March 16, 2026
அரசியல் கட்டுரைகள்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கை வருகையும் தமிழ் தரப்பின் பலவீனமும்?

இந்தியாவின் வெளியுறவு கொள்கை 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிக மாற்றங்களை கொண்டு இயங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட பிராந்திய நாடுகளின் தேசிய இனங்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை பின்பற்றுவதன் மூலம் பிராந்திய அரசுகளை கையாளும் நிலைப்பாட்டில் இருந்து பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சி காலப்பகுதி மாற்றியுள்ளது. அதாவது பிராந்திய நாடுகளின் ஆட்சியிலுள்ள அரசாங்கங்களோடு இணைந்து பணியாற்றுகின்ற இராஜதந்திர ரீதியான ஒத்துழைப்பை முதன்மைப்படுத்துகின்ற கொள்கையாக அது மாற்றிக் கொண்டது. இது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை (Neighbourhood First Policy) என்ற கொள்கை மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் இந்து சமுத்திர நோக்கியும் தென்னாசியப் பிராந்திய நாடுகள் நோக்கியதுமான கொள்கைக்குள் இத்தகைய அணுகுமுறையை இந்தியா முன்னுரிமை என்பதனூடாக நகர்த்தியுள்ளது. இக்கட்டுரையும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான எட்டாவது விஜயம் ஏற்படுத்தியுள்ள அரசியல் விளைவுகளை தேட முயலுகிறது.

இந்திய வெளியுற அமைச்சர் ஜெயசங்கர் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவும் விதத்தில் 450 மில்லியன் அமெரிக்க டாலர் மீட்பு பணிக்கான உதவியை அறிவிக்கும் நோக்குடன் வருகை(22.12.2025) தந்திருந்தார். பிரதமர் நரேந்திரமோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தார். ஜெயசங்கர் ஆளும் கட்சியையும் தமிழ் கட்சிகளையும் எதிர்கட்சி தலைவரையும் மலையக தமிழ் கட்சித் தலைவர்களையும் சந்தித்து உரையாடியிருந்தார். அவரது விஜயத்தின் போது தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை அவதானித்துச் சென்றுள்ளதனை காணமுடிந்தது. குறுகிய காலப்பகுதி விஜயமாக இருந்தாலும் அது ஏற்படுத்தியிருக்கக்கூடிய விளைவுகள் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் காணப்படும் புதிய விடயங்களை அடையாளப்படுத்தி சென்றுள்ளது. அதனை விரிவாக விளங்குவது அவசியமாகும்.

முதலாவது இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை வருகை டித்வா புயலின் அழிவுகளை மீளமைப்பதற்கான நிதி உதவியை அறிவிக்கும் விதத்திலும், இந்தியா இலங்கையின் ஒத்துழைப்பு வழங்கும் முதன்மை நாடு என்பதையும் அவரது உரை வெளிப்படுத்தியிருந்தது. குறிப்பாக ஒப்ரேஷன் சகார் பந்து (Operation Sagar Bandhu) அறிவிக்கப்பட்டதிலிருந்து (நவம்பர்,28,2025) இந்தியாவின் பங்களிப்பு மீட்புப் பணிக்கு பாரிய ஒத்துழைப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் மூலமாக இலங்கை தீவின் ஆட்சியாளர்களினதும் மக்களின் நம்பிக்கைகளையும் ஈர்ப்பதாக அவரது உரை அமைந்திருந்தது. புயலின் பாதிப்பை உடனடியாக எதிர்கொள்ளுகின்ற விதத்தில் இரு போர்க்கப்பல்களை நகர்த்தி கடல் படையும் இராணுவத்தையும் ஈடுபடுத்தி பாரிய அழிவுகளில் இருந்தும் நெருக்கடியான சூழலில் இருந்தும் மக்களை மீட்டெடுப்பதில் இந்தியாவின் கரிசனை அதிகமாக இருந்துள்ளது. மீள் கட்டுமானம் மற்றும் நெருக்கடிகால உதவி உடனடி தேவைகளை நிறைவு செய்கின்ற நடவடிக்கைகளில் இந்தியா முழுமையாக இலங்கைக்கு உதவியது. பொருளாதார நெருக்கடியிலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலிலும் உதவிய இந்தியா பேரிடரின் போதும் பாரிய பங்களிப்பை வழங்கி இலங்கையின் உறுதித்தன்மையை பாதுகாத்து வருகிறது.

இரண்டாவது இந்தியாவின் அண்டை நாடுகள் முன்னுரிமை என்ற கொள்கை பிராந்திய நாடுகள் மீது வெளி வல்லரசுகளின் தலையீட்டை தடுக்கின்ற விதத்தில் முதன்மைப்படுத்தப்படுவதாக அமைந்துள்ளது. இயற்கை அனர்த்தத்தினை பிரதிபலிப்பாக கொண்டு அமெரிக்கா சீனா போன்ற நாடுகளில் பிரசன்னம் இலங்கை தீவுக்குள் அதிகமாக காணப்பட்டது. அத்தகைய உதவி வழங்கும் ஒத்துழைப்பு செய்முறை என்பது வழமையான ஒன்றாகவே நோக்கப்படுகிறது. ஆனால் அதில் அரசியல் ஈடுபாடும் இராஜதந்திர ரீதியான பிணைப்பு காணப்படுகின்றது என்பது தவிர்க்க முடியாத அம்சமாகும். அத்தகைய எண்ணத்தை கையாளுகின்ற விதத்திலும் இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயம் அமைந்திருப்பதாக தெரிகிறது. இந்திய வெளியுறவு அமைச்சரின் நேரடி இலங்கை விஜயம் வெளி வல்லரசுகளுக்கு உணர்த்தி இருக்கக் கூடியதாகவே தெரிகிறது. பாரிய உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கிய இந்தியா அதனை நேரடியாக தனது விசேட தூதுவரூடாக நகர்த்தி இருப்பது என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைகளின் நகர்வுகளையும் அமெரிக்க விமானங்களது தரையிறக்கங்களை சமநிலைப்படுத்துகின்ற ஒரு நடவடிக்கையாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது. அவ்வாறு அமெரிக்க விமானங்களின் தரையிறக்கம் ஈழத்தமிழர் மத்தியில் அதிக முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது. அத்தகைய உரையாடலுக்கு பதிலளிப்பதாகவும் ஜெயசங்கரது விஜயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் விமான நிலையங்களில் அமெரிக்க விமானங்களது தரையிறக்கம் அதிகமான அரசியல் இராஜதந்திர உரையாடல்களை இந்திய தரப்புகளிடமும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அனைத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதத்திலும், கையாளுகின்ற விதத்திலும் இந்திய வெளியுற அமைச்சருடைய இலங்கை விஜயம் அமைந்திருக்கின்றது.

மூன்றாவது தமிழ் தரப்புகளை சந்திப்பது என்பது இந்திய அணுகுமுறையில் மரபாந்த அங்கமாகவே காணப்படுகிறது. அத்தகைய சந்திப்பிலும் இரு அணிகளாக உரையாடல்களும் வெளிப்பாடுகளும் அமைந்திருந்தன. குறிப்பாக தமிழரசு கட்சியை ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வு பற்றியும் மாகாணசபை பொறிமுறை சார்ந்து உரையாடுகின்ற போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி சமஸ்டி பற்றிய உரையாடலை முன்மொழிந்துள்ளது. இலங்கை தீவு ஒரு பேரிடரை சந்தித்த சூழலில் இந்திய வெளிவிவகார அமைச்சர் வருகையின் போது உரையாடப்பட்ட தமிழர் பிரச்சனை சார்ந்து வெளிப்படுத்தல்கள் மோசமானதாக அமைந்திருந்தது. மலையகத் தமிழ் மக்கள் வடக்கு கிழக்குக்கு குடியமர அழைத்த அரசியல் தலைமைகள் கூட அது பற்றிய எந்த உரையாடலையும் இந்திய வெளியுறவு அமைச்சர் முன்னிலையில் வெளிப்படுத்தவில்லை. ஒரு தேசிய இனமாக அதன் அரசியல் கட்சியின் தலைமைகளின் போக்குகள் அமைந்திருக்கவில்லை. இது ஒரு மரபார்ந்த சந்திப்பாக காணப்பட்டாலும் பதில்கள் இன்றிய கோரிக்கைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. கோரிக்கைகளை செவிசாய்த்ததாகவே இந்திய வெளியுறவு அமைச்சரின் அணுகுமுறை காணப்பட்டது என்பது புதிய விடயமாகவே தென்படுகிறது. அதற்கான அடிப்படை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழக விஜயம் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனாலும் இவ்வகையான சந்திப்புகளில் தெளிவான உத்திகளோடு நகர வேண்டிய தமிழ் தரப்பு மரபார்ந்த சந்திப்பாகவே அனைத்தையும் முன்னெடுத்துவருகிறது. இந்திய வெளியுறவு சார்ந்து இராஜதந்திர மட்டத்திலான உரையாடலுக்கான வடிவங்களை வெளிப்படுத்தாதது அதன் பலவீனமாகவே அவதானிக்கப்படுகிறது.

நான்காவது தமிழ் மக்களின் இனப்பிரசினைக்குரிய தீர்வு என்பது தென்னிலங்கை அரசாங்கத்திடம் இருக்கின்ற அணுகுமுறைகளை முன்னிறுத்திக் கொண்டு இந்திய வெளியுறவு அமைச்சுடன் உரையாடல்களை முன்வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்பட்டது. வடக்கு-கிழக்கு மீது நிகழ்கின்ற கட்டுப்பாடுகளையும் ஆக்கிரமிப்புகளையும் ஆதாரங்களோடு பட்டியல்படுத்த வேண்டிய சூழலை தமிழ் தரப்பு தவறவிட்டுள்ளது. இந்திய இலங்கை அரசாங்கங்களின் ஒத்துழைப்பினால் ஏற்படக் கூடிய விளைவுகளைப் பற்றிய உரையாடல்கள் தூர நோக்குடன் வெளிப்படுத்தப்படவில்லை. கடந்தகாலத்தை உச்சரிப்பதன் மூலம் சமகால பகுதியை கடந்து செல்ல முடியாது. வடக்கு கிழக்கு ஏற்பட்டிருக்கும் பாரிய மீனவப் பிரச்சனையோ ஆக்கிரமிப்புகளோ பொருளாதார ரீதியான பலவீனங்களோ போர்க்காலத்து துயரங்களோ சரி செய்யப்படாத ஒரு நீண்ட இடைவெளிக்குள்ளால் இந்தியாவுடன் சந்திப்பை கையாள தமிழ் தரப்பு தவறியுள்ளது.

எனவே இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரின் வருகை இலங்கை அரசாங்கத்தின் பேரிடர் மீட்பின் பங்களிப்பிற்கான வெற்றிகரமான நகர்வாக அமைந்திருந்தது. உலக நாடுகளின் ஒத்துழைபோடு ஒப்பிடுகின்ற போது நெருக்கடி கால சூழலில் பயணிக்கும் இலங்கை இந்தியாவுக்கான முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளதை கண்டு கொள்ள முடிகிறது. ஏனைய சக்திகளோடு கொண்டிருக்கின்ற இராஜாதந்திர உறவுகளை இந்திய அரசாங்கத்துடன் சமநிலைப்படுத்தாத போக்கினையும் அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்தது. தமிழர் தரப்பு முழுமையான உத்திகள் இன்றி முரண்பாடுகளை அதிகம் பிரதிபலித்துக் கொண்டு உரையாடல்களை காட்சிப்படுத்தி மரபார்ந்த சந்திப்பாக நிறைவேற்றியுள்ளன. இந்திய வெளியுறவு மாற்றங்களை கண்டறிய முடியாத சூழலுக்குள்ளே தமிழ் அரசியல் தலைமைகளின் போக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் தரப்பின் இயலாமையின் வெளிப்பாடாவே அமைந்துள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)