ஈழத்தமிழர்களின் அரசியலில் செம்மணி மனிதப்புதைகுழி என்று அழைக்கப்படும் சித்துபாத் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் மூன்றாவது இடைக்கால அறிக்கை அண்மைய வாரங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றுதுள்ளது. அதனை ஓர் இடைக்கால அறிக்கை என்றும் மூன்றாவதாக அறிக்கை என்றும் கூறிக் கொண்டாலும் அதன் உள்ளார்ந்த அம்சங்கள் ஈழத்தமிழரின் அரசியல் இரண்டு முக்கிய விடையங்களை வெளிப்படுத்தியுள்ளது. ஒன்று ஈழத்தமிழர்கள் சர்வதேச விசாரணையை கோருவதற்கான அடிப்படையை அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. அவ்வாறே இலங்கை தீவை ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் ஈழத்தமிழருக்கு நீதியை வழங்குவதில் கவனம் கொள்ளாது என்பது தெளிவாகி உள்ளது. ஜே.வி.பி. ஆட்சிக்கு வருகை தந்தபோது அது வெளிப்படுத்திய எண்ணங்களும் தோற்றப்பாடுகளும் போலித்தனமானது என்பதை சமகால அம்சங்கள் ஈழத்தமிழர்களுக்கு உணர்த்தியுள்ளது. இக் கட்டுரையும் செம்மணி தொடர்பில் வெளியான மூன்றாவது இடைக்கால அறிக்கையும் ஈழத்தமிழர்கள் அரசியலில் நிலையும் தேட முயலுகிறது.
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட நாணயங்கள் ஒரே காலத்தில் புதைக்கப்பட்ட அடக்கங்களாக அல்லாமல் நீண்டகாலத்தில் படிப்படியாக நிகழ்ந்த புதைப்பாக இருக்கலாம் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் 1870 ஆண்டு பொறிக்கப்பட்ட நாணங்களை ஒரு தொகுதியிலும் 1920 முதல் 1994 வரையான காலப்பகுதி நாணயங்கள் இன்னொரு தொகுதியிலும் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதுவே காலத்தை குறிக்க உதவுகின்றது என்றும் அதனை கொண்டு காலத்தை வரையறுப்பது தவறானது எனவும் அவ்வறிகையில் குறிப்பிடப்பட்டு;ள்ளது. இது பல ஊகங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் அத்தகைய ஊகங்களுக்கான முகாந்திரங்கள் பலவீனமாகவே தெரிகிறது. இது அகழ்வாய்வின் அறிக்கையிடல் மட்டும் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமானது. அதனை முழுமையாக நோக்குவது முக்கியமானது.
முதலாவது செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பிலான மூன்றாவது இடைக்கால அறிக்கையின் வெளிப்பாடு பல முரண்பாட்டை உருவாக்கி இருக்கிறது. முதல் இரண்டு இடைக்கால(யூன் 2025, யூலை 2025) அறிக்கைகளுடன் ஒப்பிடும் போது மூன்றாவது அறிக்கை அதிக குழப்பத்தை தமிழ் மக்களிடம் உருவாக்கி இருக்கின்றது. மூன்றாவது அறிக்கை முதல் இரண்டு அறிக்கைகளுடன் முரண்படுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக முதலாவதில் வழமையற்ற புதைவு முறை எனக்குறிப்பிட்ட அறிக்கை மூன்றாவதில் பாரம்பரிய புதைவு இடமாக சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறே இரண்டாவது இடைக்கால அறிக்கையில் என்புகளின் தொகுதி குற்றச்செயலுடன் தொடர்புபட்டதாக கூறும் அறிக்கை மூன்றாவதில் தொற்றுநோய் மற்று கால அடிப்படையை விவாதிக்கின்றது. அதனால் ஆய்வுகளின் முடிவுகள் அதன் கருப்பொருளை அல்லது நோக்கத்தை இலக்காகக் கொண்டதாக அமைக்கப்பட வேண்டும் என்ற ஆய்வு முறைமையியல் விதிகளை மீறுகிறதாகவே தெரிகிறது. இவ்வாறு பல குழப்பங்கள் நிலவுகிறது. ஆய்வு வடிவமைக்கும் ஆய்வாளர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் இசைவாக ஆய்வை வடிவமைப்பது தவறானது. அத்தகைய நிலை ஒன்று காணப்படுவதை செம்மணி புதைகுழி ஆய்வின் முடிவு முன்னெடுக்க முயன்றுள்ளது.
இரண்டாவது சித்துபாத் மனிதப்புதைகுழி அகழ்வின் காலப்பகுதி முதன்மையான உரையாடலுக்குள் ஆய்வின் இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்ட முயலுகிறது. ஆனால் செம்மணி நிலப்பரப்போடு தொடர்ச்சியானதாக காணப்பட்டாலும் அதன் வரலாறு செம்மணியின் வரலாற்றுக்கு இணையானது அல்ல என்ற விபரணமும் காணப்படுகிறது. அது மிகப்பிந்திய காலப்பகுதியில் சமூகங்களுக்கு இடையில் நிகழ்ந்த தனித்துவமான அடையாளங்களை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட இடமாக உள்ளது. அது பற்றிய தேடல் அவசியமானது. அவ்வாறான அடிப்படையில் சித்துபாத் நீண்ட வரலாற்றைக் கொண்டது இல்லை என்பதும் அது தொடர்பிலான ஆதாரங்களை தெளிவுபடுத்த முடியாதுள்ளமை புரிந்து கொள்ளப்படுகிறது.
மூன்றாவது இடைக்கால அறிக்கை என்று இதனைக் கடந்து செல்வது கடினமானதாக உள்ளது. காரணம் இடைக்கால அறிக்கையின் செல்வாக்கு இறுதி அறிக்கையில் இடம்பெறக் கூடியதாக காணப்படுவது தவிர்க்க முடியாத நிலைமையை உருவாக்கும். இலங்கைத் தீவின் இன பாரபட்சமும் இன முரண்பாடும் ஆழமாக வேரூன்றி உள்ள இரு தேசிய இனங்களுக்கு இடையில் எத்தகைய விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் வெளிப்பாடுகள் முரண்பாடானவையாகவே காணப்படும். தமிழர்களும் சிங்களவர்களும் தமக்கு சார்பானவற்றையே வெளிப்படுத்துகின்ற மனோநிலையை எப்போதும் கொண்டிருப்பார்கள். அதனாலேயே மூன்றாம் தரப்பொன்றின் அவசியப்பாட்டின் முக்கியத்துவம் தமிழ் மக்களால் பல தடவை கோரப்பட்டது. சர்வதேச விசாரணையின் அவசியப்பாடு இங்கே தான் உணர்த்தப்படுகிறது. இத்தகைய ஆதாரங்கள் உண்மையானவை ஆயினும் அவற்றை சர்வதேச நிபுணர்கள் உறுதிப்படுத்துகின்ற போது அதற்கான அங்கீகாரத்தை தமிழர்களும் சிங்கள மக்களும் வழங்குகின்ற நிலை ஏற்படும். இதேபோன்று பல மனித அகழ்வுகளுக்கான எச்சங்களுக்கு அண்மைய அரசாங்கத்தின் முடிவுகளும் நீதித்துறையின் நியாயாதிக்கமும் பலவீனப்படுத்தியுள்ளது. இதுவே கடந்த 70 வருடங்களாக ஈழத்தமிழர் மீதான படுகொலைகளுக்கு நிகழ்ந்துள்ளது.
நான்காவது செம்மணி சித்துபாத் அகழ்வுகள் பற்றிய இடைக்கால அறிக்கைகளை வெளிப்படுத்திய போது தமிழ் மக்களும் ஈழத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகளும் அதன் உள்ளார்ந்த முக்கியத்துவத்தை அதிகம் முதன்மைப்படுத்தாது நகர்ந்து வருகின்றனர். இவ்வாறான பாதிப்புகள் உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டிய சூழலில் ஈழத்தமிழர்களது அரசியல்-சிவில் தரப்புகளின் நடவடிக்கைகள் காணப்படவில்லை. மாறாக அறிக்கை விடுதல் பாராளுமன்றத்தில் உரையாற்றுதல் மட்டுமே நிகழ்ந்து முடிந்துள்ளது. தமிழ் மக்களாக எழுச்சி பெற்று இவ்விடயம் தொடர்பில் ஒரு சூழலை வெளிப்படுத்துவதற்கு தயாராக இல்லாத நிலைமை இதன் முடிவுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எல்லாவற்றுக்கும் தமிழ் மக்கள் மௌனம் கடைப்பிடிக்கின்ற ஒரு நிலை அண்மைய காலப்பகுதியில் அதீதமாக காணப்படுகிறது. ஈழத்தமிழர்களாக எழுச்சி பெற வேண்டிய சூழலை விட்டு அவற்றுக்கான தீர்வுகளை அல்லது நியாயாதிக்கங்களை பெற முடியாது என்பது வரலாற்றின் அனுபவமாக உள்ளது. அத்தகைய போராட்டங்களை அகிம்சை ரீதியிலும் ஜனநாயக வழிமுறைக்கூடாகவும் மேற்கொள்வது அவசியமானது. அதனை முன்னெடுப்பது ஒன்றும் அரச விரோதமான செயல் கிடையாது. தமிழ் மக்கள் தமது உரிமையை அடைவதற்கான வழிமுறையாக ஜனநாயகப் போராட்டங்கள் அவசியமானவையாக உள்ளன. அதனை வேறு தரப்புக்கள் எதுவும் முன்னெடுக்காது. இது ஆட்சியையோ அரசாங்கத்தையோ நிராகரிப்பது கிடையாது. தமிழர் தமது உரிமையை வென்றெடுக்க போராடுவதேயாகும்.
எனவே தமிழ் மக்களின் மௌனம் அவர்களின் அரசியலை மட்டுமின்றி சமூக பொருளாதார பண்பாட்டு இருப்பையும் தேசிய அடையாளத்தையும் இல்லாமல் செய்யும். அத்தகைய சூழலுக்காக ஈழத் தமிழர்கள் தவறுகளை மேலும் ஏற்படுத்திவருகின்றனர். அரசியல்வாதிகள் சிவில் அமைப்புகள் அறிஞர்கள் இளைஞர்கள்; அனைவரும் மௌனத்தை ஓர் ஆயுதமாகக் கொண்டு செயல்படுவதன் விளைவு ஆபத்தானது. அது ஈழத்தமிழரின் எதிர்காலத்தின் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும்.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:யாழ் .தினக்குரல்)
