October 26, 2026
அரசியல் கட்டுரைகள்

அரச மதத்தின் பில்லி-சூனியமும்; ஜே.வி.பி.அரசாங்கத்தின் இருப்பும்?

இலங்கையில் பௌத்த மதத்தின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் அரச கட்டமைப்போடு சார்ந்த அரசாங்கங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியது. அரசாங்கங்களை மாற்றி அமைக்கவும் வடிவமைக்கவும் தகுதி கொண்டது. இலங்கை தீவானது பெரும்பான்மை தீவிரவாத சிங்கள மக்களுக்கு உரியது என்பதை மீண்டும் மீண்டும் முதன்மைப்படுத்துவது. இலங்கை தீவின் அரசியல் வரலாற்றை எழுதிய மகாவம்ச-பௌத்தம் அனைத்தையும் தீர்மானிக்கும் தகுதியைக் கொண்டது. 2800 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைக்கு அரசையும் அரசாங்கத்தையும் வடிவமைத்த ஒரு மதம் மகாவம்ச-பௌத்தம் என்பது மறுக்க முடியாது. ஆனால் அத்தகைய பௌத்த மதத்தின் உள்ளார்ந்த வடிவமும் அதனை போதிக்கும் பௌத்தப்பிக்குகளின் எண்ணமும் ஆதாளபாதாள முரணியத்தைக் கொண்டது. இலங்கை தீவின் பௌத்தம் மட்டுமல்ல புத்தபகவானின் மறைவுக்கு பின்னர் தேரவாதம், மஹாஞானமாக உருவெடுத்தது என்றும் அது பிற மதங்களைப் போன்று பில்லி சூனியம் போன்றவற்றால் ஆக்கிரமிக்கபடுவதாகவும் புனையப்பட்டது. இக் கட்டுரையும் பௌத்தம் மத்தின் முன் ஜே.வி.பி. அரசாங்கம் என்ற எல்லைக்குள் நிகழும் குழப்பங்களை உரையாடல் முயற்சிக்கிறது.

பௌத்த மதத்தின் தோற்றம் பற்றிய வரலாறுக் குறிப்புகள் பிற்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சி நிலை என்பன பௌத்தம் பற்றிய அதிக முரண்பாடுகளை காட்டுகிறது. புத்தபகவானை பற்றிய உண்மைக்கு புறம்பான செய்திகளும் புனைகதைகளும் ஆதிக்க சக்திகளின் நலன்களுக்காக விரிவுபடுத்தப்பட்டது என்ற விவாதம் வரலாற்று ஆசிரியர்களிடம் இருந்து எழுகின்றது. அவ்வாறே இலங்கை தீவில் பௌத்த மதத்தின் பரப்புகை பற்றிய சிங்கள இலக்கியங்களும் அவற்றின் உரையாடல்ககளும் திரிவுபடுத்தப்பட்ட விவாதமாகவே அதீதமாக காணப்படுகின்றன. வரலாற்றின் ஆதாரங்களின் படி இலங்கை தீவில் பௌத்த மதத்தின் பரப்புகை நாகர் வாழ்ந்த வடக்கு பிரதேசத்தில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு பரவலடைந்தது என்றும் தமிழர்களே இலங்கை தீவின் பௌத்தமதத்தை பின்பற்றிய மூத்த குடிகள் என்றும் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதற்கான சான்றுகளும் பதிவுகளும் இன்றும் தமிழர்வாழ் பிரதேசங்களில் உண்டு. சிங்கள மக்களின் ஆதிக்கத்தை இலங்கை தீவில் கட்டமைப்பதற்கு சிங்கள-பௌத்தம் என்ற நெறிமுறையை முதன்மைப்படுத்திய திரிபுவாதிகள் உருவாக்கியதே பௌத்தத்தின் இலங்கை வரலாறு. எவ்வாறு புத்த பகவான் பற்றிய குறிப்புகள் திரிபுகளுக்குள்ளால் எழுச்சி பெற்றதோ அவ்வாறே இலங்கை தீவில் பௌத்தம் பற்றிய வரலாறும் திரிவுபடுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. ஆனால் அடிப்படையில் புரட்சியாளனான கௌதமபுத்தர் இனக்குழுவொன்றி தலைவனின் மகனே அன்றி அரசருமல்ல இளவரசருமல்ல என்ற வாதத்தை வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இனக்குழுவின் தலைமையின் கீழ் இயங்கியவர் என்றும் அங்கு எழுந்த பேரரசு ஆதிக்கத்தையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து பேராடிய புரட்சிகரமான எண்ணம் கொண்டவரே புத்தர் என்றும் வரலாற்றின் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இவை எதிலும் புத்தபகவானின் மகாயானம் பற்றியோ, தேரவாதம் பற்றியோ விவாதிக்கப்படவில்லை என்றும் தேரவாதம் என்பது ஒடுக்குமுறைக்குட்பட்டவர்கள் சார்ந்து எழுந்த அம்சம் என்றும் ஒடுக்குமுறை எதிர்த்து அறிவியல் ரீதியில் போராடுவதற்கு தோற்றம் பெற்றதே சங்கம் என்றும் வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. ரோகினி ஆற்றில் (கொஹானா ஆறு) இரண்டு இனக்குழுக்களுக்கு (சாக்கியர்கள், கோலியர்கள்) இடையில் தண்ணீருக்காக இரத்தம் சிந்தும் துயரத்தை அறிவுரீதியில் முடிபுக்கு கொண்டுவர எழுந்ததே புத்தரின் அரசு பற்றி சிந்தனையாகும். ஆறியாமையின் அடிப்படையில் எழும் ஆசையே துன்பத்திற்கான தோற்றுவாய் என உணர்ந்த புத்தர் அதனை முடிபுக்கு கொண்டுவர முயன்றார். இதுவே அகிம்சை சமாதானம் போன்றவற்றை சார்ந்த உரையாடல்களை முதன்மையாக பௌத்தத்தில் பற்றிக் கொண்டது. சமூகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் பகைமைகளையும் முடிவுக்கு கொண்டு வர போராடிய ஒரு புரட்சிகரமான மனிதனாகவே புத்தபகவான் காணப்படுகிறார். கி.பி.629 இல் இந்தியாவுக்குள் நுழைந்த சீன பௌத்த துறவி யுவான் சுவாங்; பௌத்தம் தோன்றிய இந்திய தேசத்தில் பௌத்தம் 18 பிரிவுகளாக காணப்படுகிறது என்றும் அவை ஆரம்பத்தில் 108க்கு மேற்பட்டவையாக இருந்தன என்றும் பதினாறு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து தேடிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அத்தகைய முடிவுக்கு அவர் வந்தார். பௌத்தம் பற்றியும் புத்தபகவான் பற்றியும் கட்டப்பட்ட திரிபுகளே ஆதிக்கம் பெற்றிருந்தன என்ற முடிபுக்கும் அவர் வந்திருந்தார். இத்தகைய வடிவமாகவே இலங்கை பௌத்தமும் சிங்கள இனமக்களின் பௌத்தமாக வடிவமைக்கப்பட்டது.

புத்தபகவானுடைய வரலாற்றை தேடுகிறபோது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பில்லி சூனியம் பற்றிய உரையாடல் முதன்மைப்படுத்தப்பட்டதாக ஆதாரங்களை சீனத் துறவியும் சரி; இந்திய தேசத்தின் பௌத்தமதத்தை அதிகம் நேசித்தவரும் இந்திய அரசியல் யாப்பை வரைந்தவருமான அம்பேத்க்கரும் சரி முன்வைக்கவில்லை. சூனியம் பற்றிய வாதத்தை முதலில் இந்தியத் துணைக்கண்டத்திற்கே அறிமுகப்படுத்தியதாக வேதங்களும் உபநிடதங்களும் என்றால் மிகையாகாது. பரிகாரம், பூசை, யாகம் என்றெல்லாம் குறிப்பிட்டு மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களின் சொத்துக்களை களோபரம் செய்தனர். ஆனால் எல்லா சந்தர்ப்பத்திலும் புத்தபகவானுடைய எண்ணத்தில் பிறர் மீது துன்பத்தையோ துயரத்தையோ அடிமைத்தனத்தையோ அடாவடித்தனத்தையோ மதிப்பற்ற செயல்பாட்டையோ முன்வைக்காத ஒருவராக விளங்கினார். ஆனால் அவருடைய மோட்சத்துக்கு பின்னர் அவரது எண்ணங்கள் திசைதிருப்பப்பட்டு பலவீனப்படுத்தி முற்றாகவே அதன் அடிப்படைக் கொள்கைகளை நிராகரித்து போலித்தனமான மத வெறியையும் விவாதங்களையும் முன்னிறுத்தி அடக்குமுறைக்கு உட்படுகின்ற விதத்தில் பௌத்த மதத்தை மாற்றிக் கொண்டார்கள். இதன்விளைவே இலங்கை தீவின் பௌத்தம் பற்றிய நீட்சியும் விமர்சனங்களுமாகும். இலங்கையின் பௌத்த மதத்தின் போதனை அனைத்தும் ஆக்கிரமிப்பையும் அழிவுகளையும் பில்லி-சூனியத்தின் நம்பிக்கை வைத்து செயல்படுகின்ற நிலைக்கு பௌத்த மதத்தின் உண்மையான பக்கங்களை மறைக்க வழியமைத்துள்ளது.

ஞானசார தேரரை விடுதலை செய்வதற்காக பில்லி சூனியத்தை முதன்மைப்படுத்த நிலை பௌத்த மதத்தின் அடிப்படைகளை காணாமல் செய்வதற்கான நடைமுறையாகவே தெரிகிறது ஒரு நாட்டின் மதம் மக்களையும் ஆட்சியையும் ஆசீர்வதிப்பதற்கானதாகவே பார்க்கப்பட்டது. அனைத்து மதங்களிலும் பில்லி சூனியத்தை ஒன்றாக கொண்டிருந்தாலும் அது மூடநம்பிக்கை என்பதை நிராகரிக்க முடியாததாக விளங்குகிறது. ஆனால் அத்தகைய அம்சங்களினால் ஏற்படக்கூடிய விளைவுகள் அந்த மதத்தின் அல்லது அத்தகைய நெறிமுறையில் உண்மை தன்மையை பலவீனப்படுத்தி விடுகிறது. அதன் உண்மையான இலக்குகளை இல்லாமல் செய்கிறது. மதத்தின் மீதான நம்பிக்கை என்பது ஆத்ம பெருவழியின் அடைவை நோக்கிய நம்பிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில் இலங்கையின் பௌத்தம் அதற்கான செல்நெறிகளை பலவீனப்படுத்திவிட முயற்சிக்கிறது.

இலங்கைச் சட்டங்களை மதிப்பளிக்க வேண்டிய மத குருமார்கள் சட்டத்திற்கு முரணான ஆன்மீகத்துக்கும் அகிம்சைக்கும் எதிரான அணுகுமுறைகளை பின்பற்ற தலைப்படுகிறமை இலங்கைத் தீவின் துயரமே. விஹாரமகாதேவி பூங்காவில் நிகழும் தொடர்ச்சியான போராட்டம் நீதித்துறையாலும் காவல்துறையாலும் சட்டத்திற்கு முரணானதென்ற போதும் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்துவருவதோடு தமக்கு சார்ர்பானவர்களது நலன்களை பேணுகின்ற விதத்தில் சவால்விடும் செயல்களில் ஈடபாடுகாட்ட பிக்குகள் முனைகின்றனர். பௌத்த மதத்தின் அடிப்படை நியதிகளை நிராகரிக்கும் செயல்களை முதன்மைப்படுத்தும் தேரர்கள் இலங்கை தீவின் அரசியலை-சமூக-கலாச்சார இருப்பை பௌத்த தேரர்களின் விருப்புக்குட்படுத்தப்பட்ட ஒன்றாக மாற்றமுனைகின்றனர். 30 ஆண்டு கால போரில் அவர்களது இலக்கும் நோக்கமும் தமிழ் மக்களையும் தமிழ் மக்களது கோரிக்கைகளையும் நிராகரிக்கின்ற போர்வையில் அவர்களை அழித்து ஒழிப்பதற்கான செய்முறை ஒன்றை முதன்மைப்படுத்தி இருந்தனர். இலங்கையின் பௌத்தமத வரலாறு முழுவதும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகவும் இஸ்லாமியமதத்திற்கு எதிராகவும் தமிழினத்துக்கு எதிராகவும் தொடர்ச்சியாக எதிர்ப்பு போராட்டங்களை நிகழ்த்திய பௌத்த தேரர்களின் வரலாறாகவே உள்ளது. மீளவும் ஆட்சிக்கு எதிராக போராடுபவராக மாறியுள்ளனர்.

பிக்குகளின் போராட்டம் பௌத்தமதத்தின்; அடிப்படைக் கொள்கைகளை; நிராகரிக்கும் போக்கினை இலங்கைத் தீவின் மீண்டும் ஒருதடவை அடையாளப்படுத்தியுள்ளது. இது எஞ்சியிருக்கும் பௌத்த மதத்தின் மீதான நம்பிக்கையை பலவீனப்படுத்துவதாகவே தெரிகின்றது. இது ஒரு ஆதிக்க மதத்தின் அடையாளமாக தொடருகிறது. இதன் துயரங்களை இலங்கை தீவில் உள்ள மக்கள் அனுபவிக்கின்ற ஒரு சூழலுக்குள் ஜே.வி.பியினருடைய ஆட்சி அகப்பட்டு இருக்கிறது. பில்லி சூனியத்தை; நிராகரிக்கும் ஆட்சியாளர்கள் பிரித் ஒதுவதையும் நீர் தெளிப்;பதையும் நூல்கட்டுவதையும் எண்ணை தேய்த்து வழிபாடு செய்வதையும் ஆட்சியின் மரபாக கடந்த காலங்களில் பின்பற்றியவர்கள். அதன் நீட்சியே பில்லி சூனியம்மாகும். விளையாட்டிலும் தமிழ் மக்களுக்கு எதிரான போரிலும் அத்தகைய சடங்குகள் காணப்பட்டது போன்றே ஞானசார தேரரை விடுதலை செய்ய மறுக்கும் அரசாங்கத்தின் மீது பில்லி சூனியம் விடுதல் நிகழ்கிறது. ஜே.வி.பி. இடதுசாரி மரபை தனக்குள் வரைந்து கொண்டாலும் அவ்வப்போது பௌத்த மதத்தின் மரபுக்குள்ளால் இந்த நாட்டின் ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட அரசாங்கமாகவே அடையாளப்படுத்தி இருந்தவர்கள். இதுவே இவ் அரசாங்கம் எதிர்கொள்ளுகின்ற மிகப் பிரதான முரணியமாக மாறியிருக்கின்றது. இலங்கைத் தீவு பௌத்த மக்களின் தீவானது என்ற எண்ணத்தை கொண்டு ஜே.வி.பி. உம் ஒன்றிணைந்து பயணித்துள்ளது. அதன் விளைவு எதிர்கொள்ள முடியாத ஒரு சூழலுக்குள் சட்டத்தின் மீதான ஒழுங்கையும் பௌத்த மதத்தின் மீதான நம்பிக்கையையும் சம தூரத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர் இதன் விளைவு ஏனைய தேசிய இனங்கள் மீது விரோதத்தை கட்டவிழ்த்துவிடாது செயல்படுமா என்ற அச்சம் பிரதானமானது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினக்குரல்)