இலங்கை தமிழ் மக்களின் அரசியலில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சாத்தியமற்றதென்றாhக மாறிவருகிறது. 2009க்கு பின்னர் முழுமையாகவே இனப்பிரச்சினை ஒன்று இல்லை என்ற விவாதத்தை தென் இலங்கைத் தரப்புக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அடிப்படையில் தீர்வை முன்னெடுக்கும் தமிழ் தரப்புகளின் பலவீனமான அணுகுமுறைகள் காரணம் என விமர்சனங்கள் காணப்படுகின்றன. இலங்கை வரலாற்றில் 1949 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்கும் தமிழரசு கட்சி சமஷ்டி கொள்கையை இனப்பிரச்சனைக்கான தீர்வாக முன்வைத்து வருகிறது. அத்தகைய கொள்கையின் நிலையம் அதனால் ஏற்பட்டிருக்கும் போக்களையும் அளவீடு செய்வதே இக் கட்டுரையின் நோக்கமாக உள்ளது.
தந்தை செல்வநாயகத்தின் 128 வது பிறந்த தினத்தைக் கொண்டாடிய தமிழரசு கட்சியினர் சமஷ்டி கொள்கையை கைவிடப் போவதில்லை என வலியுறுத்தி உள்ளனர். இது ஒரு ஆரோக்கியமான எண்ணமாகவே தெரிகிறது. இனப் பிரச்சனைக்குரிய தீர்வை நோக்கி தமிழரசு கட்சியின் சமஷ்டி கோரிக்கை நிலையானதாக இருப்பது அக்கட்சிக்கு மட்டும் உரிய தனித்துவமாகும். சமஷ்டிக் கோரிக்கை நீண்ட வரலாற்றைக் கொண்டது. உலகளாவிய தளத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்விலும் சமஷ்டி நீண்ட நிலையான இருப்பினைக் கொண்டது. அத்தகைய வரலாற்றில் சமஷ்டிக் கோரிக்கைக்கான நியாயப்பாடுகள் முதன்மையானவையாக இருந்த போதும் நடைமுறையில் முன்வைத்த கோரிக்கையை வெற்றி கொள்வதில் தமிழரசுக் கட்சிக்கு பிரதான சவாலாக இருந்துள்ளது. தந்தை செல்வாவின் பிறந்த தினங்களிலும், நினைவு தினங்களிலும், கட்சி மாநாடுகளிலும் மீண்டும் மீண்டும் உரையாடப்படும் சமஷ்டிக் கொள்கை வெற்றி கொள்வதற்கான நடைமுறைசார் உத்திகள் இன்றி அடைய முடியாத ஒரு நிலையை எட்டியிருக்கின்றது. அத்தகைய நடைமுறை சூழலை அவதானிப்பது அவசியமானது.
முதலாவது இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது சமஷ்டி தீர்வாகவே அளவிடப்படுகிறது. உலகளாவிய ரீதியில் தேசிய இனங்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு இலகுவான வழிமுறையாக சமஷ்டி விளங்குகிறது. இறைமை பங்கிடப்படும் வடிவமாகவே சமஷ்டி பார்க்கப்படுகிறது. இன்றைய உலக ஒழுங்கு இறைமையற்ற அணுகுமுறை ஒன்றுக்கான இருப்பை அமெரிக்கா தலைமையில் உலகம் எதிர் கொண்டு வருகிறது. இறைமையற்ற உலக ஒழுங்கொன்றை அமெரிக்கா உருவாக்கத் தொடங்கி இருக்கிறது. இலங்கை ஆட்சியாளர்கள் இறைமை தொடர்பில் அமெரிக்காவின் அணுகுமுறைகளை உள்ளூர் அதிகம் நிராகரிப்பவர்களாக விளங்குகின்றனர். ஏற்கனவே அரச இறைமையை அதிகம் வலியுறுத்தும் சீனாவுடனான இலங்கையின் நட்புறவு தற்போது ரஷ;சியா போன்ற நாடுகளோடு மேற்கொள்ளும் உறவு விரிவான தோற்றப்பாட்டை தருகின்றது. டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமெரிக்கா முன்வைக்கும் இறைமையற்ற சூழலுக்குள் இலங்கைத் தமிழர்களின் இறைமை பங்கிடப்படும் சமஷ்டி என்பது கோட்பாட்டுரீதியில் சாத்தியமான வடிவத்தை தருகின்றது. ஆனால் அதன் நடைமுறையே பலவீனமான பக்கங்களை கொண்டுள்ளது. அதனை முன்னெடுக்கும் தமிழ் கட்சிகள் சாத்தியமற்ற போக்கினையே பிரதிபலிக்கின்றனர். இதுவே தமிழரசு கட்சியின் இலக்கை நோக்கிய பயணத்தில் தோல்வியாகவும் தமிழ் மக்களின் அரசியலின் தோல்வியாகவும் காணப்படுகிறது.
இரண்டாவது தமிழரசு கட்சி 1949ஆம் ஆண்டு சமஷ்டி கொள்கையை முன்வைத்து சமஷ்டி கட்சி என்ற பெயருடன் ஸ்தாபிதமானது. ஆனால் சமஷ்டிக் நோக்கிய முன்வைத்த தந்தை செல்வநாயகம் 1957ஆம் ஆண்டு பண்டா-செல்வா உடன்படிக்கையும் 1965ஆம் ஆண்டு டட்லி-செல்வா உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டிருந்தார். அத்தகைய இரு உடன்படிக்கைகளும் பிரதேச அதிகாரத்தையும் மாவட்ட அதிகாரத்தையும் நோக்கியதாக அமைந்திருந்தது. 1982ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைமை அமுதலிங்கம் மாவட்ட அபிவிருத்தி சபை என்பதனை அங்கீகரித்து அதற்கான தேர்தலை தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலை கூட்டணியாக முகம் கொடுத்திருந்தது கவனத்திற்குரியதாகும். அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சி அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டதோடு 2015-2020 வரை தமிழ் தேசிய கூட்டமைப்பாக இயங்கியதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக எதிர்க்கட்சி இருக்கையை பாராளுமன்றத்தில் நிரப்பியது. ஆனாலும் எதிர்கட்சியாக இருந்து கொண்டு ஆளும் கட்சியாக சேவை செய்தது. இவை அனைத்தும் தந்தை செல்வா காலத்தில் இருந்து தொடங்கி இன்று வரையும் பின்பற்றப்படுகின்ற நடைமுறையாக விளங்குகிறது. அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பது தமிழ் கட்சிகளின் உத்தியாக இருந்த போதும் அதனால் சமஷ்டியை அடைய முடியவில்லை. அரசாங்கத்துடனான ஒத்துழைப்பினால் பிரதேச மட்ட நிர்வாகத்தைக் கூட அடைய முடியவில்லை.
மூன்றாவது தமிழரசு கட்சி உட்பட தமிழ் கட்சிகள் 2009களுக்கு பின்னர் முன்னெடுத்த போராட்டங்கள் அனைத்தும் சாதாரண அன்றாட நெருக்கடிகளையும் இலங்கை அரசாங்கம் முன்வைத்த செயல்படும் சில அம்சங்களுக்கு எதிரான போராட்டங்களாவே அமைந்துள்ளன. அதனைக் கடந்து அவர்களால் எந்தவித போராட்டங்களையும் ஜனநாயக ரீதியில் தேசிய இனப்பிரச்சினைக்காக முன்னெடுக்க முடியவில்லை. பதிலாக ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், போன்று கருத்துக்களை முன்வைக்கின்ற மரபை மட்டுமே கொண்டிருக்கின்றனர். அதுவே தமிழ் கட்சிகளின் போராட்டமாக விளங்குகிறது. தேர்தலையும் தேர்தலில் மக்களை எதிர்கொள்வதற்கான உபாயங்களையும் வாக்குகளை பெறுவதற்கான உத்திகளையும் மட்டுமே தமிழ் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் என்ற அடிப்படையில் அத்தகைய அணுகுமுறை ஒன்றும் தவறானது கிடையாது. ஆனால் இலங்கை தமிழரின் அரசியல் தேர்தலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட தமிழ் மக்களே ஒன்றிணைப்பதிலும் தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை வெற்றி கொள்வதிலும் கவனம் கொள்ளுதல் வேண்டும். சமஷ்டி கோரிக்கைக்கு ஆதரவளிப்பதும் அதற்காக போராடுவதும் மக்களை அது நோக்கி விழிப்புணர்வை உருவாக்குவதும் பிரதான பணியாகும். அதனை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழரசுக் கட்சிக்கு உண்டு. அதனையே தற்போது எழுச்சி பெற்று வரும் புதிய தமிழரசு கட்சி உறுப்பினர்களும் தலைமைகளும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் மக்களின் எண்ணம் கடந்த பாராளுமன்ற தேர்தலைப் போன்று விலகிச் செல்வதற்கான வாய்ப்பை அதிகம் பிரதிபலிக்கும்.
நான்காவது தமிழரசு கட்சி 1949 இல் சமஷ்டி கோரிக்கை முன்வைத்த போதும் 1974 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணயக் கோரிக்கை முன்வைத்திருந்தது. சமஷ்டிக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கையின் நடைமுறைத் தன்மையின் பலவீனம் 1980களுக்கு பின்னர் இளைஞர்களின் போராட்ட பங்களிப்பிற்கு ஒரு காரணமாக இருந்தது. அதுவே ஆயுதப் போராட்டமாக பரிமாணம் பெற்றது. தமிழரசுக் கட்சி சமஷ்டி கோரிக்கையை முன்னிறுத்திய மூன்று தசாப்தங்களுக்குள் தமது கொள்கையை மாற்றிக் கொண்டது. பெருமளவுக்கு பிரிந்து செல்லும் சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைத்தது. அதனை நோக்கியே ஆயுதப் போராட்டம் கட்டமைக்கப்பட்டது. ஆயுதப்போராட்டமும் கோரிக்கையின் நியாயப்பாட்டை அடைய முடியவில்லை. தமிழசுக் கட்சியும் தமது கோரிக்கையில் வெற்றி கொள்ளவில்லை. தமிழரசு கட்சி சமஷ்டி கோரிக்கை முன்னிறுத்துகின்ற சூழலில் அதன் நடைமுறை இலங்கை தேசியத்துக்குள் பயணிப்பதாகவே விமர்சிக்ப்படுகிறது. இவ்வாறு சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து தமிழரசு கட்சி அதற்கான போராட்ட வழிமுறைகள் எதனையும் முழுமைப்படுத்தாத போது சமஷ்டிக் கோரிக்கை மீது கொண்டுள்ள கரிசனை உறுதிப்படுத்துவதற்கு கடினமானதாகவே உள்ளது.
எனவே தமிழரசு கட்சியின் சமகால தலைமைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டிக் கோரிக்கையை உதட்டளவில் உச்சரிப்பதை விடுத்து நடைமுறை அர்த்தம் கொண்டதாக மாற்றுவதற்கு ஜனநாயக ரீதியில் போராடுவது அவசியம். தமிழர்கள் கற்பனையில் கோரிக்கைகளை முன்வைப்பதில் வல்லவர்கள் என்ற நிலைப்பாட்டை கைவிட்டு யதார்தமான அரசியல் நிலமையை கருத்தில் கொண்டு செயல்பட முனைய வேண்டும். குறிப்பாக சமஷ்டிக் கோரிக்கை, பிரிந்து சென்று தனியரசுக் கோரிக்கை பின்னர் பிராந்தியசபை, மாவட்ட சபை, மாவட்ட அபிவிருத்தி சபை, மாகாணசபை இவ்வாறு கோரிக்கைகள் மாற்றப்படுகின்றதே அன்றி அவை எதுவும் வெற்றி கொள்ளப்படவில்லை. கோரிக்கைகள் அடைவதற்கான உத்திகளை முன்னெடுத்தல் தமிழ் மக்களின் அரசியல் இருப்பை நோக்கியதாக அமையும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ் தினக்குரல்)
