இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றவர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா என்பதை இலங்கையர் மட்டுமல்ல தென்னாசியப் பிராந்தியத்தை சேர்ந்த எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது. அவரது சுதந்திரத்துக்கு முற்பட்டகால அரசியலிலிருந்து தொடங்கிய இனவாத உணர்வை நீண்ட அரசியல் பயணத்தில் கண்டு கொள்ள முடிகிறது. ஜே.ஆர். தொடர்பில் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும் ஜே.ஆரின் குடும்ப உறவினருமான ரணில்விக்ரமசிங்கஹா 20.09.2026 இல் ஜே.ஆர். 1978 ஆம் ஆண்டு இலங்கையில் மேற்கொண்ட புரட்சி தொடரப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். பொருளாதார மாற்றம், கல்வி, வீடமைப்பு, மின்சார வசதி மற்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் ஆகியவற்றை புரட்சியின் பகுதிகளாகக் குறிப்பிட்டார். ஜே.ஆர். உருவாக்கிய மரபைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார் ரணில்விக்கிரமசிங்ஹா. இலங்கையின் மேட்டுகுடி வர்க்கத்தின் நலன்களுக்கான பொருளாதார கட்டமைப்புக்களையும் அரசியல் இலாபங்களையும் சார்ந்தே அவரது அறைகூவல் அமைந்திருந்தது. ஆனால் இலங்கை தீவில் வாழும் தமிழ் மக்கள் ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில் அனுபவித்த உண்மையான பக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் ஓர் புரட்சியாளரா? அல்லது ஒரு கனவான? அல்லது ஒரு தந்திரசாலியா? என்பதை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலில் புரட்சி என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்வது அவசியமானது. புரட்சி என்பது ஒரு அமைப்பில் ஏற்படும் திடீரென நிகழும் தீவிரமான மாற்றத்தைக் குறிப்பதாகும்.. இது பெரும்பாலும் மக்களால் ஒரு அரசாங்கம் போராட்டத்தின் மூலம் மாற்றுவதனைக் அடையாளப்படுத்துவதாகும். ஒரு இயக்கத்திலோ சிந்தனையிலோ ஏற்படும் முழுமையான மாற்றத்தையோ புரட்சி என சதாரணமாக கருதமுடியும். .உலக வரலாற்றில் கைத்தொழில் புரட்சி, அமெரிக்கப் புரட்சி, ர~;சியப் புரட்சி, சீனப்புரட்சி, கணணிப் புரட்சி என்பன முதன்மையான புரிதலுக்கு உட்பட்டவை. சமூக மற்றும் அரசறிவியலில் புரட்சி என்பது அரசாங்கத்திலும் அது தொடர்பான அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகளிலும் ஏற்படும் ஒரு பாரிய திடீரென நிகழும் வன்முறையான மாற்றமாகும். தொழிற்புரட்சி போன்ற சொற்றொடர்களில் புரட்சி ஒப்புவமையின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. இங்கு இது பொருளாதார உறவுகள் மற்றும் தொழில்நுட்ப நிலைமைகளில் ஏற்படும் ஒரு தீவிரமான மற்றும் ஆழமான மாற்றத்தைக் குறிக்கிறது.
இதன் முக்கியத்துவத்தை இலங்கைத் தீவின் ஒரு பகுதியில் வாழும் வடக்கு கிழக்கு உட்பட இலங்கை முழுவதும் உள்ள தமிழ் மக்கள் எத்தகைய விளைவுகளை எதிர்கொண்டார்கள் என்பதை ஆழமாக புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதுவே ஜே.ஆர். புரட்சியாளனா என்பதை நிறுவ உதவும்.
முதலாவது இலங்கையின் சுதந்திரத்துக்கு முற்பட்ட 1944 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்க சபையில் முன்மொழிந்த அரசகரும மொழியாக சிங்களம் என்பது அவரது முதல் அரசியல் அமைப்பு ரீதியான முயற்சியாகும். ஆனால் அப்போதைய அரசாங்க சபையில் அத்தகைய வரைபுக்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக தமிழும் எனச் சேர்த்துக் கொள்ள வழி ஏற்பட்டது. ஆனால் ஜே.ஆர். சிங்கள மொழிக்கு சார்பான அணுகுமுறையை 1944 ஆம் ஆண்டே முன்வைத்திருந்தார். இது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தோற்றப்பாடு மட்டுமே. 1957 இல் எட்டப்பட்ட பண்டா-செல்வா உடன்படிக்கையை தனிநாட்டுக்கான முதல் அடி எனக்கூறி ஊர்வலம் நிகழ்த்தி அவ் ஒப்பந்தத்தை கிழித்தெறிய காரணமானவராக விளங்கினார்.
இரண்டாவது 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் தலைமையில் வரையப்பட்ட அரசியல் அமைப்பு இலங்கைத் தீவின் வரலாறு முழுவதும் அடைந்த மற்றும் அடைந்து கொண்டிருக்கும் நெருக்கடியை புரிந்து கொள்வது கடினமானதல்ல. குறிப்பாக 1979 ஆம் ஆண்டு எத்தகைய நீதிப் பொறிமுறைக்கான விவாதமுமின்றி தற்காலிகமாகவும் அவசரமாகவும் முன்மொழியப்பட்ட பயங்கரவாத தடை சட்டம் இன்றளவும் நிலைத்திருப்பதற்கு பின்னால் ஜே.ஆர்.இன் தந்திரம் பிரதான காரணமாகவே தெரிகிறது. அது மட்டுமல்ல அத்தகைய பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் இளைஞகள் மத்தியில் ஏற்படுத்திய விளைவுகள் கொடுமையானவை. அதற்கு பின்னால் ஜே.ஆர்.இன் தந்திரம் பிரதானமான அம்சமாக பார்க்கப்படுகின்றன. இலங்கைத் தீவை நிலையான உடைவுக்கான காரணியாக மாற்றியதில் 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புக்கு பிரதான பங்கிருந்தது.
மூன்றாவது 1977 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நிகழ்ந்த இனக்கலவரத்தை அடுத்து வானெலியில் (17 ஆகஸ்ட்)உரையாற்றி ஜே.ஆர். போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் (றுயச அநயளெ றயச் pநயஉந அநயளெ pநயஉந ) என சூழுரைத்தவர். இதனை தமிழர்கள் இலகுவில் மறந்துவிட முடியாது. தனது உள்நாட்டு மக்களுக்கு எதிராகவே இராணுவத்தை கட்டமைத்து அரசியல் ரீதியில் தனது அபிலாசைகளை நிறைவு செய்வதற்கு போரைப் பிரகடனப்படுத்தியவர். ஆதன் விளைவுகளை இலங்கைத் தீவு தற்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. முடிவற்ற துயரத்துக்கு பின்னால் ஜெயவர்த்தானவின் போர் பிரகடனம் ஒன்றாகவுள்ளது.
நான்காவது 1977 ஆம் ஆண்டு மற்றும் 1983 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் போது ஜே.ஆர் இன் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி நாடு முழுவதும் நிகழ்ந்த வன்முறையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் 17 திகதி வானெலியில் ஜே.ஆர். விசேட உரையாற்றியிருந்தார். அதில் சிங்கள மக்களின் இயல்பான கோபத்தின் வெளிப்படாகவே இக்கலவரம் அமைந்துள்ளது என்றார். அவரது அட்சியின் போதே 1981 இல் யாழ்ப்பாண நூலக எரிப்பு நிகழ்ந்தது. அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கையாக அமைந்திருந்தது. 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிரான நாடு தளுவிய இனக் கலவரம் வெடிப்பதற்கு 12 நாட்களுக்கு முன்னர் லண்டன் டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு குறிப்பிடும் போது ஜே.ஆர். யாழ்ப்பாண மக்கள் என தமிழ் மக்களை விழித்து தற்போது அவர்களின் உயிர்களைப் பற்றியோ,அவர்கள் எம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ நாம் சிந்திக்க முடியாது என்றார். இலங்கையில் நிகழ்ந்த மிகக் கொடூரமான இனப்படுகொலைக்கு பின்னால் ஆட்சியாளர்களும் ஆட்சியாளர்களுடைய எண்ணமும் பிரதான இடம் வகித்தன. இலங்கையின் முன்னணி பல கழகம் ஒன்றில் பணியாற்றிய அறிஞர்கள் குறிப்பிடுகின்ற போது வன்முறைக்கு பின்னால் ஆட்சியாளர்களின் பங்கே அதிகமாகும் என முதன்மைப்படுத்தி இருந்தனர்.
ஐந்தாவது 1978 ஆம் ஆண்டிலிருந்து 1989 ஆம் ஆண்டு வரை இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் ஜே.ஆர்.இன் தலைமையில் காணப்பட்டதோடு இலங்கை இந்தியா ஒப்பந்தம் யாழ்ப்பாணத்தின்; வடமராட்சி பிரதேசம் நோக்கிய ஒப்ரே~ன் லிபரே~ன் தாக்குதல் போன்ற விடயங்கள் நிகழ்ந்தன. அவற்றுக்கு பின்னால் ஜே.ஆர். இன் இராஜதந்திரமும் இந்திய எதிர்ப்பு வாதமும் முதன்மையானதாக அமைந்திருந்தது. தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது ஊடாகவும் இலங்கை தீவின் அரசியலை மாற்றிக்கொள்வதில் அதிகமான பங்கு ஜே.ஆர். முதன்மைப்படுத்தியிருந்தார். ஆனால் நடைமுறையில் அத்தகைய செயலுக்கு பின்னால் ஜே.ஆர்.இன் அரசியலின் மறுபக்கத்தைக் கண்டுகொள்ள முடிந்தது. அவரது விருப்பு தமிழருக்கு எதிரான அரசியலை உருவாக்குவதிலும் வெற்றி கொள்வதிலும் கணிசமான பங்கை வகித்தது. இலங்கை தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து வகையான ஆக்கிரமிப்புக்களும் படுகொலைகளும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அதிகாரத்த்திற்கானதாக மட்டுமல்லாது இலங்கைத் தீவின் இன உணர்வுக்கானதாக அமைந்திருந்தது.
எனவே தான் ஒரு புரட்சியாளர் என்பதை கூறுவதை விட அவர் ஒரு தந்திரசாலியாக விளங்கினார் என்பது மிகப் பொருத்தமானது. அரசியல் களத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் தந்திரமான நரி என்று வர்ணிப்பது அதைவிடவும் பொருத்தமானதாகவே தெரிகிறது. தமிழ் மக்களிடமும் சரி பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலும் ஜே.ஆர். ஏற்பட்டுத்திய இரத்தம் சிந்தும் துயரங்களுக்கு பின்னால் 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு பிரதான காரணமாக விளங்கியது. அத்தகைய அரசியலமைப்பை புரட்சிகரமான மாற்றம் என்று அழைப்பது பொருத்தம் இல்லை என்பதை இனம் கண்டுகொள்ள முடிகிறது. புரட்சியின் பக்கங்களை அடையாளம் காட்டக்கூடிய அளவுக்கு அதனுடைய தனித்துவம் அமைந்திருக்கவில்லை. மாறாக 1978 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் தாராளமயப்படுத்தப்பட்ட இலங்கை தீவு இராணுவ ரீதியான அணுகுமுறைகளால் அத்தகைய எண்ணங்களை இழந்தது. அது தராளமயவாகத்துக்கான சிந்தனையை முழுமையாக தகர்த்தெறிந்தது. இதனை புரட்சி என்று மேல்தட்டு வர்க்கம் கருதினாலும் ஒட்டுமொத்த இலங்கையர்கள் இந்த அரசியல் யாப்பினால் சுதேச இருப்பை இழந்ததுடன் வடக்கிலும் தெற்கிலும் இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுத்திருந்தது. நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் ஆதிக்கம் ஆட்சியாளரின் இருப்பை ஆசுவாசுப்படுத்தியதே அன்றி சமானியனது வாழ்வை செழுமைப்படுத்தவில்லை. தந்திரத்தால் எழுந்த அரசியல் இலங்கைத் தீவை இரத்தக்களரியாக்குவதில் முடிந்தது. ஜே.ஆர். இன் தந்திர அரசியல் பல புரட்சிகளுக்கு மூலவேராய் அமைந்தது என்பதை மறுக்க முடியாது.
பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்
( நன்றி:யாழ்.தினக்குரல் )
