உலகளாவிய அரசியல் போக்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அதீதமானதாக அமைந்துள்ளன. குறிப்பாக காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியை கடந்து பாரிய இயற்கை அழிவுகளால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. காலத்திற்கு காலம் உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் ஒன்று கூடி சில தீர்மானங்களை எடுப்பதுவும் பின்னர் அதனை நடைமுறைப்படுத்தாது மீளவும் ஒன்று சேர்ந்து முதல் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் அரைகுறையான அமுலாக்கங்களை நிகழ்த்துவதும் வழமையான அரசியலாக தெரிகிறது. அத்தகைய நகர்வின் நீட்சியொன்றாகவே எகிப்தில் கூடிய உலக நாடுகளின் தலைவர்களின் உரையாடல் நிகழ்ந்து வருகிறது. இக்கட்டுரையும் கோப்-27 மகாநாட்டிற்கான தீர்மானங்களையும் அதன் அரசியலையும் தேடுவதாக அமைந்துள்ளது.
06.11.2022 அன்று எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் புறநகர் பகுதியில் உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடினர். 1992 முதல் நிகழ்ந்துவரும் இம்மகாநாடு 1994 முதல் முழுமையாக செயல்வடிவம் பெற்று இயங்கிவருகிறது. இதில் 198 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 1995 முதல் பருவநிலை தொடர்பிலான உரையாடலை நாடுகள் சந்திப்பதன் மூலம் விவாதித்து வருகின்றன. மகாநாட்டின் தொடக்க உரையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் ஆற்றினார். அவரது உரையில் பருவநிலை உச்சி மகாநாட்டுடன் மனித குலம் ஒத்துழைக்க வேண்டும் அல்லது அழிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். நாம் பருவநிலை அழிவுக்கான பாதையில் இருக்கிறோம். நமது கால்கள் தொடர்ந்து அதனை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றன என எச்சரித்துள்ளார்.
இந்த மகாநாட்டில் பசுமை இல்லவாயுக்களை எவ்வாறு குறைப்பது என்பதை பற்றிய விவாதம் முதன்மையானதாக அமைந்துள்ளது. குறிப்பாக வளர்ந்த நாடுகள் அத்தகைய வாயுக்களை அதிகமாக வெளியிடுவதும் வறிய நாடுகள் அதன் விளைவுகளை எதிர்கொள்வதும் வழமையான அரசியலாக உள்ளது. வெள்ளப்பெருக்கு, வறட்சி சூறாவளி, நிலச்சரிவு மற்றும் காட்டுத்தீ போன்ற இயற்கை அனர்த்தங்களது அதீதமான பேரழிவை ஏற்படுத்திவருகிறது. அதனை எதிர்கொள்ள முடியாத வறிய நாடுகள் பொருளாதார சுமையினால் அடிப்படை நிலையை இழந்துவருகின்றன. இதனால் வளர்ந்த நாடுகள் இத்தகைய இழப்பீட்டை சரிசெய்ய ஆண்டுக்கு 100 பில்லியன் டொலர்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மகாநாடு முதன்மைப்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்புதலை வழங்கிய வளர்ந்த நாடுகள், வறிய நாடுகளது கோரிக்கையை ஏற்றுக் கொண்டன. இத்தகைய விளைவுகளால் 55 நாடுகள் அதிகமான பாதிப்பினையும் பொருளாதார நட்டத்தையும் சூழலியல் நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளன.
புவி வெப்பமாதல், அதீதமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துமெனவும் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளால் 2030களில் 290 பில்லியனாக இருக்கும் எனவும் ஒரு கணிப்பீடு காலநிலை மாற்றம் சார்ந்து முன்வைக்கப்படுகிறது. தொழில்மயவாக்கத்தினால் வெப்பநிலை 1.1 பாகையால் அதிகரித்துள்ளது. இதன் நேரடி விளைவுகளால் வறிய நாடுகள் முழுமையான பொருளாதார இழப்பை எதிர்கொள்கின்றன. அதனால் தமது நாட்டு மக்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாது கடன் சுமையை எதிர் கொள்கின்றன. இதற்கான நிவாரணத்தையே அவ்வறிய நாடுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால் அதற்கான விவாதம் பரீஸ் மகாநாட்டிலிருந்தே நிகழ்ந்துவருகிறது. அதற்கான தீர்வையே சரியான முறையில்முன்னெடுக்க முடியாது குழப்பத்தில் மகாநாடுகள் நிறைவடைகின்றதான குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே உள்ளன. இது பற்றிய விவாதத்தை 2024இல் நிகழவிருக்கும் மகாநாட்டில் முதன்மைப்படுத்துவதாக வளர்ந்த நாடுகள் கூறுகின்றன. இதற்கான ஒப்பந்தம் ஒன்றின் பிரகாரம் நிதி வழங்கும் செய்முறை விவாதத்திற்கு உட்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அவ்வாறாயின் இத்தகைய மகாநாடுகளால் ஏற்படப் போகும் விளைவுகள் எதுவென்பதே பிரதான கேள்வியாகும்.
முதலாவது, வறிய நாடுகள் தொடர்ந்து நெருக்கடியை எதிர்கொள்வதும் வளர்ந்த நாடுகள் தமது இருப்பினை பாதுகாக்கும் செய்முறையை மேற்கொள்வதும் வழமையானதாக காணப்படுகிறது. அதற்கான சந்திப்புகளாகவே மகாநாடுகள் அமைந்துவிடுகின்றன. இது பற்றி ஹர்ஜீத் சிங் எனும் காலநிலை நடவடிக்கை வலையமைப்பின் பணிப்பாளர் குறிப்பிடும்போது இத்தகைய ஒப்பந்தம் ஒரு சமரச முயற்சி என்றார். அது மட்டுமன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாடுகளுக்கும் எந்தவித உறுதியான ஆதரவையும் வழங்காமல் மாசுபடுத்திய நாடுகளை இழப்பீடு மற்றும் பொறுப்பேற்பதில் இருந்து பாதுகாப்பது துரோகச் செயலாகும் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இரண்டாவது, செல்வந்த நாடுகள் தமக்கிடையிலான போட்டித் தன்மையினால் மோதிக் கொள்கின்றவே அன்றி காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை முதன்மைப்படுத்த தவறுகின்றன. வளர்ந்த நாடுகளது மோதலில் அகப்பட்டுள்ள வறிய நாடுகள் பாரிய பொருளாதார சுமையை எதிர் கொண்டுள்ளன. அண்மைய காலத்தில் பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகள் பாரிய பாதிப்புகளை எதிர்கொண்ட போது மீட்புக்கு எந்த செல்வந்த நாடுகளும் முன்வராமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது.
மூன்றாவது, ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாநாடுகள் வெறும் சந்திப்புகளாகவே நகர்கின்றன. வளர்ந்த நாடுகளது சந்தைக்கான வாய்ப்புகளைத் தேடுவதுடன் அதற்கான வாய்ப்புக்களை நோக்கி நகர்வதாகவே அமைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சந்திப்புகள் நிகழ்கின்றனவே அன்றி, தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றனவே அன்றி, முடிவுகள் அமுல்படுத்தப்படுவதாக தெரியவில்லை. இதன் விளைவுகளால் செல்வந்த நாடுகள் உலகளாவிய ரீதியில் அதிக இலாபத்தை அடைகின்றன. வறிய நாடுகளுக்கான உற்பத்தி பாதிக்கப்படும் போது அதற்கான பதிலீட்டு உற்பத்தியையும் தொழில்நுட்பத்தையும் செல்வந்த நாடுகளே முதன்மைப்படுத்துகின்றன. இதனையே அந்த நாடுகள் முதன்மைப்படுத்துகின்றனவே அன்றி இயற்கையின் கட்டமைப்பை பாதுகாக்க எந்த முயற்சியையும் எடுக்காத நிலை காணப்படுகிறது. இதனால் மீள மீள வறிய நாடுகளே நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
நான்காவது, வறிய நாடுகள் தெளிவான ஒத்துழைப்புடன் இயங்காமையும் செல்வந்த நாடுகள் காலநிலை மாற்றத்தை தமக்கு அமைவாக மேற்கொள்ள காரணமாகின்றது. அது மட்டுமன்றி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை பிரமிப்பாக நோக்கும் நிலை மேலும் இயற்கைக் கட்டமைப்பை பாதிப்பதாகவே அமைய வாய்ப்புள்ளது. அனேக வறிய நாடுகளது அணுகுமுறைகள் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் நோக்கியதாக அமைந்துள்ளன. அதனால் ஏற்படும் பாதிப்புக்களை கருத்தில் கொள்ளாத நிலை மேலும் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளன.
ஐந்தாவது, காலநிலை அரசியலாக மாறியுள்ளதே அன்றி ஆரோக்கியமான சூழலை நோக்கி கட்டமைக்கப்படவில்லை. அதனை ஐக்கிய நாடுகள் சபையே கருத்தில் கொள்ளாது செயல்படுகிறது. குறிப்பாக வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுக்கும் புதிதாக எழுச்சியடைந்து வரும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குமிடையிலான மோதலானது அரசியல் நகர்வாகவே தென்படுகிறது. அதிலும் ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ் என்பன ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் முரண்படுவதுடன் இராணுவ ஆயுத தளபாடங்களின் விருத்தி பாரிய நெருக்கடியாக காணப்படுகிறது. ரஷ்ய-, உக்ரைன் போரின் விளைவுகள் பாரிய காலநிலை மாற்றத்தைத் தரக்கூடியதாக உள்ளது. அதனை கட்டுப்படுத்தாது வளர்ந்த நாடுகள் மேலும் ஆயுத தளபாட விநியோகத்தை அதிகரித்துவருகின்றன. ரஷ்யாவை எதிர்க்க வெண்டும் என்பதற்காக உக்ரைனின் ஆயுத தளபாட பாவனையை வளர்ந்த நாடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவுகள் பாரிய தாக்கத்தை சுற்றுச்சூழலுக்கும் அதனால் காலநிலைக்கும் ஏற்படுத்தி வருகிறது.
எனவே, எகிப்தில் நிகழும் காலநிலை தொடர்பிலான மகாநாடு பாரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்தும் செய்முறையைக் கொண்டதாக தெரியவில்லை. மாறாக சந்திப்பும் உரையாடலும் தீர்மானமுமாகவே அமைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து இயற்கையின் பேரழிவுக்கு உலகம் உட்படும் துயரத்தையே அனுபவிக்கத் தயாராகிறது. மாறாக கடுமையான நிபந்தனைகளை முதன்மைப்படுத்தி அதனை கண்காணித்து செயல்படும் நிலை ஏற்படும் பட்சத்திலும் அனைத்து நாடுகளும் சமமாக கணிக்கப்படுவதோடு பொறுப்புக் கூறல் சார்ந்து அனைத்து நாடுகளும் ஒரே அளவீட்டுக்குள் உட்படும் போதும் மட்டுமே காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து உலகம் தப்பிக் கொள்ள முடியும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
