததாகும்.
இரண்டாவது வடக்கு கிழக்குக்கு அதிக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் உற்பத்திக்கான முதலீடுகள் வரையறுக்கப்பட்ட அளவிலே காணப்படுகிறதாகவே தெரிகிறது. ஒரு வகையான உற்பத்தியை இலக்கு வைத்துக் கொண்டதாக அமைந்தாலும் அதனையும் ஒரு வர்த்தக செய்முறைக்கும் தென் இலங்கைக்கு சேவை செய்வதாகவே அமையும். அவ்வாறே கணிசமான நிதி ஒதுக்கீடுகள் அனைத்துமே முன்னைய அரசாங்கங்களின் திட்டங்களை விருத்தி செய்வதற்கான உத்தியாகவே தெரிகிறது. புதிதாக இந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு விவசாயத்துக்கு வழங்கும் மானியம் சார்ந்த செய்முறைகளை கடந்து கைத்தொழில் சாலைகள் உற்பத்தி மையங்கள் தொழிற்சாலைகள் தொழில்நுட்பக் கல்லூரிகள் இளைய தலைமுறை வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்தில் எந்த நடவடிக்கையும் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக வடக்கு-கிழக்குக்கு மேற்கொள்ளவில்லை. வெறுமனே உட்கட்டமைப்புகளை மீளமைப்பு செய்வதற்கான நிதி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் விளைவு வெளியே இருந்து அவதானிக்கும் போது அதீதமான நிதி வழங்கப்பட்டிருக்கிறது என்ற முடிவு ஏற்படலாம். ஆனால் அவற்றின் பயன்பாடு மற்றும் விளைவு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்பது தெளிவாகியது.
மூன்றாவது ஒதுக்கப்பட்ட நிதிகள் கடந்த காலத்தில் எவ்வாறு மீள திருப்பிப் பெறப்பட்டது என்பது கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டிய ஒன்று. சுதந்திர காலத்தில் இருந்து இலங்கை தீவை அபிவிருத்தி செய்வதற்கு பாரிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. ஆனால் அவை எதையும் உரிய காலத்தில் சரியான முறையில் பிரயோகப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. பாரியளவான நிதி வடக்கு கிழக்கு பிரயோகப்படுத்தாமல் திருப்பி அனுப்பப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இன்றுவரை காணப்படுகிறது. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் அதீதமாக யாரும் முதன்மைப்படுத்துவதாக இல்லை. குறிப்பாக அரச அதிகாரிகளின் அசமந்தனமான போக்கு என்ற குற்றச்சாட்டு நிறைவேற்ற அதிகாரிகள் மீது வைக்கப்படுகிறது. ஆனால் நிறைவேற்று அதிகாரிகள் தனித்து தமிழர்கள் இல்லை என்பதும் நிதி ஒதுக்கீடுகள் பயன்படுத்துவதற்காக கையளிக்கப்படுவதற்கான திட்ட வரைவுகளை மேற்கொள்ள வேண்டிய பணியாளர்கள் இல்லை என்பதும் அவ்வாறு கையளிக்கப்படும் திட்டங்களை காலதாமதப்படுத்துகின்ற சூலம் நிலவுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அது மட்டுமல்ல ஆண்டின் இறுதி பகுதியில் நிதியளிக்கப்பட்டு செலவு செய்யப்பட நிர்பந்திக்கப்படுவதும் அநேகம் பேருக்கு தெரியாத விடயமாக உள்ளது. இரண்டு பிரதான விடயங்கள் இங்கு குறிப்பிட வேண்டும் ஒன்று நிதியின் செலவீனத்துக்கான வாய்ப்புகளை உரிய காலத்தில் செய்யவிடாமல் தடுப்பது. அதற்கு சில அதிகாரிகளை அரசாங்கம் நியமித்து வைத்துக் கொள்வது. இரண்டாவது எல்லையற்ற விதத்தில் செயல்படுத்துகின்ற அலுவலகங்கள் மீதும் அலுவலகர் மீதும் அழுத்தங்களை புரிவது. இதுவே கடந்த கால அரசாங்கங்கள் வடக்கு கிழக்குக்கு வழங்கிய நிதியினை மீளப் பெற்றுக் கொண்ட வரலாறாகும். இது பற்றி யாருமே கண்டு கொள்வதில்லை. மனம் போக்காக வடக்கு கிழக்கில் உள்ள அதிகாரிகள் திறமையற்றவர்கள் என்றும் முதலீட்டை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகிறது. ஆனால் அவற்றை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. அரசாங்கத்தினாலே அத்தடைகள் இடப்படுவதும் கடந்த கால அனுபவமாக உள்ளது. புதிய அரசாங்கம் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடாது என்று அபிப்பிராயங்கள் அக்கட்சியின் ஆதரவாளர்களால் உரையாடப்படுகின்றது. கடந்த 2026 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் திரும்புகை எவ்வாறு உள்ளது என்பது ஆண்டின் இறுதியில் தெரியவரும்.
நான்காவது வடக்கை இலக்கு வைத்து ஜே.வி.பி. அரசாங்கம் செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்வது அவசியமானது. வடக்கு மீள் அமைக்கப்பட வேண்டும் என்பது வடக்கின் அபிவிருத்திக்கு அவசியமானது என்பது அடிப்படையான நியதியாகும். இந்த அரசாங்கம் பெருமளவான நிதி ஒதுக்கீடு செய்தமைக்கான காரணம் அபிவிருத்தி மட்டும் தான் என்று கடந்து செல்ல முடியாது. அதனிடம் தெளிவான அரசியலும் உண்டு. நிதி ஒதுக்கீட்டின் மூலம் அரசியல் ரீதியில் வடக்கு கிழக்கை தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதாகவே உள்ளது. ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தை மட்டுமல்ல மாகாண சபையை, உள்;ராட்சி மன்றங்களை முழுமையாகக் கைப்பற்றும் நிலை ஏற்பட்டால் இனப்பிரச்சனைகான தீர்வு வடக்கு கிழக்கு தாயகம், தமிழ் மக்களின் இறைமை, சுயநிர்ணயம் என்றெல்லாம் கருதுவதற்கான அரசியல் வெளி காணாமல் போய்விடும். நிதியளிப்பதன் மூலம்; தேசிய இனத்தின் அபிலாசையை வழங்கிவிட முடியாது. வழங்கப்படுகின்ற நிதி சரியாக பிரயோகப்படுத்தப்படுவதற்கான சூழலும் அதிகாரமும் அவசியமானது. குருந்தூர்மலை விவகாரம் இராணுவம் காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் செய்முறை அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமன்று போய் இருப்பது மீனவர் பிரச்சனை தீர்வு இன்றி நீடிக்கிறது இவை எல்லாவற்றையும் அரசியல் அதிகாரத்தின் ஊடாக மட்டுமே எதிர்கொள்ள முடியும். நிதி ஒதுக்கீடுகளால் இந்த விடயங்களுக்கு தீர்வு காண முடியாது. வடக்கு கிழக்கு கட்டமைக்கப்பட்ட வீதிகள் அனைத்தும் பொதுமக்களுக்கானதென்று விவாதித்துவிட முடியாது. அவ்வாறே ஒதுக்கப்பட்ட நிதி தமிழ் மக்களின் தேவைகளுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டது என விவாதித்து விடவும் முடியாது. அவை அரசாங்கம் இராணுவம் மற்றய பாதுகாப்பு தரப்புகள் அவற்றினுடைய நிறுவனக் கட்டமைப்புகள் போன்ற பல விடயங்கள் முதன்மையானதாக விளங்குகிறது.
எனவே வடக்கு கிழக்குக்கு அதிக நிதி ஒதுக்கீடு என்ற பிரச்சாரம் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியில் வெற்றி கொள்வதற்கு உதவக்கூடியது. அடுத்து வரப்போகின்ற தேர்தலில் ஜே.வி.பி.இனது வாக்கு வங்கியை நிரப்பி அதிகமான ஆசனங்கள் பாராளுமன்ற தேர்தலில் மாகாண சபை தேர்தல் உள்ளுராட்சிமன்ற தேர்தல்களிலும் பெற்றுக் கொள்வதற்கான முதலீடாகவே வரவு செலவு திட்டம் காணப்படுகிறது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:யாழ்.தினக்குரல்)
