இலங்கை அமெரிக்கா உறவு சீன இலங்கை உறவிலிருந்தும் இந்திய இலங்கை உறவிலிருந்தும் வேறுபட்டது. ஏறக்குறைய சீன இலங்கை உறவுக்கு பதில் மூலோபாய உறவைக் கொண்டதாகவே அமெரிக்க இலங்கை உறவு அவதானிக்கப்படுகிறது. உலக வல்லரசு நிலையிலிருந்து பலவீனப்படும் அமெரிக்கா தொடர்ச்சியாக உலக வல்லரசு ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதில் போராடி வருகின்றது. அதனை நோக்கிய முனைப்பான ஒரு நகர்வாகவே இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் எரிக்மேஜர் (Eric S. Meyer) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். எரிக் மேஜரின் இலங்கைக்கான தூதுவர்; நியமனமும் சீன தூதுவர் வெய் ஹீவாக்சியாங்ன் (Wei Huaxiang) இலங்கையின் தூதுவர் இருப்பும் சமபலம் கொண்ட இது வல்லரசுகளின் தூதுவர்களது புதிய நியமனமாக பார்க்கப்படுகிறது. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவானது இராஜதந்திர ரீதியானது என்பதை கடந்து மூலோபாய ரீதியானதாகவும் தந்திரோபாய ரீதியானதாகவும் நோக்கப்படுகின்றது. இந்துசமுத்திரத்தின் மத்தியில் உள்ள இலங்கையுடன் இராணுவ ரீதியான உறவை வலுப்படுத்துவதில் அமெரிக்கா அதிக கவனம் கொண்டிருக்கின்றது. இக்கட்டுரையும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக மேஜரது வருகை இலங்கைக்கு ஏற்படக்கூடிய முக்கியத்துவத்தை தேடுவதாக உள்ளது.
அமெரிக்கத் தூதுவர் எரிக் மேஜர் 13.08.2026 இல் வோசிங்டன் இராஜாங்கத் திணைக்களத்தில் பதவியேற்றார். 22.08.2026 இல் இலங்கைக்கு வந்தடைந்தார். அமெரிக்க வெளியுறவுத் துறையில் தொழில் முறை மூத்த அதிகாரியாக விளங்கியது மட்டுமன்றி அவரது கல்வித் தகமைகளாக அரசறிவியலை கலிபேர்னியப் பல்கலைக்கழகத்தில் 1995 இல் நிறைவு செய்ததுடன் தொடங்கியது. தொடர்ந்து ஜோர்ச்டவுண் பல்கலைக்கழகத்தில் நிர்வாக முதுமாணிப்பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளார். அரசறிவியலில் சர்வதேச உறவுகளை விசேட தகமையாகக் கொண்ட மேஜர் குறிப்பிடத்தக்க நாடுகளின் துணைத்தூவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஆறு மொழிகளில் பேசும் ஆற்றலைக் கொண்ட மேஜர் முதலில் ஆஜாண்டினாவில் பதில் தூதுவராகவும் பின்னர் எகிப்த்தின் தலைநகரான கெய்ரோவின் கலாசார விவகாரங்களுக்கான அலுவலகராகவும் பணிபுரிந்துள்ளார். பின்னர் பில்லாந்தின் கெல்சிங்கி நகரத்தின் தூதராக பணியாற்றியதுடன் கம்போடியாவின் புனோம் பென் நகரத்தின் தூதரக ஜெனரலாகவும், கஜகஸ்தானிலுள்ள அல்மான்டியில் துணைத்தூதராகவும், பின்னர் வட மசிடோனியா, நோர்வே போன்ற நாடுகளின் துணைத்தூதுவராகவும் பணியாற்றியுள்ளார். இதனை அடுத்து தென் ஆசியா, மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்தின் மூத்த பணியக அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்துடன் இலங்கைக்கான தூதுவராக நியமனமாகியுள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயரின் தகமைகளையும் அனுபவங்களையும் பார்க்கும் போது இலங்கை தீவின் முக்கியத்துவம் அதிகம் உணரப்படும் நிலையில் அமெரிக்கா விளங்குவதாக தெரிகின்றது. அமெரிக்க ஈரானிய போர் பாரிய நெருக்கடியை மேற்காசியா முழுவதும் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. அதன் இராணுவத் தளங்கள் கடல் படைத்தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்ற சூழலில் தென்னாசியா நோக்கி அமெரிக்கா தனது விரிவாக்கத்தை அதிகப்படுத்தும் நிலையை எதிர்கொண்டிருக்கிறது. மறுபக்கத்தில் சீனாவும் இலங்கையை அரசியல் பொருளாதாரம் கட்டுக்குள் கொண்டுவரும் முனைப்போடு நகருகின்ற போது அமெரிக்கா இலங்கையில் இராணுவ ரீதியான உறவை அதிகப்படுத்தும் உத்தியோடு நகர்வதை கண்டு கொள்ள முடிகின்றது. இதனை ஆழமாக தேடுதல் அவசியமானது.
முதலாவது அமெரிக்க தூதுவரான எரிக் மேஜர் இலங்கைக்கான பிரதான பணியாக அடையாளப்படுத்தப்படுகின்ற விடயமாக இலங்கை அமெரிக்க பொருளாதார உறவு சார்ந்ததாக காண்படுத்தப்படுகிறது. இலங்கையில் அமெரிக்காவின் வர்த்தகரீதியான புதிய வாய்ப்புகளை உருவாக்குவது தனது நோக்கம் என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்தி உள்ளார். குறிப்பாக வர்த்தகம் முதலீடு, வியாபார ஒத்துழைப்பு, என்பனவற்றின் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்துவதக்கு முன்னுரிமை வழங்குகின்ற செயல்பாட்டை அமெரிக்கா மேற்கொள்ள போவதாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு என்பதற்கான முக்கியத்துவத்தை வழங்குவது பற்றியும் அதற்கான மூலோபாய சொத்துக்களை நிலை நிறுத்துவது பற்றியும் இந்துசமுத்திரத்தின் அமைவிடத்தை மையப்படுத்தி அதற்கான விரிவாக்கங்களை செயல்படுத்துவதென்ற கருத்தை அதிகம் வெளிப்படுத்துபவராக காணப்படுகின்றார். உலகில் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடத்துக்கு அருகில் இலங்கை அமைவிடம் இருப்பதனால் துறைமுக பாதுகாப்பு கடல்சார் கண்காணிப்பு கப்பல் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சட்டவிரோத நடவடிக்கைகளை கையாளுதல் கடல்சார் களவிழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் என்ற அம்சங்களில் அமெரிக்கா அதிக முக்கியத்துவத்தை வழங்கும் என்பதை குறிப்பிடுவதில் கவனம் கொண்டிருக்கின்றார். குறிப்பாக இலங்கை உலகில் முக்கிய கப்பல் போக்குவரத்து தடங்களை கொண்டிருக்கின்றது அதனால் இலங்கைக்கு அதிக கடல்சார் முக்கியத்துவத்தை கொடுப்பதற்கான முனைப்பின் மேஜர் நடவடிக்கை அமைய வாய்ப்புள்ளது.
மூன்றாவது அமெரிக்க இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புச் சார்ந்து மேஜர் தனது ஆரம்ப கருத்து நிலைகளை முதன்மைப்படுத்துகின்ற போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு நலன்களின் பங்கினை முதன்மைப்படுத்தி இருப்பதோடு பாதுகாப்பு ஒத்துழைப்பையும் அதிகப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்கின்றார். அதிலும் கடல் பாதுகாப்பு பேரிடர் மீட்புக்கான ஒத்துழைப்பு தகவல் பகிர்வுக்கான நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது போன்ற விடயங்களில் அதீதமான கவனத்தைக் கொண்டு செயல்பட போவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
நான்காவது இந்தோ-பசுபிக் உபாயத்தின் சுதந்திரமானதும் பாதுகாப்பானதும் மற்றும் செழிப்பானதுமான கட்டமைப்புகளை விரிவுபடுத்துவது முக்கியமானது என தனது பதவி பிரமாணத்தின் போது குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவு மட்டுமல்ல என்றும் இலங்கை இந்துசமுத்திரம் இந்தோ- பசுபிக் உபாயம் என்ற பாரிய மூலோபாய கட்டமைப்புக்கு உரித்துடைய உறவு என்றும் இலங்கை அமெரிக்க உறவை அடையாளப்படுத்தியுள்ளார். ஏற்கனவே பதவியில் இருந்த முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங்கின் சுதந்திரமானதும் பாதுகாப்பானதும் மற்றும் செழிப்பானதுமான இந்தோ-பசுபிக் உபாயத்திற்குள் இலங்கையை இணைத்துக் கொள்வதில் அதிக கவனம் கொண்டிருந்தார். அதன் நீட்சி எரிக் மேஜரிடம் காணப்படுவதற்கான வாய்ப்பு அதீதமாக உள்ளது.
ஐந்தாவது இலங்கையில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கை கண்காணிப்பது என்பது அவரது பிரதான உரையாடல்களில் முதன்மையானதாக பார்க்கப்படுகின்றது. தென்னாசியா மற்றும் மத்திய ஆசியாப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை கண்காணிப்பதில் அமெரிக்காவுக்கு பெரிய பங்கு உண்டு என்பதை அவர் தனது பதவி ஏற்பின் போது வெளிப்படுத்தி உள்ளமை கவனிக்கத்தக்கது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் கொழும்புத் துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் அவற்றின் உட்கட்டமைப்பு முறைமைகள் தொடர்பில் வோசிங்டனின் அதிக கரிசனை கொண்டிருக்கும் என்றும் சீனாவை எதிர்கொள்ளுதல் என்பது இதன் பிரதான மூலோபாயமாக புரிந்து கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது.
ஆறாவது அமெரிக்கத் தூதுவரின்; பிரதான பணியாக எதிர்பார்க்கப்படுவது இந்தியா தொடர்பான ஒருங்கிணைப்பையும் அமெரிக்க கொள்கையின் நேரடி கையாளப்படுகின்ற நிலை ஒன்றையும் முதன்மைப்படுத்துவதற்கான வாய்ப்பை கொண்டுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் பணியில் பிரதானமாக வோசிங்டன்- புதுடில்லி-கொழும்பு என்ற முக்கோண உறவு முக்கியத்துவம் பெற்றதாக அமைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. வோசிங்டன் கொழும்பை வைத்து புதுடில்லியையும் புதுடில்லிலை வைத்து கொழும்பையும் அடிபணிய வைக்கும் தந்திரோபாயத்தை கடந்த காலங்களில் அதிகம் பயன்படுத்தியது என்பதை நினைவு கொள்ளுதல் அவசியமானது. இந்தியாவுடன் போட்டியிடுவதற்கு பதிலாக இந்துசமுத்திரத்தின் பாதுகாப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது பற்றி அமெரிக்கா அதிக மூலோபாய விழுமியங்களை கொண்டிருக்க முயல வாய்ப்பு அதிகமாக உண்டு. இதனுடைய அடிப்படையிலேயே எரிக் மேஜருடைய பணிகள் அமைய வாய்ப்புள்ளது.
ஏழாவது இலங்கையின் மூலோபாய சுயாட்சியை (Strategic autonomy) அங்கீகரித்துக் கொண்டு அமெரிக்க நலன்களை முன்னெடுப்பது எரிக் மேஜரின் பிரதான உத்தியாக தெரிகின்றது. குறிப்பாக இந்தியா-சீனா-அமெரிக்கா-ஜப்பான்-ஐரோப்பியயூனியன் என்ற பிரதான சக்திகளின் உறவைப் பேணுவதோடு அத்தகைய நாடுகளின் இராஜதந்திர ரீதியான சவால்களை எதிர்கொள்வது அவரது பிரதான பணிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. இலங்கையை பிறசத்திகளின் எல்லைக்குள் நகரவிடாது அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளுகின்ற விதத்தில் இலங்கையின் மூலோபாய சுயாட்சியை ஏற்றுக் கொள்ளும் முறைமை ஒன்றை ஏற்படுத்துவதில் மேஜரின்; கரிசனை அமையும்; என எதிர்பார்க்கப்படுகின்றது.
எட்டாவது இலங்கை மேற்கொண்டிருக்கும் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ஆட்சியின் சுமூகமான சூழலை கருத்தில் கொண்டு சர்வதேச நாணயநிதியத்தின் பொருளாதார மீட்பு பணிகளில் அமெரிக்க-இலங்கை உறவின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலங்கையின் பேரியல் பொருளாதார நிலை தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் தனியார் முதலீடுகளையும் ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல் என்பது அமெரிக்காவின் சமகால கொள்கையாக அமையும் என்பதை உறுதிப்படுத்த வாய்ப்புள்ளது. அதன் மூலமே இலங்கையை அமெரிக்கா தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற உபாயத்தைக் கொண்டு செயல்பட முனையும். இதனால் ஒத்துழைப்பும் அரசாங்கங்களுக்கு இடையிலான உறவுத் தன்மையும் பொருளாதார ரீதியான நடவடிக்கைகளும் அதீதமானதாக இருப்பதற்கான வாய்ப்புக்கு அதிக இடமுண்டு. குறிப்பாக இலங்கையின் சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமை போன்றவற்றில் கவனம் கொள்வதோடு ஜனநாயகம் முதன்மையான அம்சமாக அமெரிக்கா கருதுகின்ற சூழலில் நெருக்கமான உறவை சாத்தியப்படுத்துகின்ற விதத்தில் தந்திரோபாய நகர்வுகளை மேற்கொள்ள மேஜர் முயலவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எரிக் மேயரின் காலப்பகுதி மூலோபாயக் கட்டமைப்பை அதிகம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இலங்கை அமெரிக்க உறவின் முக்கியத்துவம் அதீதமானதாக மாறுவதற்குரிய சர்வதேச சூழலும் பிராந்திய சூழலும் கை கொடுக்கின்ற நிலையில் இலங்கையின் அமெரிக்காவின் செல்வாக்கு வளர்ச்சி அடைய வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது. சீனா-அமெரிக்கா-இந்தியா என்ற முக்கோண ரீதியிலான மூலோபாயப் போட்டி மட்டுமல்ல தந்திரோபாய போட்டியும் நிலவ வாய்ப்புள்ளது. இது தென் இலங்கைக்கு சவாலானதாக அமைந்தாலும் அதன் இராஜதந்திரப் பாரம்பரியம் கையாளும் அனுபவத்தைக் கொண்டது. ஆனால் இலங்கைத் தமிழருக்கான வாய்ப்புக்கள் அதிகமாக தெரிந்தாலும் அதனை பயன்படுத்தும் திறனற்றவராக காணப்படும் நிலையே நிலவுகிறது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினக்குரல்)
