ஜே.வி.பி. இன் 37 வது கார்த்திகை வீரர் தினம் கடந்த 13.11.2026 அன்று ஜனாதிபதி அநுர குமாரதிசநாயக்க தலைமையில் நடைபெற்றது. 1971 ஆம் ஆண்டு மற்றும் 1989 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட ஜே.வி.பி. இன் தோழர்களுக்கான இந்நிகழ்வு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன் நிகழ்வில் அரசாங்க தரப்பினர் பொதுமக்கள் தொண்டர்கள் என பெரிய அளவிலான மக்கள் கொல்லப்பட்ட தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இக்கட்டுரையும் வடக்கு கிழக்கில் மாவீரர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட இருக்கும் சந்தர்ப்பத்தில் தென்னிலங்கையில் அஞ்சலி செலுத்தப்பட்ட ஜே.வி.பி.வீரர்கள் தினத்தை நினைவு கொள்வதை ஒப்பீடு செய்ய முயலுகிறது.
1971 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜே.வி.பி. மீது அப்போதைய அரசாங்கம் தடைகள் விதித்ததுடன் 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜே.வி.பி.ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. அன்றைய ஆளும் தரப்பினால் சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் அடித்தும் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டது மட்டுமன்றி பெரும் தொகையினர் சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகைய துயர வரலாற்றை அனுபவித்த ஜே.வி.பி. ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதாவது எழுத்தாளர் சரவணன் குறிப்பிடுவது போல் இரண்டு தடவை நசுக்கப்பட்டவர்கள் மூன்றாவது தடவை வென்றார்கள் என்பதற்கு அமைய ஆட்சியில் அமர்ந்தள்ளனர். அத்தகைய தியாகம் மிக்க தோழர்களை ஜே.வி.பி. அரசாங்கம் நினைவு கொள்வது என்பது வரலாற்று நிகழ்வாகவே கொள்ளப்பட வேண்டும்.. ஒரு காலப்பகுதியில் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் இன்று ஆட்சி அமைத்துக் கொண்டாலும் அவர்களது அன்றைய காலத்தை ஆட்சியாளர்கள் பயங்கரவாத அமைப்பாகவே அடையாளப்படுத்தினர். அத்தகைய பதிவை நிராகரித்து விட முடியாது. ஜே.வி.பி. ஆயுதத்தை கைவிட்டு ஜனநாயக ரீதியாக ஆட்சியை கைப்பற்றிய போதும் அக்கால பகுதி ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் அப்போதைய அரசாங்கம் பயங்கரவாதம் என்று அடையாளப்படுத்திக் கொண்டது.
இதே சூழல் ஒன்றுக்குள்ளே வடக்கு கிழக்கு ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் தனி நாட்டு கோரிக்கையை முதன்மைப்படுத்திய தரப்பினர் மீது அரசாங்கம் பயங்கரவாதிகள் என்று பெயர் சூட்டிக் கொண்டது. வடக்கு கிழக்கை தனி நாடாகவும் இலங்கையில் இருந்து பிரிந்து செல்வதற்கான கோரிக்கையோடு தமிழ் மக்களின் உரிமையை மீட்டெடுப்பதற்கு ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்தினர். தென்னிலங்கையில் ஜே.வி.பி. எவ்வாறு ஒரு ஆட்சி மாற்றத்தை செய்வதன் ஊடாக இந்த நாட்டின் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்ததோ அவ்வாறே தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு பிரிந்த செல்கின்ற ஒரு வழிமுறையே பொருத்தமானது என்ற எண்ணத்தோடு 2009 கள் வரை ஆயுதப் போராட்டத்தை வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டனர். இரண்டுமே சமதளத்தில் ஆயுதப் போராட்டங்களாகவும் வன்முறை போராட்டங்களாகவும் விடுதலை வேண்டிய போராட்டங்களாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஆயுதங்களிலிருந்தும் வன்முறையிலிருந்தும் இரண்டு போராட்டங்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.
அத்தகைய ஆயுதப் போராட்டத்தின் மூலத்தை இலங்கையில் அடையாளப்படுத்த முயன்றால் அதன் தொடக்கம் ஜே.வி.பி.யாகவே பார்க்கப்படுகிறது. 1965 ஆம் ஆண்டு ஜே.பி.பி. உருவாவதற்கு மூல காரணமாக இருந்த ரோகண விஜயவீரா ஆயுதப் போராட்டத்திற்கான முனைப்புகளோடு செயல்பட்டார் என்றும் 1971 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்ற ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள் என்றும் குறிப்பிட்டாலும் அதனுடைய அடிப்படை சண்முகதாசன் என்னும் மார்க்சிய இடதுசாரியால் தோற்றுவிக்கப்பட்ட சிந்தனையின் அடிப்படையிலேயே ஆயுதப்போராட்டத்தின் முனைப்பு இலங்கையில் உருவானது. எது எவ்வாறானதாக இருந்தாலும் ஆயுதப் போராட்டத்தின் தொடக்கத்தை ஜே.வி.பி.யே இலங்கையில் ஆரம்பித்திருந்தது. 1972 ஆம் ஆண்டு புதிய புலிகளின் அமைப்பு வடக்கு கிழக்கு இளைஞர்களால் தோற்றுவிக்கப்படுவதற்கு பின்னால் ஜே.வி.பி. இன் ஆயுதக் கிளர்ச்சியும் பிராதமான காரணியில் ஒன்று என்பதை மறுக்க முடியாது.
இவ்வாறு ஒற்றுமைகளை கொண்டிருக்கின்ற ஜே.வி.பி. உம் வடகிழக்கினுடைய ஆயுதப் போராட்டமும் சமகாலத்தில் அடைந்திருக்கும் எல்லை பிரதான விவாதபொருளாக உள்ளது. ஏனெனில் பயங்கரவாத அமைப்பு ஒன்று ஆட்சி அமைத்த பிற்பாடு கடந்த காலத்தில் அது நிகழ்த்திய விடயங்களை நினைவு கொள்கின்ற அம்சம் என்பது எப்படியானதோ அவ்வாறே வடக்கு கிழக்கிலும் ஒரு காலப் பகுதியில் ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்திய விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த போராளிகளை நினைவு கொள்வதும் ஒப்பானதே. ஜே.வி.பி. யினுடைய பயங்கரவாத செயல் என்று முன்னைய அரசாங்கங்கள் அடையாளப்படுத்தியது போன்று விடுதலைப் போராட்ட அமைப்புகளையும் தென் இலங்கையின் முன்னைய அரசாங்கங்கள் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தி இருந்தன. ஆனால் இரண்டுமே ஒன்றாக காணப்பட்டாலும் நடைமுறையில் தமிழர்கள் பாரபட்சமாகவும் இனவிரோதத்தோடும் பார்க்கப்படுகிறார்கள் என்பதற்கு அதிகமான ஆதாரங்கள் உண்டு. அத்தகைய பாரபட்சமும் புலனாய்வுத் துறையின் தலையீடுகளும் சுதந்திரமற்ற நிலையும் இரண்டாம் பிரஜைகள் என்ற மனோநிலையும் ஜே.வி.பி. இன் ஆட்சி காலப்பகுதியிலும் காணப்படுகிறது. ஜே.வி.பி.யினரை எவ்வாறு அரசாங்கங்களும் அன்றைய ஆட்சியாளர்களும்; பயங்கரவாதிகள் என்று அழைத்தார்களோ அவ்வாறு வடக்கு கிழக்கு ஆயுதப் போராட்டத்தையும் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஜே.வி.வி. இனர் தற்போது ஆட்சியாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர். ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்து பிற்பாடு தனது போராளிகளுக்கும் மரணித்தவர்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் தனித்துவத்தையும் அங்கீகாரத்தையும் வடக்குக்கிழக்கில் நினைவு கொள்வதற்கோ பின்பற்றுவதற்கோ அவர்களது உருவச்சலைகளை நிறுவுவதற்கோ அனுமதி அளிக்காத ஒரு துயரம் ஒன்றை அவதானிக்க முடிகிறது. இதனை ஒரு துயரமாக கடந்து செல்ல முடியாது. ஜே.வி.பி. அரசாங்கம் கூறுவது போல் இனவாதமற்ற மதவாதம் அற்ற அரசாங்கம் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டாலும் பராபட்சத்தையும் இன உணர்வையும் இன வேறுபாட்டையும் இந்த அரசாங்கம் கொண்டுள்ளது என்பதை கடந்த இரண்டு ஆண்டுகாலப்பகுதி நிகழ்ந்த சம்பவங்கள் உணர்த்துகிறது. அரசியலுக்காகவும் தனது ஆதரவை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் இனவாதமற்ற சுலோகங்களையும் பேச்சுக்களையும் மேடைகளில் ஜே.வி.பி. முன்வைக்கலாமே அன்றி நடைமுறையில் சாத்தியப்படுத்த முடியாது என்பது தெளிpவாகத் தெரிகிறது.
ஜனாதிபதியின் தலைமையில் கார்த்திகை வீரர்கள் தினத்தை ஜே.வி.பி. நிகழ்த்தியது போல் வடக்கு கிழக்கில் ஜனாதிபதியின் தலைமையில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு அஞ்சலி செய்வதற்கு தயாராக இந்த அரசாங்கம் இருக்கிறதா என்பது தான் பிரதான கேள்வியாகும். இதனை இடதுசாரி அரசாங்கம் மேற்கொள்ளுமாக இருந்தால் இந்த அரசாங்கத்தின் நல்லிணக்கமும் இனவாதமற்ற நடைமுறையையும் கொண்டிருக்கிறது என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வதற்கான ஒரு களத்தை திறப்பதாக இருக்கும். வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் காலத்தில் நிறுவப்பட்ட அனைத்து கல்லறைகளும் மீண்டு நிறுவப்பட்டு அவர்களது நினைவுகள் அங்கீகரிக்கப்படுவதும் அவர்களுடைய உருவச்சிலைகள் நிறுவப்படுவதும் இந்த அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படுமாக இருந்தால் இந்த அரசாங்கம் ஒரு சமத்துவமான நீதியான இனப் பாரபட்சமற்ற அரசாங்கமாக விளங்குகிறது என்பதை தமிழ் மக்கள் படிப்படியாக ஏற்றுக்கொள்ளுகின்ற மனோநிலை ஏற்படும். அவ்வாறன்றி ஜே.வி.பி. யினுடைய போராளிகளுக்கு ஒரு நியாயத்தையும் வடக்கு கிழக்கு ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட போராளிகளுக்கு ஒரு நியாயத்தையும் இந்த அரசாங்கமும் தொடர்கின்ற நிலை அதன் இனவாதம் அற்ற பேச்சுக்களின் போலித்தன்மையாகவே அமையும். இனவாதமற்றது என்ற உரையாடலுக்கு பின்னால் அதிக கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் எழுவது தவிர்க்க முடியாததாகும். இந்த அரசாங்கம் மீது கொண்டிருந்த நெருக்கமும் ஆதரவும் காணாமல் போகும். அதிகார நலனுக்காக எண்ணங்களையும் கோட்பாடுகளையும் தவறாக பிரயோகப்படுத்துவது என்பது ஒரு தேசத்தின் இருப்பை அவமதிப்பதாகவே இருக்கும். இலங்கை தீவில் இன நல்லிணக்கம் தோற்றுவிக்கப்பட வேண்டுமானால் இடசாரி சிந்தனை புலப்பட வேண்டுமானால் எல்லா இனங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டுமானால் எல்லா இனங்களின் எண்ணங்களும் கோரிக்கைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்தகைய சூழலில் மட்டுமே இனவாதமற்ற அரசியல் என்பதை தமிழ் மக்களிடமிருந்து அரசாங்கம் முழுமையான அங்கீகாரத்தை பெற முடியும்.
எனவே இலங்கை தீவின் அரசியல் என்றுமே பாரபட்சங்களும் முரண்பட்ட எண்ணங்களும் பகைமைகளும் கொண்டதாகவே உள்ளது. இது நல்லிணக்கத்தையோ இன பாரபட்சமற்ற சூழலையோ இன மதவாத அற்ற நாட்டையோ கட்டியெழுப்ப உதவாது. மாறாக ஜே.வி.பி. ஆட்சி காலத்துக்கு பின்னர் அதன் தீவிரம் மேலும் வலுவடைவதற்கான ஒரு களத்தை இந்த அரசாங்கம் விட்டுச் செல்வதாகவே அமையும்.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினக்குரல்)
