June 27, 2026
அரசியல் கட்டுரைகள்

சீனா வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயமும் ஏற்படப்போகும் அரசியல் மாற்றங்களும்

சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் ஜி இந்து சமுத்திர நாடுகளுக்கு ஆரம்பித்துள்ள விஜயம் இவ்வாரத்தின் இறுதிப்பகுதியில் இலங்கையை நோக்கியதாக அமைய உள்ளது. இந்து சமுத்திர விளிம்பு நாடுகளை மையப்படுத்தி அவரது விஜயம் அமைந்திருந்தாலும், ஆபிரிக்காவின் கென்யா, கொமோரோஸ் மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்வதாக இருந்தாலும் தென்னாசியா நாடுகளான இலங்கைக்கும் மாலைதீவுக்கும் விஜயம் செய்வது பிராந்தியரீதியிலான போட்டித்தன்மைக்கான வலுவை அதிகரித்துள்ளது. இலங்கை சீனாவுடன் வெளியுறவுக்கொள்கையை கட்டமைப்பதா அல்லது இந்திய அடங்கலாக மேற்கு நாடுகளா என்ற இழுபறிக்குள் காணப்படுகையில், சீனா வெளிவிவகார அமைச்சரின் வருகை இலங்கையின் போக்கினை அடையாப்படுத்துவதாக அமைகின்றது. இக்கட்டுரை சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை வருகை வெளிப்படுத்த்போகும் அரசியலை தேடுவதாகவே அமைய உள்ளது.

இலங்கை மற்றும் இந்து சமுத்திர நாடுகளுக்கான சீனா வெளிவிவகார அமைச்சரின் விஜயம் குறித்து செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் குறிப்பிட்ட விடயம் கவனத்திற்குரியது. ஆபிரிக்க நாடுகளுக்கான விஜயமானது கடந்த 32வருடங்களாக சீன வெளியுறவு அமைச்சு ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பத்தில் மேற்கொள்கின்ற விஜயமாக அமைந்திருப்பதோடு அத்தகைய விஜயம் பாரம்பரியத்தை முதன்மைப்படுத்துவதாகவும் காணப்படுகிறத. இதனைத்தொடர்ந்து இடம்பெறும் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான விஜயம் தனித்துவமாக அமைகிறது. சீன-மாலைதீவு உறவு இரு நாட்டுக்குமான இராஜதந்திர உறவினை 50ஆண்டுகள் நிறைவு செய்கின்றதெனவும், சீன-இலங்கை இராஜதந்திர உறவு 65வது ஆண்டை நிறைவு செய்கிறதெனவும், சீனாவுக்கும் இலங்கைக்குமான ரப்பர்-அரிசி ஒப்பந்தம் 70ஆண்டுகளை பூர்த்தி செய்கின்றதெனவும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சீன செய்தித்தொடர்பாளரின் கருத்தானது சீனாவுக்கும் இந்து சமுத்திர நாடுகளுக்குமான உறவின் பாரம்பரியத்தை கோடிட்டு காட்டுவதாகவே அமைந்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் பாரம்பரிய உறவின் தொடர்ச்சி என்பதை எத்தரப்புக்களாலும் நிராகரிக்க முடியாது. 1952களில் இலங்கையின் ரப்பரை அமெரிக்க உட்பட மேற்கு நாடுகள் கொள்வனவு செய்ய மறுத்த போதே ரப்பர்-அரிசி உடன்படிக்கை இரு நாட்டுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் சீனாவுடனான உறவு நெருக்கடி கால உறவாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தகைய நெருக்கடி கால உறவு பாதுகாப்பையும், உத்தரவாதத்தையும் ஆபத்துமிக்க புவிசார், பூகோள சக்திகளை எதிர்கொள்வதற்குமான உறவாக மாறி உள்ளது. 1952கள் போன்றே 1990களுக்கு பின்னான பனிப்போருக்கு பிந்தைய காலப்பகுதியில் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் ஒற்றைமைய உலகம் இலங்கை போன்ற சிறிய நாடுகளை கைவிட்டு இந்தியா போன்ற வளமுள்ள பெரிய நாடுகளை அரவணைத்து இயங்க ஆரம்பித்துள்ளது. இதுவே, இலங்கை-சீனாவுடனான நெருக்கத்தை அதிகரிக்க வழிவகுத்தது. அத்தகைய சந்தர்ப்பத்தில் ஆட்சியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்காவிற்கும், வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரிற்கும் இப்பாரம்பரிய உறவை பேணியமையில் அதிக பங்களிப்பு காணப்படுகிறது.

இவ்வாறே இலங்கை-சீனா உறவின் பாரம்பரியம் கட்டி வளர்க்கப்படுகிறது. ஏறக்குறைய 2005இலிருந்து 2015இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சீன இராஜதந்திர நோக்கு நிலையிலும் இராணுவ நோக்கு நிலையிலும் 35இற்கு மேற்பட்ட சீன இராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். எனவே, சீன-இலங்கை உறவு அரசியல் பொருளாதார இராணுவ நிலையினை கடந்து இராஜதந்திர உறவாக பரிணாமம் பெற்று இருக்கிறது என்பதனை கடந்த கால அவதானிப்புக்கள் உணர்த்துகிறது. அந்தவரிசையிலேயே சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் அமைய உள்ளது. அதனை விரிவாக நோக்குதல் அவசியமாகும்.

முதலாவது, இலங்கை பொறுத்து இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும் ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணிய சுவாமி அண்மையில் குறிப்பிட்ட கருத்து கவணத்திற்குரியதாகிறது. குறிப்பாக, இந்தியா இலங்கைக்கு கடன் வழங்க மறுக்கும் சூழல் ஏற்படுமாயின் இந்து சமுத்திரத்தில் சீனாவுக்கு ஒரு இளைய சகா கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் எனக்குறிப்பிட்டார். ஆனால் உண்மையில் இலங்கை இராஜதந்திரரீதியில் சீனாவின் நட்பு நாடாக பல தசாப்தங்களுக்கு முன்னரே இணைந்துவிட்டது. இந்திய-இலங்கை உறவில் ஏற்பட்டுள்ள விரிசலும் இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியும் சீனாவை இலங்கை மற்றும் மாலைதீவினுடனான அதிக நெருக்கத்தின் பிரதிபலிப்பு என்பது மறுக்கமுடியாது. அதன் விரிவாக்கமும் தென்னாசிய பிராந்தியத்திலும் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் ஏற்ட்டுள்ள அரசியல் கொதிநிலைக்கு அடிப்படையாகும். இவ்அடிப்படைக்குள்ளாலேயே சீனா வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தை குறிப்பிட வேண்டும். இலங்கையானது இந்து சமுத்திர மூலோபாய நிலையிலும் இந்து சமுத்திரத்திற்கு அமைவாக உள்ளமையும் சீனா வெளிவிவகார அமைச்சரின் தனித்துவமாகும்.

இரண்டாவது, சீனா வெளியுறவு அமைச்சர் பொருளாதாரரீதியான ஒத்துழைப்பை அதிகரிக்கின்ற நோக்குடனேயே இலங்கைக்கான விஜயத்தை திட்டமிட்டிருக்க வாய்ப்பு அதிகமுண்டு. காரணம் இந்தியாவுடன் கோரிய கடனை இந்திய முழுமைப்படுத்தாத நிலையில் சீன வெளிவிவகார அமைச்சரின் வருகை முக்கியத்துவப்படுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுவதோடு இந்திய அரசியல் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வெளியிட்ட கருத்து சாதரணமானதாக கொள்ள முடியாது. சுப்பிரமணிய சுவாமிக்கும் இலங்கையின் பிரதமருக்கும் இடையில காணப்படும் தனிப்பட்ட நெருக்கம் அத்தகைய செய்தியை வெளிப்படுத்துவதற்கு வழிவகுத்திருக்க முடியும். எனவேதான் சீன வெளிவிவகார அமைச்சர் பாரியளவான பொருளாதார ஒத்துழைப்பை இலங்கையோடு மேற்கொள்வதற்கான வாய்ப்பும் அதற்கூடாக இலங்கை இந்து சமுத்திர நாடுகளுக்கூடாக வெற்றிகரமான மூலோபாய உறவாக பலப்படுத்துவதற்கு வாய்ப்பை வழங்குவதாக அமைகிறது.

மூன்றாவது, இத்தகைய சீன-இலங்கை நெருக்கானது, பிராந்திய அரசான இந்தியாவை இலங்கை பொறுத்து கொண்டிருக்கும் அணுகுமுறை மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அத்தகைய வாய்ப்பை இந்தியா மேற்கொள்ளாத சூழல் ஒன்றுக்குள் இந்தியாவை கையாளும் விதத்திலேயே திருகோணமலை எண்ணெய்க்குதங்களை மற்றும் யாழ் குடாநாட்டில் உள்ள தீவுகளை கையாளுகின்ற நோக்கில் இலங்கை ஆட்சியாளர்கள் நகர்கின்றனர். ஆனால் அவை அனைத்தும் இந்தியாவை தனித்துவமான புதிய அணுகுமுறைக்கு அல்லது இலங்கைக்கு எதிரான அணுகுமுறைக்குள் செயற்பட விடாது தடுப்பதற்கான உத்திகளாகவே அமைந்துள்ளது. அத்தகைய உத்திகளை தீர்வுகளாக இந்திய கருதாத சூழலே இந்தியாவுக்கு ஆரோக்கியமான இருப்பு உத்தரவாதப்படுத்தப்பட்டது.

நான்காவது, சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கைக்கான பயணம் அமெரிக்க மற்றும் இந்தோ-பசுபிக் நாடுகளின் நலன்களுக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக இந்தோ-பசுபிக் உபாயத்தின் பிரதான நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுகிறது. இலங்கையை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் சீனாவிடமிருந்து விடுபட வைப்பது அதன் மூலம் இப்பிராந்திய நாடுகளிடையே சீன மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதத்திலேயே குளோபல் கேட்வேயை மேற்கு நாடுகள் உருவாக்கி உள்ளது. இச்சூழலில் இலங்கையின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார விருத்தியை முதன்மைப்படுத்தும் விதத்திலான திட்டமிடல்களை மேற்கு வகுத்து கொண்டிருக்கின்ற போதே சீனா வெளியுறவு அமைச்சரின் விஜயம்; திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதனால் ஏற்படக்கூடிய நேரடி விளைவுகள் அமெரிக்க உட்பட்ட மேற்கு நாடுகளுக்கு அவர்களது திட்டமிடலை குழப்பத்துக்கு உள்ளாக்குவதோடு அவர் மீதான தீவிர தன்மையை ஊக்குவிப்பதாக அமைய உள்ளது.

ஐந்தாவது, சீன வெளியுறவு அமைச்சரின் இந்து சமுத்திர நாடுகளுக்கான பயணமும் இந்தோ-பசுபிக் உபாயமும் இப்பிராந்தியத்;தில் உள்ள தேசிய இனங்கள் மீதும் தேசிய இனப்பிரச்சினைகள் மீதும் கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்பை கொண்டுள்ளது. அதாவது, 1990களில் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த போது மேற்குலக ஏகாதிபத்தியங்கள் கிழக்கு ஐரோப்பிய தேசிய இனங்களையும் தேசிய இனப்பிரச்சினைகளை தீர்ப்பதிலும் அதிகளவிலான கரிசணைகளை கொண்டிருந்தனர். அத்தகைய அணுகுமுறையொன்று இந்தோ-பசுபிக் உபாயத்தினூடாக பசுபிக் மற்றும் இந்து சமுத்திர நாடுகளிடையே நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தேசிய இனங்கள் மீது கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. அதனை ஒரு உத்தியாக மேற்கு நாடுகள் பின்பற்றுவதற்கான சூழமைவும் இலங்கைத்தீவில் உள்ள தேசியங்களுக்கும் உரித்துடையதாகவே உள்ளது. அத்தகைய மேற்கு ஏகாதிபத்தியத்தின் அணுகுமுறையை இந்தியாவும் அணுசரித்து செயற்படுமானால் அதற்கான சூழலை இந்தியாவை நோக்கி நகர்த்தப்படுமாக இருந்தால் இப்பிராந்தியத்தில் உள்ள தேசிய இனப்பிரச்சினைகள் ஏகாதிபத்தியத்தின் விருப்புக்குள்ளால் கையாளப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் தென்படுகிறது.

எனவே, சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் அதிக விளைவை இலங்கை-இந்திய உறவில் மட்டுமன்றி தேசிய இனங்கள் சார்ந்தும் ஏற்படுத்தக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. எனவே அதன் அடிப்படைக்கூடாக சரியான உத்திகளூடாக அரசுகளும் அரசுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளும் கட்டமைக்கப்படுமாக இருந்தால் அதனூடாக இப்பிராந்தியத்தின் பொருளாதாரம், அரசியல், இராணுவரீதியிலான அம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனை கண்டறிவதற்கான அறிவும் அதற்கான செயல்வடிவமும் பிராந்திய நாடுகளுக்கும் அதன் அரசியல் தலைமைகளுக்கும் அவசியமானதாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)