அரசியல் கட்டுரைகள்

புதிய இந்தியத்தூதுவர்-தமிழ் தேசியக் கட்சிகளது சந்திப்பும் ஈழத்தமிழரது அரசியலும்?

இலங்கை அரசியலின் ஒரு பரப்பாக இந்தியாவின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் காணப்படுகின்றது. இந்திய-இலங்கை புவிசார் அரசியல் இருப்பு தவிர்க்க முடியாது அத்தகைய யதார்த்தத்தை பெற்றுள்ளது. தமிழ் நாட்டின் அரசியல் இருப்பும் புதுடில்லிக்கு அவசியமானதாக அமைய வேண்டுமாயின் ஈழத்தமிழரது அரசியலை கவனத்தில் கொள்வது தவிர்க்க முடியானதென புதுடில்லி கருதுகிறது. எனவே புதுடில்லி-சென்னை கொழும்பு –திருகோணமலை யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களின் அரசியல் ஏதோ ஓரடிப்படையில் அரசுகளின் நலன்களுக்குள்ளால் இயங்குகிறது. இதில் கொழும்பும் புதுடில்லியும் அதிக ஆதிக்கத்தை கொண்டவையாகவே எப்போதும் இருந்துவந்துள்ளன. தற்போது போல் அவ்வப்போது தமிழ் நாடும், இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு அரசியலும் முக்கியம் பெறத் தவறுவதில்லை. அத்தவரைபுக்குள் இக்கட்டுரை இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தமிழ் தேசியக்கட்சிகளுடனான சந்திப்பின் முக்கியத்துவத்தை தேடுவதாக அமையவுள்ளது.

22.01.2024 இல் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் தமிழ் தேசியக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு ஒன்றினை புதிய இலங்கை;ககான இந்தியத் தூதுவர் மேற்கொண்டுள்ளார். அந்த சந்திப்பில் இந்தியத் தூதுவரது கருத்த்தாக இலங்கைத் தமஜழருக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்குமாறு இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த மட்மே முடியுமென தெரிவித்திருந்தார். இதனையே சர்வதேசமும் செய்ய முடியுமென குறிப்பிட்ட தூதுவர் இந்தியா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது என்றார். அபிவிருத்தித் திட்டங்களுடன் அரசியல் தீர்வையும் இலக்காகக் கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக மின்சாரம் கொண்டுவரும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது எனவும் தெரிவிததத்தார். இச்சந்தர்ப்பத்தில் தமிழ் கட்சிகளின் உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு மீளமைக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரம் பகிரப்பட வேண்டும் எனவும் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டதோடு வடக்கு கிழக்கு மீது நிகழ்த்தப்படும் ஆக்கிரமிப்புகளை தூதுவாருக்கு முன்வைத்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 600 சிங்களக் குடும்பங்கள் குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகவும் திருகோணமலையை பாரிய நகரமயமாக்குவதில் இந்தியா அல்லாத நாடுகளை உள்ளீத்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு-மாதவனை மேச்சல்தரவை சிங்கள மக்களது குடியேற்றத்தால் ஆக்கிரமிக்கப்படுவது போன்ற விடயங்களை முதன்மைப்படுத்தியிருந்தனர். மேலும் அவர்கள் தேர்தல் நடாத்தப்படாதுவிடும் பட்சத்தில் திரும்ப திரும்ப இந்திய அரசிடம் முறையிடுவதைத் தவிர தமிழ் தரப்புக்கு வேறுவழியில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இத்தகைய சந்திப்பு மரபார்ந்ததாக அமைந்திருந்தாலும் அதிக முக்கியத்துவம் பொருந்தியதாக காணப்படுகிறது. அதனை விரிவாக நோக்குவது தேவையானதாக உள்ளது.

முதலாவது, தூதுவரது வெளிப்படைத் தன்மையும் இந்தியாவின் நிலைப்பாட்டையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். அது ஒரு வகை இராஜதந்திர நகர்வாக அமைந்துள்ளது. அதுவே இராஜதந்திரிகளின் எல்லையாகவும் கொள்ளப்படுகிறது. ஒரு நாட்டின் அரசியலுக்குள் ஒரு தூதுவரது எல்லை தெளிவாகக் கோடிடப்பட்டுள்ளது. அதற்க அப்பால் தூதுவர்களும் தூதராலயங்களும் மேற்கொண்டாலும் வெளிப்படுத்த வேண்டிய இராஜதந்திர மொழி அதுவாகவே அமைந்திருப்பது வழமையானது. இமன் தாற்பரியம் தமிழ் தரப்புக்களால் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது ஒருவகையான அழுத்தமாவே தெரிகிறது. அதுவே தற்போது தேவையானதும். இத்தகைய அழுத்தம் என்னும் வலுவடைந்து பரஸ்பரம் பேரம்பேசலுக்குள் நகர வேண்டும். அதனை தமிழ் தரப்பு ஏற்படுத்துமாயின் அதனால் பாரியளவான மாற்றத்தை அடைய முடியும். ஆனால் இந்தியா தூதுவர் குறிப்பிடுவது போல் அத்தகைய எல்லைக்குள் கடந்த காலத்தில் நின்றது கிடையாது. இந்தியாவின் நலன்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனக்கருதும் எந்தவிடயத்திற்கும் அழுத்தத்தைக் கொடுப்பதைவிடுத்து நேரடியாக நகரும் இயல்பினை வெளிப்படுத்தியுள்ளது. அத்தகைய ஒரு சூழல் இந்தியாவுக்கு ஏற்படாது என்று அறிபடக் கூறமுடியாது.

இரண்டாவது, தமிழ்தரப்புக்கள் வேறுமார்க்கம் இல்லை எனக்கூறுவதைவிடுத்து இருக்கும் வழிமுறைகளை நோக்கி நகர வேண்டும். இந்தியத் தூதுவருடன் மட்டுமல்ல ஏனைய முக்கியத்துவம் பொருந்திய தூதுவர்களுடன் தொடர்ச்சியாக உரையாடலை தொடக்க வேண்டும். இனப்பிரச்சினை என்பது அரசறிவியல் அர்த்தத்தில் உலகளாவிய பிரச்சினை என்பதை முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அதற்கு அமைவாக இந்தியாவில் சென்னையிலும் புதுடில்லியிலும் உடனடியாக அலுவகங்களைத் திறக்க வேண்டும். அவ்வாறே ஏனைய நாடுகளின் தலைநகரங்களிலும் அத்தகைய அலுவலகங்களை திறக்க வேண்டும். அதனூடாக அந்த நாடுகளுடன் உரையாடலைத் தொடக்க வேண்டும். நாடுகள் அழைக்கும் போது கட்சியின் நலன்களைவிடுத்து அல்லது அரசின் நலன்களுக்கு கட்டுப்படுவதை விடுத்து தமிழ் மக்களது தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கு நிலையில் செயல்பட வேண்டும். கட்சி நலன் தனிப்பிட்ட நலன் மற்றும் தாம் சார்ந்திருக்கின்ற அரசுகளின் நலன்களை முதன்மைப்படுத்தாது செயல்பட வேண்டும். உள்நாட்டில் கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னோர்வகையில் குறிப்பிடுவதாயின் சர்யான வெளியுறவுத் தரிசனத்தைக் கட்டிவளர்க்க வேண்டும். இலங்கைத் தீவிலுள்ள இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு தமிழர்களின் சரியான வெளியுறவுத் தரிசனத்திலேயே தங்கியுள்ளது. அதற்கூடாகவே அரசியல் அழுத்தத்தினைக் கொடுக்க முடியும். அது தீர்வினை நோக்கி நகர்த்தும். ஐந்து வருடங்களில் பாலத்தீன அரசு என இலங்கையின் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா உகண்டாவில் அணிசேரா மாகாநாட்டிற்கு சென்ற போது தெரிவித்துள்ளார். அத்தகைய கோரிக்கை உலக நாடுகளால் தற்போது முன்வைக்கப்படுகிறது பாலஸ்தீனம் சார்பாக என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் சாத்தியமானது எதுவென்பதை கண்டறிந்து அத்தகைய சாத்தியமானதை நோக்கி நகர்வதே அரசியலாகும்.

மூன்றாவது, 22.01.2024 இல் அயோத்தியில் பிரமாண்டமான இராமர் கோவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல புண்ணியதலங்கள் நோக்கி பயணம் செய்திருந்தார். அதில் இராமேஸ்வரமும் ஒன்றாக இருந்தது. ஏறக்குறை மூன்று நாட்கள் தமிழகத்தில் தங்கியிருந்து புனிததலங்களில் தரிசனங்களை மேற்கொண்டிருந்தார். ராமர் கோவில் வட இந்திய மரபுசார்ந்ததாக அமைக்கப்பட்டாலும் அதன் வடிவம் அதிகம் இராமேஸ்வரத்தை பின்பற்றி அமைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இது ஈழத்தமிழரது அரசியலுக்கான வாய்ப்பான சூழலை அடையாளப்படுத்துவதாகத் தெரிகிறது. காரணம் ஏதே ஓரடிப்படையில் சென்னையை புதுடில்லி தங்கியிருக்கிறது. சென்னை எப்போதும் சனத்திரள் அரசியலுக்கு பயிற்றப்பட்டது. தமிழ் நாட்டின் மக்கள் திரள் அரசியலை கண்டறிந்து அதனை அரசியல் முதலீடாக்கியவர் அறிஞர் அண்ணா என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அத்தகைய மக்கள் திரள் அரசியலை ஈழத்தமிழர்கள் அணுகுதல் வேண்டும். காரணம் தமிழகத்தின் மக்கள் திரள் அரசியலுக்கு புதுடில்லி கட்டுப்படக் கூடியது. புதுடில்லிக்கு உலகம் கட்டுப்படக் கூடியது. ஆதற்கு அடிப்படையானது உலகம் இந்தியாவுடன் கொண்டிருக்கும் வர்த்தக உறவு. இதற்கு சிறப்பான ஆதாரம் ரஷ்சிய-உக்ரையின் போர். ஆந்தப் போரில் இந்தியா ரஷ்சியாவை ஆதரித்தது என்பதற்காக அமெரிக்காவோ மேற்கு நாடுகளோ இந்தியாவை எதிர்க்கவில்லை. இந்தியாவை இந்தியாவின் பாட்டுக்கு விட்டுவிட்டு தமது நலனில் கவனமாக இயங்குகின்றன. அதனால் இந்தியாவுக்கு உலகம் கட்டுப்படக் கூடிய இடத்தை புரிந்து கொண்டு நகரவேண்டும். இத்தகைய உபாயத்தை இலங்கைத் தமிழ் தலைமைகள் பின்பற்றுவதென்பது தற்போதுள்ள தேவையாக உள்ளது. இராமர் கோவில் பாரதீய ஜனதாக்கட்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஒரு முதலீடாக அமைந்தால் ஈழத்தமிழருக்கு தமிழ் நாட்டின் மக்கள் திரள் அரசியல் ஒரு முதலீடா அமைவது ஒன்றும் தவறானதல்ல.

நான்காவது, இந்தியத் தூதுவரது முக்கிய விண்ணப்பமாக தமிழ் கட்சிகளது ஐக்கியம் அமைந்திருந்தது. அத்தகைய ஐக்கியத்துடனேயே தமிழ் தேசியக் கட்சிகளும் தூதுவரது சந்திப்பில் கலந்து கொண்டிருந்தன. இந்தியாவுக்கு தமிழ் கட்சிகளின் ஐக்கியம் தேவைப்படுகிறது. தென் இலங்கையையும் அதன் பின்னாலுள்ள சக்திகளை கையாள அத்தகைய ஐக்கியம் அவசியமானதாக தெரிகிறது. அத்தகைய ஐக்கியம் இந்தியாவுக்க தேவை என்பது போல் ஈழத்தமிழருக்கு இந்தியா தேவையான தேசமாகவே உள்ளது. பரஸ்பரம் இருதரப்பும் தேவைகளின் பால் ஒன்றிணைவதும் நலன்களைப் பங்கீடு செய்வதுமே அரசியலாகும். அதாவது யதார்தத்தைக் கையாளுவதே அரசியலாகும். ஆத்தகைய யதார்த்தத்தை கையில் எடுப்பதென்பது ஒன்றும் துரோகத்தனமானதல்ல. யதார்த்தத்திற்கு அமைவாக கொள்கையை வளைத்துக் கொள்வதே அரசியலாகும். ஆதற்காக கொள்கையை கைவிடுவதோ நிராகரித்துவிட்டு செல்வதோ கிடையாது.

எனவே புதிய தூதுவர் தெளிவான உரையாடலைத் தொடக்கியுள்ளார். அதனை நோக்கி ஈழத்தமிழரது அரசியல் நலன்களை கட்டமைப்பது தமிழ் தரப்பின் உபாயமாக அமைவதல் வேண்டும். தூதுவரது இராஜதந்திர உரையாடலை இராஜதந்திரமாக அணுகுவதும் கைக்கொள்வதும் அவசியமானது. பழைய கோட்பாடுகளுக்குள்ளும் சதிக்கோட்பாடுகளுக்குள்ளும் மண்டியிடாது யதார்தமானதை நோக்கி பயணிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தரப்புக்கு உள்ளது. அதனை நோக்கி தமிழ் தரப்பு நகரவேண்டும். தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்கு அத்தகைய பொறுப்பும் கடமையும் உள்ளது. அவ்வாறே ஏனைய கட்சித் தலைமைகளுக்கும் உண்டு. கட்சிகளின் ஐக்கியத்தை மட்டுமல்ல மக்கள் ஐக்கியத்தை பலப்படுத்தும் கடப்பாடம் உண்டு. சமானிய மக்களின் அரசியல் பங்கெடுப்பே தேசியமாகும். அத்தகைய ஒன்றிணைப்பு தனித்து தாயகத்துடன் மட்டுப்படுவதல்ல. அது தமிழகத்துடனும் புலம்பெயர்ந்த தளத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும். அதுவே தீர்க்கமான வெளியுறவுத் தரிசனமாக அமையும். ஆதனை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாததாகும். அதுவே தீர்வை நோக்கி நகர்வதற்கான முதல்படியாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)