April 15, 2026
அரசியல் கட்டுரைகள்

ஹர்மூஸ் நீரிணையும் ஈரான் மீதான போரின் பரிமாணமும்?

ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேலிய கூட்டு தாக்குதல் முடிவின்றி நிகழ்கிறது. அத்தகைய போரின் புதிய பரிமாணம் பிராந்திய நிலையிலிருந்து சர்வதேச எல்லையைக் கடந்து பூகோள பரிமாணத்தை அடைவதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளது. பூகோளரீதியில் இப்போரை முன் நகர்த்துவது ஹர்மூஸ் (Strait of Hormuz) நீரிணை தொடர்பில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியாகும். இதுவே இப்போரின் பூகோள பரிமாணத்தை எழுச்சிபெற வழிவகுத்திருகிறது. ஹர்மூஸ் போன்றே கொன்ஸ்ந்திநோபிள் மற்றும் சுயஸ்கால்வாய் விவகாரம் அமைந்திருந்தது. இக் கட்டுரையும் அவ்வகை பூகோள பரிமாணத்தில் முக்கியத்துவத்தை உரையாட முனைகிறது.

ஹர்மூஸ் நீரிணையானது உலகளாவிய கடல்வழி எண்ணெயில் சுமார் 20-30சதவீதம் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவில் சுமார் 20சதவீதம் கையாளும் ஒரு முக்கிய போக்குவரத்துத் தடப் பகுதியான ஹோர்மூஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள், கடுமையான உலகப் பொருளாதார நெருக்கடியை அச்சுறுத்துகின்றன. அதிகரித்த இராணுவப் பதற்றம், கப்பல் போக்குவரத்தை முடக்கி, கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி, பணவீக்கத்தைத் தூண்டி, உரங்கள் மற்றும் தொழில்துறைப் பொருட்களுக்குப் பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. வரலாற்று ரீதியாக கடல் போக்குவரத்து மேற்காசிய நாடுகளின் பிரதான ஏற்றுமதி இறக்குமதி மையமாக விளங்குகிறது.

அவ்வாறான பகுதிகாகவே கொன்சாந்திநோபில் (Constantinople) விளங்கியது. இது தற்கால இஸ்தான்புல்லாக அழைக்கப்படுகிறது. கொன்ஸ்டான்டிநோபிள், பைசாந்தியப் பேரரசின் (330–1453) மற்றும் பின்னர் ஒட்டோமான் பேரரசின், நன்கு அரணமைக்கப்பட்ட, செல்வந்த தலைநகரமாக விளங்கியது. மகா கான்ஸ்டன்டைனால் (Great Constantine)புதிய ரோம் என்று நிறுவப்பட்ட இப்பகுதி, 1453-ல் வீழ்ச்சியடைந்து இஸ்லாமியரிடம் சென்றது. வீழ்ச்சிக்கு முன்பு 1000 ஆண்டுகளுக்கும் மேலாக கிழக்கு மரபுவழி கிறிஸ்தவம் மற்றும் கலாச்சாரத்தின் மையமாகத் திகழ்ந்தது. இது முதலாம் உலக போர்வரையும் ஓட்டமன் பேரரசின் மையமாகவும் இஸ்லாமியரின் ஆதிக்கப் பகுதியாகவும் காணப்பட்டது.

சுயஸ்கால்வாய் என்பது தெற்கு ஆசியாவிற்கும் வடக்கு ஆப்பிரிக்காவிற்கும் இடையே உள்ள ஒரு செயற்கை நீர்வழியாகும். இது சூயஸ் நிலச்சந்தி வழியாக செங்கடலை மத்திய தரைக்கடலுடன் இணைக்கிறது. இந்தக் கால்வாய், கிழக்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான கடல் பயணத் தூரத்தை கணிசமாகக் குறைப்பதோடு, செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் வழியாக இந்தியப் பெருங்கடலுக்கும் வட அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையே மிகவும் நேரடியான பாதையையும் விளங்குகிறது. 1859 முதல் 1869 வரை தோண்டப்பட்ட சூயஸ் கால்வாய், எகிப்து அரசாங்கத்திற்குச் சொந்தமானது தற்போது சுயஸ் கால்வாய் ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. 1956 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று எகிப்திய ஜனாதிபதி கமால் அப்தெல் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கியதால் மேற்கு நாடுகள் மோதல் ஒன்றைத் தோற்றுவித்தன. இதுவே 1956 சுயஸ் நெருக்கடி ஆகும். சுயஸ்கால்வாயின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறவும் நாசரைப் பதவியிலிருந்து அகற்றவும் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் எகிப்தின் மீது படையெடுத்தன, ஆனால் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் அரசியல் தலையீட்டினால் போர் தணிந்தது. இது உலகளாவிய வர்த்தகத்தில் 12–15சதவீதம் மற்றும் உலகளாவிய கொள்கலன் போக்குவரத்தில் 30சதவீதம் ஆகியவற்றைக் கையாளுகிறது. இது 11–12 மணி நேரப் பயணத்தை சாத்தியமாக்கி, ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பயண நாட்களைக் குறைக்கிறது. சுயஸ் கால்வாய் ஆணையம் (SCA) 66 அடி ஆழம் வரையிலான கப்பல்களுக்கு இடமளித்து, எண்ணெய், எரிவாயு மற்றும் சரக்குகளுக்கான தினசரி கப்பல் தொடரணிகளை நிர்வகிக்கிறது.

ஹர்மூஸ்சுடன் ஒப்பிடுகின்றபோது அதிக முக்கியத்துவம் கொண்டதாக மேற்குறித்த பகுதிகள் விவாதிக்கப்படுகிறது. பெற்றோலிய உற்பத்தியின் ஏற்றுமதி இறக்குமதியை நிர்ணயிப்பதில் ஹர்மூஸ் மேற்குஐரோப்பிய நாடுகளுக்கு பிரதான மையமாக விளங்குகிறது. உலகளாவிய ரீதியான வர்த்தகத்துக்கு அது வழங்கும் பங்களிப்பு என்பதை விட மேற்கு ஐரோப்பியர்களுடனான மேற்காசிய நட்பு நாடுகளின் வர்த்தகத்தில் பிரதான பங்கை வகிக்கிறது. மேற்காசியாவில் மேலே குறிப்பிட்டது போல் இது தொடர்பில் இரண்டு முன்னய அனுபவங்கள் உண்டு. மேற்குலக நாடுகளுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்குமான அனுபவங்களுக்குள்ளால் ஹர்மூஸ் எவ்வகையான விளைவை போரில் ஏற்படுத்தப் போகிறது என்பது முக்கியமான அம்சமாகும். இதனை ஆழமாக புரிதல் அவசியமான.

முதலாவது கொன்சாந்திநோபிள் துருக்கியரால் கைப்பற்றப்பட்டபோது மேற்கு-கிழக்குக்குமான உறவு நெருக்கடிக்கு உள்ளானது. இத்தகைய தடை மேற்குலக நாடுகள் வேறு மார்க்கங்களை நோக்கி கீழைத்தேச நாடுகளோடு உறவை ஏற்படுத்திக் கொண்ட போதும் துருக்கிய ஓட்டமன் பேரரசை சிதைப்பதற்கான எல்லா வகை அணுகுமுறைகளையும் அக்கால பகுதியில் மேற்குலக வல்லரசுகள் கூட்டாக மேற்கொண்டிருந்தனர். மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் பிரித்தானியாவின் தலைமையில் எழுச்சி பெற்ற போது ஏனைய ஐரேப்பிய நாடுகள் ஒட்டமின் பேரரசு மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தன. இறுதியில் மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்திற்குள் கொன்சாந்திநோபில் மட்டுமல்ல கீழைத்தேச நாடுகளும் குறிப்பாக மேற்காசிய நாடுகளுடனான உறவை சுமூகப்படுத்திக் கொண்டது. அதில் மேற்குலக நாடுகளில் வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாவது சுயஸ்கால்வை 1956 ஆம் ஆண்டு எகிப்தினால் தேசியமயமாக்கப்பட்டு பின்னர் மூடியது. இதற்கு எதிராக மேற்குலக நாடுகள் தீவிர போரை மேற்கொண்டனர். எகிப்திய ஆட்சியாளர்கள் மட்டுமின்றி எகிப்தின் இஸ்ரேல் தொடர்பான கொள்கையின் மேற்குலக நாடுகளுக்கு அடிபணிகின்ற நிலையும் ஏற்பட்டது. ஏறக்குறைய நாசர் தலைமையில் எழுச்சி பெற்ற அரபிய தேசியவாதம் எகிப்தின் ஆட்சியாளர்களால் தோற்கடிக்கப்பட்டது. இத்தகைய போரிலும் மேற்குலக நாடுகள் கூட்டாக செயல்பட்டது மட்டுமின்றி போரில் வெற்றி பெற்று மேற்காசிய எண்ணெய் வயல்களை தமது கம்பெனிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. மேற்குலக நாடுகளின் எண்ணை வர்த்தக சங்கிலியும் பாதுகாக்கப்பட்டது.

மூன்றாவது மீண்டும் ஒரு தடைவ மேற்குலக நாடுகள் ஹர்மூஸ் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர். தனது கடல் எல்லையாக இருக்கும் ஹர்மூஸ் பகுதியை மேற்குலக நாடுகளின் கப்பல்கள் பயணம் செய்வதற்கு தடை விதித்துள்ளது. அதில் பயணம் செய்யும் எதிரிநாட்டுக் கப்பல்களுக்கு எதிராக பல தாக்குதல்களையும் ஈரான் நிகழ்த்தியுள்ளது. ஆனால் இது சர்வதேச பரிமாணத்தை பெற்றிருந்தாலும் மேற்குலக நாடுகள் இதன் ஊடாக பெரும் எரிசக்தி நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஹர்மூஸ் மூடப்பட்டதன் பிரதிபலிப்பு மேற்கு நாடுகளுக்கு நேரடியான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. காற்றாலை மின்சாரம், நீர் மூலமான மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் உருவாக்குவதற்கான உத்திகள் இருந்தாலும் பெருமளவுக்கு தற்போது பெற்றோலியத்திலேயே போக்குவரத்தின் தனித்துவம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் பெற்றோலிய வளம் என்பது அவசியமான ஒன்றாக ஏனைய கண்டங்களை விட ஐரோப்பிய கண்டத்துக்கு தேவையானதாக உள்ளது. அதற்கான அடிப்படை காரணம் ஐரோப்பிய நாடுகளின் காலநிலை பங்காற்றுகிறது. மேற்குலக நாடுகள் இப்போது ஹர்மூஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலுகின்ற சூழல் தவிர்க்க முடியாத ஏற்பட வாய்ப்புள்ளது. அமெரிக்காவோடு பகைத்துக் கொள்ளும் மேற்கைரோப்பிய நாடுகள் வேகமாக முரண் நிலையை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. வெளிப்படையாக முரண்பட்டாலும் அமெரிக்காவில் முயற்சி முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு மேற்குலக நாடுகள் தயாராக இல்லை. அதனால் ஹர்மூஸ் தொடர்பில் கொன்சாந்திநோபில் மற்றும் சுயஸ்கால்வாய் விடயங்கள் போன்றே ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நான்காவது ஆனாலும் இப்போரின் திசை சீனா-ரஷ்சியா பொறுத்து முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தக் கூடியது. கடந்த கால வரலாற்றில் துருக்கியையும் ஓட்டமன் பேரரசையும் எகிப்தையும் போன்ற நிலையில் ஈரான் இல்லை என்ற வாதங்களும் தவிர்க்க முடியாது புரிந்து கொள்ளப்பட வேண்டும். அப்படியாயின் முதல் நிலையில் ஈரான் ஹர்மூஸ் பகுதியை ஓமானுடன் அதன் பாதுகாப்பையும் வருமானத்தையும் பங்கீடு செய்வதற்கு உடன் பட்டிருக்கும் அறிவிப்பு ஈரானின் அணுகுமுறையில் புதிய அம்சமாகும். ஒட்டுமன் பேரரசு மற்றும் எகிப்து நாடுகளின் அணுகுமுறையில் ஈரான் இல்லை என்பதை ஒரு பக்கம் உணர்த்துகிறது. மறுபக்கத்தில் சீனா-ரஷ்சியா என்பன இணைந்து அமெரிக்காவின் முயற்சியை முறியடிப்பது மட்டுமின்றி சீனாவின் முதல் நிலையை ஈரான் போரினால் அடைய முயற்சிக்கிறது. அதுவும் ஈரானுக்கு இலாபகரமானது. இதுவே ஹர்மூஸ் பொறுத்து உலகம் எதிர் கொள்ளக்கூடிய நெருக்கடியாக காணப்படுகிறது. இப்போரில் நேரடி பங்காளர்களாக ரஷ்சியா சீனா இணையுமாக இருந்தால் ஹர்மூஸ் அல்லது போர் பூகோளபரிமாணத்தை பெறுவது என்பதை கடந்து ஒரு உலக யுத்த பரிமாணத்தை அடைந்து விடுமா என்ற குழப்பத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா தனித்து உலக ஒழுங்கை வரைய முடியாது என்பதை கடந்த காலம் அனுபவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

எனவே ஹர்மூஸ் பொறுத்து ஏற்பட்டிருக்கும் பிந்திய நிலைமைகள் நிரந்தரமானவை அல்ல. குறிப்பாக நேட்டோ நாடுகள் தமக்குள் மோதிக்கொள்வது நீண்டகாலத்திற்கு நிகழாத நிலை ஏற்படும். ஆனால் ஈரான் மீதான போர்; பொருளாதார பரிமாணம் உலகத்தை முழுமையாகவே ஆக்கிரமித்துள்ளது. ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களை விட மேற்கைரோப்பிய நாடுகள் அதீதமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. அதனால் ஹர்மூஸ் மீதான மேற்குலகத்தின் தாக்குதலும் அதனை எதிர்கொள்கின்ற சீனர-ரஷ;சியா-ஈரான்; கூட்டும் போரின் எதிர்கால நெருக்கடியை தீர்மானிக்கக் கூடியவை.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)