இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை இந்திராகாந்தி காலத்துக்கு பின்னர் மீளவும் பிரமாண்டமான எழுச்சியை நோக்கி நகர தொடங்கி உள்ளது. சுதந்திர இந்தியாவில் இந்திய-சோவியத் பாதுகாப்பு உடன்படிக்கையே இந்திய இராணுவத்தை ஓரளவு வலிமையுடையதாக மாற்றி இருந்தது. அதன் பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் இந்திய இராணுவத்தை நவீனமயப்படுத்துவதில் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் கூட்டுச்சேர்ந்ததோடு இதர ஐரோப்பிய நாடுகளுடனும் ரஷ்சியாவுடனும் இந்திய இராணுவத்துக்கான தொழில்நுட்பத்தையும் ஆயுத தளபாடங்களின் வளர்ச்சியையும் உள்வாங்கி பலப்படுத்தி வருகிறது. இத்தகைய வளர்ச்சியின் எதிர்கால விளைவு தென்னாசிய பிராந்தியத்தை நோக்கிய அதன் இயல்பான விரிவாக்கத்துக்கும் விஷ்தரிப்புக்கும் வழிவகுக்குமென்ற அச்சம் தென்னாசிய பிராந்திய நாடுகளுக்கும் அவற்றின் அரசியல் தலைமைகளுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்குமிடையிலே ஏற்பட தொடங்கியுள்ளது. குறிப்பாக இலங்கைத்தீவு அவ்வகை நெருக்கடி ஒன்றுக்குள் அகப்படலாம் என்ற நிலை தென்னிலங்கை புத்திஜீவிகளிடையே ஆழமாக பதிவாகி உள்ளது. இக்கட்டுரையும் இந்தியாவை நோக்கி தென்னிலங்கை ஆட்சியாளர்களின் பொருளாதார நெருக்கமும் அதனால் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பும் புவிசார் அரசியலை கடந்து புவிசார் பொருளாதாரத்தின் இணைவு என்பதன் விளைவை தேடுவதாக அமைய உள்ளது.
கோவிட் பெருந்தொற்றானது உலகளாவிய ரீதியில் புவிசார் பொருளாதாரத்தை பலப்படுத்தி வருகிறது. பிராந்திய பிரிப்புக்களை கொண்ட உலகம் அந்தந்த பிராந்தியங்கள் அரசியல் பொருளாதார இராணுவரீதியாக பிராந்திய வல்லரசுகளையும் அடையாளப்படுத்தியுள்ளது. அத்தகைய பிராந்திய வல்லரசுகள் பிராந்திய நாடுகள்மீது இராணுவ அரசியல்மயவாக்கங்களை மாத்திரமின்றி பொருளாதாரமயவாக்கங்களையும் சாத்தியப்படுத்தி வருகின்றன. இத்தகைய செய்முறை கோவிட் பெருந்தொற்றினால் உற்பத்தியும் பரிமாற்றமும், முதலீடும் சந்தைப்படுத்தலும் பிராந்திய நாடுகளை பிராந்திய வல்லரசுடன் அதிகம் பிணைத்துள்ளது. இலங்கைத்தீவானது, அத்தகைய பிணைப்பை புவிசார் அரசியலாக காணப்பட்ட சூழலில் மேலும் விருத்தியாக்கும் நோக்கோடு புவிசார் அரசியல் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரித்தது. அத்தகைய அதிகரிப்புக்கு பின்னால் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் நோக்கங்களை அடைவதற்காக இந்தியாவை நோக்கி ஒத்துழைப்பு எண்ணப்பாங்கை விரிவாக்கி உள்ள சூழலில் இந்தியாவோ இலங்கைத்தீவின் மீதான சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர பயன்படுத்தி கொள்கிறது. அதாவது, தென்னிலங்கை ஆட்சியாளர்களும் இந்தியா ஆட்சியாளர்களும் தமது நலன்களில் இடைவிடாது முயன்று வெற்றி பெற்று வருகின்றனர். இருதரப்பினரது நலன்களும் ஒரேபுள்ளியில் சந்திக்க வைக்கும் உத்தி ஒன்றுக்குள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர், இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மற்றும் ஐனாதிபதி ஆகியோர் காணப்படுவதுடன் இந்திய தரப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இலங்கைக்கான இந்திய தூதுவர் ஆகியோர் செயற்படுகின்றனர்.
இலங்கைத்தீவு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியானது இந்திய தரப்பினால் அணுசரிக்கப்பட்ட போது சீனாவின் பிடி தளர்ந்துள்ளதாகவே கருதப்படுகின்றது. ஆனால் சீனாவின் 99வருடத்துக்கான நிலைத்திருப்பு இலங்கைத்தீவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கேதான் இந்தியாவை கடந்து இலங்கைத்தீவில் இருப்புக்கான உத்தரவாதங்களை சீன-இலங்கை உறவு ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கைத்தீவின் ஆட்சியாளர்கள் இந்தியாவை மீறுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்தியா இலங்கைத்தீவு மீது அதீத நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக 1971ஆம் ஆண்டு ஜே.வி.பியின் எழுச்சியை தடுக்க சீனாவின் இராணுவ பிரசன்னத்தை நிராகரித்து இந்திய இராணுவம் இலங்கைத்தீவுக்குள் இறக்கப்பட்டது. அதேபோன்று 1987இல் வடக்கு-கிழக்கு ஆயுதப் போராட்டம் வளர்ச்சியடைந்த போது அதனை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு மட்டுமல்லாது தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீதான இராணுவ ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர பாரிய படை நகர்வை இலங்கைத்தீவில் இந்தியா மேற்கொண்டிருந்தது. அதேநேரம் 1989இல் ஜே.வி.பியின் இரண்டாவது எழுச்சியை முடிவுக்கு கொண்டுவர இந்திய இராணுவம் சமதளத்தில் வடக்கு-கிழக்கையும், தென்னிலங்கையும் தீவிரவாத அணுகுமுறையிலிருந்து பாதுகாக்க உதவியது. அவ்வாறே 2015ஆம் ஆண்டு தேர்தல் முறைகேடுகளை மேற்கொண்டு ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்ட மகிந்த ராஜபக்ஷாவிற்கு நெருக்கடியை கொடுத்து ஆட்சி மாற்றத்தை அமெரிக்க-இந்திய கூட்டு ஏற்படுத்தியிருந்தது.
எனவேதான் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவின் புவிசார் அரசியல் விளைவை புவிசார் பொருளாதாராமாக கட்டமைத்து இந்தியாவை கையாளும் உபாயத்தை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஒரே நேரத்தில் இரட்டிப்பு நலனை அடைந்து கொள்கிறார்கள்.
முதலாவது, இலங்கை அடைந்திருக்கும்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளெழுச்சிக்கான வாய்ப்புக்களை பயன்படுத்துவதன் மூலம் உள்நாட்டு நெருக்கடியை கையாண்டு வருகிறது. அதேநேரம் இந்தியாவின் மேலாதிக்க உபாயங்களை முறியடித்து நேரடியாக பொருளாதார ஒத்துழைப்பையும் சலுகைகளையும் வாய்ப்புக்களையும் அனுபவிப்பதன் மூலம் இந்தியா இலங்கைத்தீவின் மீதான அரசியல் நெருக்கடியிலிருந்து விடுபட்டுக்கொள்ள உதவுகின்றது.
இரண்டாவது, இலங்கைத்தீவில் வாழும் ஈழத்தமிழர் மீதான இந்தியாவின் கரிசனையை மட்டுப்படுத்தி இந்தியாவின் தலையீடு இல்லாத இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு முயலுகின்றனர். அதாவது ஈழத்தமிழருக்கு இனரீதியிலான ஒடுக்குமுறை இல்லை என்பதையும் அவ்வாறு ஒடுக்குமுறை சார்ந்து இந்தியா கரிசணைகொள்ள முடியாத நிலையை திட்டமிடுகிறது. அதாவது இந்தியாவோடு முரண்படுவதை விடுத்து இந்தியாவோடு சுமூக உறவை பேணுவதன் மூலம் இந்திய நலன்கள் முழுமைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தப்படுவன் மூலம் இந்தியா ஈழத்தமிழரோடு கொண்டுள்ள நெருக்கைத்தை முடிவுக்கு கொண்டுவர முயலுகிறது. காரணம் ஈழத்தமிழரின் பிரச்சினையை மையமாக கொண்டே இந்தியா இலங்கை மீது அதிக தலையீட்டை மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமன்றி பிற வல்லரசுகள் அதிலும் குறிப்பாக இந்தியாவிற்கு எதிரான வல்லரசுகள் இலங்கைக்குள் அதீக தலையீட்டை மேற்கொண்டு வருகிறது. இதனை கருத்திற்கொண்டே தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை அணுகுவதற்கான உபாயங்களை வகுத்து வருகின்றது.
மூன்றாவது, சீனாவை தனது பக்கம் வைத்துக்கொண்டு இந்தியாவை கைவிடாது செயற்படுவதன் மூலம் இலங்கைத்தீவின் அரசியல் பொருளாதார இருப்பை பாதுகாக்கமுடியுமென கருதுகிறது. அதாவது ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் இருக்கும் வரை இலங்கை மீதான இந்தியாவின் இராணுவரீதியிலான நகர்வுகள் அதிக நெருக்கடிக்கு உட்பட்டதாகவே அமைகிறது. ஏற்கனவே சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களின் கொழும்பு துறைமுகம் நோக்கிய வருகை இலங்கை-இந்திய உறவில் அதிக விரிசலை ஏற்படுத்தியது. மேலும், கொழும்பு துறைமுக தெற்கு மற்றும் கிழக்கு முனையம் சீனாவிடம் இருக்கும் வரை இலங்கை மீதான இராணுவ பிரசன்னம் பற்றிய எண்ணம் இந்தியாவிற்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தும். ஆனாலும் இவற்றை அனைத்தையும் தாண்டி இலங்கை தொடர்பில் இந்தியா ஏதேனுமோர் சந்தர்ப்பத்தில் கடந்த காலங்களை போன்று இராணுவ பிரசன்னங்களை மேற்கொள்ள திட்டமிடுமாயின் அதனை தடுக்கும் உத்தியாகவே புவிசார் பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்த தென்னிலங்கை ஆட்சியாளர்கள் முனைகின்றனர். இந்தியாவுக்கான இலங்கைத்தூதுவர் மிலிந்த மொறகொட இந்தியாவுக்கு வழங்கியுள்ள எட்டு அம்ச திட்டத்தில் உள்வாங்ப்பட்டுள்ள மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு என்பன இரண்டும் இந்திய-இலங்கை இணைப்பை எத்தகைய நிரந்தர கட்டுமானங்களுமின்றி பிணைப்பதாகும்.
நான்காவது, இலங்கைத்தீவில் இந்தியாவுடனான நெருக்கம் மேற்குலகத்தின் தலையீட்டை முற்றாக தவிர்த்துவிடுவதற்கான உத்தியையும் கொண்டுள்ளது. இந்திய மேற்குறவும், இந்தோ-பசுபிக் உபாயமும் இந்தியாவை பலமான சக்தியாக மாற்றுவதில் கரிசணை கொண்டுள்ளது. இந்தியா இந்தோ-பசுபிக் பிராந்தியத்திலேயே பலமான சக்தியாகவும் மேற்குலகின் நட்புசக்தியாக விளங்குகின்ற போது இலங்கைத்தீவின் மீதான மேற்கின் எல்லைமீறிய தலையீடு இந்தியாவால் கட்டுப்படுத்தப்படுமென இலங்கை நம்பிக்கை கொள்கின்றது. இதற்கான நோக்கம் இந்தியாவுடனான ஒத்துழைப்பின் மூலம் ஈழத்தமிழர் விடயத்தில் மேற்கின் தலையீட்டை இந்தியாவை அனுசரிப்பதன் மூலம் முற்றாக அகற்றி விடலாமென தென்னிலங்கை ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.
எனவே, இந்தியாவின் இராணுவ வல்லமை இலங்கைத்தீவை அச்சுறுத்தாமல் இருப்பதற்கும் ஈழத்தமிழரது அரசியல் பிரச்சினைக்கான தீர்வு தென்னிலங்கையின் விருப்புக்கு உட்பட்டதாக வடிவமைப்பதற்கும் மனித உரிமைகளிலும், பொருளாதார ஒத்துழைப்புக்களிலும் மேற்கின் தலையீட்டை தவிர்க்கவும் இந்தியாவுடனான ஒத்துழைப்பை புவிசார் பொருளாதாரமாக தென்னிலங்கை ஆட்சியாளர்கள் வடிவமைத்து வருகின்றனர். இதுவே தென்னிலங்கையின் பலமும் ஈழத்தமிழர்களின் பலவீனமுமாகும். ஈழத்தமிழரின் இந்தியாவுடனான நுபெயபநஅநவெக்கான வாய்ப்புக்கள் அனைத்தும் மூடப்பட்டே உள்ளன. அதற்கான காரணம் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளுமாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
