November 29, 2026
அரசியல் கட்டுரைகள்

நிறம் மாறும் ஜே.வி.பி.இன் கொள்கையும் ஆட்சி அதிகாரமும்?

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அலங்கரித்த அரசியல் கட்சிகள் அனைத்துமே தேர்தல் வெற்றிக்கு பின் தமது தோற்றத்தையும் கொள்கையையும் மாற்றிக் கொண்ட வரலாறு ஒன்றும் புதியதல்ல. அந்த வரிசையில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் இரண்டு தடவை ஆயுதப்போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் கைப்பற்ற முயன்று தோற்றது. இறுதியில் 2024 இல் ஜனநாயக ரீதியில் மூன்றாவது தடவை ஆட்சியமைத்துள்ளது. இலங்கை தீவின் அரசியல் பாரிய நெருக்கடிக்குள் இருந்த போது சுபீட்சத்தை ஏற்படுத்தும் கட்சியாக நம்பிக்கை கொடுத்தது. அத்தகைய தோற்றத்தில் மக்கள் அனைவரும் அதன் மீது ஒரு பாரிய எதிர்பார்க்கையைக் வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டு ஆட்சியின் போது அதன் தோற்றமும் அதன் நிறமும் மாறத் தொடங்கியுள்ளது. இக்கட்டுரையும் ஜே.வி.பி. யின் கொள்கையில் ஏற்பட்டுவரும் விளைவுகளை தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது இலங்கை தீவின் அரசியல் இரண்டு மரபுகளை சுதந்திர காலத்தில் இருந்து பேணிவருகிறது. தென்னிலங்கை ஒரு வடிவத்தையும் வடக்கு கிழக்கு இன்னோர் வடிவத்தையும் உள்ளடக்கியதாகவே இலங்கையின் ஆட்சி கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. நடைமுறை யதார்த்தமும் அவ்வாறானதாகவே நகர்ந்ததுள்ளது. ஆனால் ஜே.வி.பி. அதில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தப் போவதாக தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் பிரச்சாரப்படுத்தி வருகிறது. அத்தகைய இலங்கையர் என்ற முகம் இரண்டு வருடங்களில் மாற தொடங்கியுள்ளது. தென்னிலங்கையில் கார்த்திகை வீரர்கள் தினத்தை ஜனாதிபதி தலைமை தாங்குகிற போது வடக்கு கிழக்கில் மாவீரர்களின் நினைவுகளை தாங்கியுள்ள துயிலும் இல்லங்கள் ஒவ்வொன்றும் பொலீசாரதும்; இராணுவத்தினதும் புலனாய்வாரள்களதும் கண்காணிக்கப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகும் காட்சிகள் தினம் வெளியாகிவருகிறது. கடந்த ஆட்சியாளர்களைப் போன்றே ஜே.வி.பி. ஆட்சியிலும் தேர்தல் காலங்களில் ஒன்றையும் தேர்தல் முடிந்த பின்பாடு இன்னோர் முகத்தையும் காட்டும் நிலையை காணமுடிகிறது. விடுதலைப் புலிகளின் தலைமையின் தயாரது பெயரில் துறைமுகம் அமைக்கப் போவதாக பிரச்சாரப்படுத்திய ஜே.வி.பி. தற்போது எதனையெல்லாம் செய்கிறது என்பதை பார்க்கும் போது அதன் உண்மை முகம் தெளிவாகிறது. புரட்சியாளர்களாக அடையாளப்படுத்திய ஜே.வி.பி. அதிகார அரசியலில் அதற்கு எதிரான சட்ட நகர்வுகளையும் அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தொடங்கியுள்ளது.

இரண்டாவது ஜே.வி.பி. ஆட்சிக்கு வருவதற்கு மூலவேராக இருந்த தொழிற்சங்கங்களின் போராட்டங்களை தமது ஆட்சியில் முடக்குவதற்கு சட்டத்தையும் அதன் கிளைகளையும்; அதிகம் பிரயோகப்படுத்த ஆரம்பித்ததுள்ளது. ஜே.வி.பி. அரசாங்கத்தின்; நடவடிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற உணர்வோடு எழுச்சி பெறும் தொழிற்சங்கங்களை எதிர்க்கட்சிகளின் கூலிகள் என்று குறிப்பிட்டதோடு படிப்படியாக அவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுத்து போராடும் தொழில் சங்கத்தினரை சிறையில் தள்ளும் அளவுக்கு ஜே.வி.பி.யின் அதிகார அரசியல் மாறத் தொடங்கியிருக்கிறது. ஜே.வி.பி.இன் ஆட்சியில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் தமக்கான சலுகைகள் எதுவும் வழங்கவில்லை என்று கோரிக்கை வைத்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அது தொடர்பில் உரையாடுவதற்கு அரசாங்கத் தரப்பு முன்வரவில்லை என்பதற்காக அடையாள பகிஸ்தரிப்பு போராட்டத்தை நடாத்தும் துயரம் வேறு எந்த ஆட்சியிலும் நிகழவில்லை. தொழிற்சங்கங்களும் தொழிலாளர் அமைப்புகளும் கோரிக்கைகளை முன்வைத்து ஒரு ஜனநாயகம் முறைப்படி போராட முடியாத ஒரு சூழலை நோக்கி ஜே.வி.பி. ஆட்சி விளங்குகிறது. இது தாராள ஜனநாயக முகத்தையோ இடதுசாரி முகத்தையோ ஜனநாயக முகத்தையோ கொண்ட இயங்காத ஒரு வடிவத்தை தோற்றுவித்திருக்கிறது. இதன் இறுதி வடிவம் சர்வாதிகாரமாக மாற்றம் பெறும் என்பதை உணரக்கூடியதாக உள்ளது.

மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்த ஜே.வி.பி. அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை வைத்துக் கொண்டு திறைசேரி நிரப்பத் திட்டமிடுவதாகவே தெரிகிறது. அத்தகைய வரிச் சுமையினால் வறியவர்கள் அரச பணியாளர்கள் வர்த்தகர்கள் ஆகியோர் எந்த பாரபட்சமின்றி வரி செலுத்துகின்றனர். அத்தகைய வரிச் சுமையை புரிந்து கொள்ள முடியாத ஜே.வி.பி. இன் புலமையாளர்களும், அறிஞர்களும், ஜே.வி.பி. ஐ ஆதரிப்பவர்களும் ஜே.வி.பி.க்கு ஆலோசனை வழங்குபவர்களும் இருக்கும் வரையும் வரியின் விளைவுகளை ஜே.வி.பி. உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. வரிச் சூத்திரத்தையோ, இரட்டைவரி முறைமையையோ புரிந்து கொள்ளாத தரப்புக்கள் ஜே.வி.பி.இன் ஆலோசகர்களாக உள்ளனர். ஒருவேளை உணவு உண்ண முடியாது தவிக்கும் மக்களின் துயரத்தை வரவு செலவுத் திட்டம் கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கிராமிய பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது என பாராளுமன்றத்தில் உரையாற்றுகிளன்றனர். இத்தகைய புரிதல் அற்ற போலித்தனமான அறிஞர்களின் கூட்டமே இந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து வருகிறது.

நான்காவது ஜே.வி.பி.யை இடதுசாரிகள் என்றும் சோசியலிச கொள்கை கொண்டவர்கள் என்றும் புரிதலைக் கொண்டுள்ள ஆதரவாளர்கள் அதன் உண்மையான முகம் எது என்பதை கண்டு கொள்ள முடியாதவர்களாக காணப்படுகின்றனர். உழைக்கும் மக்களின் நிறத்தை அடையாளமாகக் கொண்ட சோஸலிஸ்டுகள் புரட்சியின் மையமானவர்களாகவே இனங்காணப்பட்டனர். அதன் அர்த்தம் எல்லாவற்றிலும் இரத்தம் சிந்துவது மட்டுமல்ல அதனோடு அவர்களின் எண்ணங்களிலும் நடைமுறைகளிலும் யதார்த்தத்திலும் புரட்சிகரமாக இருத்தல் என்பதைக் குறிப்பதாகும். உள்நாட்டு உற்பத்திக்கான திட்டமிடல்களை முன்வைத்து உற்பத்திக்கும் உழைப்புக்கும் தொழிலாள வர்க்கங்களின் நலன்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தரப்பானது உயர்வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்கின்ற நிலையை கொண்டதாக இயங்குகிறது. இது கடந்த கால ஆட்சியாளர்களின் கொள்கைகளை பின்பற்றுகின்றதாகவே தெரிகிறது. அதாவது முதலாளித்துவ ஆட்சியாளர்களின் கொள்கைகளை பின்பற்றுகின்ற ஒரு முகாந்திரத்தை தமது அரசியல் கொள்கையாக கடைப்பிடிக்க தொடங்கியுள்ளனர். ஜே.வி.பி.இன் இலக்கு எப்படியாவது ஆட்சியை கைப்பற்றுவது மட்டுமேயாகும். அந்த ஆட்சியில் வறியவர்களின் இன ரீதியாக பாரபட்சத்தை அனுபவிப்பவர்கள் ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்கள் அடிமைப்படுத்தப்படும் வர்க்கங்களின் உணர்வுகளை பற்றி எதனையும் கருத்தில் கொள்ளாத ஆட்சியாக உள்ளது. இதனை சோஸலிஸ மரபில் குறிப்பிடுவதானால் குட்டிப்பூசவாக்களின் ஆட்சியாகவே கொள்ள முடியும். இலங்கை தீவில் குட்டிப்பூசவாக்களின் ஆட்சி முறையே நிகழ்கின்றது.

ஐந்தாவது புதிய பயங்கரவாத தடைச் சட்டமூலத்தின் உள்ளடக்கங்களையும் அவை பின்பற்றப்பட போகின்ற வழிமுறைகளையும்; பார்க்கும் போது ஜே.வி.பி.இன் ஆட்சியின் பக்கம் தெளிவாகத் தெரிகிறது. இலங்கை தீவின் அரசியல் மீண்டும் ஒரு துயரமான பக்கங்களை எட்டுவதற்கான வாய்ப்பை தோற்றுவித்திருக்கின்றது. பாதுகாப்பு படையினர் பொலிஸார் மற்றும் படைத்தரப்புக்கு அனைத்து அதிகாரமும் ஒப்படைக்கப்பட்டுள்ள சட்ட மூலம் ஆபத்தானதே. விரும்பியோ விரும்பாமலோ பாதுகாப்புத் தரப்புக்கு கட்டுப்பட வேண்டிய நிப்பந்தம் ஏற்படப் போகிறது. அரசாங்கம் கூறுவது போல் தேசிய பாதுகாப்பையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெறும் பயங்கரவாத செயல்களால் இலங்கை தீவு பாதுகாக்கப்படுவதற்கான சட்ட ஏற்பாடுகளை சார்ந்ததாக இருந்தாலும் நடைமுறை தமிழருக்கு எதிர்கட்சியினருக்கும் எதிரானதாகவே தெரிகிறது. இது எதிர் திசையில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது. இத்தகைய சட்ட மூலங்கள் முழுமையாக அப்படியே அமுலாகுமானால் கம்போடியாவில் நிகழ்ந்த போல் பொட்டின் (Pழடிழவ) ஆட்சியை நினைவு கோருவதாக அமைந்து விட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

எனவே இலங்கைத் தீவின் ஆட்சி மரபின் ஓரங்கமாக ஜே.வி.பி. காணப்பட்டாலும் கடந்த ஆட்சிகளின் தொடர்ச்சியாகவே உள்ளது. இது புரட்சிகரமான எதனையும் சாத்தியப்படுத்தாது. சோஸலிஸ மரபினடிப்படையில் பார்க்கும் போது ஜே.வி.பி.இன் ஆட்சியை குட்டிப்பூசவாக்களின் ஆட்சி என்று அழைப்பது பொருத்தப்பாடு உடையதாக தெரிகின்றது. இவர்கள் இடதுசாரிகளோ வலதுசாரிகளோ தாராண்மைவாதிகளோ, ஜனநாயக வாதிகளோ கிடையாது. தீவிர அடக்கு முறையாளர்களாகவும் போலி சித்தாந்தத்தை கொண்டவர்களாகவும் விளங்குவதற்கு தயாராவது போன்றே உள்ளது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:தினக்குரல்)