அரசியல் கட்டுரைகள்

ஜெனீவாவில் ஈழத்தமிழருக்கான இந்தியாவின் நிலைப்பாடு மாற்றத்தை தருமா?

இலங்கை தமிழரின் அரசியல் அபிலாசைகளை ஜெனீவாக் களம் கையாளும் தனித்துவத்தை இழந்துள்ளதாக தென்படுகிறது. மறுபக்கத்தில் தென் இலங்கையை உலக வல்லரசுகள் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் நகர்த்துவதில் ஜெனீவாக் களத்தை வெற்றிகரமாக்கியுள்ளதைக் காணமுடிகிறது. அதற்கு மேலும் வலுக்கொடுக்கும் விதத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் வழியமைத்துள்ளது. தென் இலங்கை ஆட்சியாளரை கையாளும் திறனைக் கொண்டதாக வல்லரசுகள் காணப்பட்டது போல் தென் இலங்கைத் தரப்பும் தனது உபாயத்தின் மூலம் நெருக்கடியை காரணம்காட்டி இலங்கைத் தமிழரின் அரசியலை கையாண்டுவருகிறது. அமெரிக்க தென் இலங்கை உறவு வலுவடையும் போக்கினையும் இந்தியா ஈழத்தமிழரது அரசியலில் மட்டுமல்லாது இலங்கைத் தீவு அரசியலிலிருந்து விலகும் போக்கினையும் அவதானிக்க முடிகிறது. ஆனால் இந்தியா ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வை வலியுறுத்துவதாகவும் இலங்கைக்கான நிதி உதவியை நிறுத்தியுள்ளதன் மூலம் அழுத்தங்களை தென் இலங்கைக்கு வழங்குகிறதென செய்திகள் வெளியாகியுள்ளன. இக்கட்டுரையும் இந்தியாவின் ஜெனீவா நிகழ்ச்சி நிரலையும் ஈழத்தமிழர் நிர்கதியாக்கப்படும் நிலையையும் தேடுவதாக அமையவுள்ளது.

அமெரிக்காவுக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் நிர்வாகி சமந்தாபவரின் இலங்கை விஜயம் பாரிய நிதி உதவிக்கான வாய்ப்புகளை தென் இலங்கைக்கு ஏற்படுத்திக் கொடுத்தள்ளது. ஏற்கனவே 100 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகம் மீளவும் 60 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியா, சீனாவுக்கு அடுத்த நிலையில் அமெரிக்க உதவிகள் அமைந்தாலும் கடன்பொறிக்குள் இலங்கை என்ற விமர்சனத்திற்கு அப்பால் செயல்பட அமெரிக்காவின் உதவிகள் வழிவகுத்துள்ளன.

அவ்வாறே தென் மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் துர்துவர் ஜீலி சங் தெரிவித்துள்ள கருத்து அதிகம் அவதானிக்கப்பட வேண்டியதாகும். குறிப்பாக திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை ஆதரிப்பதற்கு இலங்கையின் தலைமை அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். இதே கருத்தை அண்மையில் தேசியப் பாதுகாப்புக் கல்லூரியின் நிகழ்தெவன்றில் (14.08.2022) கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹா அதிக முக்கியத்துவம் கொடுத்து உரையாற்றியிருந்தார். அதாவது பசுபிக் பிரச்சினைகள் இந்து சமுத்திரத்தில் நுழைவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது எனும் தொனிப் பொருளில் தனது உரையை ஆற்றியிருந்தார். அவரது உரையின் முழுமையும் சீனாவையும் அமெரிக்காவையும் கையாள்வதாக அமைந்ததுடன் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையை இலங்கை பாதிக்கும் வகையில் செயல்படாது என்ற முன்னாள் ஆட்சியாளர்களின் கொள்கையை மீளவும் நினைவு கொண்டதை அவதானிக்க முடிந்தது. அதில் அமெரிக்காவின் உறவை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் அவரது உரையின் புள்ளி அமைந்திருந்தது. 1977 ஆம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் சமாதானம் பிரகடனப்படுத்தப்பட்ட போதும் அமெரிக்க கடற்படையினரது வருகை தடைசெய்யப்படவில்லை என்றார். அவ்வாறே ஜப்பானியக் கடற்படை மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடற்படைகள் இலங்கை கடற்பரப்பில் தற்போது காணமுடிகிறது. அதனை விரும்புகிறோம். அதுவே வளர்ச்சி என்கிறார் இலங்கையின் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா.

இலங்கை ஜனாதிபதியின் அணுகுமுறையும் அமெரிக்கத் தரப்பின் அணுகுமுறையும் ஓரே தளத்தில் நகர்கிறது என்பது ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் இந்தியாவுடனான உறவை கையாளுவதில் கவனம் கொள்ளும் நிலையை அவதானிக்க முடிகிறது. அதேநேரம் ஜெனீவாவில் இந்தியாவின் நகர்வுகளை கொண்டு சில ஊடகங்களும் இந்திய தரப்பினரும் இந்தியா இலங்கைக்கு எதிரான வலுவான தீர்மானத்திற்கு முயல்வதாகவும் பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடுவதன் மூலம் ஈழத்தமிழருக்கான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகவே இலங்கைக்கு நிதிப் பங்களிப்பை வழங்காது என்ற முடிபை அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் உண்மைத் தன்மை எதுவென்பதை தேடுவது அவசியமானது.

முதலாவது, 35 வருடங்களுக்குப் பின்பும் இரு நாடுகளுக்கிடையில் எட்டப்பட்ட உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்தவில்லை என சர்வதேச மட்டத்தில் உரையாடுவது ஆரோக்கியமானதாகவே உள்ளது. அதற்காக 35 வருடத்திற்கு பின்னரும் எந்த வளர்ச்சியும் இல்லாது உலகம் உள்ளது எனக்கூறுவது அபத்தமானது. ஈழத்தமிழர் 1987 களுக்குப் பின்னர் அடைந்த வளர்ச்சியும் அழிவுகளும் துயரங்களும் தீர்வில் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமானது. மறுபக்கத்தில் இனமுரண்பாட்டுக்கான தீர்வுகளில் உலகளாவிய கருத்தியலில் ஏற்பட்ட முதிர்ச்சியை கவனத்தில் கொள்ளுதல் அவசியமானது. இந்தியா ஜெனீவாவில் ஈழத்தமிழருக்கான தீர்வில் 13 வது சீர்திருத்தத்திற்கு அப்பால் சென்று சுயநிர்ணயத்துடன் கூடிய தீர்வை முன்மொழியுமாக இருந்தால் அதுவே பொருத்தமானதும் ஆச்சரியப்படக் கூடியதுமான செயலாக அமையும். அதனைவிடுத்து மீளவும் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவது எனக் குறிப்பிடுவது ஈழத்தமிழரது அரசியல் அபிலாசைகளை முடிபுக்கு கொண்டுவரும் செயலாக அமைவது மட்டுமன்றி இந்தியாவின் இயலாமையும் இலங்கை ஆட்சியாளரின் ஏமாற்றுத்தனத்தின் வடிவத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. இது கடந்த 35 வருட ஏமாற்றுத் தனத்தின் நீட்சி. இது இலங்கை அரசாங்கத்திற்கான நலனை பாதுகாப்பதே அன்றி ஈழத்தமிழருக்கான தீர்வாக அமையாது. அதாவது இலங்கை அரசாங்கம் 13க்கு அப்பால் எந்த தீர்வையும் நோக்கி செல்ல உலகம் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதற்கான முன்னகர்வாகவே தெரிகிறது. அதனையே தமிழ் கட்சிகளின் கூட்டும் அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகிறது. 13 க்கு அப்பால் எந்தத் தரப்பையும் சிந்திக்க விடாது தடுப்பதில் இந்தியாவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் பங்குண்டு என்பது தவிர்க்க முடியாத விமர்சனமாகவே உள்ளது. இதில் மாகாணசபைக்கு போட்டியிடும் தரப்புக்கும் மாகாணசபையில் அமர்ந்து கொண்டு அதிகாரம் இல்லை என்று கூறும் தரப்புக்கு முன்னாலுள்ள விமர்சனமாகும். அவ்வாறே 13 இல் எதுவுமில்லை எனக் கூறிக்கொண்டு அதனை தோற்கடிக்க எந்த வேலைத்திட்மும் இன்றி தேசியம் எனவிவாதிக்கும் தரப்புக்கு முன்னாலுள்ள விமர்சனமுமாகும். இவை அனைத்துத் தரப்பும் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நிகழ்த்தும் தரப்பாகவே தெரிகிறது. 12 வருட ஜெனீவா களம் அதனையே உணர்த்தியுள்ளது. 13 வது திருத்தமும் ஆயுதப் போராட்டத்தின் தியாகங்களும் இவர்களது அரசியல் முதலீடாகவுள்ளது. இந்தியா ஈழத்தமிழருக்காக ஜெனீவாவில் கவலை அடைவதில் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. இதனால் இலங்கைத் தீவு மட்டுமல்ல இந்துசமுத்திரமும் இந்தியாவின் செல்வாக்கிலிருந்து கைநளுவப் போகிறது என்பதே யதார்த்தமான உரையாடலாகும். ஏறக்குறைய சீனாவும் அமெரிக்காவும் இந்து சமுத்திரத்தையும் இலங்கைத் தீவையும் பங்கு போட்டுக் கொள்வதில் முன்னேறிச் செல்கின்றன. சீனா கடன் கொடுத்து இலங்கைத் தீவை தக்கவைக்கும் போது அமெரிக்கா உதவிகளை வழங்கி தக்கவைக்க முயலுகிறது.

இரண்டாவது, இந்தியா நிதி உதவிகளை நிறுத்தியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் இந்திய அரச தரப்பு வட்டாரங்கள் என மட்டுமே மேற்கோள்காட்டப்படுகிறது. இந்தியா இதுவரை 380 கோடி டொலர்களை வழங்கியுள்ளதாகவும் தற்போது இலங்ரைக சர்வதேச நாணயநிதியத்தை பற்றியுள்ளதாகவும் தொடர்ந்து உதவிகளை செய்ய முடியாது எனவும் இந்திய அரச தரப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் செய்திகளில் உள்ள உண்மைத் தன்மையைவிட முக்கியமானது இந்தியாவின் பொருளாபதார நிலை என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைவதாக ஒருபுறம் செய்திகள் முதன்மைப்படுத்தப்பட்டாலும் மறுபக்கத்தில் அதன் நிதி நிலை இருப்பு மோசமடைவதாக தகவல்கள் உண்டு. அதன் நோக்கு நிலையிலேயே இந்தியாவின் நிதி உதவிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புரிந்து கொள்ளப்படலாம். அதற்காக ஈழத்தமிழர் விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்தியா செயல்படுகிறது என வாதிடுவது எந்தளவுக்கு பொருத்தமானது என்பது பிரதான கேள்வியாகவே தெரிகிறது. இதற்கூடாக இந்தியா தனது பிடியை இலங்கைத் தீவில் நிலைநிறுத்த முயலுகிறது என்று மட்டுமே விளங்கிக் கொள்ளப்படுதல் பொருத்தமானதாக அமையும். இதனையே கடந்த காலம் முழுவதும் இந்தியா மேற்கொண்டது. அதாவது ஈழத்தமிழரை பயன்படுத்திக் கொண்டு இலங்கைத் தீவை கையாள முயன்றது. அதற்கான வாய்ப்பு முழுமையாக தற்போது இல்லாது போயுள்ளது.இலங்கைத் தரப்பு ஜப்பான் தென் கொரியா மற்றும் சீனாவை முன்னிறுத்தி இலங்கைக்கு கொடைவழங்கும் நாடுகளின் மகாநாடு ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஜப்பான முன்கூட்டியே தலைமைதாங்க முன்வந்துள்ளது. இந்தியாவின் நடுநிலைக் கொள்கையும் ரஷ்சியாவுடனான நெருக்கமும் இந்தோ-பசுபிக் கூட்டின் பலவீனத்தின் மையமாகவும் கருதப்படுவதனால் மேற்குலகம் இந்தியாவுக்கான முக்கியத்துவத்தை நெருக்கடியாக மாற்றியுள்ளது. இந்தியாவுக்கு பதிலாக இந்தோ-பசுபிக் கொள்கையில் இலங்கையை முதன்மைப்படுத்த அமெரிக்கா அதிகம் முனைகிறது. அதனால் இந்தியாவைம் சீனாவைம் நெருக்கடிக்கு தள்ளிவிடலாம் என கணிக்கிறது அமெரிக்கா. அதற்;hக இலங்கைத் தீவை தெரிந்தெடுத்துள்ளது. நீண்டகாலத்தில் இந்தியாவும் அமெரிக்காவின் எதிர்நிலை நாடு என்பதை கருத்தில் கொண்டு அமெரிக்கா செயல்படுகிறது.

எனவே இந்தியாவின் இயலாமையும் , இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புமே ஜெனீவாவில் இந்தியாவின் நகர்வாக தெரிகிறது. மறுபக்கத்தில் இந்து சமுத்திரத்தையும் இலங்கைத் தீவையும் இந்தியாவின் தவறான அணுகுமுறைக்கூடாக இழந்து போகும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஜெனீவாத் தீர்மானத்தில் எத்தகைய மாற்றம் நிகழ்ந்தாலும் அதன் பயன்கள் இந்தியாவுக்கும் ஏனைய வல்லரசுகளுக்குமே அன்றி ஈழத்தமிழருக்கானதாக அமைய வாய்ப்பில்லை என்பது தெளிவாக புரிந்து கொள்ளக் கூடியவிடயமாக உள்ளது. 13 ஐக் கடந்து இந்தியா ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வையும் சாத்தியப்படுத்துவதே தற்போதைய அவசியமான செயல்பாடாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)