இலங்கைத் தீவின் அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு அடிப்படைகள்; செழுமையானதாக இல்லை என்பது அதன் வரலாற்றைக் கொண்டு அளவிட முடிகிறது. ஓர் அரசாங்கம் தனது பிரஜைகள் மீது கொண்டிருக்கும் அணுகுமுறைகளிலிருந்து அதனைக் கண்டு கொள்ள முடியும். ஒரு தேசத்தின் அரசியல் கலாசாரமானது அந்த நாடு கொண்டுள்ள பண்பாட்டுச் செழுமையினால் கட்டமைக்கப்பட்ட அரசியல் அமைப்பிலிருந்து தொடங்குகிறது. கடந்த வரலாறு முழுவதும் இலங்கையில் வன்முறையும் போரும் அதீதமான இரத்தம் சிந்தும் துயரத்தையுமே தந்ததுள்ளது. சிங்கள மக்களும் தமிழ் மக்களும் தமக்குள் மோதிக் கொண்டு இரத்தம் சிந்தியதுடன் ஏனைய இனங்களும் அதற்கு விதிவிலக்கு இல்லாத துயரத்தை அனுபவித்திருக்கின்றன. 2009 க்கு பின்னர் போர் ஓய்ந்தாலும் வன்முறைகளும் இரத்தம் சிந்தும் துயரங்களும் அதற்கான முகாந்திரங்கள் முற்றாக விலகியதாக கொள்ள முடியாது. இதன் விளைவாகவே இலங்கையில் இருந்து பாரியளவிலான இளைய தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திட்டமிடுகின்றனர். தெற்காசியாவுக்கான உலகளாவிய ஒற்றுமை அமைப்பும் நூற்றாண்டு இயக்கமும் இணைந்து நடாத்திய எனது இலங்கை அடுத்த தலைமுறை என்ற ஆய்விலேயே கண்டறியப்பட்ட இளம் தலைமுறையின் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான மூல காரணங்களை தேட இக்கட்டுரை முயலுகிறது.
இதற்காக இலங்கையின் 25 மாவட்டங்களைச் சேர்ந்த 2,418 பேரிடம் கருத்துகள் பெறப்பட்டுள்ளதுடன், மாகாண மட்டத்தில் 22 கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டுள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 80 சதவீதமானோர் தம்மை முதன்மையாக இலங்கையர்களாக அடையாளப்படுத்தியுள்ளனர். இதில் 73.7 சதவீதமானோர் நாட்டுடன் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனினும், ஒட்டுமொத்தப் பங்கேற்பாளர்களில் 49.1 சதவீதமானோரும், புதிய தலைமுறையினரில் 52.7 சதவீதமானோரும் வாய்ப்புக் கிடைத்தால் இலங்கையை விட்டு வெளியேற விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளனர். இது அடிப்படையில் இளைய தலைமுறையினரின் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணங்களை புரிந்து கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது. அதனை விரிவாக நோக்குவது அவசியம்
முதலாவது இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்றிலும் இன முரண்பாட்டுக்கும் மத ஆதிக்கத்துக்கும் உட்பட்ட ஒன்றாக எழுச்சி பெற்றிருந்தது. இது அனைத்து இனங்களும் சமமாக மதிக்கப்படாத நிலையிலேயே அதீதமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அடிப்படைக் காரணமாக விளங்கியது. குறிப்பாக தமிழரின் உரிமைகளை வழங்க மறுத்ததன் பிரதிபலிப்பாக எழுந்த அகிம்சை போராட்டத்தை வன்முறை கொண்டு ஆட்சியாளர்களும் சிங்கள பெரும்பான்மை சமூகமும் ஒடுக்கு முறைக்கு உட்படுத்திய போது ஆயுதப் போராட்டமும் வன்முறையும் பதிலீடாக மாறியது. அத்தகைய அடக்குமுறைக்கு பின்னால் பாரிய அளவிலான இளைய தலைமுறை ஆயுதப் போரில் ஈடுபட்டதும் நாட்டை விட்டு வெளியேறியதும் வரலாற்றின் பதிவாக மாறியது. இதனால் எழுந்த சூழலில் படுகொலைகளும் காணாமல் போதலும் சிறையில் அடைக்கப்படுதலும் தமிழ் இளம் தலைமுறைகளை அச்சத்துக்கு உள்ளாக்கியது. இதன் வாயிலாக தமிழரை அடிமைகளாக்க வைத்திருக்க முயன்ற ஆட்சியாளர்களின் நடவடிக்கை வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் இளம் தலைமுறையில் ஒரு பிரிவினரை நாட்டை விட்டு வெளியேற தூண்டியது.
இரண்டாவது அத்தகைய வெளியேற்றத்துக்குப் பின்னால் 1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் பிரதான பங்கை வகித்தது. 1956 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தனிச் சிங்களச் சட்டமும் பௌத்தம் அரச மாதமாகியதும்; முழுமையாகவே இலங்கை தீவின் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதிக்கத்தை முதன்மைப்படுத்தியது. இதன் விளைவினால் நாட்டை விட்டு தமிழ் இளைஞர்கள் வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர். 1978 ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரம் கொள்கை அதற்கான வாய்ப்பை தீவிரபடுத்தியது. இலங்கை தீவில் தமிழ் மக்களையும் வெளியேற்றுவதன் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வை காண முடியும் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கொண்டிருந்தனர். இதனால் ஒரு தரப்பு இளம் தலைமுறை நாட்டை விட்டு வெளியேற முனைந்தது. இதன் விளைவு இன்னுமொரு தரப்பின் ஆயுதப் போராட்டம் சார்ந்து ஊக்குவிக்கப்பட்டனர். உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் முதன்மையானது அவர்களது பாதுகாப்பான இருப்பாகும். அத்தகைய பாதுகாப்பு நெருக்கடிக்கு உள்ளாகின்ற போது அதனை எதிர்கொள்ளுகின்ற நோக்கம் ஆயுதப் போராட்டம் வன்முறையை தீவிரபடுத்தியது. இந்த வன்முறையின் முடிவு வன்முறையாகவே அமைந்து இருந்தது. 1979 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இலங்கை தீவு பயங்கரவாத தடைச் சட்டம் என்பதன் பெயரால் இராணுவ ஆட்சி முறைக்குள் வடக்கு கிழக்கு காணப்படுகிறது. அதற்கான சூழலும் பாதுகாப்பும் இல்லாத நிலையில் இளம் தலைமுறையில் இருப்பும் கேள்விக்குறியதாக விளங்குகிறது.
மூன்றாவது அடுத்து 1979 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் எத்தகைய விளைவை ஏற்படுத்தியது என்பதை தேடுகின்ற போது அதையும் விட அதீதமான விளைவை தரக்கூடிய சட்டமூலமாக புதிய பயங்கரவாத தடைச் சட்டம் காணப்படுகிறது. தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பின்னால் காரணங்களை தேடும் போது மீண்டும் ஒரு நெருக்கடி தோன்றியுள்ளது. அதுவும் ஜே.வி.பி. இன் ஆட்சி காலத்தில் நிகழவுள்ளது. தற்போது இளம் தலைமுறை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விரும்பும்; பிரதான காரணமாக உள்ளது. முன்னைய அரசாங்கங்களின் அதே அணுகுமுறையை ஜே.வி.பி. அரசாங்கமும் பின்பற்ற தயாராகிறது. அது மட்டுமல்ல ஜே.வி.பி. அரசாங்கம் வெளிப்படை தன்மையற்ற கொள்கைகளால்; மேலும் இளம் தலைமுறையின் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறதாகவே தெரிகிறது. புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சிறையில் அடைப்பதையும் கைதுகளையும் காவல்துறை இராணுவம் மற்றும் பாதுகாப்பு தரப்புக்கள் மேற்கொள்ள அதிகாரம் வழங்குகிறது. இதுவே இன்றைய தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கும் பிரதான அச்சமாகும். புதிய பயங்கரவாத தடைச் சட்டம் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் சார்ந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஐக்கிய நாடு சபை போன்ற பல அமைப்புக்கள் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் உள்ளடக்கம் பற்றி அச்சத்தையும் அதிருத்தியையும் வெளியிட்டு இருக்கின்றது. இவை எல்லாம் இலங்கை தீவில் ஒரு பிரஜை அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ முடியுமா என்ற சந்தேகத்தை இளைய தலைமுறைக்கு ஏற்படுத்தி உள்ளது. போதைப் பொருள் பாவனை வன்முறைகளின் தீவிரம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் இவை எல்லாம் இனரீதியாக கட்டமைக்கப்பட்ட அரசு நிறுவனங்களால் இலகுவாக காவுகொள்ளப்படக் கூடியவர்களாக தமிழ் இளைஞர்கள் காணப்படுகின்றனர். இது படிப்படியாக ஏனைய பெரும்பான்மைச் சிங்கள இளைஞர்களையும் ஏனைய தேசிய இனங்களின் இளைய தலைமுறைகளையும் பாதிப்புக்கு உள்ளாகும் ஆனால் ஒப்பீட்டு அடிப்படையில் தமிழர்களே அதிகமான இலக்காக விளங்குவர். கடந்த 75 வருடங்களுக்கு மேலாக இனரீதியாக கட்டமைக்கப்பட்ட அரச இயந்திரங்கள் இலகுவில் இதனை கடந்து செல்லாது. அப்படியாயின் இதன் உடனடி விளைவுகளை தமிழர்களே அனுபவிக்கும் நிலை ஏற்படும். அதனாலேயே சாதாரண இளைஞர்கள் முதல் பட்டதாரி இளைஞர்கள் வரை வாய்ப்பு கிடைத்தால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திட்டமிடுகின்றனர்.
நான்காவது 1971 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தினை நிகழ்த்திய ஜே.வி.பி. ஒரு பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்ட ஜே.வி.பி. பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக அதிக போராட்டங்களை முன்னெடுத்த ஜே.பி.பி. புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்த முயல்வது என்பது இலங்கைத்தீவின் எதிர்காலம் எப்படியானது என்பதை கோடிட்டு காட்ட போதுமானது. 1970 களில் மேல்தட்டு வர்க்கத்தின் ஆட்சியில் இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் விட்ட அதே தவறை புதிதாக இடதுசாரி முகத்தோடு ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி. யும் பின்பற்றுகிறது என்பது இலங்கை தீவின் எதிர்காலத்தை கணிப்பதற்கு இலகுவானதாக இருக்கின்றது. ஓர் அரசாங்கம் தனது பிரஜைகளை பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் அவர்களின் வாழ்க்கை முறையை செழுமைப்படுத்துவதற்கும் செயல்படுவது என்பது கோட்பாடுகள் சொல்லித்தரும் வியாக்கியானமாகும். ஒரு அரசாங்கத்தின் பிரதான இலக்கு அந்த நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளையும் அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாகும். அதற்காகவே சட்டங்கள் இயற்றப்படுகிறது. இலங்கை தீவின் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகப்படுத்துவதற்கு காரணங்கள் கண்டறியப்பட வேண்டும். அக்காரணங்களுக்கு தீர்வுகள் எட்டப்பட வேண்டும். சட்டத்தினால் மட்டும் ஒரு நாட்டின் குற்றச் செயல்களையும் ஒழுங்கற்ற பிரஜைகளையும் முரண்பாடான நடத்தைகளையும் தொடர்புகளையும் கட்டுப்படுத்த முடியாது. அதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கான சமூக பொருளாதார பண்பாட்டு நியமங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அது செய்ய தவறுகின்ற பட்சத்தில் அந்த தேசம் வன்முறைகுரியதாகவே காணப்படும்.
ஐந்தாவது கடந்த கால ஆட்சியாளர்களை போன்றே ஜே.வி.பியும் தந்திரோபாயமான இராஜ தந்திரமான வெளிப்படையில்லாத ஆட்சி முறையை கொண்டு இயங்குகிறது. உத்திகளையும் தந்திரங்களையும் அதிகம் கடைபிடிக்கிறது. முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளை எடுக்கின்றது. இனவாதமற்ற ஆட்சி எனக் கூறிக் கொண்டு வடக்கு கிழக்கு மீதான அடக்குமுறைகளை மேற்கொண்டுவருகிறது. அவ்வாறே தமிழ் மக்களது உரிமைகளை தமிழ் மக்களின் நிலத்தை தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை ஏமாற்றுகின்ற விதத்திலும் தந்திரமாகவும் கையாண்டு நகர்கிறது. வெளிப்படைத் தன்மையற்ற அரசியலை முன்னய ஆட்சியாளர்கள் போன்று ஜே.வி.பி.யும் கடைபிடிக்கிறது. இவை இலங்கை தீவின் பொருளாதார சமூக பண்பாட்டுக்கு ஒவ்வாத தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றன. இதன் மீதான விளைவே இளம் தலைமுறை நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணமாகும்.
எனவே இலங்கை தீவில் இருந்து இளம் தலைமுறை வெளியேறுவதும் அதனால் ஏற்படும் பொருளாதார சுமை அதிகரிப்பதும் தவிர்க்க முடியாத துயரமாகும். இதனையே கடந்த வரலாறு முழுவதும் முன்னய ஆட்சியாளர்களின் அணுகுமுறையில் காணமுடிந்தது. அதனையே ஜே.வி.பி. அரசாங்கமும் மேற்கொள்கிறது. இளைய தலைமுறை நாட்டை விட்டு வெளியேறுவது தொடருகின்ற போது இலங்கைத்தீவின் இருப்பு கேள்விக்குரியதாக மாறுவது தவிர்க்க முடியாததாகும்.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:யாழ்.தினக்குரல்)
