August 23, 2026
அரசியல் கட்டுரைகள்

இராஜதந்திரத்தின் உச்ச வெளிப்படாகும் இலங்கையின் நிலப்பரப்பும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பும்?

இலங்கை இந்திய உறவு சுமூகமானதாகவும் நம்பிக்கை ஊட்டக்கூடிய விதத்திலும் காணப்படுகிறது. .இரு நாடுகளும் அரசியல் ரீதியில் நிலவும் வாய்ப்புகளையும் சவால்களையும் இராஜதந்திர ரீதியில் சமன் செய்து கொண்டு இயங்குகின்றன. குறிப்பாக தென்னிலங்கை ஆட்சியாளர்கள் புலமை தளத்தில் நின்று கொண்டு இந்தியாவுடன் உறவை இராஜதந்திர ரீதியில் நகர்த்துவதில் வெற்றி கண்டு வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கை-இந்திய தரப்புக்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிட்ட இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கையின் நிலப்பரப்பு பயன்படுத்தப்படாது என்ற இலங்கையின் ஜனாதிபதி அநுரா குமாரதிஸநாயக்கா தெரிவித்திருந்தார். அது ஒரு வகையான இராஜதந்திர உரையாடலாகவே பார்க்கப்படுகிறது. சீன சார்பு ஜே.வி.பி.ஆட்சியில் இலங்கை சீன உறவின் பலம் இந்தியாவுக்கு அச்சத்தை அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும் என்ற அடிப்படையில் அதிகாரத்தை தக்கவைக்கவும் இலங்கையின் எதிர்காலத்தை நிலைப்படுத்தவும் இராஜதந்திர உரையாடல் ஜே.வி.பி. இன் ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. இக்கட்டுரையும் இலங்கையின் நிலப்பரப்பு இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடும் என்பதை தேடுவதாக உள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மஹினி கொலோன்(Mahishini Colonne) 18.08.2026 அன்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) 66வது பயிற்சி வகுப்பில் உரையாற்றுகின்ற போது இந்தியா-இலங்கை உறவுகளின் தற்போதைய நிலை சவால்கள் மற்றும் எதிர்கால திசை குறித்து விளக்கியுள்ளார். அவரது உரையாடல் இந்தியா-இலங்கை இருதரப்பு உறவுகள்: தீர்மானிக்கும் காரணிகள், நிலை: வாய்ப்புகள், சவால்கள் மற்றும் முன்னோக்கிய பாதை என்ற தலைப்பில் அமைந்திருந்தது. அவரது உரையில் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் நிலப்பரப்பு பயன்படுத்தப்படாது என்ற இலங்கையின் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார். அதேவேளையில், இலங்கையின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மூலோபாய சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்த உறவை சமமற்ற நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மை என்பதைவிட சமமற்ற நலன்களுக்கு இடையேயானது அல்ல என்று விவரித்தார், இந்துசமுத்திர அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் செழிப்பைப் பேணுவதில் இரு நாடுகளும் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் குறிப்பிட்டார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஆறு முன்னுரிமைகளை கொலோன் அடையாளம் காட்டினார். பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குதல், பகிரப்பட்ட செழிப்பை ஊக்குவித்தல், இணைப்பை விரைவுபடுத்துதல், ஒருங்கிணைந்த கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்குதல், மக்களில் முதலீடு ஊக்குவித்தல்; மற்றும் பரந்த இந்துசமுத்திர பிராந்தியத்தில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் என்பதை வலியுறுத்தினார். இதன் உள்ளார்ந்த அம்சங்களை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

முதலாவது திருகோணமலை இயற்கை துறைமுகம் இந்தியாவின் நலன்களுக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய தந்திரோபாய அமைவிடமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய தந்திரோபாய நிலையம்; இந்தியாவின் எண்ணைக் குதங்களை அதிகம் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி இக் கிழக்கு கடற்கரை வங்காளவிரிகுடாவின் பாதுகாப்பு கட்டமைப்புக்கு மிகப் பிரதான மையமாக விளங்குகின்றது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலையின் அதன் கடல் பரப்பும் இந்திய நலன்களோடு அதிக நெருக்கம் கொண்டது. அதனை வேறு சக்திகள் கையகப்படுத்திவிக் கூடாது என்பதில் இந்தியாவின் பாதுகாப்பு அக்கறை அதீதமாகக் காணப்பட்டாலும் அதன் மீதான கவனம் ஜப்பான, தென் கொரியா, நோர்வே போன்ற அமெரிக்க நட்பு நாடுகளின் தொழிநுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இலங்கையின் தமிழர் வாழும் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் அதி முக்கியத்துவம் பெற்ற தீவுகள் மற்றும் தலைமன்னார் என்பன இந்தியாவுக்கும் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கும்; இடையில் காணப்படும்; நெருக்கமான அமைவிடம் சார்ந்த பிரதேசங்களில் வெளிச்சக்திகளின் இராணுவ ரீதியான நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கின்றது. அது மட்டுமல்ல இக்கடல் பகுதி ஆயுதக் கடத்தல் கள்ளக் கடத்தல் சட்டத்துக்கு முரணான இராணுவ குழுக்களில் நகர்வுகள் ஆகியன நிகழ்வதற்கான அதிக வாய்ப்பான கடல்பகுதியாகக் காணப்படுகிறது. சட்டவிரோத கடல் சார் நடமாட்டங்கள் தனிமனித கடத்தல்கள் புலனாய்வு நடவடிக்கைகள் என்பன அதிகமாக வடக்கு கடல்பகுதியை அண்டி நிகழ வாய்ப்புள்ளது. இப்பகுதி ஊடாக போதை பொருள் கடத்த கடல் வழியாக நிகழ்வாக அதிக புள்ளி விவரங்களும் தகவல்களும் உண்டு. இது இந்தியாவை நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்கும் கடல் பகுதியாகும். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சியும் இக்கடல் வழியே சாத்தியமானது. ஆத்தகைய பேராட்டத்தை இக்கடல் வழியே முடிபுக்கும் கொண்டுவந்தது என்பதை நினைவு கொள்ளுதல் வேண்டும்.

மூன்றாவது ஹம்பாங்தோட்டை துறைமுகம் பிரதான கடல் போக்குவரத்து பாதையாக இந்தியாவுக்கு அண்மையில் இருப்பதும் அது சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதும் வர்த்தக ரீதியான பரிமாணங்களை மட்டுமின்றி பல்பரிமாண தன்மை கொண்ட கடல் பகுதியாக காணப்படுவதும் நீண்ட கால நோக்கில் நெருக்கடி மிக்க ஒன்றாக மாறுவதற்கான வாய்ப்பு தரக்கூடியது என இந்திய தரப்பு கருதுகிறது. சீனாவின் இராணுவ தளமாக மாற்றப்படுவதாக உரையாடல்கள் காணப்படுகிறன. ஆனால் அதக்கான தரவுகள் ஆதாரபூர்வமாக நிறுவப்படவில்லை. ஆனாலும் எதிர்கால நோக்கி இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. ஹம்பாந்தோட்டை முதல் காங்கேசன்துறை வரை தரைப்பாதையை அமைக்கும் திறன் சீனாவிடம் உள்ளதாக முன்னாள் அமெரிக்க இராஜதந்திரியும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் தாக்கம் செலுத்தியவருமான வில்லிம் ஆவிரி (William H. Avery ) தனது நூலான China’s Nightmare, America’s Dream: India as the Next Global Power 2012 இல் குறிப்பிட்டது கவனத்திற்குரியது.

நான்காவது இலங்கைத் தீவிலுள்ள துறைமுகங்களை தனித்தனியாக பார்ப்பதை விட அவற்றுக்கு இடையிலே நிலவும் தொடர்புகளும் அதன் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தக் கூடியது. குறிப்பாக கொழும்பு துறைமுகம், திருகோணமலை ஹம்பாந்தோட்டை, காங்கேசன்துறை, தலைமன்னார் போன்ற துறைமுகங்களின் இணைப்புகளைக் கொண்ட கடல் சார்ந்த அமைப்புகளும் அவற்றுக்கு இடையிலான தொடர்பாடல்களும் இந்திய தேசிய பாதுகாப்பின் கோணத்தில் முக்கியமானவை. இலங்கையின் கடல் படையின் தந்திரோபாயமான தகவல்களிலும் இத்துறைமுகங்கள் எவ்வாறு பிற நாடுகளின் தந்திரோபாய ஆளுகைக்குள் காணப்படுவது இந்தியாவுக்கான முக்கிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது என்பது உரையாடப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என்ற முடிவை நோக்கியா சந்தேகங்கள் தனித்து புவிசார் அரசியல் ரீதியில் எழுந்தது மட்டுமல்ல. மாறாக அதன் உட்கட்டமைப்பு மாதிரிகளிலும் பிரதான வெளிதரப்பு இந்தியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு நெருக்கடியை அல்லது பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற ஆய்வு இலங்கை கடற்படையின் தகவல்களில் வலிமையானதாக உள்ளது.

ஐந்தாவது இலங்கை அருகே செல்லும்; கிழக்கு-மேற்கு கடல் பாதையானது எப்போதும் ஆபத்துக்குரியது என்ற எண்ணம் இந்தியாவிடன் உள்ளது. குறிப்பாக புலனாய்வு தகவல்களை சேகரிப்பதற்கு அமைவாக இருப்பதற்கும் அதன் மீது செல்வாக்கு செலுத்தும் பிற நாடுகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. இதே போன்று துறைமுகங்களுடன் இணைந்த விமானப் பயணங்கள் நீர்மூழ்கிக் கப்பல்களின் கேபிள்கள் தொலை தொடர்புகள் தரவுமையங்கள் மற்றும் துறைமுகத் தகவல்களுக்கான தொழில் நுட்ப அமைப்புகள் என்பன கண்காணிக்கப்படக் கூடிய வாய்ப்போடு வெளிப்புற சக்திகளின் இலங்கைத் துறைமுகங்கள் தங்கியிருக்கின்றன. இணைய வலை அமைப்புக்கள் அதிகம் பிற சக்திகளின் தொழில்நுட்ப சாதனங்களது கட்டுப்பாட்டில் இருப்பதனால் பாதுகாப்பு மீறல்கள் சாத்தியப்பட வாய்ப்பு உண்டு. இது இந்தியாவினுடைய பிராந்திய மட்டத்தில் வெளிப்புற சக்திகளின் இலக்கை நோக்கிய கண்காணிக்கும் களமுனை தளங்கள் தொடர்பாடல்களை பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பாக்குநீரிணை மன்னர் வளைகுடா போன்ற பிரதேசங்கள் சிறியாளவிலான கடற்படைக்கலங்களின் போக்குவரத்து மையமாக இருப்பதனால் அவை எப்போதும் இந்திய பாதுகாப்பு நலங்களுக்கு அச்சுறுத்தலை தரக்கூடியதாக காணப்படுகிறது. இதன் வழி சட்டவிரோத பொருட்கள் நபர்கள் கடத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் அவதானிக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே கடலோர பாதுகாப்பு பிரிவு கடல்சார் சட்ட அமுலாக்கம் முன்னுரிமை அதிகப்படுத்தி இருப்பதாக குறிப்பிடுகின்றது. அது மட்டுமின்றி இலங்கையின் மூலோபாய ரீதியான உத்திகளை வெளிநாட்டு சக்திகள் அதிகம் கொண்டிருப்பது இந்தியா தமது பாதுகாப்பு தொடரில் அதிக கவனம் கொள்ள வேண்டிய நிலை நிலவுகிறது. இந்தியாவுக்கு அருகில் வலிமையான போட்டியிடும் திறன் கொண்ட இராணுவ உளவு துறைகளில் தடங்கள் அதிக ஆபத்தை உணர்த்துவதால் இந்தியா எப்போதும் ஆபத்தான இருப்பையே கொண்டுள்ளது.
இவை அனைத்துக்கும் பின்னால் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளும் கடந்த கால உடன்பாடுகளும் நடவடிக்கைகளும் காரணமாக உள்ளன. ஹம்பாந்தோட்டை 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்ட செய்முறை எந்த அரசாலும் மீற முடியாதது என்பது மட்டுமல்ல அதனை ஜே.வி.பி. அரசாங்கமும் பேணுவதிலும் பராமரிப்பதிலும் கவனம் கொள்கிறது. அண்மையில் இந்தியாவுக்கான வெளயுறவுச் செயலாளரின் வருகையின் போது முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் இலங்கை ஆட்சியாளர்கள் எத்தகைய பதிலையும் வெளிப்படுத்தவில்லை என்பதும் அதற்கு பதிலாக புதிய சீன தூதுவரை வரவேற்றதோடு சீன வர்த்தகுழுக்களோடு பாரிய ஒத்துழைப்புக்களையும் முதலீட்டுக்கான வாய்ப்புகளையும் விருத்தி செய்யும் விதத்தில் இலங்கை ஜனாதிபதியின் நடவடிக்கை அமைந்திருந்தது. ஒட்டுமொத்தமாக இதனை அவதானிக்கின்ற போது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இலங்கை தீவை பயன்படுத்துவதற்கு பிற சக்திகளுக்கான வாய்ப்பை இலங்கை வழங்கிவிட்டு இராஜதந்திர ரீதியில் உரையாடுவதாகவே தெரிகிறது. இது இந்தியா புரிந்து கொண்டது என்பதை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் அறிவிப்பு அமைந்திருந்தது. அதனை இந்தியாவுக்கான இலங்கை தூதுவரும் மிகத் தெளிவாகவும் உத்திகள் நிறைந்த விதத்திலும் வெளிப்படுத்தி உள்ளார். அவர் முன் வைத்திருக்கும் ஆறு பிரதான அம்சங்களும் இலங்கை இந்திய உறவைப் பலப்படுத்துவது என்பதை விட இராஜதந்திர ரீதியான வார்த்தைகளுக்குள்ளால் இலங்கை இந்திய உறவு கட்டி எழுப்பப்படுகிறது என்பதாகவே தெரிகிறது. அத்தகைய இராஜதந்திர உத்தியின் மீதே இலங்கை தனது இருப்பை பலமானதாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இலங்கை தீவு போன்று மாலைதீவும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளும் இந்தியாவின் பாதுகாப்பு பொறுத்து முக்கியம் பெறுகின்ற பிரதேசங்களாக காணப்படுகிறன. ஆனால் இலங்கை பொறுத்து இந்தியாவுக்கு இருக்கும் அச்சுறுத்தலும் சந்தேகமும் ஏனைய நாடுகளை விட அதீதமானதாக காணப்படுவது என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக காணப்படுகிறது.

இது சார்ந்த புரிதல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளின் பக்கங்களில் இல்லை என்பது மட்டுமல்ல அதற்கான முக்கியத்துவத்தை பற்றிய உரையாடல் கூட அவர்களிடம் ஒருபோதும் எழுச்சி பெறவில்லை. எதிர்காலத்திலும் அதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகின்றது. மாறாக இந்திய தரப்பினர் இலங்கை தமிழர்கள் இவ்வகை விடயங்கள் பற்றிய உரையாடலை முன்வைக்கின்ற போது அதன் மீது கேள்வி எழுப்புவதும் அதனை கடந்து செல்வதும் அதற்கான வாய்ப்புகளை தாம் பரிசீலிப்பதாகவும் வெளிப்படுத்துகின்றனர். இதுவே தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை இராஜதந்திர ரீதியான வெற்றி கொள்வதற்கான வாய்ப்பான நிலையாகும். உலகளாவிய ரீதியில் இந்தியாவுடன் அதிகமான நெருக்கம் உள்ள நாடாக இலங்கை காணப்படுவது என்பது அண்மைய புள்ளி விபரங்களாகும். அவ்வாறாயின் மேலே குறிப்பிட்டு ஒவ்வொரு அம்சங்களும் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வகை அச்சுறுத்தலை கொண்டது என்ற கேள்வி முக்கியமானது. அதனை கடந்து எவ்வாறு இரண்டு நாட்டுக்கும் இடையிலான நட்புறவு நிலவுகிறது. இதனாலேயே இராஜதந்திர ரீதியில் தென் இலங்கை இந்தியாவை கையாளுகின்றது என்ற முடிபுக்கு வரத்தூண்டுகிறது

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.

(நன்றி:தினக்குரல்)