அரசியல் கட்டுரைகள்

மகாசங்கங்களால் கட்டமைக்கப்பட்ட இலங்கைத்தீவின் அரசியல் மீளவும் மகாசங்கங்களின் பிடிக்குள்!

தென் இலங்கை அரசியல் மீண்டும் ஒரு தீவிர நெருக்கடியை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக போராடிவரும் போராட்டக்கார் ஆட்சியில் உள்ள நிறைவேற்றத்திகாரங் கொண்ட ஆட்சியாளரை விரட்டியடிக்க அதிக பிரயத்தனம் கொண்டு செயல்பட்டுவருகின்டறனர். பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம் தீர்வின்றி காணப்பட அதற்கு காரணமான ஆட்சியாளர்களது அதிகாரப் போட்டி மறுபக்கமாக இலங்கைத் தீவில் நெருக்கடியை தவிர வேறு எதனையும் அடைய முடியாது காணப்படுகிறது. அதிகாரத்திற்கான ஆள் மாற்றங்களும் பிராந்திய சர்வதேச சக்திகளது உத்தரவாதங்களும் தீர்வின்றிய அரசியல் இருப்பையே மீளவும் இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரையும் நிறைவேற்றதிகாரத்திற்கு எதிரான மகாசங்கங்களின் நகர்வும் இலங்கைத் தீவின் அரசியல் போக்கினையும் தேடுவதாக உள்ளது.

இலங்கைத் தீவின் அரசியல் பௌத்த மகாசங்கங்களால் கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் வடிவத்தை பல நூற்றாண்டு காலமாக அவதானிக்க முடிகிறது. இலங்கைத் தீவின் அரசியல் அதிகாரத்திற்கான அரச கட்டுமானம் பௌத்த மகாசங்கங்களால் வடிவமைக்கப்பட்டு இயங்கிவருகிறது. மன்னராட்சிக் காலத்தில் முடியதிகாரமும் மதமும் ஒன்றிணைக்கப்பட்டிருந்தது போல் நவீன இலங்கைத் தீவின் அரசியலிலும் மதமும் சிங்கள மொழியும் அரசுடன் ஒன்றிணைக்கப்பட்டு எழுதப்படாத அரசியலமைப்பின் கீழ் ஆளப்பட்டு வந்துள்ளதைக் காணமுடிகிறது.1880 இல் அனகாரிக தர்மபாலாவும் 1956 இல்எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்காவும் மகாவம்ச்தின் இருப்பின் நீட்சிக்கு வலுக்கொடுத்தவர்களாக விளங்கினர். அதன் இன்னோர் கட்டமாகவே ஓரே நாடு ஓரே சட்டத்திற்கான வலுவை கொடுத்து இலங்கைத் தீவு சிங்கள பௌத்த நாடு என்ற இலக்கை அடைய திட்டமிடுகிறதைக் காணமுடிகிறது. அண்மையில் (29.06.2022) ஓரே நாடு ஓரே சட்டம் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேதரினால் ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக தமிழர்களின் தேசவழமை, கண்டியச் சட்டம் மற்றும் இஸ்லாமிய சமூகம் தொடர்பிலான சட்டங்கள் நீக்கப்படுவதற்கான கோரிக்கையும் அது தொடர்பிலான சட்டங்கள் உருவாக்க பணிக்க்கப்பட்டமையும் கவனத்திற்குரிய அம்சமாகும். இவ்வறிக்கை ஐக்கிய நாடுகளின் சமவாயங்களை உள்ளடக்க பணிப்புரை விடுத்தாலும் பல்லினங்களின் இருப்பினை நிராகரிக்கும் செய்முறையை பிரதான நடவடிக்கையாகக் கொண்டுள்ளமையே அதிக அபாயமானதாக தெரிகிறது. இவை பற்றிய புரிதல் அவசியமானது. அதனை விரிவாக நோக்குவது தேவையானதாக உள்ளது.

முதலாவது பாரிய பொருளாதார நெருக்கடியின் போதும் அரசாங்கமும் பௌத்த சங்கங்களும் இன உணர்வைப் பிரதிபலிக்கும் செயல்பாடுகளை கைவிடுவதாக தென்படவில்லை. இலங்கைத் தீவின் வரலாறு முழுவதும் இனவாமே பிரதான முதலீடாக அமைந்திருந்தது. இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு அத்தகையஇனவாத முதலீடே பிரதான காரணமாக அமைந்திருந்தது. அதனை என்றுமே கைவிடத் தயாராக இல்லாத சூழல் தென் இலங்கை அரசாங்கத்திடமும் அதற்கான அரச இயந்திரத்திடமும் காணப்படுகிறது. குருந்தூர் மலை விவகாரமும் வடக்கு கிழக்கு மீதான ஆக்கிரமிப்பு நகர்வுகளும் தொடர்வதுடன் ஓரே நாடு ஓரே சட்டம் ஏனைய தேசியங்களின் உரிமைகளை நிராகரிப்பதாக அமைகிறது.

இரண்டாவது,பௌத்த மகாசங்கங்கள் நிறைவேற்றதிகாரம் மீது பதவி விலகுவதற்கு காலக்கெடுவை அறிவித்துள்ளதுடன் பலகட்சி அரசாங்கத்தை அமைப்பது பற்றியும் ஜனாதிபதியிடன் விண்ணப்பித்துள்ளன. மிக நீண்ட அமைதிக்கு பின்னர் பௌத்த பீடங்கள் எழுச்சி பெற்றுள்ளன. பௌத்த மத பீடங்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிசாய்த்து பதவி விலக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. மிக நீண்டகாலம் காலிமுகத்திடலிலும் பரவலாக இலங்கைத் தீவு முழுவதும் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகக் கேரிய போதும் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக காணப்பட்டிருந்தது. எந்த சூழலிலும் தாம் ஆட்சிக்காலம் முடியும் வரை பதவி விலகப் போவதில்லை எனக் கூறிய ஜனாதிபதி தற்போது மகாசங்கங்கள் எழுச்சி பெற்றதுடன் பதவி விலகத் தயார் எனக்குறிப்பிட்டுள்ளமை இலங்கைத் தீவின் அரசியல் பௌத்த மகா சங்கங்களிடமே உள்ளதென்பதை அடையாளப்படுத்துகிறது.பௌத்த பீடங்களே இலங்கைத் தீவின் அரசு.அதன் கொள்கைகளும் முடிபுகளுமே அரசாங்கங்களின் தொழில்பாடுகளாகும்.

மூன்றாவது. காலிமுகத் திடல் போராட்டக் குழக்கள் அனைத்தும் இலங்கைத் தீவில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக வடக்கு விஜயத்தின் போது கருத்துக் கொண்டிருந்தன. இலங்கைத் தீவை முழுமையாக மாற்றத்துக்கு உள்ளாக்குவதுடன் தமிழ் மக்களுக்கான அரசியல் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொபண்டிருந்தன. அதற்கான உரையாடலை வெளிப்படுத்துவதாக அவர்களது நகர்வுகள் அமைந்திருந்தன. தமிழ் மக்களும் காலிமுகத்திடல் வெற்றிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை தருவதாக கருதினர். தற்போது இல்லாது விட்டாலும் எதிர்காலத்தில் அ;தகைய மாற்றம் இலங்கைத் தீவில் அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து வாழமுடியுமென கருதினர். அதற்கான நம்பிக்கையூட்டல்கள் தென் இலங்கை போராட்டத் தரப்புக்களால் வழங்கப்பட்டன. ஆனால் நடைமுறை வேறுவிதமானதாக அமைந்துள்ளது.

நான்காவது காலிமுகத் திடல் போராட்டத்தின் மீதான அதிருப்தி அரசாங்கத்தின் இயந்திரங்களால் அதிக அடக்கு முறைக்குள் உள்ளாகத் தொடங்கியு;ள்ளது. அதனை தடுத்து நிறுத்தும் திராணி இருந்தும் பௌத்த பீடங்கள் அமைதி காத்துவருகின்றன. மாறாக பௌத்த பீடங்களே எழுச்சி பெற்று போராட்டம் நடாத்தப் போவதாக அறிவித்துவருகின்றன. அப்படியானால் பௌத்த பீடங்கள் தீவிர போக்குடைய போராட்டக்காரரிடமிருந்து பொராட்டததை தம்பக்கம் வைத்துக் கொள்ள திட்டமிடுகின்றனர் என்பதாகவே தெரிகிறது.இதற்கு பின்னால் பௌத்த பீடங்களிடம் தெளிவான அரசியல் காணப்படுpறது. போராட்ட்காரரது போராட்டம் வெற்றி பெற்றால் அரச இயந்திரம் அல்லது அரசு அவர்களது கட்டுப்பாட்டுக்குள் நகர்ந்துவிடும். அது ஒரு பல்லினக் கட்டமைப்பை உருவாக்கி சுமூகமான மாற்றத்தை நோக்கி இலங்கைத் தீவு நகர்ந்துவிடும். சிங்கள பௌத்த மேலாதிக்கம் தகர்ந்த போய்விடும் எனக்கருகின்றன. அதனைத் தடுத்து நிறுத்துவதே பௌத்த பீடங்களின் பிரதான நோக்கமாகும். இன்னோர் வகையில் கூறுவதாயின் இவை பௌத்த பீடங்களின் வெற்றிகரமான உத்தியாக அமைந்துள்ளன. இதனை முறியடிப்பது கடினமானதாகவே தெரிகிறது.

ஐந்தாவது, காலிமுகத்திடல் எத்தகைய கொள்கையை முன்வைத்தாலும் பௌத்த பீடங்களின் அரசியலுக்குள் இயங்க வேண்டியது தவிர்க்க முடியாததாகவே அமையும். அந்த சந்தர்ப்பத்தில் இலங்கைத் தீவு பௌத்தமதத்தின் இருப்புக்குள்ளேயே இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்போது காலிமுகத்திடலின் புரட்சிகரமான கொள்கைகள் அனைத்தும் முடிபுக்குள் வந்துவிடும். தற்போது கூட காலிமுகத்திடல் சிவில் அமைப்புக்கள் முன்வைத்த வரைபை அடிப்படையாகக் கொண்டே பலகட்சி அரசாங்கம் அமைக்க திட்டமிடல் நிகழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பலகட்சி அரலசாங்கமே அன்றி பல்லினத் தேசிய அரசாங்கமல்ல என்பது அதன் ஆரம்பகட்ட வரைபிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அதில் தமிழ் முஸ்லீம் பிரதிநிதித்துவம் இருக்குமே அன்றி தீர்மானம் எடுக்கும் செய்முறையில் தனித்துவமோ வீட்டோ அதிகாரமோ ஏனைய தேசியங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.

ஆறாவது, தென் இலங்கையின் கட்சி அரசியல் ஆட்சியை கோருவதில் கவனம் கொள்கிறதே அன்றி நாட்டுக்கு தேவையான கட்டமைப்பையோ பொருளாதார நெருக்கடியையோ தீர்க்கும் உபாயம் எதுவும் அற்றுக் காணப்படுகிறது. மரபான அரசியல் கட்சிகள் மட்டுமன்றி மரபுகளைக் கடந்த தரப்பெனக் கூறும் ஜே.வி.பி.உம் தற்போது ஆட்சி அதிகாரத்தை கோருகிறது. அனைத்து அரசியல் தரப்பும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்குள்ளேயே தீர்வை காண முயலுகின்றனர். அத்தகைய அரசியலமைப்பின் பலவீனங்களைக் கூற கண்டுகொள்ளத் தயாராக இல்லாத போது இலங்கைத் தீவில் எந்த மாற்றமும் சாத்தியப்படப் போவதில்லை. மக்களது மரணிக்கு நிலை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. தமிழ் தரப்பு எந்த முயற்சியும் இன்றி தீர்வு கிடைக்கும் என்ற கோசத்தை மீண்டும் முன்வைத்து செயல்படுவதாக காட்டிக் கொள்ள முனைகிறது. மக்களின் மரணத்திற்குப் பின்னர் தீர்வு யாருக்கானது என்ற கேள்வியே எஞ்சியுள்ளது.நேர்வே, லண்டன், அமெரிக்கா என தமிழ் அரசியல்வாதிகள் உலாவருகிறார்கள் சொந்த மக்கள் நாளாந்தம் உணவுக்குபடும் அவஸ்தை பற்றி எந்த திட்டமிடலையும் முன்வைத்ததாக தகவல் இதுவரை இல்லை. இத்தகைய துயரத்திற்கு ஒரு மாற்று அவசியமானதாகிறது. அதனை நோக்கி தமிழ் மக்களும் அதன் உண்மையான அரசியல் செயல்பாட்டாளர்களும் பயணிக்க தயாராக வேண்டும்.

எனவே மகாசங்கத்தின் பிடிக்குள்ளேயே இலங்கைத் தீவின் அரச இயந்திரம் மீளவும் செயல்படப் போகிறது. அதற்கான நகர்வுகளே தென் இலங்கையில் நிகழ்கிறது. போராட்டத்தின் வலிமை மகாவம்ச மனோநிலைக்குள்ளாலேயே நகர்கிறது. அதனை உலக ஆதிக்க சக்திகளும் கண்டுகொள்ளாது செயல்படுகின்றன. தென் இலங்கை அரசியல் கட்சிகளும் போராட்ட அமைப்புக்களும் அத்தகைய எல்லைக்குள்ளேயே பயணிக்கின்றன. தமிழ் தரப்பு அனைத்தையும் மீண்டும் வீணடித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)