அரசியல் கட்டுரைகள்

இலங்கைத் தீவின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு சாத்தியமானதா?

இலங்கைத் தீவின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு சாத்தியமானதா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது. அனேகரது வாதம் சாத்தியமான செய்முறை எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பதாகவே உள்ளது. ஆரம்பகாலப்பகுதியில்ஏற்பட்ட நெருக்கடிக்கு மீளவும் இலங்கைத் தீவு மக்கள் செல்லாமல் இருப்’பதற்கான நிபந்தனைகளை உலக வங்கி அரசாங்கத்துடன் உரையாடிவருவதாகவும் அதில் சிலவற்றை அமுல்படுத்த ஆரம்பித்துவிட்டதாகவும் விவாதங்கள் உண்டு. இதே நேரம் இலங்கைக்கு உதவும் விதத்தில் கனடாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களது முதலீடுகளை கொண்டுவரும் நோக்கிலான நகர்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது போல் ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளிடம் இலங்கைக்கு உதவிகோரியுள்ளமை மற்றும் உலக வங்கியுடனான உரையாடல்கள் என பலவிடயங்கள் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்படுத்தப்போகும் விளைவுகளைக் காட்டிலும் இலங்கைத் தீவ ஆபத்தான நிலைக்குள்ளே இருப்பதாவும் அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதும் எழும் புதிய விவாதமாக உள்ளது.

முதலாவது, இலங்கைத் தீவில் எழுந்துள்ள நெருக்கடியை வெறும் பொருளாதாரத் தளத்தில் புரிந்து கொள்ளாது அரசியல் பொருளாதாரத் தமளத்தில் வைத்து புரியப்பட வேண்டும் என்பது புலமைசார் விவாதமாக உள்ளது. அதாவது இன்றைய நெருக்கடிக்கு இனமுரண்பாடாக ஆட்சியாளர் செயல்பட்டதும், தேர்தலில் வாக்கினைப் பெறுவதற்கான நலத்திட்டங்களை முதன்மைப்படுத்தியதும், தெளிவான பொருளாதாரக் கொள்கை வகுக்காத அரசியல் தலைவர்களது நடவடிக்கைகளுமே காரணமாக விளங்கப்படுகிறது. இவற்றை மையப்படுத்தி அதிகாரவர்க்கம் செயல்பட்டதன் நேரடி விளைவுகளாகவே தற்போதைய நெருக்கடி காணப்படுகிறது. இதனை தற்போதைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல கடந்த கால ஆட்சியாளர்களும் ஏற்றுக் கொள்ள தயாரின்மை மட்டுமல்ல அதன் பலவீனத்திலிருந்து மீள்வதற்கு ஆட்சியாளர்களும் அதன் ஆலோசகர்களும் தயாரில்லாத நிலையே காணப்படுகிறது. அதாவது கடந்த காலத் தோல்விகளிலிருந்து அல்லது அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு மீள்வதற்கான எந்த உத்தியும் தற்போதைய அரசியல் தளத்தில் இல்லாது உள்ளது.

இரண்டாவது, இலங்கைத் தீவின் பணிக்குழுவினரது எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் என்ற விவாதத’;தை உலகவங்கி முன்வைத்துவருவதாக தெரியவருகிறது. ஆனால் இலங்கைத் தீவு முழுவதும் பணிக்குழுவினரது நியமனத்திலிருந்து அவர்களது பதவி உயர்வு வரையுமான நடவடிக்கைகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் அரசியல் தலையீடு சார்ந்ததொன்றாகவே தெரிகிறது. அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் பணிக்குழுவை கட்டமைப்பதும் பாதுகாப்பதும் உயர்நிலைக்கு கொண்டு செல்வதையும் அரசியல் தேவைக்காக மேற்கொள்கின்றனர். அதற்கான தீர்மானங்களும் முடிவுகளுமே நாட்டின் சிதைவுக்கு அதிக பங்கெடுத்த காரணியாக உள்ளது. குறிப்பாக எந்த பதவிநிலையும் அரசியல் தலையீடு இன்றி நிகழ்வதாக தெரியவில்லை. நியமனமே தேர்தல் வாக்குறுதியாக அல்லது தேர்தலுக்கு வாக்குப் பெறுவதற்கானதாக அமைந்துள்ளதே அஅன்றி திறமையின் அடிப்படையில் நிகழ்வதாக தெரியவில்லை. அவ்வாறான நிலை ஏற்படும் போது வினைத்திறனான சேவை என்பது சாத்தியமாகும் என்ற கேள்வி நியாயமானதாகவே தெரிகிறது. தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளது எழுச்சிக்கு திறனை அடிப்படையாகக் கொண்ட பணிக்குழுவே காரணமென பின்காலனித்துவ சிந்தனையாளரான ஹம்சா அலவி குறிப்பிடுகின்றார். பாகிஸ்தானை மையப்படுத்திய அவரது ஆய்வுகள் இராணுவு மேலாதிககத்திற்கான காரணங்களை தேடுவதாக அமைந்த போதும் ஜப்பானுடைய வெற்றிக்கும் பாகிஸ்தான், வங்களாதேஷ் போன்றவற்றின் தோல்விக்கும் இடையிலான காரணங்களை தேடும் போது பணிக்குழுவின் மீதான அரசியல் தலையீடு பிரதான கருப்பொருளாக முதன்மைப்படுத்துகின்றார். அதனடிப்படையிலேயே இலங்கைத் தீவின் கடந்த காலமும் சமகாலமும் திட்டமிடப்படுகிறது. இது மீட்சி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துமெனக் கூறமுடியாது. மாறாக மீளவும் அதே சுழிக்குள் வீழ்வதாகவே அமையும்

மூன்றாவது, தென்னாசிய ஊழல் நாடுகள் பட்டியலில் வங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா, போன்ற நாடுகளுக்கு பின்பே இலங்கைத் தீவு காணப்படுகிறது. ஆனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னால் ஆட்சியாளர்களது ஊழல் பிரதான விடயமாகவே தெரிகிறது. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் ஏதோ ஒரு தளத்தில் ஊழல் பெயர்வழிகளாகவே கணிப்பிடப்பட்டுள்ளனர். ஆடசிக்கு வருகைதந்த பின்னர் அவர்களது பொருளாதார இருப்பு சொத்தில் ஏற்பட்ட மாற்றம் நலச்சேவைகளை கையாண்டவிதம் என்பனவற்றை அவதானிக்கும் போது ஊழல் பெரும் பாதிப்பை தந்துள்ளவிடயமாகவே தெரிகிறது. இதற்காக எந்த அரசியல் தலைவரே அதிகாரவர்க்கத்தை சேர்ந்தவரோ சிறைக்குச் சென்றதாக வரலாறு கிடையாது. அப்படியாயின் ஊழலற்ற நாடாக விளங்குமாக இருந்தால் பொருளாதாரம் ஆரோக்கியமாக அமைந்திருக்க வேண்டும். எனவேதான் ஊழல் என்பது ஆட்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டதென்றாக உள்ளதாகவே தெரிகிறது. மத்தியவங்கி ஊழல் மட்டுமல்ல அண்மைய ஆட்சியாளரது பண்டோரா ஊழலே அல்லது உகண்டா முதலீட்டு ஊழல்விடயமோ எந்த அடிப்படையிலும் விசாரணைக்கோ அல்லது விவாதத்தமிற்கோ கொண்டுவரப்படவில்லை. மத்தியவங்கி எப்படி காலியானதென்பது கூட விவாதிக்கப்படவில்லை. இவ்வாறான சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுப்பதென்பது கவனிக்கப்பட வெண்டிய விடயமாகும். இதன் மூலம் ஊழல் என்பது சாதாரணவிடயமாகவும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடயமாகவும் அமையும் போது எந்த அடிப்படையில் மாற்றத்தை செய்தாலும் தற்போதைய ஆட்சியாளர் இல்லாதுவிட்டாலும் இன்னோர் ஆட்சியாளர் மத்தியவங்கியை காலியாக்குவது குற்றமாகக் கருதப்படமாட்டாது என்ற எண்ணத்துடனேயே ஆட்சியில் அமரவாய்ப்புள்ளது.

நான்காவது, இலங்கைத் தீவின் வெளியுறவுக் கொள்கையில் எத்தகைய மாற்றத்தையும் அரசாங்கம் மேற்கொண்டதாக தெரியவில்லை. இலங்கையின் வெளியுறவின் முக்கியத்துவம் சார்ந்து காமினிக் கொரயா, இன்சூக் உiஷன் போன்றவர்கள் குறிப்பிடும் போது இலங்கைத் தீவின் உயிர்வாழ்வு அதன் வெளியுறவிலேயே தங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளனர். அவ்வாறான முக்கியத்துவத்தை உணராத ஆட்சியாளர்கள் இலங்கைத் தீவை சீன சார்பு வெளியுறவுக்குள் மீளவும் உட்படுத்திக் கொண்டுள்ளனர். ஏறக்குறை இந்து சமுத்திரத்தின் மத்தியிலும் இந்தியாவுக்கு அருகாமையிலும் இலங்கைத் தீவு அமைந்திருப்பதனால் தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அதனால் உலகத்தோடு ஒத்துழைப்பதுடன் இந்தியா மேற்கு உலக நாடுகளுடனான வெளியுறவையும் சீனாவுக்கு சமதையாக பின்பற்ற விளைந்திருக் வேண்டும். ஆனால் அவை எதனையும் மேற்கொள்ளாது தனித்து உள்நாட்டில் எழுந்துள்ள இனப்பிரச்சினையை கையாள வேண்டும் என்ற ஒரே நோக்குடன் சீன சார்பு வெளியுறவை கடைப்பிடிக்க முனைந்தது. அதன் விளைவாகவே ஜி.எஸ்.ரி வரிச்சலுகையும் உலகவங்கி சர்வதேச நாணயநிதியம் போன்றவற்றின் கடன் மற்றும் உதவிகள் காணாமல் போனமையும் நிகழ்ந்துள்ளது. ஆனால் இவை எதனையும் தற்போதைய ஆட்சியாளர்கள் மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை. தராளவாதியாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவை அடையாளப்படுத்தனாலும் நடைமுறையில் சீனசார்பு ஆட்சியாளராகவே அதிகம் காணப்படுகின்றார். மேற்குலக நாடுகள் எவையும் முழுமையாக இலங்கைத்தீவை மீட்டெடுக்க உதவ முன்வராத நிலை நீடிகிறது. மிக நீண்டகாலமாக அதிக கடனைத் இலங்கைக்கு வழங்கிய ஜப்பான்கூட அதிக கவனம் கொள்ளாது இருப்பதற்கு பின்னால் இலங்கைத் தீவின் வெளியுறவுக் கொள்கையே காரணமாகவுள்ளது.

ஐந்தாவது, இலங்கைக்கும்-இந்திஜயாவுக்குமான இராஜதந்திர முறுகலானது உலக நாடுகளை எச்சரிக்கைக்கு உள்ளாக்குவதாகவே தெரிகிறது. அதிக ஒத்துழைப்பையும் உறவையும் கொண்டிருந்த இந்தியா அதிக முரண்பாடான நகர்வுகளை மறைமுகமாக மேற்கொள்கிறது. அதனால் உலக நாடுகள் இந்தியாவின் சந்தையை இழக்க முடியாத நிலையில் தமது இலங்கை மீதான தலையீட்டையும் தொடர்பையும் எல்லைப்படுத்திக் கொள்ள முயலுவவன என்பது தெளிவான புரிதலாகவே தெரிகிறது. இந்தியாவுடனான முரண்பாடு என்பது சீனா சார்ந்தது என்பது தெளிவான வரையறையாகும். குறிப்பாக சீனக்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை அடைந்த போது அதிக விமர்சனங்களையும் இராஜதந்திர ரீதியாக நெருக்கடியையும் கொடுத்த இந்தியா அமெரிக்க, அவுஸ்ரேலிய, ஜப்பானியப் போர்க் கப்பல்கள் கொழும்பு மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களை நோக்கி வருகை தரும் போது எந்தவிதமான பதில் நகர்வையும் சாத்தியப்படுத்தாத நிலை காணப்படுவதையேனும் இலங்கை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வில்லையா என்ற கேள்வி சாதரணமானதாகவே தெரிகிறது. இதனை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் முரண்பாடு இல்லை என்று கூறிக்கொள்ள முனையும் இந்திய புலமையாளர்களும் விளங்கிக் கொள்வது அவசியமானது.

ஆறாவது, இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காது காலத்தை கடத்துவதன் மூலம் இலங்கைத் தீவை முழுமையாக மாற்றிவிடலாம் என ஆட்சியாளர்களும் தென் இலங்கை அரசியல் வாதிகளும் கருதுகிறார்கள். ஆனால் அதன் விளைவுகளே உலக நாடுகளது தலையீட்டுக்கும் குழப்பத்திற்கும் நெருக்கடிக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது என்ற உண்மையை உணரத் தவறுகின்றனர். இலங்கைத் தீவை மாற்றியமைப்பதென்பது புலம்பெயர்ந்த தமிழரது பொருளாதாரத்தால் மட்டுமே ஆரோக்கியமானதாக ஆக்க முடியும். ஏனைய அனைத்தும் அபாயமான விளைவைத் தரக்கூடியதாகவே அமையும். அதனால் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்கி இலங்கைத் தீவை அனைத்து இனங்களும் சுமூகமாக வாழும் சூழலை உருவாக்குவதன் மூலம் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை எட்டமுடியும்.

எனவே இலங்கைத் தீவின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுவதென்பது கடந்தகால அனுபவத்திலிருந்து கட்டமைக்கப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அதற்கான பொறுப்புக்கூறலை ஆட்சியாளர்கள் முன்னெடுக்க தயாராக வேண்டும். அதற்கான வரைபுகளும் திட்டமிடல்களும் ஒழுங்’கமைக்கப்பட வேண்டும். இல்லா சூழல் நீடிக்குமாக அமையுமாயின் நிரந்தர மாற்றத்திற்கான சூழல் சாத்தியப்பட வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)