அரசியல் கட்டுரைகள்

இலங்கைத்தீவில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான வாய்ப்பு காணப்படுகிறதா?

இலங்கை அரசியல் முழுவதும் மாற்றங்கள் பற்றிய உரையாடல் மட்டுமே நிகழ்ந்து வருகின்றது. இலங்கையின் அரசியல் கலாசாரமும் அரசியல் அமைப்பு முறைமையும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாதவைகளாகவே காணப்படுகின்றன. இதன் அடிப்படைகளுக்குள்ளேயே புதிய அரசாங்கத்தின் ஆட்சி மாற்றம் மற்றும் முறைமை மாற்றம் தொடர்பான உரையாடலும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவதற்கான உரையாடலும் நிகழ்ந்து வருகிறது. இலங்கையின் அரசியல் முழுவதும் காலம் தாழ்த்துவதும், பிற்போடுவதும், சரியான விடயங்களை கண்டறியாததும் அல்லது கண்டறிய முடியாமையும், பிராந்திய-சர்வதேச அரசுகளின் அழுத்தங்களுக்கு செவிசாய்ப்பதும் எனப்பல கோணங்களில் அதன் பலவீனம் காணப்படுகிறது. தற்போது புதிதாக ஓர் அரசியல் அமைப்பை உருவாக்குவது பற்றிய உரையாடல் மேல் எழுந்திருகின்றது. இக்கட்டுரையும் இலங்கையின் அரசியலில் அல்லது அரசியல் சூழலில் புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கம் சாத்தியமானதா என்பதும், அத்தகைய அரசியலமைப்பு ஒன்று முன்மொழியப்படுமாக இருந்தால் தமிழரசியல் தலைவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவது பற்றிய உரையாடலை முன்வைத்து வருகின்றனர். இந்த இரண்டு பிரதானமான கேள்விகளுக்கும் பதிலளிப்பதாகவே இக்கட்டுரை அமைய உள்ளது.

குறிப்பாக நீண்ட அரசியல் பாரம்பரியத்தையும் ஈடுபாட்டையும் கொண்ட அரசியல் தலைவர்கள் தமிழர் மத்தியில் புதிய உரையாடலை தொடங்கியுள்ளனர். அத்தகைய உரையாடலின் பிரதான அம்சம் ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட புதிய அரசியலமைப்பு ஒன்றின் உருவாக்கம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் பற்றியதாகவே அமைந்திருக்கின்றது. இலங்கையின் தற்போதைய பொருளாதார அரசியல் மற்றும் சமூக நியமங்களின் அடிபடையில் அவதானிக்கின்ற போது புதிய அரசியல் யாப்பின் வருகை சாத்தியமானதா என்பது முக்கியமானது ஆகும். அதற்கான வாய்ப்புகள் மிக அரிதாகவே காணப்படுகிறது என்பதை ஆழமாக விளங்கிக்கொள்ளுதல் அவசியமானது ஆகும்.

முதலாவது, இலங்கை அரசியல் அமைப்பை மாற்றுவது என்பது தனித்து பாராளுமன்றத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் சாத்தியப்படாதொன்றாகவே அரசியலமைப்பில் வரையப்பட்டுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை மக்கள் தீர்ப்புக்கு விடுவதன் மூலம் மட்டுமே அரசியல் யாப்பினை அதன் பகுதிய அளவான மாற்றங்களை மேற்கொள்ள முடியும். அத்தகைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை எவை என்பதை ஜனாதிபதியே தீர்மானம் மேற்கொள்வார். ஆனால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒற்றையாட்சி முறைமை, பௌத்தம் மற்றும் ஜனாதிபதி முறைமை போன்ற விடயங்கள் மாற்றப்பட வேண்டுமாயின் மக்கள் தீர்ப்பு அடிப்படையிலேயே மேற்கொள்ள முடியும். அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இலங்கைத்தீவில் ஏற்படுகின்ற போது பெரும்பான்மை சிங்கள மக்களின் எண்ணங்களுக்கு அமைவாகவே அதனுடைய அடிப்படை மாற்றம் கட்டமைக்கப்படும். அவ்வாறான சூழல் இலங்கைத் தீவில் ஏற்படுவது என்பது மிகக் கடினமான ஒரு செய்முறையாக அரசியலமைப்பு வரையப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடையங்கள் அரசியலமைப்பிலிருந்து மாற்றத்துக்கு உள்ளாகுவது என்பது, பொதுமக்கள் பெரும்பான்மையானரின் ஆதரவின் அடிப்படையில் சாத்தியப்படுத்த வேண்டியதாகும். ஆகவே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒற்றையாட்சி முறைமை நீக்கம் மற்றும் பௌத்தத்திற்கான முனுரிமை நீக்கம் என்பவற்றில் மாற்றங்களை மேற்கொள்வது மக்கள் தீர்ப்பில் சாத்தியமற்றதாகவே அமைகிறது.

இரண்டாவது, இலங்கையின் அரசியலமைப்பு என்பது வெளிப்படையாக அவதானிக்கின்ற போது நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டது என்ற விமர்சனம் அல்லது மதிப்பீடு உண்டு. ஆனால் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு அல்லது இலங்கைத்தீவில் உருவாக்கப்பட்ட கோல்புறுக் முதல் 1978ஆம் ஆண்டு வரையான அரசியலமைப்புகள் அனைத்தும் பிராந்திய அரசாகிய இந்தியாவின் புவிசார் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான வரைபாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பை முழுமையாக மாற்றுவதை, இலங்கைத் தீவை பொறுத்தவரையில் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அரசாங்கமும் இலங்கைத் தீவில் உள்ள உயர்வர்க்கமும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்துமா என்பதிலும் கவனமம் செலுத்த வேண்டி உள்ளது. இலங்கை அரசியலில் ஐரோப்பியர்களுடைய வருகைக்குப் பின்னர் அல்லது அதற்கு முன்னரான வரலாற்று காலத்தில் கூட, இன்னொரு வகையில் குறிப்பிடுவதானால் மகாவம்ச காலத்தில் இருந்து இந்திய அரசை எதிர்கொள்வது அல்லது கையாளுவது என்ற அடிப்படையிலே இலங்கை அரசியல் அமைப்பின் கட்டுருவாக்கம் மையப்படுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு மாற்றத்தை மேற்கொள்ளுதல் என்பது மிகவும் கடினமான ஒரு செய்முறையாகவே அமைகிறது.

மூன்றாவது, இலங்கை தீவில் தற்போது காணப்படும் அரசாங்கமும் தென்னிலங்கையின் உயர் வர்க்கமும் பொருளாதார ரீதியான பிரச்சனையாகவே இலங்கையின் இன்றைய நெருக்கடிகளை அளவீடு செய்ய முனைகின்றது. இலங்கைத் தீவில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பொருளாதார நெருக்கடியே அடிப்படையானது என கருதுகின்றனர். இதனால் இலங்கைத்தீவு ஒரு நீண்ட பொருளாதார ரீதியான கட்டமைப்பை சாத்தியப்படுத்தும் வரை அரசாங்கமும் தென்னிலங்கை உயர்வர்க்கமும் ஒரு அரசியலமைப்பு மாற்றத்தை நோக்கி செயல்படுமா என்பது கேள்விக்குரியது. அதனை கடந்து ஒரு அரசியலமைப்பை உருவாக்க முனைகின்ற சந்தர்ப்பத்தில் ஆட்சிக்கு மாத்திரமன்றி நடைமுறை சூழலையே முற்றாகவே பலவீனப்படுத்துவதாக அமைந்து விடக்கூடிய வாய்ப்புள்ளது. அதனால் அத்தகைய தற்கொலை அரசியல் ஒன்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவானதாகும். பொருளாதார ரீதியான வாய்ப்புக்களையும் வளர்ச்சிகளையும் கட்டமைத்து விட்டு புதிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு பற்றிய எண்ணத்தை கவனத்தில் கொள்ள முடியும். அதனைக் கூட அமுல்படுத்துவது என்பது கடினமான செய்முறையாகவே காணப்படும்.

நான்காவது, இலங்கை தீவின் நிகழ்ந்து வருவது பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, இனப் பிரச்சனைக்கான தீர்வு அரசியலமைப்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைப்பாடு தேசிய மக்கள் சக்திக்கு உண்டு. தேசிய மக்கள் சக்தி ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பான ஜே.வி.பி-யின் இன்னொரு வடிவமாகும். அத்தகைய வடிவத்தைக் கொண்டிருக்கும் அரசாங்கமானது இலங்கைத் தீவின் இனப்பிரச்சனைக்குரிய தீர்வினை புதிய அரசியல் யாப்பில் முன்மொழிய வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கின்றது. அதனை 159 உறுப்பினர்களும் மாத்திரம் உருவாக்கி விட முடியாது. மாறாக இலங்கைத் தீவின் அரசியல் கலாச்சாரம் இன முரண்பாடுகளுக்குள்ளால் புரையோடி உள்ளது. இன முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வது என்பது அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்திற்கான தேவைபாட்டோடு முன்னெடுக்கப்பட வேண்டியதாகும். இவ்வாறான பின்னணியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, தீர்க்கப்பட வேண்டிய செய்முறைகளை அதிகமாக கொள்ள வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு. அதனை விரைவாகவோ அல்லது இலகுவாகவோ அல்ல குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள்ளேயோ சாத்தியப்படுத்தி விட முடியாது. அதற்கான நீண்டதொரு உரையாடலும், மாற்றங்களும், அரசியல் கலாச்சார ரீதியான கட்டமைப்புகளில் காணப்படும் மாற்றங்களும் அவசியமாகிறது. அத்தகைய மாற்றங்களை சாத்தியப்படுத்திய பின்னரே புதிய அரசியல் யாப்பினுடைய உருவாக்கம் பற்றிய நியமங்களை மக்கள் மத்தியில் கொண்டு வர முடியும். ஏனெனில் 1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு மீள முடியாத மற்றும் இலகுவாக கடந்து செல்ல முடியாத ஒரு வரைவை சரத்துகளுக்கு ஊடாகவும் அத்தியாயங்களுக்கு ஊடாகவும் கட்டமைத்திருக்கின்றன. அதனால் அத்தகைய சரத்துக்களையும் அத்தியாயங்களையும் கடந்து ஒரு புதிய அரசியல் யாப்பை வரைவது என்பது கடினமானதாகும். தவறான சூழல் ஏற்படுகிற போது அல்லது மக்களை கருத்தில் கொள்ளாமல் 1972 மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பை வரைந்தது போன்று ஒரு வரைவை சாத்தியப்படுத்துவது என்பது ஆட்சியின் இருப்பை பாதிப்புக்குள்ளாக்கும். அத்தகைய செய்முறை ஒன்றை புதிய அரசாங்கம் மேற்கொள்ள துணியாது. எனவே நிச்சயமாக ஒரு புதிய அரசியல் அமைப்பு ஒன்றைக் காண நீண்ட அரசியல் கலாச்சார மாற்றத்திற்கான செய்முறை அவசியமானதாக இருக்கிறது.

ஐந்தாவது, இத்தகைய சூழலில் ஒரு புதிய அரசியல் யாப்புக்காக தமிழரசியல் சக்திகள் ஒன்று திரள்வது என்பதும் சாத்தியமற்றதொன்றாகவே தெரிகின்றது. புதிய அரசியல் யாப்பு மட்டுமல்ல தற்போதைய அரசியல் யாப்பும் ஒற்றையாட்சி வரைபுக்குள்ளேயே இயங்குகின்றது. அதே ஒற்றையாட்சி அரசியல் மரபுக்குள்ளேயே தமிழரசியல் கட்சிகளின் பாராளுமன்ற ஆசனங்கள் உறுதிப்படுத்தப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில் சில தமிழ் அரசியல் கட்சிகள் குறிப்பிடுவது போன்று அரசியலில் இருந்து விலகுவது என்பது கடந்த காலத்தை நிராகரிப்பதாகும். மேலும் தமிழரசியல் அனைத்தையும் வலுவற்றதாக்குவது போன்று காணப்படுகிறது. தற்போதும் ஒற்றையாட்சி அரசியலுக்குள்ளேயே பயணிக்கின்ற நிலையே இலங்கைத் தீவில் உண்டு. எனவே அத்தகைய செயல்முறைகளுக்கு முன்னால் அரசியலில் இருந்து விலகுவது என்பது, அவர்களது நிகழ்கால அரசியல் மீதான அல்லது கடந்த கால அரசியல் மீதான பலவீனத்தையும் போலித்தன்மையுமே விளக்குகிறது. இது தொடர்பாக குறித்த தரப்புகள் மீது முன்வைக்க வேண்டிய விமர்சனம் தவிர்க்க முடியாததாக அமைகிறது. இலங்கைத் தீவு என்பது ஒற்றையாட்சி அரசியல் மரபுக்குள்ளேயே இயங்குகின்ற தன்மையை கடந்த காலங்களிலும் அனைத்து காலகட்டத்திலும் உறுதிப்படுத்தி வருகிறது. அதனை எதிர்ப்பதும் அதில் மாற்றங்களை கொண்டு வருதல் என்பதும் தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் செய்முறையில் தங்கி இருக்கிறது. அத்தகைய அரசியல் செய்முறை எதனையும் மேற்கொள்ளாது, உரையாடுவதன் மூலம் மாற்றத்தை ஒருபோதும் சாத்தியப்படுத்த முடியாது.

ஆறாவது, 1970களில் இத்தகைய நெருக்கடி ஒன்று ஈழத்தமிழர் அரசியலில் காணப்பட்டது. ஒற்றையாட்சியை முன்னிறுத்திக் கொண்டு இரண்டு அரசியல் அமைப்புகள் முன்வைக்கப்பட்ட போது, ஈழத்தமிழர்கள் ஆயுத வன்முறையில் அல்லது போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த நிர்ப்பந்தத்தை மிதவாத அரசியல் சக்திகளே அன்றைய காலப் பகுதியில் ஊக்குவித்திருந்தனர். அதன் சாட்சியாக வட்டுக்கோட்டை தீர்மானம் அமைந்திருந்தது. அத்தகையதொரு நிலைமை 2025களில் மீளவும் ஏற்பட்டுள்ளது. இதனை ஆயுதப் போராட்ட வழிமுறைக் கூடாக கொண்டு செல்ல முடியாது. அதற்கான உலகம் ஒழுங்கு முறையோ, பிராந்திய-புவிசார்-பூகோள அரசியல் செய்முறைகளோ அல்லது வடிவங்களோ இல்லாத ஒரு சூழலில் ஜனநாயக செய்முறைக் கூடாகவே ஒரு மாற்றத்தை நோக்கி செயல்பட வேண்டிய தேவைப்பாடு அரசியல் தலைமைகளுக்கு உண்டு. அத்தகைய செய்முறைகளை மேற்கொள்ள முடியாத அரசியல் தலைமைகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது ஆரோக்கியமானதாகும். புதிய உத்திகளை வகுக்கக் கூடிய தரப்பினர் மட்டுமே இந்த அரசியலில் காணப்படும் வாய்ப்புகளையும் உரையாடல்களையும் கொண்டு செல்லக்கூடிய உத்திகளை வகுக்க முடியும். இதனை ஒரு வறுமையாக கருதி, நெருக்கடியாக கருதி அரசியலை விட்டு விலகுதல் என்பது அநாகரிகமான ஒரு செய்முறையாகவே அமைகின்றது. மாறாக இந்த சூழலை எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுப்பதும் அவற்றுக்குரிய தீர்வை கண்டறிவதும் அதற்கான வழிமுறைகளை ஆராய்வதும் அவசியமானது.

எனவே, ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளின் பலவீனமான பக்கங்கள் வெளி கிளம்புவதோடு இலங்கை அரசியலில் புதிய அரசியல் யாப்புக்கான வாய்ப்பு பலவீனமாகவே உள்ளது. அதனை கண்டறிவது இலகுவானது. ஆனால் தமிழரசியல் தலைமைகள் சாத்தியமற்ற ஒன்றை சாத்தியமாகும் என்று விவாதிக்க முனைகின்றனர். அதனால் இந்த மாற்றமும் சாத்தியப்பட போவதில்லை. மாறாக ஈழத்தமிழர்களுடைய அரசியலை மீளவும் வெற்றிடத்தை நோக்கி நகர்த்துவதற்கான வடிவமாகவே தோன்றுகிறது. அதனை விடுத்து, அடுத்து தமிழ் அரசியலில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் பற்றியும் அதன் தேவைகள் பற்றியும் உரையாடுதல் அவசியமானது. அதனை தமிழரசியல் தலைமைகள் தற்போது மேற்கொள்ளுதல் வேண்டும். தவறுகின்ற பட்சத்தில் அரசியலில் இருந்த ஒதுங்குவது என்பது புதிய தலைமுறையின் வருகைக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தக் கூடியது.

-பேராசிரியர். கே.ரீ. கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)