ஜே.வி.பி. அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தனித்துவமான போக்கினை பிரதிபலிப்பதாக தென்னிலங்கை ஊடகங்களாலும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களாலும் உரையாடப்படுகிறது. அதற்கான அடிப்படை ரஷ்சியாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை சுதந்திரமாக முன்னெடுப்பதாகவும் அத்தகைய உரையாடலை விவாதிக்க முயலுகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் ஈரான் மீதான போரின் பின்னர் ரஷ்சியா உடனான எண்ணெய் வர்த்தகத்தை இலங்கை முதன்மைப்படுத்துகிறது. ரஷ்சியாவுக்கும் இலங்கைக்குமான இராஜீக உறவு 70 வருடங்களை (1957-2027) எட்டவுள்ளது. அது மட்டுமல்ல ரஷ்சியாவின் ஜார் மன்னனுக்கு நிகரான அதிகாரத்தைக் கொண்டவராக இலங்கையின் ஜனாதிபதியின் அதிகாரம் வடிவமைக்கப்பட்டமையும் இரு நாட்டுக்குமான உறவை புரிந்து கொள்ள முடிகிறது. அத்தகைய நீண்ட உறவைக் கொண்ட இரு நாடுகளதும் வெளியுறவின் முக்கியத்துவம் ஒருபக்கம் அமைகின்றது. மறுபக்கத்தில் ஜே.வி.பி.அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை நடுநிலையோடு செயல்படுவதாகவும் சுதந்திரமாக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறிக்கொள்ள முயலுகின்றது. அதன் உண்மையான பக்கங்களை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஜே.வி.பி. அரசாங்கம் அமெரிக்க எதிர்ப்பு வாதத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கொண்டிருந்த போதும் தற்போது அமெரிக்காவுக்கு கட்டுப்பட்டு செயல்படும் நிர்ப்பந்தத்தை எதிர்கொள்கிறது. .அத்தகைய நிர்ப்பந்தனைகளை புரிந்து கொள்ளுகின்ற போது ஜே.வி.பி.அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கை உண்மை முகத்தை கண்டுகொள்ள முடியும். இது ஜே.வி.பி.க்கானது மட்டும் கிடையாது தென் இலங்கைக்கானது. தென் இலங்கை ஆட்சியாளர்களின் இயல்பான வடிவமே வல்லரசுகளுக்கு இசைவான வெளியுறவை வகுப்பதேயாகும். ஆனால் அதனை சுதந்திரமானதென்றும் நடுநிலமை பொருந்தியது என்றும் கூறுவது வழமையானதாக உள்ளது. ரஷ்சியாவுடன் எண்ணை வர்த்தகத்தில் இரண்டு பிரதான விடயங்கள் அமெரிக்கா பொறுத்து ஜே.வி.பி. அரசாங்கம் செயல்பட்டிருக்கின்றது.
ஒன்று ஈரானுடனான அமெரிக்காவின் போரின் விளைவுகள் ரஷ்சியாவின் எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு அனுமதியை வழங்கியிருந்தது. இது உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் ரஷ்சியா தொடர்பில் விதிக்கப்பட்ட தடையை தளர்த்தியதான அமெரிக்காவின் அறிவிப்பாகும். அமெரிக்காவில் அனுமதி உலக நாடுகளில் ரஷ;சியாவின் எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதித்த பின்னரே இலங்கை ரஷ்சியாவுடன் எண்ணெய் வர்த்தகத்தை ஆரம்பித்தது. அவ்வாறாயின் அமெரிக்க அனுமதியின் அடிப்படையிலேயே ஜே.வி.பி. அரசாங்கம் ரஷ்சியாவுடனான எண்ணெய் வருத்தத்தை தொடங்கியதென்று புரிந்து கொள்ள முடியும். அதாவது அமெரிக்க நலனுக்கும் நிபந்தனைக்கும் கட்டுப்பட்டு ஜே.வி.பி. அரசாங்கம் இலங்கையின் வெளியுறவை மேற்கொள்கிறதே அன்றி சுயமாக நடுநிலமையோடு அல்லது இடதுசாரி மரபோடு ரஷ்சியாவுடனான உறவை மேற்கொள்ளவில்லை. இதுவே யதார்த்தமான வடிவமாகும். இதற்காக ஜே.வி.பி. அரசாங்கம் இடதுசாரி கொள்கையை கொண்டிருக்கின்றது என்றே அல்லது நடுநிலைமையான வெளியுறவின் அடிப்படையில் செயல்படுகிறது என்றே விவாதிக்க முடியாது. அமெரிக்காவின் அனுமதியுடனேயே ஜே.வி.பி.இன் ரஷ்சிய உறவு நிகழ்கிறது. இலங்கைக்கும் ரஷ்சியாவுக்கும் இடையில் நீண்ட நட்புறவு காணப்படுகிறது. இருந்த போதும் ஜே.வி.பி. அரசாங்கத்துக்கு அமெரிக்காவில் அனுமதி இன்றி செயல்பட முடியாத நிலையை கடந்த காலங்களில் உணர்த்தியிருந்தது. தற்போது ரஷ்சியாவுக்கும் இலங்கைக்கும் ஜே.வி.பி. மேற்கொள்ளுகின்ற எண்ணெய் மற்றும் உரவகை வர்த்தகத்தை கடந்து ஏனைய நடவடிக்கைகளில் அதிக முக்கியத்துவத்தை கொண்டுள்ளதாக தெரியவில்லை. இரு நாட்டுக்கும் இடையில் பொதுப் போக்குவரத்து சார்ந்து ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகம் பெற்றோலியம் தொடர்பில் இலங்கை ரஷ்சியாவோடு வர்த்தக உறவை முதன்மைப்படுத்த விரும்புகிறது.
இரண்டு மேற்காசியாவில் நிகழும் போரின் பிரதிபலிப்புகள் பெருமளவுக்கு அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தில் பின்னடைவை எதிர்கொள்ளும் என்ற மதிப்பீடு உலக நாடுகளுக்கு இருப்பது போன்று இலங்கை ஆட்சியாளர்களிடமும் நிலவுகிறது. இலங்கை ஜே.வி.பி. அரசாங்கம் பலமான சீன நட்புறவைக் கொண்டிருக்கின்றது. இதனால் அமெரிக்காவின் முதல் நிலை அல்லது முதல்தர வல்லரசு நிலை வீழ்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளை ஜே.வி.பி. அரசாங்கம் அளவீடு செய்துள்ளது. அதன் நிமித்தம் அமெரிக்க அரசாங்கத்தின் எதிர்காலம் இலங்கை மீதான ஆதிக்கத்தை அல்லது செல்வாக்கை நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்ற மதிப்பீட்டுடன்; ரஷ;சியா உடனான எண்ணெய் வர்த்தகத்தை பலமான ஒன்றாக திட்டமிட ஜே.வி.பி அரசாங்கம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் ஈரான் மீதான அமெரிக்க போருக்குப் பின்னர் அமெரிக்காவுக்கு எதிரான செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியுறவுக் கொள்கை வகுப்புகளை மாற்றத்துக்கு உள்ளாக்கின்ற போக்கு அவதானிக்க கூடியதாக உள்ளது. அத்தகைய சூழலுக்குள்ளேயே இலங்கை ரஷ்சிய நட்புறவு பெற்றோலியம் தொடர்பில் வலுவான ஒன்றாக மாறிவருகிறது. இதுவே ரஷ்சிய-இலங்கை நட்புறவின் அடிப்படைக்கான காரணங்கில் ஒன்றாகவுள்ளது. இதனை விடுத்து ஜே.வி.பி. அரசாங்கம் நடுநிலைமையாக செயல்படுகிறது என்றோ, இடதுசாரி கொள்கையுடன் தனது வெளியுயுறவை வகைப்படுத்துகிறது என்றோ கணிப்பீடு செய்ய முடியாது. அவ்வாறு விவாதிப்பது என்பது வெளியுறவின் உண்மை தன்மைகளை அடையாளம் காண தவறுகின்ற சூழல் ஒன்றுக்கான வாய்ப்பை உருவாக்கிவிடும்.
இலங்கைத் தீவின் வெளியுறவு என்பது தங்கி இருத்தலும் தப்பிப்பிழைத்தலுக்குமான வாய்களை கொண்டது. ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு சர்வதேச வல்லரசுகளுடன் தங்கி இருக்கும் வெளியுறவை மிக நேர்த்தியாக வகைப்படுத்தி பிரயோகித்து வருகின்றது. அதில் ஜே.வி.பி. விதிவிலக்கானது அல்ல. ஜே.வி.பி. வெளியுறவுக் கொள்கைகள் இடதுசாரி தன்மையையோ நடுநிலை தன்மையையோ கொண்டிருப்பது என்பதைவிட நிர்பந்தங்களுக்கும் வற்புறுத்தல்களுக்கும் அடிபணியும் சூழல் ஒன்றைக் கொண்டிருக்கின்றது. இது சுதந்திரமானது அல்ல. அவ்வப்போது அதன் தோற்றத்தில் உலகில் எத்தகைய அரசுகளின் ஆதிக்கம் மேலானதாக இருக்கின்றதோ அத்தகைய அரசின் செல்வாக்குக்குள் வெளியுறவு வடிவமைக்கின்றது. அத்தகைய வல்லரசுகளது நலனுக்கு அமைவான புவிசார் அமைவிடத்தில் இலங்கைத் தீவு அமைந்திருப்பதே பிரதான காரணமாகும்.
அதேவேளை தென்னிலங்கையின் நலன்களைப் பாதுகாப்பதிலும் ஆட்சியைத் தக்க வைப்பதிலும் கரிசனை கொல்லுகின்ற வெளியுறவுக் கொள்கையை ஆட்சியாளர்கள் வகுத்து வருகிறனர். இதுவே ரஷ்சியா தொடர்பாக ஜே.வி.பி. இன் வெளியுறவின் உள்ளார்ந்த புரிதலாகும். இதனையே அது சீனா சார்ந்து கொண்டிருக்கின்றது. சீனா இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளின் நிர்பந்தக்களுக்கும் வற்புறுத்தல்களுக்கும் ஏற்ற வகையில் கொள்கையை மாற்றிக்கொள்வதில் வெற்றிகரமான பக்கத்தை பிரதிபலிக்கிறது. இலங்கை ஒரே நேரத்தில் பல வல்லரசுகளை ஒரே உறைக்குள் வைத்திருக்கும் திறனைக் கொண்டது. எந்தகைய முகாம்களும் இல்லாத உலகத்தில் அணிசேராமை என்றும்; இடதுசாரி எண்ணங்களோ இல்லாத சூழலில் சோஸலிசம் பற்றியும் உரையாடுவது ஜே.வி.பிக்கு உரிய திறனாகும்.அத்தகைய கொள்கையை வைத்தே ஆட்சியைப் பிடித்தது. ஊழலற்ற தேசத்தை அடைவது என்ற ஆட்சியாளர்கள் நிலக்கரியிலும் பெற்றோலியத்திலும் பாரிய ஊழல் புரிந்துள்ளதாக தெரியவருகிறது.
எனவே இலங்கையின் வெளியுறவு கொள்கையின் வரலாற்றினை அவதானிக்கின்ற போது தென் இலங்கையின் இருப்பையும் ஆட்சியையும் தக்கவைத்துக் கொள்ள கொள்கையை அடிக்கடி மாற்றிக் கொள்வதாகவே தெரிகிறது. தென் இலங்கை வல்லரசுகளின் கொள்கைகளுக்கு இசைவான வெளியுறவை வகுத்து வைத்திருக்கின்றது. இது வெளியுறவு கொள்கை கிடையாது. இது வெறுமனே நாடுகளின் நலன்களுக்கு விட்டுக் கொடுப்பதன் மூலம் ஆட்சியில் இருக்கும் சக்திகளின் நலன்களை அல்லது தென்னிலங்கையின் நலன்களை தக்க வைப்பதாகும். வெளியுறவுக் கொள்கை வகுப்பதற்கு பதிலாக வல்லரசுகளால் வகுக்கப்படும் வெளியுறவுக் கொள்கைகளுக்கு இசைவாக இலங்கை செயல்படுகிறது. இதனையே சுதந்திரமானதென்றும் நடுநிலை பொருந்தியது என்றும் இடதுசாரித்துவம் என்றும் கூறிக் கொள்ள முயலுகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
