November 22, 2026
அரசியல் கட்டுரைகள்

ஆசிய-பசுபிக் பொருளாதார மகாநாடும் அமெரிக்க-சீன-ரஷ்சிய தலைவர்களின் சந்திப்பும்

சீனாவின் வழம்பொருந்திய ஷன்சென் (Shenzhen) நவீன நகரத்தில் உலக தலைவர்களின் ஆசிய-பசுபிக் (APEC-2026) பொருளாதார மாநாடு நிகழ்ந்துள்ளது (18-19.11.2026). ஆசிய- பசுபிக் பிராந்திய நாடுகளின் பொருளாதார ஒத்துழைபை அதிகரிப்பது அதற்கான வாய்ப்புகளை முதன்மைப்படுத்துவதாக மகாநாடு காணப்பட்டது. அந்தவகையில் மூன்று வல்லரசுகளின் தலைவர்களது சந்திப்பானது ஆசிய-பசுபிக் உச்சி மாநாட்டை உலகம் ஈர்க்க வைத்துள்ளது. உலக வல்லரசுகளான ரஷ்சியா, அமெரிக்கா, சீன ஆகிய நாடுகளின் அரசியல் தலைவர்களின்(Great Leaders Meet) ஒரே மேடையில் சந்தித்த வரலாற்று நிகழ்வு ஆசிய-பசுபிக் பொருளாதாரம் மகாநாட்டை பேசு பொருளாக மாற்றியுள்ளது. மூன்று தலைவர்களும் சந்திப்பு பிரதானமாக உலக அமைதி, பொருளாதார ஒத்துழைப்பு, அணுவாயுத அரசியல், உலகளாவிய உணவச் சங்கிலி, எரிபொருள் பரிமாற்றம் என்பன அதிகம் வேண்டியிருந்தது. இக் கட்டுரையும் வல்லரசு நாட்டுத் தலைவர்களது சந்திப்பின் முக்கியத்துவத்தையும் விளைவுகளையும் தேடுவதற்கு முயலுகிறது.

சீனாவின் நகரமானது ஷன்சென் உலக நாடுகளால் வியந்து பார்க்கப்படும் விஞ்ஞான தொழில்நுட்பம் திறன்களையும் நவீன தொழில் நுட்பத்தின் மையமாகவும் உள்ளது. இச் சந்திப்பானது ஒவ்வொரு தலைவர்களது உடல் மொழி இலக்கு மற்றும் மூலோபாய ரீதியான ஒத்துழைப்பு என்பன அதிகம் வெளிப்படுத்தப்பட்டதாக அமைந்திருந்தது. அணு ஆயுத அபாயம், அணு ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் நிலையான எரிசக்தி விநியோகத்தை என்பனவற்றை உறுதிப்படுத்தும் ஒரு கூட்டு அமைதிப் பிரகடனத்திற்கான வெளிப்படுத்தல்களைக் கொண்டிருந்தது. ஆசிய-பசுபிக் நாடுகளை உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பிராந்திய இணைப்புக்கு அழைப்பு விடுக்கும் முன்னெடுப்பை கொண்டிருந்ததோடு ஆசிய-பசுபிக் தலைவர்களது முடிபுகளையும் உச்சிமாநாடு வெளியிட்டது. அதே வேளையில், n~ன்சென் பிரகடனத்துடன் இணைந்து ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பை ஆதரிப்பதற்காக சீனா 20 மில்லியன் அமெ.டொலர்களை வழங்குவதாக அறிவித்தது. சீன ஜனாதிபதியின் இலக்கம் முழுவதும் உலகளாவிய வர்த்தகம் சார்ந்த சந்தை வாய்ப்புகளை அடைவதற்கான எண்ணங்களும் உரையாடல்களும் காணப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி வழமையான பாணியில் அமெரிக்காவின் சாதனைகளை நினைவு கொள்வதாகவே கடந்து சென்றது. ரஷ்சிய ஜனாதிபதி புட்டினைப் பொருத்தவரை இச் சந்திப்பு அமெரிக்க மேற்குலக நாடுகளின் தவறவிடப்பட்ட பொருளாதார வாய்ப்புகளையும் பெற்றோலிய ஏற்றுமதியை சந்தைக்குரிய நியமங்களை மீளமைப்பதற்கான வாய்ப்புக்களை முதன்மைப்படுத்தியதைக் காணமுடிந்தது. ஜின் பிங்கும் புட்டினும் ஓரணியின் நண்பர்கள் என்ற அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதி காணப்பட்டார். ஆனாலும் அவர் புட்டினை தனது நண்பனாக கூறுவதில் உடல் மொழியிலும் பேச்சுக்களாலும் அதிக ஈடுபாடு காட்டியிருந்தார். ஆனால் இவற்றுக்கு பின்னால் பலமான மூலோபாய வழிமுறை ஒன்று காணப்பட்டது. அது கவனத்தில்கொள்ளப்பட வேண்டியது.

முதலாவது மறைமுகமாக மோதிக் கொள்ளும் வல்லரசுகள் வர்த்தக சந்தை நெருக்கடிகளை தீர்த்துக் கொள்வதற்கு நேரடியாகவே நட்பினை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஈரான் போரில் அமெரிக்கா அடைந்த நெருக்கடி உள்நாட்டு பொருளாதாரத்தை பாதித்திருக்கின்றது. இதன் அடிப்படையில் ஜனாதிபதி ட்ரம்ப்ன் வரிக் கொள்கைகள் அதிர்ச்சிகரமான மாற்றங்களை அமெரிக்காவுக்குள் தந்துள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டு அமெரிக்கா நகர்கிறது. சீனாவுடனான சந்தையை வர்த்தக வாய்ப்புகளை ஆசிய-பசுபிக் மற்றும் உலக நாடுகளுடன் உறவை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குள் அமெரிக்காவின் பொருளாதார இராணுவ சமநிலை குழப்பம் தள்ளப்பட்டு இருக்கிறது. இதன் அரசியலை இராஜதந்திர ரீதியான அணுகுமுறை என்று விவாதிப்பதுடன் இலக்கை அடைவதற்கான மூலோபாய வழிமுறை என்று விதந்துரைப்பது அதிகம் முக்கியத்துவம் பெறக்கூடியது. மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து பலமான பொருளாதாரக் கட்டமைப்பை உலகத்திற்கு வழங்க முடியும் என்ற எதிர்பார்த்து ஒன்றும் இங்கு காணப்படவில்லை. மாறாக மூன்று நாடுகளும் தமக்கு இடையிலான வர்த்தக சந்தை வாய்ப்புகளை அடைந்து கொள்வதற்கான போட்டியில் களம் இறக்கப்பட்டிருப்பது என்பது எதார்த்தமான வடிவமாகத் தெரிகிறது. ரஷ்சியத் தலைவர் விளாடிமிர் புட்டின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருடன் நடத்திய முத்தரப்பு சந்திப்பை நேர்மறையான, ஆக்கப்பூர்வமான மற்றும் பயனுள்ளது என சீன அதிபர் ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது நிகழ்ந்த உரையாடல்கள் இலக்குகளை அடைவதற்கான பரிபாசையாகவே காணப்பட்டது. மீண்டும் ட்ரம்ப் ஈரானுடனான போரின் தோல்விகளை சமரசம் செய்யும் வார்த்தை பிரயோகத்தை முன் வைத்ததோடு போரின் பின்வாங்கலை நாகரீகமாகவும் இராஜதந்திர சொல்லாடல் மூலமும் கடந்து செல்ல முயன்றார் என்பதை மகாநாட்டின் நிகழ்வுகள் வெளிக்காட்டி இருந்தன. ஆனால் ரஷ்சிய ஜனாதிபதி புட்டின் ரஷ்சியாவின் பாதுகாப்பு சார்ந்த மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் தெளிவாக காணப்பட்டது. குறிப்பாக சீனா-அமெரிக்கா-ரஷ்சியா இடையேயான அமைதிப் பிரகடனத்தின் கீழ், நிலையான எரிசக்தி விநியோகத்தின் முக்கியத்துவத்தை மூன்று நாடுகளும் மீண்டும் வலியுறுத்தின. அணுசக்தி அபாயங்களைக் குறைப்பது மற்றும் அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது குறித்து மூன்று வல்லரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அந்தப் பிரகடனம் உறுதியளிக்கிறது. மூன்று நாடுகளுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்த சீன ஜனாதிபதி உணர்ச்சிப்பூர்வமான விடயங்களில் வல்லரசுகள் ஒன்றின் வரம்புகளை மற்றொன்று பாதிக்கக் கூடாது என்றும் கூறினார். அணு ஆயுதங்கள் முழுமையாகத் தடை செய்யப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்று கூறி அணுசக்தி இல்லாத உலகத்திற்கும் அவர் அழைப்பு விடுத்தார். தனது தொடக்க உரையில் ட்ரம்ப், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ஐஊஊ) ஒரு சட்டவிரோத உலகமய அமைப்பு என்று கடுமையாகத் தாக்கினார். உக்ரைன் மீதான ரஷ்சியாவின் போர் முத்தரப்புக் கூட்டத்தின் மையத் தலைப்பு அல்ல என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

மூன்றாவது சீன ஜனாதிபதியின் இலக்கு முழுவதும் சீனாவின் முதல் தரத்தை அடையாளப்படுத்துவதோடு ஒத்துழைப்பையும் பரஸ்பரம் நெருக்கமான வர்த்தக பரிமாற்றங்களையும் அதிகப்படுத்துவதற்கு இந்த மாநாட்டை பிரயோகப்படுத்தியிருந்தார் ஆசிய பசுபிக் நாடுகளுக்கு இடையே முழுமையான ஒத்துழைப்பு ஒன்றை ஏற்படுத்துவதில் கரிசனை கொண்டிருந்த சீன ஜனாதிபதி வர்த்தக சந்தை செய்முறைகளுக்கு ஊடாக உலகத்தை எதிர்கொள்ளுகின்ற உத்திகளை வெளிப்படுத்தியிருந்தார். உலக அமைதியைப் பாதுகாப்பதில் மூன்று நாடுகளும் பொதுவான கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் சீன ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.,

நான்காவது மூன்று தலைவர்களது உச்சி மாநாடு உலக நாடுகளுக்கு இடையே நம்பிக்கை ஏற்படுத்த திட்டமிடுவதாக கருதுகின்றனர் ஆனால் உலக அமைதியை பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் சந்திப்பின் இலக்கு வரையறுக்கப்படவில்லை என பென்டகனும்; இன்னொரு வாதத்தையும் முதன்மைப்படுத்துகிற போது அதனை தீர்மானிக்கும் பலம் சீன ஜனாதிபதியின் ஷன்சென் பிரகடனத்திலேயே காணப்பட்டதை உணர முடிந்தது. இதனால் மாநாடு சீனாவின் விருப்புக்குட்பட்ட ஒன்றாக வடிவமைக்கப்பட்டதோடு தவிர்க்க முடியாத அமெரிக்கா கட்டுப்பட வேண்டிய நிலைமையும் வெளிப்படுத்தியது. இதே நேரம் அமெரிக்காவின் நேட்டோ பிரதிநிதிகள் பிரஸ்லஸ்ல் உக்ரையின் போர் தொடர்பிலான உரையாடல்களை ஐரோப்பியத் நேட்டோ தலைவர்களுடன் மேற்கொண்டுள்ளனர். இது ஒரு குழப்பகரமானது என்பதைவிட அமெரிக்காவின் உத்தியாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
எனவே ஆசிய-பசுபிக் மகாநாடு மூன்று நாடுகளின் தலைவர்களின் சந்திப்பினால் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. இதனை ஒரு இராஜதந்திர உரையாடல் என்பதை விட தந்திரோபாய ரீதியிலும் மூலோபாய ரீதியிலும் ஒரு வெற்றிகரமான சந்திப்பாக மதிப்பிட வேண்டி உள்ளது. இது பொருளாதாரம் சார்ந்து வல்லரசு நாடுகளுக்கிடையில் நிலவிய போட்டிகளை களையத் தவறினாலும் வர்த்தக மற்றும் சந்தை செய்முறைகளால் நெருக்கடிக்கு தீர்வுகாண முயன்றதாகவே தெரிகிறது. இது உலகத்தின் எதிர்பார்க்கையை மாற்றங்களுக்கு பதிலாக வல்லரசுகளின் ஏகாதிபத்திய நலன்களில்உள்ள நெருக்கடியை சரிசெய்ய உதவுவதாகவே தெரிகிறது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:தினகரன்)