அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழரின் ஐக்கியத்திற்கான கோரிக்கையும் தமிழரசின் பிரிவினைக்கான முடிவும்

ஈழத்தமிழரின் அரசியல் இருப்பு கேள்விக்கிடமாகிறதா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுகிறது. தென் இலங்கையின் பேச்சுக்கான அழைப்பு வழமை போன்று நீண்டு கொண்டு செல்வது மட்டுமன்றி தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ளும் தீர்வை வழங்கப் போவதாக ஜனாதிபதி மீண்டும் தெரிவித்துள்ளார். இரு தரப்பினையும் திருப்திப்படுத்தும் தீர்வை பற்றிய உச்சரிப்பே இதிலுள்ள பிரதான கேள்வியாக உள்ளது. அதே நேரம் யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழாவை நிகழ்த்த ஜனாதிபதி வருகை தரப்போவதாகவும் செய்திகள் உண்டு. பேச்சுவார்த்தையும் தமிழரை நோக்கியுள்ளது போல் இந்தியாவை நோக்கிய விமானப் போக்குவரத்தும் தமிழர்களை மையப்படுத்தியுள்ளது. அவ்வாறே பொங்கல் விழாவும் கொண்டாடப்படவுள்ளது. ஏறக்குறை அனைத்து விடயங்களையும் தமிழரை முதன்மையப்படுத்துவதாகவே வடிவமைக்கப்படுகிறது. எந்த அரசியல் தீர்வும் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் தீர்வு வழங்கப் போவதாக கூறிக் கொண்டு காலத்தை கடத்துவதற்கு ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகள் சிங்கள அரசியல் வாதிகளுக்கு தேவைப்பட்டுள்ளது. இதனை தமிழ் அரசியல்வாதிகளும் எழுபத்தைந்து வருடங்களாக கேட்டுவருகிறார்கள் என்பதே முக்கியமானதாகும். இக்கட்டுரையும் தமிழ் அரசியல் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் தமிழ் மக்களது கோரிக்கையும் தமிழ் அரசியல் கட்சிகளின் தனித்து செயல்படுவது பற்றிய முடிபுகளும் பற்றிய தேடலாக அமையவுள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஓரணியில் திரளுமாறு கடந்த பலவாரங்களாக வடக்கு கிழக்கு தழுவிய விதத்தில் போராடி வருகின்றன. தமிழ் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மைப் படுத்திக்கொண்டு அப் போராட்டம் நிகழ்ந்து வருகிறது. இதனை பல ஆண்டுகளாக சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் பின்னர் அவர்களுடன் இணைந்த விதத்தில் புத்திஜீவிகளும் வலியுறுத்திய போதும் அதற்கான எத்தகைய நகர்வும் சாத்தியமாகவில்லை. மாறாக கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் கட்சிகள் என்ற வரையறையை கடந்து தனியன்களின் வடிவமாக கட்சிகள் உருவாகத் தொடங்கியது. தனியன்களதும் தனியன்களின் சொத்துக்களை பாதுகாக்கும் நிறுவனங்களாக கட்சிகள் தமிழர் மத்தியில் பெருகத் தொடங்கியது. இதனைத் தடுத்து நிறுத்தவும் தமிழ் அரசியல் கட்சிகளை தமிழர் நலன் நோக்கி திசைதிருப்பவும் பொதுமக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசிய உணர்வுகளைக் கொண்ட அரசியல் கட்சிகளை ஒன்றிணையுமாறு தமிழ் மகன் ஒருவன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அத்தகைய உண்ணா நோன்பின் முக்கியத்துவத்தை தமிழர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அனுபவித்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். அது மட்டுமன்றி அத்தகைய கோரிக்கை தமிழர் இழப்பதற்கு எதுவுமற்ற நிலையிலேயே ஏற்பட்டுள்ள விண்ணப்பமாக அமைந்துள்ளது. தமிழர் நலன் பாதுகாக்கவும் தென் இலங்கையை எதிர் கொள்ளவும் உலகத்தை கையாளவும் தமிழரிடையே ஐக்கியம் அவசியம் என்பதை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு;ள்ள இளைஞன் உணர்ந்துள்ளதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

இத்தகைய இரு நிகழ்வுகளைக் கடந்து பொதுவாகவே தமிழ் மக்களிடம் அரசியல் கட்சிகள் பிரிந்து செல்வதும் தமிழர் நலனிலிருந்து அந்நியப்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது என்பதை உணர்த்துவதாகவே தெரிகிறது. கட்சி நலன்களையும் தேர்தல் அரசியலையும் கொண்டு செயல்படும் தமிழ் அரசியல் கட்சிகள் தாங்கிக் கொள்ளும் தேசியம் போலியானதாகவே தெரிகிறது. காரணம் தேசியம் என்பது ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் கொண்டது. இன, மத, மொழி, சாதி,பிரதேச வேறுபாடுகளைக்கடந்து ஒன்றாகவும் ஐக்கியமாகவும் செயல்படுவதே தேசியமாகும். அதற்குள் ஜனநாயகமும், உற்பத்தி உறவும், சந்தை தொடர்பும், பண்பாட்டு உறவும், கலாசாரமும் பின்னிப் பிணைந்திருப்பதே தேசியத்தின் அடையாளங்களாகும். தேசியவாதம் மனித சமூகத்தின் நவீன கண்டுபிடிப்பாகும். ஐரோப்பியரின் பலமும் ஐக்கியமும் செளிப்பும் புத்தெளிச்சியும் தேசியவாதம் ஏற்படுத்திய விளைவுகளாகும். உலகம் தேசியவாதத்தால் தமது ஒன்றிணைப்பையும் அபிவிருத்தியையும் இராணுவ நகர்வுகளையும் கட்டமைக்கின்றது. ஈழத்தமிழர்கள் அத்தகைய அனைத்தையும் கைவிட்டுவிட்டு தேசிய வாதத்தின் பெயரால் மத மொழி மற்றும் சாதிப் பிரிவினை ஊக்குவித்துவருகின்றனர்.

ஆனால் ஈழத்தமிழரின் அரசியலில் தேசியம் எனபது உண்மையான புரிதலை தராதது மட்டுமன்றி அதன் பெயரால் கட்டமைக்கப்பட்ட போராட்டங்கள் அனைத்தும் கருநிலைத் தேசியவாதத்தை மீள மீள முதன்மைப்படுத்துவதாக அமைந்துவருகிறது. அரசியல் கட்சிகளும் அதற்கு தலைமை ஏற்பவர்களும் தேசியத்தின் பெயரால் உருவாக்கியுள்ள போலிகளே ஈழத்தமிழரிடம் அதிகமுண்டு. தேசியத்தை கொள்கை என்று உரைக்க முயலுகிறார்களே அன்றி வாழ்வியலாகக் கொள்ளத் தவறுகிறார்கள். கொள்கையையும் நடைமுறைக்கு உதவாததாக வைத்துள்ளார்கள். நடைமுறைக்கு உதவாத கொள்கையால் ஈழத்தமிழ் சமூகத்தின் அரசியல் சாம்பலாகியுள்ளது. இதனொரு கட்டமே தமிழரசுக் கட்சியின் தனித்து செயல்படுத்தல் என்ற முடிபு அமைந்துள்ளது. மீளவும் தமிழ் தேசியத்தின் பெயரால் தமிழரது அரசியல் வடிவம் உடைந்துள்ளது. அதாவது ஐக்கியம் நெருக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் உருவாக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரின் பாரம்பரியக் கட்சியான தமிழரசுக் கட்சி வெளியேறுகிறதாக அறிவித்துள்ளது. அது ஏற்கனவே அதிக நெருக்கடிக்குள்ளாலேயே பயணித்தது. தற்போது முற்றாக தகர்த்துள்ளது. ஏறக்குறைய பாராளுமன்ற அரசியலில் 22 எனும் வலிமையான நிலையிலிருந்து 11 ஆக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு விசப்பரீச்சையை எதிர் கொண்டுள்ளது. இவை எதுவும் முக்கியமானதாக கொள்ள வேண்டியதே தேவையில்லை எனக் கொளளலாம் என வைத்துக் கொண்டாலும் தமிழரின் அரசியல் இருப்பு என்பதே பிரதான கேள்வியாகும். தமிழரசுக் கட்சி தமிழரது பாரம்பரியக் கட்சி என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. அதற்கு வடக்கு கிழக்கு பலம் உண்டு என்பதிலும் தனித்துவம் உண்டு. தமிழரது இருப்புக்கான தேசிய வடிவத்தையும் தேசிய இனம் என்ற அடையாளத்தையும் தந்த கட்சி என்ற தனித்துவமும் உடையதென்பதையும் நிராகரித்துவிட முடியாது. வடக்கு கிழக்கு முழுவதும் கிளைகளை கொண்டதும் ஏனைய தேசியங்களை ஆரம்பத்தில் அரவணைத்த கட்சி என்ற பெருமையும் கொண்டது. ஆயுதப் போராட்டத்திழற்கு விததிட்ட கட்சியாகவும் தமிழரசு விளங்கியது.

ஆனால் தற்போது பிற தேசியங்களுக்கு மட்டுமே சேவையாற்றும் கட்சியாகவும் தமிழர் மத்தியில் முரண்பாடுகளை ஊக்குவிக்கும் கட்சியாகவும் மாறிவிட்டதாக விமர்சிக்கும் அளவுக்கு சென்றுள்ள கட்சியாகியுள்ளது. அதாவது எதிரிக்கு சேவையாற்றும் கட்சியாக விளங்குகிறது. தமிழரின் நலனைவிட எதிரியின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி என்ற விமர்சனத்தை கொண்டுள்ளது. இதனால் அது அதிக தேர்தல் அரசியல் இழப்புக்களையும் கட்சி அரசியல் பலவீனத்தையும் எதிர் கொண்டுள்ளது. அது மட்டுமன்றி தமிழர் அரசியலை சீரழிக்கும் கட்சி என்ற விமர்சனத்தையும் பெற்றுள்ளது. அதற்கு பின்னால் கட்சி அரசியல் நலனைவிட தனிமனித நலனே காரணம் என்ற வாதங்களை புறந்தள்ளிவிடலாகாது. இராஜதந்திரமற்ற தந்திரோபாயமோ மூலேபாயமோ இல்லாத அரசியல் கட்சியாக தமிழரசு விளங்குவதாகவும் தமிழரது துயரத்தை கருத்தில் கொள்ளாது தனியே கட்சியையும் கட்சியின் முதன்மையாளர்களையும் வயதானவர்களையும் மட்டுமே கருத்தில் கொள்ளும் கட்சி என்ற பதிவும் காணப்படுகிறது.

தென் இலங்கை ஆட்சி பொருளாதாரமாக குழம்பியுள்ள போது வடக்கு கிழக்கு உறுதியானதாக இருக்கக் கூடாது என்பதில் கவனம் கொள்கிறார்கள் போன்றே தெரிகிறது. தற்போது வடக்கு கிழக்கும் அரசியல் கட்சி வடிவத்தால் குழப்பப்பட்டுள்ளது. இது வடக்கு-தென்கு அரசியலின் சமநிலையைத் தோற்றுவித்துள்ளது. அதாவது இரு தரப்புமே குழம்பியுள்ளதால் எத்தகைய முடிபையும் உறுதியானதாக எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. அல்லது தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை தென் இலங்கையின் விருப்பத்திற்கு ஏற்ப நகர்த்தலாம் என்பதாகும். தென் இலங்கை பொருளாதார வீழ்ச்சியை சந்திந்துள்ள போது வடக்கு உறுதியாக இருப்பது தென் இலங்கைக்கு ஆபத்தானது என்ற முடிபின் பிரகாரமே நகர்வுகள் அரங்கேற்றப்படுகிறது.

இதே நேரம் தமிழர் மத்தியில் புதிய கட்சிகளை உள்ளடக்கி கூட்டமைப்பை பலப்படுத்தும் உத்தியுடன் தமிழரு அல்லாத கட்சிகள் தயாராகிவருவதாக தகவல்கள் உண்டு. அத்தகைய புதிய கூட்டமைப்பு கடந்த காலத்தில் விடப்பட்ட தவறுகளை கவனத்தில் கொள்வதுடன் முன்னய கூட்டமைப்பின் தலைமையும் தளபதியும் போல் மீள உருவாக்கங்கள் நிகழாது பார்த்துக் கொள்வதுடன் வரைபுகளையும் அதன் ஆமுலாக்கங்களும் ஜனநாயக வழுமியமும் அத்தகைய கூட்டுக்குள் கட்டியெழுப்பப்பட வேண்டும். அவ்வாறு அன்றி செயல்படுமாயின் மீளவும் தமிழரசுடனான அனுபவமும் விளைவுமே தமிழ் மக்களுக்கானதாக மாறும். கட்சிகளும் கூட்டுக்களும் தமிழ் மக்களுக்கானதே அன்றி கட்சியை ஸ்தாபிக்கும் நபருக்கோ அல்லது அத்தகைய குடும்பத்திற்கோ அதன் சொத்துக்களை பாதுகாப்பதற்கோ அல்லது அத்தகைய கூட்டத்துக்கோ உரியதல்ல. ஏறக்குறை தமிழரது அரசியல் கட்சிகள் அனைத்தும் அவ்வாறானதாகவே உள்ளது. தமிழர்களது தேசிய கட்சிகள் மட்டுமல்ல இடது பாரம்பரியக் கட்சிகளும் அவ்வாறதோ. இத்தகைய மனோ நிலை மாற்றப்பட வேண்டும். கூட்டின் பலம் ஜனநாயக விழுமியத்தில் தங்கியுள்ளது. கூட்டுகளே கட்சி அரசியலின் பலம். நடைமுறைக்கும் யாதார்த்தத்திற்கும் வளைந்து கொடுக்கக் கூடிய கொள்கையுடன் செயல்படுதல் வேண்டும். கூட்டின் தலைமை கால அடிப்படையில் மாற்றத்திற்கு உள்ளாவதுடன் விட்டுக் கொடுப்பும் புரிதலும் சமமான ஒத்துழைப்பும் கொண்டதாக அமைய வேண்டும். தாம்சார்ந்த மக்களது சேவகர்களாக இருத்தல் அவசியமானது. அல்லாதுவிட்டால் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்று அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புப் போன்று இன்னோர் அணியாகவே புதிய கூட்டமைப்பு அமையும். அதனால் தமிழர்கள் கடந்த நூறாண்டு தோல்வியை இன்னோர் அரை நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல உதவுவதாக அமையுமே அன்றி எந்த விளைவும் ஏற்படாது.

எனவே தமிழ் மக்கள் ஐக்கியத்தை வலியுறுத்த முயலும் போது தமிழ் கட்சிகள் ஐக்கியத்தை எப்படி தகர்ப்தென்று உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். தென் இலங்கை போன்று வடக்கு கிழக்கிலும் பாரம்பரிய மரபுவாதக் கட்சிகளுக்கு முடிபு நெருங்குவதாகவே தெரிகிறது. புதிய அணிகளதும் புதிய கூட்டுக்களதும் தோற்றமானது பழைய தலைகளையும் கொள்கைகளையும் கொண்டதாகவே உள்ளது. இவர்கள் எல்லோரும் சேர்ந்தே பழைய கூட்டமைப்பை நகர்த்தியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும். புதிய தலைமுறைக்கும் புதிய கொள்கைகளுக்கும் இடங் கொடுக்கும் மரபொன்று தமிழரிடம் ஏற்பட வேண்டும். அதனை சிவில் அமைப்புக்களும் புலமையாளர்களும் ஊடகங்களும் முதன்மைப்படுத்த வேண்டும். நவீன தேசியவாத சிந்தனை தமிழ் தேசிய அரசியலுக்குள் செழுமையை ஏற்படுத்த வேண்டும்.அதனை நோக்கி தமிழ் சமூகம் செயல்பட வேண்டும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)