தென்னிலங்கை அரசியல் களம் அதிக திருப்பங்களை ஏற்படுத்துகின்றது. பொருளாதார நெருக்கடிளயும் அரசியல் குழப்பமும் தொடர்ச்சியானதொன்றாக காணப்படும் போது பிராந்திய சர்வதேச சக்திகளின் அச்சுறுத்தல்களும் நிலவுகின்ற காலப்பகுதியில் அவதானிக்க முடிகிறது. இலங்கைத்தீவு முழுமையாக ஜனநாயகத்தின் மரபுகளையும் அதன் உள்ளடக்கங்களையும் நிராகரிப்பதோடு மக்களின் நலன்களுக்கு முரணான ஆட்சி முறை அதிகாரத்தை கைப்பற்றும் உத்தியும் அதீதமானதாக வளர்ச்சியடைந்துள்ளது. இதனால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியானது காலிமுகத்திடல் போராட்ட சக்திகளினை வேட்டையாடுவதோடு எச்சசொச்சமாக இருந்த ஜனநாயக அம்சங்களும் காலாவதியாகின்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. இக்கட்டுரையும் பயங்கரவாதம், தேசிய பாதுகாப்பு என்ற இரட்டை உத்தியோடு பயணிக்கும் தென்னிலங்கை அதிகார கட்டமைப்பின் போக்கினை புரிந்து கொள்ள முயலுகிறது.
1979ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத்தீவில் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழ் மக்களின் உரிமைகளை ஒடுக்குவதற்காக வரையப்பட்டு பல தசாப்தங்களை கடந்து தற்போதும் இராணுவ ஆதிக்கத்துக்குள்ளேயே வடக்கு-கிழக்கு இருப்பு காணப்படுகின்றது. இத்தகைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் இனப்படுகொலையும் வன்முறைகளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் அங்கீகரிக்கப்பட்டதோடு தமிழ் மக்களின் அபிலாசைகள் அனைத்தும் அத்தடைச்சட்டத்தினால் முற்றாகவே அழிக்கப்பட்டுள்ளது இதன் விளைவுகள் இலங்கைத்தீவின் அரசியல் நெருக்கடியை மட்டுமன்றி பொருளாதார நெருக்கடியையும் இனமுரண்பாட்டையும் தீவிரப்படுத்தியதேர்டு சுதேச கட்டமைப்புக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதையும் கவனத்திற்கொள்ள முடியும். இவ்வாறு ஒரு நீண்ட நெருக்கடிமிக்க சூழலால் வடக்கு-கிழக்கு பாதிக்கப்பட்டது போன்று தென்னிலங்கையும் 1971, 1989 காலப்பகுதியில் அனுபவித்துள்ளது. ஆனால் சமகாலத்தில் தொன்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகளும் விசாரணைகளும் பாரிய அரசியல் நெருக்கடியை இலங்கைத்தீவில் ஏற்படுத்த முனைகின்றதா என்ற சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.
இதனை ஆதாரப்படுத்தும் விதத்திலேயே ஐக்கிய நாடு சபை, சர்வதேச மன்னிப்பு சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேற்கு நாடுகளின் வரிசையில் அமெரிக்கா பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகளை நிராகரித்ததோடு ஜனநாயகத்தின் அனைத்து இருப்புக்களையும் பலவீனப்படுத்துவதாக அரசாங்க நடவடிக்கைகளை குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையிலும் எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இலங்கைத்தீவில் ஜனநாயகத்திற்கான வெளியை முதன்மைப்படுத்தும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இலங்கைத்தீவில் ஜனநாயகபூர்வமான நடவடிக்கைகளுக்கே அமெரிக்கா உதவுமென குறிப்பிட்டுள்ளதோடு தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் கைதுகளை ஜனநாய மீறல்களென தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உள்நாட்டிலும் பிராந்திய சர்வதேச மட்டத்திலும் குற்றச்சாட்டுகளும் எச்சரிக்கைகளும் முதன்மைப்படுத்துகின்ற சந்தர்ப்பத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தினை மேலும் பலப்படுத்தும் விதத்திலும் அதன்கீழான கைதுகளை நீடிப்பதையும் அவதானிக்கின்ற போது அத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் விதத்தில் இலங்கைத்தீவின் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்த முயலுகின்றது. ஆயுதமற்ற மற்றும் வன்முறையில்லாத மக்கள் போராட்டத்தை பயங்கரவாதமென குறிப்பிடுவதோடு அதனை தேசிய பாதுகாப்புக்கு விரோதமானதெனவும் உரையாட இலங்கை ஆட்சியாளர்கள் முனைகின்றார்கள். வடக்கு-கிழக்கு தமிழர்கள் மீது கடந்த 40வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட அடக்குமறை கருவியான பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது தென்னிலங்கை சிங்கள மக்களையும் அவர்களது நியாயமான கோரிக்கைகளையும் முடிவுக்கு கொண்டுவர பயங்கரவாத தடைச்சட்டத்தை தற்போதைய அரசாங்கம் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது. இது கடந்த காலத்தில் ஈழத்தமிழர் மீதான அரசின் அடக்குமறை வடிவத்தின் தன்மையை தென்னிலங்கைக்கு உணர்த்த முயல்வதாகவே தெரிகின்றது. 2001ஆம் ஆண்டு செப்டெம்பர்-11 தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்காவினால் உலக ஆதிக்கத்தை கைப்பற்றுவதற்காக இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக முன்னிறுத்தப்பட்ட பயங்கரவாதம் என்ற அரசியல் எண்ணத்தை இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான உரிமைப்போராட்டத்தை நிராகரிப்பதற்கும் தீவிரமாக ஒடுக்குவதற்கும் வாய்ப்பான சூழலை வழங்கி இருந்தது. பயங்கரவாதம் என்ற எண்ணக்கருவை வரையறுப்பதில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பல வாரங்களாக நிகழ்த்திய உரையாடலின் விளைவுகளால் எந்த தீர்மானத்தையும் எட்ட முடியாத சூழ்நிலையை உருவாக்கியது. ஆனால் அமெரிக்கா உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் தனது வளங்கள் மீதும் சொத்துக்கள் மீதும் தேசத்தின் மீதும் தனது தேசியத்தின்(மக்கள்) மீதும் நிகழ்த்தப்படும் வன்முறைக்குட்பட்ட தாக்குதல்கள் அனைத்தும் பயங்கரவாதத்துக்கு உட்பட்டதென வரையறுத்துக்கொண்டது. இதன் பிற்பாடு உலகில் உள்ள ஆயுதப்போராட்டங்களையும் விடுதலைப்போராட்டங்களையும் பயங்கரவாதமாக வரைறுக்கும் இயல்பை நாடுகளும் ஆட்சியாளர்களும் உருவாக்கி கொண்டனர். உலகளாவியரீதியில் அனைத்து தேசியங்களின் தேசவிடுதலை போராட்டமும் அதன்கீழான ஆயுத விடுதலை போராட்டமும் பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்ட முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அவ்வாறான பாணியிலேயே இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு ஆயுதப்போராட்டமும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனாலும் பயங்கரவாதம் என்ற சொற்பிரயோகத்தின் முழுவளர்ச்சி கோட்பாட்டுரீதியில் முதன்மைப்படுத்துகின்ற போது அரச பயங்கரவாதமாகவும் ஆயுதப்போராட்டத்தின்பல் எழுந்த இலக்கற்ற வன்முறையின் உத்திகளையும் ஆட்கள் விமானங்கள் போக்குவரத்துசார்ந்த அம்சங்களையும் கடத்துதல் அவற்றை அடிப்படையாய் கொண்டு அச்சுறுத்ததல் பேரம் பேசுதல் பயங்கரவாதமாக வடிவமைக்கப்பட்டது. காலிமுகத்திடல் போராட்டம் அடிப்படை பொருளாதார தேவையை அடைவதற்கும் அதற்கான ஆட்சியதிகாரத்தை ஜனநாயக வழியில் வடிவமைப்பதற்கும் ஊழலற்ற இருப்பை சாத்தியப்படுத்துவதற்காகவும் கடந்த காலத்தில் இலங்கைத்தீவில் தமிழர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட அநீதிகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் அல்லது அதற்கான பரிகாரத்தை வழங்குவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டது. இதில் வன்முறையோ ஆயுதங்களோ போராட்டத்துக்கான கருவியாகவோ அல்லது உத்தியாகவே காணப்படாதது மட்டுமன்றி மக்களின் திரட்சிக்கூடாக முறைமை மாற்றம் ஒன்றையே தேச கட்டுமானம் பற்றி சிந்திக்கப்பட்டதன் விளைவாகவே அமைந்திருந்தது. இதனை முன்னகர்த்திய தலைமைகளும் உறுப்பினர்களும் கைதுசெய்யப்படுவதும் தடுத்து வைக்கப்படுவதும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பேரால் கையாளப்படுவதும் புலமைபூர்வமான விடயமாக அல்லது ஒரு நியாயப்பபடுடைய அம்சமாக கருத முடியாது. அவ்வாறு அத்தகைய பிரயோகங்களை மேற்கொள்ள அரசாங்கமும் அதன் அதிகார வர்க்கமும் பிரயோகிக்கும் இன்னோர் பிரதான எண்ணக்கருவாக தேசிய பாதுகாப்பு விளங்குகின்றது.
தேசிய பாதுகாப்பு என்பது புரிதலிலும் அதன் கோட்பாட்டு ஆக்கத்திலும் பலவீனமான செய்முறையையே இலங்கை ஆட்சியாளர்கள் வெளிப்படுத்த முயலுகின்றனர். தேசம் அதனால் உருவான தேசியம் அதன் உணர்வுகளின் பிரதிபலிப்பான தேசியவாதம் இவற்றின் மூலம் கட்டமைக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு எனும் அனைத்துமே புலமைசார் தளத்தில் மக்களை மையப்படுத்தியது. ஒக்ஸ்போர் கலைக்களஞ்சியம் தேசம் என்பது மக்களை குறிப்பதாக வரைவிலக்கணப்படுத்துகிறது. அத்தகைய மக்களின் பாதுகாப்பே தேச பாதுகாப்பாகவும் தேசிய பாதுகாப்பாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது. தேசியம் சார்ந்த சிந்தனை ஐரோப்பியர்களின் எண்ணப்பாங்கிலிருந்து முதன்மைப்படுத்தப்பட்ட போதும் அதன் உள்ளார்ந்த அர்த்தம் மக்களின் திரட்சியை குறிப்பதாகும். மக்களின் திரட்சியோ அல்லது கூட்டோ நவீன காலத்தில் ஜனநாயகம் என அழைக்கப்பட்டது. அதனாலேயே தேசியத்தையும் ஜனநாயகத்தையும் ஒன்றாக கருதுகின்ற போக்கு புலமைத்தளத்தில் முதன்மைப்படுத்தப்படுகின்றது. இலங்கைத்தீவின் ஜனநாயகம் அதிகம் போலித்தன்மை கொண்டது என்பதை இதனூடாகவே விளங்கிக்கொள்ள முடியும்.
ஆதிக்க வர்க்கம் அல்லது ஆதிக்க சக்திகள் தங்கள் நலன்களையும் வாய்ப்புக்களையும் உறுதிப்படுத்திக்கொள்ள உருவாக்கி கொண்ட போலி அர்த்தமே தேசிய பாதுகாப்பு சார்ந்த மக்களின் நலன்களை நிராகரித்து கொண்ட வெளிப்பாடாகும். மக்களுடைய கோரிக்கைகள் அங்கீககரிக்கப்படுவதும் அவர்களது நலன்கள் பாதுகாக்கப்படுவதும் அவர்களது வளங்களும் வாழ்க்கை முறைகளும் பேணப்படுவதும் அதற்கான உத்தரவாதத்தை வழங்குவதும் தேசிய பாதுகாப்பு ஆகும். அவர்கள் வாழுகின்ற நிலமும் அந்த நிலத்தின் வளமும் அவ்வளத்தின் பண்பாடும் பேணப்படுவதே தேசிய பாதுகாப்பு ஆகும். குண்டுகளை ஆட்சியாளர்களே வெடிக்க வைத்தவிட்டு அதனை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தேசிய பாதுகாப்பாக அமையாது. ஈஸ்டர் தாக்குதல் இலங்கைத்தீவின் தேசிய பாதுகாப்பின் பலவீனம் என்று அடையாளப்பட்டாலும் அதுவோர் அரச பயங்கரவாதம் என்றே கருதப்படுகிறது. அதற்கான புரிதலை பேராயர் மல்கம் ரஞ்சித் ஜெனீவா வரை உரையாடி உள்ளார்.
இதனால் தற்போதைய ஆட்சியாளர்களும் அதன் அதிகார வர்க்கங்களும் தேசிய பாதுகாப்பிக் பேரால் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதும் அதனை நியாயப்படுத்துவதும் இலங்கையில் எழுந்தள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வாக அமையாது. போலியான கோட்பாடுகளுக்கும் எண்ணக்கருக்களுக்கும் முற்றிலும் விரோதமான உரையாடல்களை முன்வைப்பதனால் இலங்கைத்தீவின் அரசியல் பொருளாதாரம் சுமூகமான மாற்றத்தை அடைந்துவிடப்போவதில்லை. இவையணைத்தும் மீளவும் மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் அதிகப்படுத்தவதோடு அதற்கான ஆட்சியொன்றை நோக்கிய தேடல் தொடர்ந்து நிகழ்வதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. அஹிம்சை போராட்டங்களை அடக்குவதன் மூலம் போராட்டங்களின் வடிவங்களை காலந்தாழ்த்துவதோ பலவீனப்படுத்துவதாகவோ அமைந்தாலோ அதன் திரட்சி புதிய வடிவத்தில் மீளமைப்பதற்கான வாய்ப்பை அடையும். உலக வரலாறு முழுவதும் அத்தகைய அனுபவங்களே அதிகமாக உள்ளது.
பின்காலனித்துவம் பற்றிய உரையாடலை முன்வைத்த ஹம்சா அலாரி குறிப்பிடுவது போல் ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் அரச வன்முறையும் பின்காலனித்துவ அரச கட்டமைப்பின் தோல்விக்கான காரணங்கள் என அவர் குறிப்பிடுவது போன்று இலங்கைத்தீவின் பின்கலனித்துவ அரச வடிவம் தோல்வியடைந்துள்ளது. அத்தகைய தோல்வியிலிருந்து மீள்வது போலியான தேசிய பாதுகாப்பினால் சாத்தியமாகாது. அவ்வாறே பயங்கரவாத தடைச்சட்டத்தினாலோ அதனை வெற்றி கொள்ள முடியாது.
எனவே, இலங்கையின் புதிய ஆட்சி முறைமையும் எந்தவித புரட்சிகரமான எண்ணத்தையும் பிரதிபலிப்பதாக அமையவில்லை. மீளவும் மரபுவாத சிந்தனைக்குள்ளால் இலங்கைத்தீவையும் தேசகட்டுமானத்தையும் தேசிய பாதுகாப்பையும் கட்டமைக்க முயலுகிறது. இது மீளவும் ஒரு தோல்விக்கான அத்திவாரமாகவே காணப்பட போகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
