அரசியல் கட்டுரைகள்

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை 13 க்குள் நகர்த்துகிறாரா ஜனாதிபதி?

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆழமான இராஜதந்திர முறுகல் நிலவுகிறதென் கடந்த வாரங்களில் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தமை நினைவு கொள்ளத் தக்கது. அதன் நீட்சியாகவே இந்தியப் புலனாய்வுத் துறையின் தற்போரதைய றோவின் தலைமை நிர்வாகி சமந்த் கோயாலே இரகசியமான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்து திரும்பியுள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக நோவின் தலைமை நிர்வாகியின் வருகை இலங்கையை நோக்கி ஏன் அமைந்துள்ளது என்பது பற்றிய தேடல் அவசியமானது. அதற்கான காரணத்தை நோக்கி தேடல்கள் ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் இலங்கையின் ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் மடடுமன்றி கடந்த பலவாரங்களாக 75 வது சுதந்திரதினத்திற்கு முன்பாக தீர்வு முன்வைக்கப்போவதாக தெரிவித்து வருகிறார். இக்கட்டுரையும் தீர்வு பற்றிய ஜனாதிபதியின் உரையாடலின் உண்மைத் தன்மையை தேடுவதாக அமையவுள்ளது.

23.11.2022 அன்று பாராளுமன்றத்தில் நிகழ்ந்த வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தின் போது ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்குமான உரையாடலில் படி தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் படி வரவு செலவுத்திட்ட விவாதம் முடிந்ததும் அதாவது டிசம்பர் 8 திகதி முதல் 31 ஆம் திகதிக்கு இடையில் அனைத்துக் கட்சிகளும் கூடி தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதான முடிபினை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினை நோக்கி அதற்கு தயாரா என வினவியிருந்தமையும் அதற்கான பதிலை சுமநதிரன் ஆம் என பதிலளித்தமையும் குறிப்பிடத்தக்கது. அடுத்து பிரதான எதிர் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை ஜனாதிபதி நேரடியாக கோரியிருந்தார். அதற்கு பதிலளித்த அக்கட்சியின் பிரதமகொரடா லக்ஷ்மன் கிரியல்ல பதிலளிக்கும் போது ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரப் பகிர்வுக்கு எப்போதும் தயார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவே 13 ஐ ஒழிக்க முயன்றார். 13 பிளஸ் என்று தீர்மானம் முன்வைத்த மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் உள்ளார். அவரது பதிலை கோருவது பொருத்தமானது என்றார். அதிகாரப் பகிர்வுக்கு எப்போதும் எதிர்ப்புக் காட்டிவரும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனா என்ன சொல்லப் போகிறார் என கேள்வி எழுப்பினார். பிரதமர் மீதான கேள்விக்கு ஜனாதிபதி பதிலளித்திருந்தார். அவர் தாம் 13 க்கு எதிராக ஒரு போதும் செயல்பட்டவன் அல்ல என்றார். மகிந்த ராஜபக்ஷ தாம் 13 பிளஸ்க்கு தயாராக உள்ளதாக அறிவித்தார். இதனை அடுத்து பேச்சுக்களை ஆரம்பிப்பதென்ற முடிபை ஜனாதிபதி முன்வைக்க அதற்கு மனேகணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதமர் ஆகியோர் சம்மதம் தெரித்தனர்.

இத்தகைய உரையாடலை ஆரம்பத்தில் ஜனாதிபதி முன்வைத்த போது அதனை அதிகம் முதன்மைப்படுத்தாத தமிழ் மக்கள் தற்போது பாராளுமன்றத்தில் உரையாடல் முன்வைக்கப்பட்ட பின்பு கவனம் அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இது தென் இலங்கைக்கு நெருக்கடியான காலகட்டம் என்பதையும் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற உலக நாடுகளாலும் நிதி நிறுவனங்களாலும் கோரிக்கைகளுக்கும் ஜனாதிபதி பதிலளிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது என்பதை கடந்த வாரங்களில் இப்பகுதியில் விவாதித்திருந்தோம். ஆனால் இது தமிழ் மக்கது அரசியல் இருப்புக்கான நகர்வில் முக்கியமான காலகட்டம் என்பதையும் அதனை வெறுமனமே நிராகரிப்பதோ எதிர்ப்புக் காட்டுவதோ சாத்தியமானதாக அமையாது. வாய்ப்புக்களை தமிழ் மக்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே இன்றைய காலகட்டத்தின் தேவையாகும். தென் இலங்கையின் உபாயத்திற்குள் தோற்றுப்போகாது தமிழ் மக்களையும் தமிழ் மக்களது அரசியலையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பாண்மையுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் கடந்த காலத்திலும் தற்போதைய நிலையிலும் தமழ் தேசிய தளத்தில் இயங்குவதாக கூறிக் கொள்ளும் தரப்புக்கள் எதுவும் தமழ் மக்களுக்கான அரசியலை சரியாக கையாண்டதாக குறிப்பிட முடியாது. அனைத்தையும் சொதப்பிய கூட்டமாகவே செயல்பட்டார்கள். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவே எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குள் தமிழ் மக்களை கொண்டுவந்து நிறுத்தியவர்களே தமிழ் தேசிய தளத்தில் இயங்கிய தமிழ் அரசியல்வாதிகளே. இதே போன்ற பல பேச்சுவார்த்தைகளை தமிழ் மக்கள் எதிர் கொண்டவர்கள் என்பதை நினைவு கொள்ள வேண்டும். அத்தகைய பேச்சுக்களால் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளை கிளித்தெறிந்தவர்களும் கொழுத்தியவர்களும் தென் இலங்கை அரசியல் தலைவர்கள் என்பதை மறந்துவிட முடியாது. ஆனால் தற்போது அனைத்தையும கடந்து மீண்டும் ஒரு உரையாடலுக்கான கட்டம் உருவாகியுள்ளது. கடந்த கால அனுபவங்களை கொண்டு இதனை தமஜிழ் தரப்பு எதிர்கொள்ள தயாராக வேண்டும். பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கூட்டு உபாயம் ஒன்றினை தென் இலங்கை ஏன் முன்வைத்துள்ளது. அதனை விரிவாக விளங்கிக் கொள்வது அவசியமானது.

முதலாவது, இலங்கையின் தேசிய இன அரசியலில் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி ஆகிய அதிகார அடுக்குகள் பெயரளவானவை என்பது கடந்த 75 வருடமாக தமிழ் மக்கள் கண்டு கொண்ட உண்மையாகும். அதாவது பௌத்த பீடங்களின் தீர்மானத்திற்குள்ளேயே அனேக உடன்பாடுகள் கிளித்தெறியப்பட்டவை என்பது கண்முன்னாலுள்ள அனுபவமாகும். இலங்கைத் தீவின் இரத்தக்களரிக்கு பின்னால் பௌத்த மகாசங்கங்களும் அவற்றின் நடவடிக்கைகளும் பிரதான காணரமாகவே தெரிகிறது. மீண்டும் பாராளுமன்றம் இனப்பிரச்சினையை தீர்க்கப் போவதாக கூறிகொண்டு நிகழ்த்தும் உரையாடல்களும் அதனால் எடுக்கப்படும் வரைபுகளும் பௌத்த சங்கங்களால் எப்படி கையாளப்படப் போகிறது என்பது முக்கியமானது. அதனை எதிர் கொண்டு எடுக்கும் தீர்மானத்தை வெற்றி பெறக்கூடிய தலைவராக ஜனாதிபதி காணப்படுவரா என்பது சந்தேகமானதே. அவரது கடந்தகால நகர்வுகள் அத்தகைய சந்தேகத்தையே தமிழ் மக்களுக்கு தந்துள்ளது.

இரண்டாவது, ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா 2023 நவம்பர்க்குள் ஜனாதிபதி தேர்தலை நடாத்தில் அதில் தமது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் எனக் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது அதற்கு ஆதாரமாக அவரது அண்மைய உரையாடல்கள் உறுதிப்படுத்துகின்றன. அதிலும் ஏனைய தேர்தல்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நிகழ்த்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹாவுக்கான அதிகாரம் இரண்டு வருடங்களுக்கே பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு எட்டப்பட வேண்டுமாயின் அதிக காலம் தேவைப்படுகிறது என் தெரிவித்துவருகிறார். அவரது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயங்களும் அதில் அவர் மேற்கொள்ள திட்டமிட்ட விடயங்களும் அதனையே காட்டுகிறது. அதாவது தமிழ் மக்களது வாக்குகள் நோக்கியும் அதற்கான நகர்வுகளையும் வெளிப்படுத்தும் உபாயமாக அமைந்து;ளளதாகவே தெரிகிறது.

மூன்றாவது, தென் இலங்கையில் அரகலய போராட்ட சூழல் வேறு ஒருகளத்தை தோற்றுவித்துள்ளது. இலங்கைத் தீவினதும் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களதும் இருப்பில் நியாயப்பாடுகளை அத்தகைய பேராட்டம் ஏற்படுத்தியிருந்தது. அதன் இருப்பு என்னுமே முடிந்து போகவில்லை. அதன் சூழலை மாற்ற வேண்டியதாக இருந்தால் மீளவும் சிங்கள மக்கள் மத்தியில் தேசியவாதத்தை தட்டியெழுப்ப வேண்டும். இலங்கைத் தீவில் நிகழ்ந்த தேர்தல் அனைத்திற்குப் பின்னாலும் தேசிய உணர்வு தூண்டப்பட்டதன் விளைவு என்பதை மறுக்க முடியாது. அத்தகைய உணர்வை மீளவும் ஏற்படுத்த தேசியப் பிரச்சினைக்கான தீர்வுக்கான உரையாடல் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனை வெதமுல்லத் தரப்போ அல்லது பௌத்தமகா சங்கங்களோ அல்லது இரண்டும் இணைந்தே தமிழருக்கு நாடுவழங்கப் போவதாக பிரச்சாரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மீளவும் அரசியலை உறுதிப்படுத்திக் கொள்ள வாய்புள்ளதாகவே தெரிகிறது.

நான்காவது, தென் இலங்கை அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வை 13 க்குள் சுருக்கிவிடும் செய்முறையொன்று பாராளுமன்றத்திலேயே ஆரம்பித்துள்ளார்கள். குறிப்பாக தமிழ் மக்களது சமஷ;டி பற்றிய உரையாடலை முடிபுக்கு கொண்டுவரவும் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் இயங்குவதற்குமான தென் இலங்கையின் திட்டமிடகை; காணக்கூடியதாக உள்ளது. இது முமு இலங்கைத் தீவையும் கட்சி வேறுபாடின்றி 13 வரைபுக்குள் இயங்குகிறது என்பதைக் காட்டுகிறதாகவே தெரிகிறது. இதனை தமது அரசியல் இலாபத்திற்கு முதலீடாக ஆக்கிவிடலாம் என்பதை லக்ஸ்மன் கிரியல்ல, மகிந்த ராஜபக்ஷh போன்றோரை முன்னிறுத்திக் கொண்டு ஜனாதிபதி நிகழ்த்தியுள்ளார். மீளவும் 13, மற்றும் 13 பிளஸ் பற்றிய உரையாடலேயே நிகழப்போகிறது. அதற்கான பூர்வாங்க வேலையை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முன்னெடுக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் எந்தக் கருத்தும் முன்வைக்காது மௌனமாக செயல்பட்டதை காணக்கூடியதாக அமைந்திருந்தது. சுதந்திரம் முதல் இதுவரை காலமும் பாராளுமன்றம் தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்மானம் எதனையும் முன்னெடுக்கவில்லை என்பதை கருத்தில் கொள்வது அவசியமானது.

ஐந்தாவது, 13வது திருத்தத்தை முன்னெடுப்பதன் மூலம் இந்தியாவை திருப்திப்படுத்துவதுடன் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான தற்போது நிலவிவரும் இராஜதந்திர நெருக்கடியை தீர்த்துக் கொள்ள முடியுமென ஜனாதிபதி கருத வாய்ப்புள்ளது. அதற்கான அரசியல் நடவடிக்கைகளை இலங்கையிலுள்ள இந்திய இராஜதந்திரிகளை விட நேரடியாக புதுடில்லி செயலபடத் தொடங்கியுள்ளதைக் காணமுடிகிறது. எனவே தற்போதைய நெருக்கடியை வெற்றி கொள்வதற்கு 13 இலகுவான ஆயுதமாக ஜனாதிபதியால் இனங்காணப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையாடல் முழுமையான தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கியதாக அமைவதைவிட தற்போதுள்ள நெருக்கடிகளை கையாளுவதற்கான நகர்வாகவே தெரிகிறது. இது 13 க்குள் தமிழரது அபிலாசைகளை சுருங்குவதுடன் அதனைக் கூட வெதமுல்லு மற்றும் பௌத்த பீடங்களது தீவிர தேசியவாதம் அமுல்படுத்த அனுமதிக்குமா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடம் காணப்படுகிறது. ஆனால் தென் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை முன்னிறுத்தி தீர்வை சாத்தியப்படுத்த முடியும் என்ற யதார்தமும் இல்லாமலில்லை. அதனை நோக்கி நகர்வதற்கான தலைமை தென் இலங்கையிடம் இல்லாதுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமானது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.-

(நன்றி: தினக்குரல்)