September 22, 2026
அரசியல் கட்டுரைகள்

எதிர்கட்சிகளின் அனுராதபுர மகாநாடும் ஜே.வி.பி.இன் இனவாதமற்ற அரசியலும்?

இலங்கைத் தீவின் வரலாற்றில் அனுராதபுரமும் பொலநறுவையும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களாக வரலாற்று காலம் முதல் விளங்குகின்றன. அனுராதபுரம் பௌத்தக் கலாச்சார மையமாகவும் பொலநறுவை விவசாயத்தின் பிரதேசமாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. இரண்டு நகரங்களும் முடியாட்சி முறையோடு அதிக நெருக்கமும் தனித்துவமும் கொண்ட இராச்சியங்களாக அண்மைந்துள்ளன. அத்தகைய இரண்டு மாவட்டங்களின் தலைநகரங்களிலும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தமக்கு இடையான நிலவும் மக்கள் ஆதரவை பலப்பரீட்சித்திருந்தனர். சிறிலங்கா பெரமுன கட்சி அனுராதபுரத்திலும் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி பொலநறுவையிலும் பாரியளவான மக்களை ஒன்று திரட்டி மாகாநாடுகளை நிகழ்த்தியிருந்தனர். இக்கட்டுரையும் அத்தகைய பெரும் கூட்டத்தொடரின் முக்கியத்துவத்தையும் விளைவையும் தேடுவதாக உள்ளது.

சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் அரசியல் இனவாதத்தினால் கட்டி எழுப்பப்பட்ட ஒன்றாகவே விளங்குகிறது. பெரும்பான்மை ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்கள் மீதும் சிறுபான்மையின் அரசியல் வாதிகள் பெரும்பான்மை அரசியல் வாதிகள் மீதான அச்சத்தினாலும் இன உணர்வுகள் பரஸ்பரம் தூண்டி அரசியலை நகர்த்துகின்றனர். இலங்கைத் தீவின் ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களும் இன உணர்வோடு இயங்குவதற்கான அடிப்படைகளை எதிர்த்தரப்புகள் கட்டமைத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக ஒரு வரலாற்றை நியமமாக கெண்டுள்ளதை காணமுடிகின்றது. அத்தகைய வரலாற்றின் போக்கு மீளவும் பொலனறுவை மற்றும் அனுராதபுர கூட்டங்களில் எதிரொலித்ததை இனம்காண முடிகிறது. அத்தகைய வரலாற்றின் போக்கையும் யதார்த்தமான சூழலையும் ஆழமாக அவதானிப்பது அவசியமானது.

முதலாவது சுதந்திர இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஐக்கிய தேசியக் கட்சியும் அதற்கு எதிரான தரப்பாக விளங்கிய இடதுசாரி கட்சிகளும் (1948-1956) தமக்கு இடையேயான மோதல்களை அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மோதல்களாக வடிவமைத்துக் கொண்டன. இனவாத உணர்வு முன்னிறுத்திக் கொண்டே டி.எஸ். சேனநாயக்காவின் கல்லோயா விவசாய குடியேற்றங்கள் அதற்கான முனைப்புகளை இலங்கையில் தோற்றுவித்தது. அதனை அடுத்து இடதுசாரிகள் உட்பட அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து இனவாத உணர்வுகளை தூண்டுகின்ற விதத்தில் உரையாடல்களையும் பேரணிகளையும் நிகழ்த்தி இருந்தனர் 1944 இல் தமிழர்களுக்கு மொழி உரிமை வழங்க வேண்டும் என விவாதித்த இடதுசாரிகள் 1966 இல் நிகழ்ந்த மே தின ஊர்வலத்தில் ‘தேசே மசாலவடே அப்பிட்ட எப்பா’ எனக் கோசமிட்டனர். அத்தகைய வரலாற்றை இடதுசாரிகளும் அத்தகைய இனவாத உணர்வில் பங்கெடுத்துக் கொண்டனர்.

இரண்டாவது சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம் என்ற ஒன்றை முன்மொழிந்த போது அதன் இரண்டாவது கட்டம் எழுச்சி பெற தொடங்கியது. அத்தகைய சட்டத்தின் விளைவாக இலங்கை முழுவதும் சிங்கள மொழியும் பௌத்த மதமும் முதன்மையானதாக முன்வைக்கப்பட்ட போது இடதுசாரித் தலைவர்கள் ஒரு மொழி எனில் இரு நாடு இரு மொழி எனில் ஒரு நாடு என்று முழக்கமிட்டவர்கள் 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பில் தலைகீழாக மாறினர். நுpறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒன்று சேர்ந்து கொண்டு அத்தகைய மொழியையும் மதத்ததையும் சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்கினர். அது மட்டுமல்லாது ஐக்கிய தேசியக் கட்சி பண்டரநாயக்காவின் தனிச்சிங்களத்தையும் பௌத்த மதத்தையும் எதிர் கொள்ள முடியாத நிலையில் இனவாதத்தை அரசியல் மேடைக்கான எண்ணமாக அரங்கேற்ற தொடங்கினர். அத்தகைய அரசியல் நடவடிக்கை இனப்பிரச்சினைக்கான மூலத்தை தீவிரப்படுத்தியது. அதன் விளைவாகவே இலங்கை தீவு இனவாத உணர்வுகளால் இடதுசாரிஇ வலதுசாரி என்ற வேறுபாடு இன்றி கட்டி எழுப்பப்பட்டது. சிறிரீலங்கா சுதந்திர கட்சியினதும் பண்டாரநாயக்காவின் அதிகார அவாவை அடைவதற்கு இனவாதம் சுலோகமாக மாறியது. ஆதனை தொடக்கியதிலும் பயன்படுத்தியதிலும் ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னோடிகளாக விளங்கினர்.

மூன்றாவது பண்டா-செல்வா உடன்படிக்கை டடலி-செல்வா உடன்படிக்கை ஆகிய இரு உடன்பாடுகளையும் இரு கட்சிகளம் மாறி மாறி எதிர்த்ததன் மூலம் அவ்வுடன்பாடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி உடன்பாட்டை எட்டும் போது எதிர் கட்சியான சுதந்திரக் கட்சி அதற்கு எதிராக சிங்கள மக்களைத் திரட்டி தீயிலிட போராடும். அவ்வாறே சுதந்திரக் கட்சி உடன்பாட்டை எட்டும் போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்து செயல்படும். எதிர்கட்சிகளின் தூண்டுதலால் பௌத்தபிக்குகளும் சாமானிய சிங்கள மக்களும் ஒன்று திரண்டு அத்தகைய உடன்பாடுகளை கிழித்து எறிவதற்கு வழி வகுத்ததோடு இன உணர்வுகளால் ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க தீவிர போராட்டத்தை பௌத்தப்பிக்குகளும் சிங்கள மக்களும் கட்சி அரசியலுடன் ஒன்றிணைந்து மேற்கொண்டனர். அதற்குப் பின்னால் எதிர்க்கட்சிகள் என்ற போர்வையில் செயல்பட்ட தரப்பினரின் அதிகார வெறி முதன்மையானதாக இருந்தது.

நான்காவது இலங்கைத் தீவின் சிங்கள ஆட்சியாளர்களின் புதிய வாரிசுகள் என்ற அடையாளப்பட்ட ரணில்விக்ரம்சிங்காவும் சந்திரிகாகுமாரதுங்காவும் அதே அரசியல் கலாசாரத்தை பிற்காலத்திலும் பின்பற்றினர் ஆட்சியில் இருக்கின்ற போது கொண்டுவரப்படும் தீர்வு முயற்சிகளுக்கு எதிராக அவ்வாறே செயல்பட்டனர். 2000 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்த தீர்வு முயற்சி ஒன்றை சிறிலங்கா சுந்திரக் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்ட போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையை பொறுப்பேற்று இருந்த ரணில்விக்கிரமசிங்கா எதிராகச் செயல்பட்டு திட்டத்தை பாராளுமன்றத்தில் வைத்து எரித்ததன் மூலம் அதற்கு எதிரான உணர்வுகளை தூண்டிவிட்டு அதனை முடிவுக்கு கொண்டு வந்தார். அவ்வாறு ஆறுகட்ட பேச்சுக்களை விடுதலைப் புலிகளோடு மேற்கொண்ட போது அதனை முறியடிக்கும் விதத்தில் சந்திரிகா குமாரதுங்கா ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்து அதற்கு எதிரான திட்டங்களை வகுத்து தோற்கடித்தார் அவ்வாறே புதிய அரசியலமைப்பை மைதிரிபாலா-ரணில் அரசாங்கம் வரைந்து நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட போது அதனை முறியடிக்கும் விதத்தில் மகிந்த ராஜபக்~h ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு அரசியலமைப்பை தோற்கடித்தார்.

ஐந்தாவது இத்தகைய வரலாற்றின் நிகழ்ச்சியே அனுராதபுரத்திலும் பொலநறுவையிலும் அரங்கேறியுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முதன்மைப்படுத்திக் கொண்டு ஜே.வி.பி. அரசாங்கம் ஆட்சியில் நிலைத்திருப்பதற்கும் தக்கவைப்பதற்கும் திட்டமிடுகின்ற போது அதற்கு எதிராக தீவிர நகர்வுகளை எதிர் கட்சிகள் முன்னெடுத்துள்ளனர். பொதுமக்களையும் பௌத்தப்பிக்குகளையும் சாதாரண சிங்கள மக்களையும் தூண்டிவிட்டு அதனை எதிர்கொள்ளுகின்ற வடிவத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கோடும் செயல்படத் தொடங்கியுள்ளன. தம்’மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முடிவுகட்டும் நோக்கத்துடன் எதிர்கட்சியினர் அணி திரட்டல்களை நிகழ்த்தியுள்ளனர். விவசாயத்தையும் விவசாய குடிமக்களை இலக்கு வைத்து பொலநறுவையில் கூடிய கூட்டமும் ஆட்சியை விமர்சிப்பதற்கு முன்வைத்த அனுராதபுர கூட்டத்தையும் அளவீடு செய்கின்றபோது கடந்த வரலாற்றின் நீட்ச்சியாகவே தெரிகிறது. இத்தகைய சம்பவம் கடந்தகாலத்தை நினைவுபடுத்துகிறது. ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் என்ற வரலாற்று காலத்தை எவ்வாறு கையாண்டார்களோ அவ்வாறே பொதுஜனப் பெரமுனவும் தேசிய மக்கள் சக்தியும் கையாள திட்டமிட்டு இருக்கின்றன. இருதரப்புமே இனவாத உணர்வுகளோடு ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க முயல்கின்றனர். இதில் ஜே.வி.பி. தமது ஆட்சியை இனவாதமற்ற ஆட்சி என்று கூறிக் கொண்டாலும் இலங்கைதீவு இனவாதத்துக்கு உட்பட்ட அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் ஆளும் வர்க்கத்தையும் பணிக்குழுக்களையும் கொண்டு இயங்குகின்ற ஒரு அரசியல் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்ற நாடு. அதன் அரசியல் அமைப்பும் அதற்கு உட்பட்ட விதிகளும் அதனை அமுல்படுத்துகின்ற அதிகார வர்க்கத்தின் மனோநிலையும் இன உணர்வுகளால் கட்டி எழுப்பப்பட்டது. அதிகாரத்தை கைப்பற்ற எடுக்கும் ஒவ்வொரு நகர்வும்; இன உணர்வுகளின் பால்பட்டு எழுச்சி பெறுகிறது. அனுராதபுரக் கூட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் பற்றியும் புலம்பெயர் நிதியின் பெயராலுமே எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களும் கைது செய்யப்படுவதாகவும் வடக்கு கிழக்கை நோக்கிய மற்றும் விடுதலைப் புலிகள் நோக்கிய உரையாடல்கள் மேல் எழுந்ததையும் அவதானிக்க முடிகிறது. அத்தகைய மேல் எழுகைக்குப் பின்னால் உள்ள அர்த்தங்கள் அனைத்தும் இனவாத உணர்வின் அரசியல் கலாச்சாரத்தின் நேர்த்தியான போக்கை காணமுடிந்தது. இதனை எதிர்கொள்வதற்கு பொலநறுவைக் கூட்டம் அமைந்திருந்தாலும் அதுவும் ஏறக்குறைய எதிர் கட்சிகளில் பேரணிக்கு பதிலளிக்கும் ஒன்றாக அமைந்ததோடு இன உணர்வுகளுக்குள்ளால் கட்டி எழுப்பப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஜே.வி.பி. இடதுசாரி என்று கூறிக்கொண்டாலும் நடைமுறையில் இனவாத உணர்வுகள் அற்றது என்று பிரச்சாரப்படுத்திக் கொண்டாலும் அனுராதபுரமும் பொலநறுவையும் இனவாதத்தின் சந்திப்புக்களாகவே உள்ளன. இது இலங்கைத்தீவின் முகாந்திரமற்ற இன உணர்வின் அங்கங்களாகவே பார்க்கப்படுகின்றது. இத்தகைய அரசியல் கலாச்சாரத்தின் இருப்பைக் கொண்டு இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது என்பது சாத்தியப் பாடானதா என்ற கேள்வி எதார்த்தமானது.

எனவே இலங்கைத்தீவன் வரலாறு முழுவதும் இனவாத உணர்வினால் தோற்றுவிக்கப்பட்ட வளர்த்தெடுக்கப்பட்ட அரசியல் கலாச்சாரத்தில் ஜே.வி.பி. இன் ஆட்சி ஒரு குறுகிய கால பகுதியில் இனவாதம் அற்ற உரையாடலை நகர்த்தி விட்டு செல்லும். அல்லது பிரச்சாரப்படுத்தி விட்டு செல்லும் ஒன்றாகவும் அதே நேரம் மறைமுகமாக இனவாதத்தை தூண்டுகின்ற ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஜே.வி.பி.இன் கோசம் எதுவும் நடைமுறையில் எத்தகைய விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை. மறுபக்கத்தில் அனுராதபுர சந்திப்பு தென் இலங்கை அரசியல் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்களது உணர்வுகளின் பிரதிபலிப்புகள் எவ்வகையான அச்சுறுத்தலை இலங்கை தீவில் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை காட்டுகின்றது. இதன் எதிர்காலம் அபாயமானது என்பதை கோடிட்டு காட்டுகின்ற விடயமாகவே எதிர்கட்சிகளின் அனுராதபுர மகாநாடு நோக்கப்பட வேண்டி உள்ளது இலங்கை வரலாறு முழுவதும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இனவாதமே மூலாதாரமானது என்பதை இடதுசாரிகள் வலதுசாரிகள்; என்ற வேறுபாடு இன்றி வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கு சமகாலமும் விதிவிலக்கானது அல்ல.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினக்கரல்)