உலகளாவிய அரசியல் போக்கை மாற்றியதில் பிரிக்ஸ் அமைப்புக்கு தனித்துவமான வகிபங்கை கொண்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு நான்கு நாடுகளால் தொடங்கப்பட்டு பின்னர் ஐந்து நாடுகளான பிரிக்ஸ் அமைப்பு 18 ஆவது மகாநாட்டை இந்திய தலைநகரான புதுடில்லியில் 12-13.2026 இல் நடத்தியது. பிறிக்ஸ் அமைப்பின் வரலாற்றில் புதுடில்லி மாநாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. அமெரிக்க ஈரான் போரின் மத்தியில் மேற்குலகத்துக்கு எதிரான அணிதிரள்வு ஒன்றை பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஏற்படுத்தி உள்ளமையே அதன் முக்கியத்துவத்திற்கு அடிப்படையாகும். எதிர்கால உலகத்தில் பிரதான அணியாக பிரிக்ஸ் காணப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இக் கட்டுரையும் புதுடில்லியில் நிகழ்ந்த பிரிக்ஸ் மகாநாட்டின் முக்கியத்துவத்தை தேடுவதாக உள்ளது.
முதலாவது இந்த மகாநாட்டின் பிரதான கருதுகோளாக மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு சார்ந்ததாக அமைந்திருந்தது. அதன் பிரகாரம் மேற்கு ஆசியாவில் அமைதியையும் சமாதானத்தையும் கடைப்பிடிக்க அழைப்பு விடுத்ததோடு பாலஸ்தீனியர்களின் இடப்பெயர்வுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது. உலகளாவிய வர்த்தகப் பதட்டங்களைக் கடுமையாக விமர்சித்த பிறிக்ஸ் அமைப்பு தடையற்ற உலகளாவிய வர்த்தகம், எரிசக்திப் பரிமாற்றம் மற்றும் விநியோகச் சங்கிலிகளைப் பேணுவதை வலியுறுத்தும் முகமாக பிறிக்ஸ் பிரகடனத்தை வெளியிட்டிருந்தன. அது மட்டுமன்றி மகாநாட்டுக்கு தலைமை தாங்கிய இந்தியா கீழைத்தேச நாடுகள் தங்களின் மூலோபாய சுயாட்சியைப் பேணுவதற்கு உதவும் வகையில் பல்முனை டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் மீள்திறன் கொண்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புக்கான பிரிப்புக்களை காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்திருந்தது.
இரண்டாவது ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷஸ்கியான் (Masoud Pezeshkian) ஆற்றிய உரை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு தலைப்பட்சமான தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான் ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சமீபத்திய இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்கள் ஈரானுக்கான நிலைமைகளை அபாயகரமான கட்டத்திற்குத் தள்ளியுள்ளதைக் குறிப்பிட்டார். ஒரு தலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரிக்ஸ் நாடுகளை வலியுறுத்தினார். எந்தவொரு தனி சக்தியும் சட்டபூர்வமான வர்த்தகத்தைத் தடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்குறிப்பிட்ட பெஷஸ்கியான் அதனை தடுத்து நிறுத்துவதற்கான சூழலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். மேற்குலக நிதி ஆதிக்கத்தைத் தவிர்ப்பதற்காக உறுப்பு நாடுகளிடையே தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனவும் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி முயற்சிகளுக்கு நிதிப் பாதுகாப்பு அளிப்பதற்காக 10 பில்லியன் டொலர் ஆரம்ப மூலதனத்துடன் ஒரு கூட்டு பிரிக்ஸ் மறுகாப்பீட்டு நிறுவனத்தை நிறுவுவதற்கான முன்மொழிவையும் அவர் முன்வைத்தார். பிறிக்ஸ்ன் கூட்டு முடிவுகளை விரைவுபடுத்தவும் அமுல்படுத்தவும் நிரந்தர பிரிக்ஸ் செயலகத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். பாலஸ்தீனத்தில் நிலவும் சூழ்நிலையை சர்வதேச ஆளுகையின் நம்பகத்தன்மைக்கான வாய்ப்பு இல்லை என்றும் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டும் நடவடிக்கையில் பிரிக்ஸ் நாடுகள் நீதிக்கான வலுவான குரலாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். பிராந்தியப் பாதுகாப்பு இல்லாமல் பொருளாதார மீள்திறன் வெற்றிபெற முடியாது என்பதை வலியுறுத்திய ஈரான் ஜனாதிபதி தேசிய இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும் நியாயமற்ற நடவடிக்கைகளை எதிர்ப்பதிலும் பிறிக்ஸ் உறுதியாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது உலகளாவிய அரசியல் போக்கில் ஈரானிய இலக்கையும் பிறிக்ஸ் அமைப்பின் இலக்கையும் ஒரு புள்ளியல் சந்திக்க வைத்தமையை கண்டு கொள்ள முடிந்தது. அத்தகைய செய்தி அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்தின் அரசியல் மேலாதிக்க இருப்பை கேள்விக்கு உட்படுத்தியதோடு பிறிக்ஸ் அமைப்பின் நாடுகள் அனைத்துமே மேற்குலகத்திற்கு எதிராக அணி திரள்வதில் வெற்றிகரமான சூழலை தந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இருந்த நெருக்கமான உறவு பெருமளவுக்கு கேள்விக்கு உள்ளானதோடு கீழைத்தச நாடுகளின் அணி ஒன்றிற்கான சந்தையும் வர்த்தகமும் கூட்டு தன்மையும் புதுடில்லி மாநாட்டில் அதிகம் பிரதிபலித்திருந்தது.
மூன்றாவது புதுடில்லி மாநாட்டில் ரஸ்சிய ஜனாதிபதி சீன ஜனாதிபதி இந்திய பிரதமர் ஆகிய மூன்று தலைவர்களதும் உடல் மொழியும் அவர்களது உரையாடலின் முக்கியத்துவமும் அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தியது. சீன ஜனாதிபதி மகாநாட்டில் முன்வைத்த விடயங்கள் அதிக கவனம் பெற்றது. குறிப்பாக எந்த நூற்றாண்டிலும் காணமுடியாத மாற்றங்ளை உலகம் முழுவதும் வேகமெடுத்து வருகின்றது. தென்பூகோள நாடுகள் வலுப்பெற்று வருகிறன. பல்துருவ உலகை நோக்கிய போக்கை யாராலும் தடுத்து நிறுத்த இயலவில்லை. அதே சமயம், தனியுடமைவாதமும் அதிகார அரசியலும் இயல்பான நீரோட்டத்திற்கு எதிராகப் பெருகிய போதும் பல்துருவ சர்வதேச ஒழுங்கு பலமானதாக மாறிவருகிறது. அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் ஆளுகை ஆகியவற்றில் உள்ள பற்றாக்குறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தப் பற்றாக்குறைகளைச் சரிசெய்து ஒரு சிறந்த உலகைக் கட்டமைக்கும் சரியான நோக்கத்திற்காகவே நாம் போராடுகிறோம். ஆதற்காகவே உலகளாவிய வளர்ச்சி உலகளாவிய பாதுகாப்பு உலகளாவிய நாகரிக மற்றும் உலகளாவிய ஆளுகை ஆகியவற்றை முன்னெடுக்க முயலுகிறோம். பிரிக்ஸ் நாடுகள் வரலாற்றின் சரியான பக்கத்தில் உறுதியாக செயல்பட வேண்டும். சர்வதேச ஒழுங்கை மிகவும் நீதியான மற்றும் சமத்துவமான திசையில் வழிநடத்த வேண்டும். ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார் சீன ஜனாதிபி ஜின் பிங். இது மேற்குலக நாடுகளின் மையப்படுத்திய உலக ஒழுங்கை தலைகீழாக மாற்றுவதற்கு திறவுகோலாக விளங்குகிறது.
நான்காவது டொலருக்கு எதிரான புரட்சி ஒன்றை ஏற்படுத்தியுள்ள புதுடெல்லி மகாநாடு தனியான நாணயம் பற்றிய உரையாடலில் வெற்றி அடையாது விட்டாலும் சுதேச நாணயங்களில் ஏற்றுமதி வர்த்தகத்தை பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்துவது பற்றி இணக்கப்பாட்டை அடைய முயற்ச்சித்துள்ளன. பார்வையாள நாடுகளும் அவற்றின் எண்ணிக்கையும் பிரிக்ஸ் அமைப்பின் பிளஸ்(+) உருவாக்கத்துக்கு வழிவகுத்தத்தோடு பெரும் பொருளாதார அணி ஒன்றுக்கான கீழைத்தேச நாடுகளின் அணி புதுடெல்லி மாநாட்டில் சாத்தியமாகியுள்ளது. இது தென்பூகோள நாடுகளின் பொருளாதாரத்தை கட்டமைப்பதை கடந்து மேற்குலக நாடுகளின் பொருளாதார பரிமாற்றத்திற்கும் ஆதிக்கத்திற்கும் பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளமை தெரிகின்றது. ஈரான் மீதான அமெரிக்கா போர் அத்தகைய பொருளாதார சூழலை அதிகப்படுத்தியதோடு மேற்குலக நாடுகளின் வர்த்தக, சந்தை மற்றும் உலகளாவிய உணவுத் தொடலியை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன் சக்த்திவள நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.
ஐந்தாவது புதுடெல்லி மகாநாடு ஆசியா ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளின் உட்கட்டமைப்மைப்பு முறைக்கான வாய்ப்புகளையும் வர்த்தக ரீதியான ஒழுங்கையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியா தலைமையிலான 18ஆவது மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அத்தகைய முக்கியத்துவத்தை உணர்த்துவதாக தெரிகின்றது. பிரிக்ஸின் முக்கியத் தூண்களான அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு, மற்றும் கலாச்சார மற்றும் மக்கள் பரிமாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிதாக உள்ளது. இந்தியா முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நகரங்களில் 350-க்கும் மேற்பட்ட சந்திப்புகள் மற்றும் உயர்மட்ட கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளது. இந்த முயற்சிகள், வணிக மற்றும் மக்கள் தொடர்பு முன்னெடுப்புகளுடன் இணைந்து, பிரிக்ஸ் கூட்டாண்மைக்கு நடைமுறை சார்ந்த, வளர்ச்சியை மையமாகக் கொண்ட விளைவுகளை வழங்க உதவியுள்ளன.
ஆறாவது மகாநாட்டின் கலந்து கொண்ட தலைவர்கள் நமது நாடுகளின் உள்நாட்டு வர்த்தகத்தையும் புவிசார் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதில் முனைப்பான கவனத்தை கொண்டிருந்தனர். ரஸ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியத் தலைமையில் முன்மொழியப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கிய உலகளாவிய ஆளுகை மற்றும் பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல் பொருத்தமானதாகும் எனக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடும் போது உண்மையில் ஒரு பன்முனை சர்வதேச ஒழுங்கு உருவாகிவரும் இவ்வேளையில் அதனை வலுப்படுத்துவதும் உலகளாவிய ஆளுகைகளில் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனங்களின் செயல்பாடுகளில் கவனம் கொள்ள வேண்டும் எனவும் கடுமையான சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கான தீர்வுகளைக் கண்டறிவதிலும் அதிக நாடுகளை ஈடுபடுத்துவதும் முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானதாகும் என்றார். இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்கால பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கத்தை சாத்தியப்படுத்த அதற்கான உத்திகளை வகுத்துள்ளதாக தெரிவித்த புட்டின் உலக அதிகாரச் சமநிலையானது தென்பூகோள நாடுகளை உள்ள புதிய வளர்ச்சி மையங்களை நோக்கி நகர்ந்து வருகிறது எனக் குறிப்பிட்டார். இந்தியா பொருளாதார அடிப்படையில் ஒரு வலுவான சக்தியாக பிரிக்ஸ் அமைப்பை இணைப்பதற்கான பல உத்திகளை பிரதிபலிக்கும் விதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உரை அமைந்திருந்தது. பிரிக்ஸ் அமைப்பின் தலைமைகளின் உரைகள் அதிகமாக எதிர்கால ஆசியா ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு பற்றியதாகவே மையம் கொண்டிருந்தது. இதனால் அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் சிதைவடைந்து இருக்கின்ற சூழலில் உலக அதிகாரத்தையும் பொருளாதாரத்தையும் வர்த்தக கட்டமைப்பையும் வலுப்படுத்துகின்ற விதத்தில் பிரிக்ஸ் அமைப்பின் வடிவம் மாறி இருக்கின்றது. குறுகிய கால பகுதியில் பலமான பொருளாதார வளர்ச்சியை பிரிக்ஸ் அமைப்பு ஏற்படுத்தி இருக்கின்றது. பிறிக்ஸ் நாடுகள் 40 சதவீதமான உள்நாட்டுத் தேசிய உற்பத்தியைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே பிரிக்ஸ் அமைப்பின் புதுடெல்லி மகாநாடு மேற்குலகத்தினதும் அமெரிக்காவினதும் பொருளாதார இழப்பை மட்டுமின்றி அரசியல் ஆதிக்க வடிவத்தையும் கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறது. எதிர்கால உலக ஒழுங்கு பிரிக்ஸ் அமைப்பு தனித்துவமான இருப்பை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. ஈரான் போன்ற சக்திகளின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் பங்களிப்பை பிரிக்ஸ் நாடுகள் வழங்குவதற்கு முன் வந்துள்ளன. இது மேற்குலகத்தின் அதிகார அரசியலை பலவீனப்படுத்துகின்ற விதத்தில் காணப்படுகின்றது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினகரன்)
