April 19, 2026
அரசியல் கட்டுரைகள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் எதிர்கட்சிகளின் அரசியலும்?

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதற்கு ஆட்சி மாற்றங்கள் நிகழ்வது மட்டுமே புரிதலாகிறது. இலங்கை தீவின் உயர்வாக ஜனநாயகத்தின் (Elites Democracy) அச்சங்களை சுமந்திருக்கும்; அரசியலில் ஜே.வி.பி. ஒரு சிறிய மாற்றத்தை தேர்தலில் முன்னெடுத்திருக்கிறது. ஆனாலும் அதன் நடைமுறை மீண்டும் ஒரு உயர்வர்க்க ஜனநாயகத்தை நோக்கியதாக அமைந்து விடுமா என்ற சந்தேகத்தை அண்மைய நகர்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அத்தகைய புரிதலுக்கு வெளியே எதிர்க்கட்சிகள் ஆளும் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுத்திருக்கும் அல்லது எடுக்க திட்டமிடும் நகர்வுகள் எத்தகைய ஜனநாயகத்தின் பக்கங்களை நோக்கி செயல்படுகின்றன என்பது தேடப்பட வேண்டியதாகும். எதிர்க்கட்சிகள் என்பது அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதனால் எழுந்தது என்ற தவறான எண்ணம் இலங்கை தீவில் உள்ள அனைத்து எதிர்த்தரப்புகளதும் புரிதலாக உள்ளது. இக்கட்டுரையும் பொருளாதார நெருக்கடியின் போது எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை மீதான விவாதங்களை தேடுவதாக வடிவமைக்கப்படுகிறது.

உயர்வர்க்க ஜனநாயகம் என்பது படித்த, செல்வந்த, அல்லது உயர் நிபுணத்துவம் பெற்ற தனிநபர்களைக் கொண்ட ஒரு சிறிய, சலுகை பெற்ற குழுவின் கைகளில் அரசியல் அதிகாரம் குவிந்திருக்கும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் மாதிரியைக் குறிப்பதாகும்.

எதிர்க்கட்சி பாரம்பரியம் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. பிரித்தானிய மரபில் தோன்றிய கட்சி அரசியலின் எதிர்ப்பினை பதில் அரசாங்கம் அல்லது நிழல் அரசாங்கம் ஒன்றை நிறுவுவதன் மூலம் அரசாங்கத்தின் பலவீனங்களை அடையாளப்படுத்தவும் அத்தகைய பலவீனங்களில் இருந்து நாட்டை சரியான திசையில் கொண்டு செல்வதற்கான வழிமுறையை உருவாக்குவதும் பிரதான நோக்கமாக கட்சி அரசியலில் காணப்பட்டது. அது மட்டுமன்றி நிழல் அரசாங்கம் அமைக்கப்படுவது எதிர்காலத்தில் சரியான வழிமுறைக்குள்ளால் எதிர்க் கட்சி அரசாங்கத்தை மேற்கொள்வதற்கான முன்னாயத்தப் பொறிமுறையாகவும் புரிந்து கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சிகள் கூட்டு மரபு பிற்காலப் பகுதியில் எழுந்தது. பிரித்தானியாவில் ஆரம்பகாலத்தில் தற்போதும் கூட இரு கட்சி மரபுகளுக்குள்ளால் அரசியலை மேற்கொள்ளுகின்ற மரபைக் கொண்டது. பிரித்தானியாவின் மரபில் தோன்றிய இலங்கையும் ஆரம்ப காலத்தில் இரு கட்சி முறைமை பின்பற்றிய போதும் 1978 ஆம் ஆண்டு அறிமுகமான நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு பின்னர் அத்தகைய இரு கட்சி பாரம்பரியம் சிதைவடைந்து பல கட்சி ஆட்சியும் பல கட்சிகளின் கூட்டு எதிர்கட்சியும் உருவானது. இது பெருமளவுக்கு ஆங்கிலேய (Anglo Saxon) மரபிலிருந்து அமெரிக்க மரபுக்கு (American Saxon) மாறியதன் பிரதிபலிப்பாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் இலங்கை தீவில் பிரித்தானிய மரபையோ அமெரிக்க மரபையோ உள்வாங்கக் கூடிய அரசியல் கலாச்சாரம் வளர்ச்சி பெறாத நாடு என்பது கவனத்தில்கொள்ளப்பட வேண்டியது. இச்சூழலுக்குள்ளே ஆளும் ஜே.வி.பி. அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணிதிரழ்வதும் சில தீர்மானங்களை நோக்கி நகர்வதும் காணப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது அவசியமானது.

முதலாவது ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்ததிலிருந்து பலமான எதிர்கட்சிகளின் தலைமை அல்லது தலைமைகள் இருப்பதாக அடையாளப்படுத்த முடியாதுள்ளது. இது பெருமளவுக்கு எதிர் கட்சியினுடைய தலைமை ஒரு கட்சியாக பாராளுமன்றத்தில் காணப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறான தோற்றத்தை காணவில்லை. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களும் ஏனைய தரப்புக்களும் எதிர்க்கட்சிகளாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். எதிர்க்கட்சி தலைமையும் இதர எதிர்க்கட்சிகளும் ஜனநாயக மரபில் உயர் வர்க்க ஜனநாயகத்தின் அடையாளத்தை நிலை நிறுத்துவதில் கடந்த காலத்தை போன்றும் அதாவது ஆட்சி காலத்தை போற்றும் எதிர் தரப்பாக இருக்கின்ற போது முனைப்பு செலுத்த விளைகின்றன. இதனாலேயே தொடர்ச்சியாக எதிர் தரப்புகளுக்கு இடையில் கூட்டிருப்புப் போன்றும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதிலும் ஆளும் தரப்பின் இருப்பை எதிர்ப்பதிலும் கவனம் கொள்கின்றன.

இரண்டாவது உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கையும் அகப்பட்டு இருக்கின்ற சூழலில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் நிலக்கரி ஊழல், பெற்றோலிய விலை ஏற்றம் மற்றும் பெற்றோலிய பங்கீடு தொடர்பில் நாடு தழுவிய போராட்டம் ஒன்றை திட்டமிட்டுள்ளன. இத்தகைய போராட்டம் இலங்கை தீவின் பொருளாதாரம் நெருக்கடியை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்குகின்ற உத்திகவே அதிகம் உணரப்படுகின்றது. ஜே.வி.பி.யும் எதிர்க்கட்சியாக இருக்கின்ற போது இந்திய மற்றும் அமெரிக்க எதிர்ப்புவாதத்தை முன்வைத்து உள்நாட்டில் பல போராட்டங்களை நடத்தியது. அவ்வாறே தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தொழிற்சங்கங்களை நசுக்குவதும் அவற்றின் கோரிக்கைகளை நிராகரிப்பதும் இந்திய, அமெரிக்க அரவணைப்பினூடாக ஆட்சிய நகர்த்துவதும் பண்புகூறாக கொண்டிருக்கிறது. இவ்வாறே தற்போதுள்ள எதிர்க்கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது மேற்கொண்ட அனைத்து அம்சங்களையும் கைவிட்டு விட்டு நியாயத்தை வெளிப்படுத்துவதும் கோரிக்கைகளை முன்வைக்க முயலுகின்றன. இது ஆளுங்கட்சியை எதிர்க்கின்ற மனோநிலையில் செயல்படுவதையும் அதனால் ஆட்சியை கைப்பற்ற முனைவதுவுமே பிரதான நோக்கமாக உள்ளது.

மூன்றாவது சமகால பொருளாதார நெருக்கடி என்பது இலங்கை தீவில் உள்ள அனைவருக்குமானதாகவே காணப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சி என்ற வேறுபாடு இன்றி அதனை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உரியதாகும். அதற்கான அணுகுமுறைகளை சாத்தியப்படுத்துவதும் அவசியமானது. இலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமின்றி எதிர்த்தரப்பினரும் சரியான திட்டமில்களை முன்வைப்பது அவசியமானது. அதனைவிடுத்து ஆளும் கட்சியை எதிர்த்து போராடுவதென்பது ஆட்சியை கைப்பற்றுவதற்கான உபாயங்களாக தெரிகிறது. இது சிறந்த எதிர்க்கட்சிகளின் பண்புகளாக தென்படவில்லை. ஒப்பீட்டு அடிப்படையில் அயல் நாடான இந்தியாவும் அமெரிக்காவும் ஏனைய நாடுகளுமே இலங்கை தீவின் ஆளும் தரப்புக்கு எதிர் தரப்பாக விளங்குகின்றன போல் தெரிகிறது. காரணம் அந்த நாடுகள் ஜே.வி.பி.யினுடைய ஆட்சியை எதிர்த்த போதும் இலங்கை தீவில் ஏற்படுகின்ற நெருக்கடியை சரிசெய்ய முயலுகின்றன. அவற்றுக்கு பல நோக்கங்கள் இருந்தாலும் அடிப்படையில் நெருக்கடிகால முகாமை ஒன்றை மேற்கொள்கின்ற தரப்பாக காணப்படுகின்றன. அந்நாடுகள் தமது நலன் சார்ந்து ஒத்துழைப்பையும் கரிசனையும் கொண்டு செயல்படுகின்றன என்பது உண்மையானதே. ஆனால் இலங்கையின் உறுதிப்பாட்டை பாதுகாக்க உதவுகின்றன. இலங்கை தீவில் எதிர்க்கட்சிகள் மரபார்ந்த அல்லது ஆட்சிக்கு பதிலான ஆட்சியை நிகழ்த்துவதற்கு வாய்ப்பில்லாத சூழலில் பிராந்திய சர்வதேச சக்திகள் அத்தகைய பதிலீடுகளை ஆற்ற முனைகின்றன. ஆரோக்கியமான நிழல் அரசாங்கம் ஒன்றை கட்டமைத்து உள்ளூரின் பொருளாதார சார்ந்து இருக்கக்கூடிய நடவடிக்கைகளை வலுவூட்டி பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது எதிர்க்கட்சிகளுக்குரிய பாரம்பரியமாகும். அத்தகைய பாரம்பரியங்கள் எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு தூதுவர்களோடு உரையாடுவது எதிர்த்து போராடுவது மேலும் இலங்கை மக்கள் நெருக்கடிக்குரிய சூழல்களை கட்டமைப்பதாக அமையும். உலகில் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியினால் பொது முடக்கத்திற்குள் நகர்கின்றன.

நான்காவது இலங்கை தீவின் எதிர்க்கட்சி பாரம்பரியம் தோல்வி கண்ட ஒன்றாகவே உள்ளது. ஜனநாயக அடிப்படைகளை அதிகம் முன்னிறுத்த வேண்டிய எதிர் தரப்புகள் இலங்கை இனப் பிரச்சினை சார்ந்தும் இன வாத உணர்வுகளோடு செயல்பட முனைகின்றன. ஆளும் தரப்பின் பலவீனங்களை எதிர்த்தரப்பு சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக அதனை பலப்படுத்துவதாக தெரிகிறது. இனப்பிரச்சினைக்கு எத்தகைய இனவாத உணர்வைக் கொண்டவர்களாக எதிர்கட்சியினர் காணப்பட்டனரோ அவ்வாறே இன்றை பொருளாதார நெருக்கடியையும் எதிர் கொள்கின்றனர். பொருளாதார நெருக்கடியை ஆட்சிமாற்றத்திற்கான உத்தியாக எதிர்த்தரப்பு செயல்பட விளைகிறது. இதனால் ஏற்படக்கூடிய விளைவு இலங்கையில் இருக்கும் அனைத்து தரப்புக்களுக்கும் உரியதாகும். இலங்கையின் ஜனநாயகத்தின் தோல்விக்கு மட்டுமல்ல பொருளாதார வீழ்ச்சிக்கும் பிரதான பங்குதாரராக எதிர்க்கட்சிகளை கண்டு கொள்ள முடிகிறது. ஏனெனில் அரசியல் இன்றி பொருளாதாரம் இருப்பதில்லை. பொருளாதாரம் இன்றி அரசியல் நகர்வதில்லை. இரண்டும் சேர்ந்ததே ஜனநாயகம். மேலும் சமூகம், கலாசாரம்,அபிவிருத்தி, சந்தை என ஜனநாயகம் விரிவடைந்துள்ள பொறிமுறையாகும்.

எனவே இலங்கையைதீவில் எதிர்க்கட்சி மரபு என்பது எதிர்த்தல் என்ற எண்ணத்துக்குள்ளால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அதனால் உயர்வர்க்க ஜனநாயகம் பாதுகாக்கப்படுவது பற்றிய எதிர்த்தரப்புகள் விளங்குகின்றன. ஜனநாயகத்தின் பங்குதாரராக சாமானியர்களை உள்ளடக்க தவறுகின்ற சூழல் ஒன்றை எதிர்தரப்பு கொண்டிருப்பது போன்று ஜே.வி.பி. எதிர்காலத்தில் முன்னெடுக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகின்றது. இலங்கை தீவின் ஜனநாயகம் வாக்குச்சீட்டுகளோடு மட்டும் முடிந்து போவதில்லை என்பதை உணரும் வரை சாமானியனின் அரசியல் சமூக பொருளாதார இருப்பில் சாத்திமான மாற்றம் நிகழப் போவதில்லை. பொருளாதாரச் சுமைகள் அனைத்தும் சமானியனுக்கானதாகவே அமையும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)