அரசியல் கட்டுரைகள்

ரஷ்ய – உக்ரைன் போரும் அமெரிக்க வெளியுறவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும்

உலகளாவிய அரசியல் போக்கானது மென் அதிகாரத்தினால் (Soft Power) கட்டமைக்கப்படுவது போல் அமைந்திருந்தது. 1991 களுக்கு பின்னர் அதற்கான உச்சரிப்புகளும் நடைமுறைகளும் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிந்தது. வன்னதிகாரமற்ற உலகத்தின் போக்கினை வல்லரசு நாடுகள் உருவாக்க முயல்வதாகவும் கணிப்பிடப்பட்டது. ஆனால் நடைமுறையில் வன் அதிகாரமும் மென் அதிகாரமும் இணைந்த கலப்பு அதிகாரக் கட்டமைப்பும் செயல்படும் போக்கொன்றை காணமுடிந்தது. அதனை Smart Power என அழைத்துக் கொண்டனர். தற்போதுள்ள உலகத்தில் வலுவான சக்திகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, மற்றும் இந்தியா என்பன அத்தகைய அதிகாரப் போக்கினையே வெளிப்படுத்தி வருகின்றன. இக்கட்டுரையும் உக்ரையின் -ரஷ்யப் போருக்கு பின்னர் அமெரிக்காவின் வெளியுறவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை அடையாளம் காணமுயலுகிறது.

அமெரிக்காவின் வெளியுறவு பிரதானமாக இரு அம்சங்களால் கட்டப்பட்டுள்ளது. ஒன்று இராணுவ பலம், இரண்டு அமெரிக்க டொலர் எனும் வன் நாணயத்தினால் ஏற்படுத்தப்பட்டது. இரண்டுமே உலகத்தை அமெரிக்காவின் மாநிலங்களாகவும் மாகாணங்களாகவும் வடிவமைத்துள்ளன. அமெரிக்க இராணுவப் பிடி எந்த தளம்பலுமின்றி உலகளாவிய ரீதியில் இயங்குகிறது. முழு உலகத்திலும் அமெரிக்காவின் இராணுவ கடற்படைத் தளங்கள் காணப்படுவதுடன் மேலும் அதன் பலம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவ்வாறே அதன் இராணுவ ஆயுததளபாடங்களின் திறனும் வீச்சு எல்லையும் வலுவான சக்தியாக உள்ளது. அண்டவெளி தொழில்நுட்பத்திலும் அணுவாயுதத் திறனிலும் அமெரிக்கா பலமான அரசாகவே உள்ளது.

அமெரிக்காவின் டொலரைப் பொறுத்தவரை வலுவான நாணயம். உலகளாவிய நாணயம். அமெரிக்காவின் வெளியுறவுக்கு நாணயம் அடிப்படையானதாக உள்ளது. நாணயப் போட்டியென்பது பொருளாதாரப் போட்டிக்கு ஒப்பானது. உலகத்தில் வல்லரசு நாடுகளின் அரசியல் பொருளாதாரம் நாணயப் போட்டிக்குள்ளால் அமைந்துவருகிறது. இதில் அமெரிக்காவே முதலாவதாக உள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிராக ஈரோ, ரூபிள் என்பன எழுச்சியடைந்தாலும் உலகளாவிய நாணயம் என்ற வடிவத்தை அடையும் நிலையை எட்டவில்லை. மாறாக அமெரிக்க டொலருக்கு எதிரான போட்டியில் முன்னணி பெறுகின்ற நாணயங்களாக அவை இரண்டும் காணப்படுகின்றன.

சீனாவின் யென் அதற்கான பரிமாணத்தை என்றுமே பெறவில்லை என்றே கூறமுடியும். சீனா உலகப் பொருளாதார உற்பத்தியில் இரண்டாவது நிலையை கொண்டிருந்தாலும் அதன் உலகளாவிய நாணயம் பலவீனமாகவே உள்ளது. ஆனால் அமெரிக்கப் பொருளாதாரத்துடன் போட்டியிடுகின்ற திறனுடைய நாடாக சீனா காணப்படுகிறது. ஆனால் உலகளாவிய பலத்தை தக்கவைக்கும் திறன் சீனாவிடம் இல்லை என்றே தெரிகிறது.

டொனால்ட் ட்ரம்ப் காலத்தை விட ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியான காலப்பகுதியில் அமெரிக்காவின் வியூகங்களும் தந்திரோபாயங்களும் வலுவடைந்துள்ளன. வீழ்ச்சியை நோக்கிய அமெரிக்காவை பைடன் தூக்கி நிறுத்தியுள்ளதாகவே தெரிகிறது. அதனடிப்படையிலேயே அமெரிக்கா மீளவும் வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்து வருகிறது.

அதாவது சீனாவுக்கு எதிரான போக்கொன்றை வகுத்திருந்த அமெரிக்கா தற்போது சீனாவின் செல்வாக்கு நாடுகளையும் பிராந்தியங்களையும் இலக்கு வைத்து தொழில்படத் தொடங்கியுள்ளது. சீனாவின் புதிய பட்டுப்பாதை என்ற தோற்றப்பாட்டை உடைப்பதற்கு வடிவமைத்த பதில் திட்டமாகவே இந்தோ- பசுபிக் உபாயம் அமைந்திருந்தது. அமெரிக்காவின் இஸ்லாத்துக்கு எதிரான போர்க் காலத்தை பயன்படுத்திய சீனாவை தற்போது எதிர்கொள்ளும் வெளியுறவுத் திட்டத்தை வகுத்துள்ளதுடன் சீனாவின் போர்த் திட்டங்களை கட்டமைக்க அல்லது தீவிரப்படுத்த அமெரிக்கா முயலுகிறது. சீனாவின் ஜனாதிபதி இந்திய- சீன எல்லையில் குவிக்கப்பட்டுள்ள சீனப் படைகள் மத்தியில் காணொளி மூலம் உரையாடும் போது போருக்கு சீன இராணுவம் தயாராக வேண்டும் எனப் பணித்துள்ளார். ஏனெனில் போர் சீனாவின் எல்லைக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாத விடயம். அது மென் அதிகாரத்தையே பிரதான கொள்கையாகக் கொண்டது. இதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதில் அமெரிக்காவுக்கு அக்கறையுண்டு. அதற்கு வலுவான காரணமும் அமெரிக்காவிடம் காணப்படுகிறது.

அதுவே உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர். அமெரிக்காவுக்கு சவால்விடும் அரசுகளது பட்டியலில் ரஷ்யாவும் ஒன்றாகவே காணப்பட்டது. அதனை அதன் எல்லைக்குள் முடக்குவதில் அமெரிக்கா வெற்றிகண்டுவிட்டது. அதற்காக அமெரிக்காவின் வெளியுறவு புதிய கட்டத்தை நோக்கி நகர்கிறது. இதுவரையும் மேற்கு ஐரோப்பாவுக்குள் நெருக்கமான வெளியுறவைக் கொண்ட அமெரிக்கா தற்போது கிழக்கு ஐரோப்பாவுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்துமளவுக்கு நிலைமைகளை ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பெற்றோலியத்தித்தில் தங்கியிருந்த ஐரோப்பா பதிலீட்டு சக்திவளத்தை உருவாக்கவும் பொற்றோலிய பாவனையை கட்டுப்படுத்தவும் முயன்றுவருகிற நிலை ரஷ்யாவுக்கு நெருக்கடியானதாகவே தெரிகிறது. ரஷ்யா போரினாலும் பொருளாதாரத்தினாலும் தனது எல்லையையும் நாட்டையும் பாதுகாக்கலாமே அன்றி உலகத்தை நோக்கி நகர முடியாத நிலைக்குள் அகப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அதாவது அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக ரஷ்யாவால் எழுச்சியடைய முடியாது என்ற நிலையை அமெரிக்க வெளியுறவு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடனான நேட்டோ கூட்டு பலமடைந்துள்ளது.

ஆயுத தளபாடங்களால் அக்கூட்டு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. அண்மையில்(19.01.2023) எஸ்தோனியாவில் கூடிய 11 மேற்கு நாடுகளின் பிரதிநிதிகள் உக்ரைனுக்கு ஆயுததளபாடங்களை வழங்க முன்வந்துள்ளன. இதே நேரம் ஜெர்மனியில் உக்ரைன் நெருக்கடி நிலை தொடர்பில் நிகழ்ந்த உரையாடலில்(20.01.2023) ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளின் ஆயுததளபாடங்களை ஒன்றிணைப்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய உக்ரைன் போர் ரஷ்யாவை முழுமையாக சிதைக்கும் வரை நீடிக்கும் என்ற நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. அமெரிக்க வெளியுறவில் ஈரோசிய பிரதான பிராந்தியமாக மாறியுள்ளது. அதற்கான நிதியும் ஆயுத தளபாடங்களையும் ஒதுக்குவதில் காங்கிரஸின் அனுமதியை தொடர்ச்சியாக பேணும் நோக்குடன் ஜெலன்ஸ்கி செயல்படுகிறார். ஜெலன்ஸ்கி புடினை வீழ்த்தும் ஆயுதமாக மாறியுள்ளார். அது புடினை மட்டுமல்ல அப்பிராந்தியத்தையே அமெரிக்க மயமாக்கும் அல்லது மேற்கு மயமாக்கும் நகர்வு என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதற்கு மாறுபட்ட கொள்கையுடன் இயங்க முயலும் விளாடிமிர் புடின் மேற்காசியாவுடனும் ஆசிய, ஆபிரிக்க கண்டத்து நாடுகளுடனும் அணிசேர்வதில் முனைப்புக் காட்டிவருகிறார். ஆனால் அதன் எல்லைகளை தகர்க்கும் உத்தியையும் அமெரிக்காவும் மேற்கும் வகுத்துள்ளன.

ரஷ்யாவை உக்ரைனுக்குள் வீழ்த்தியது போல் தாய்வானுக்குள் சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா முயன்றுவருகிறது. குறிப்பாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சியின் தாய்வான் விஜயம் அதனையே கோடிட்டுக் காட்டியது. அதன் நகர்வுக்கு பின்னர் சீனாவின் பிரதான இலக்கு தாய்வானாகவே தெரிகிறது. அமெரிக்காவுக்கும் தாய்வானை சீனா கைப்பற்றிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அத்தகைய கைப்பற்றல் இலகுவானதாக அமைந்துவிடக் கூடாது என்றும் அதற்குள் சீனாவின் சாம்ராச்சியக் கனவு சிதைக்கப்பட வேண்டும் என்ற தந்திரோபாயத்துடன் நகர்கிறது. அது மட்டுமல்ல தாய்வானை கவனம் கொள்ளும் போது இதர பிராந்தியங்களிலும் சீனாவின் பொருளாதாரமும் சிதறடிக்கப்பட முடியுமென அமெரிக்கா கருதுகிறது. அதற்கான வாய்ப்புக்கள் அதிகமுண்டு.

அத்தகைய காலத்தை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா மீளவும் முதல்தர வல்லரசாக தன்னை நிறுத்திக் கொள்ளப் பார்க்கிறது. ஆனால் சீனா அதற்கு பதிலான கொள்கை வகுக்கத் தவறாத நாடு என்ற அடிப்படையும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அது சீனாவின் நட்பு அணியிலேயே தங்கியுள்ளது. ரஷ்யா சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்தாலும் அதன் எல்லை சுருங்கியுள்ளது. ரஷ்யா சீனாவுக்கு ஒரு எல்லை வரையுமே உதவ முடியுமே அன்றி தீவிர ஆதரவு வழங்க முடியாது.

ஆனால் இரு நாட்டுக்கும் உள்ள பலம் புவிசார் அரசியலாகவே உள்ளது. இதில் வடகொரியாவின் இராணுவ வலிமையும் இந்த அணியை பாதுகாக்க உதவும் என்ற கணிப்பீடு அமெரிக்க தரப்புக்கு உண்டு. வடகொரியாவுக்கு நிகரான இராணுவ வளர்ச்சியை அமெரிக்கா ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் வழங்கிவருகிறது. அமெரிக்க வெளியுறவில் அடுத்த பிரதான பிராந்தியமாக கொரியக்குடா காணப்படுகிறது. அதன் போக்கானது தீவிர அணுவாயுத பிராந்தியமாகவும் இராணுவ வலயமாகவும் மாறிவருகிறது.

இந்தியாவின் நிலைப்பாடு தனித்துவமானது. அது எப்போதும் நடுநிலை என்ற கொள்கையால் எழுச்சியையோ முழுமையான தோல்வியையோ தவிர்த்து வருகிறது. எப்போதும் போலவே தற்போதும் உக்ரைன் விடயத்தில் ரஷ்யா பக்கம் செயல்பட்டாலும் அமெரிக்காவை முழுமையாக கைவிடாத அரசாக உள்ளது. அமெரிக்காவும் இந்து சமுத்திரத்தை கையாளும் திறனற்ற நாடு இந்தியா என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவதுடன் இந்தியாவின் ரஷ்யா பொறுத்த கொள்கையால் அதிருப்தியுடைய நாடாக உள்ளது. அதனால் அமெரிக்காவின் இந்தியா சார்ந்த வெளியுறவுக் கொள்கையானது நட்புடனான எதிரிநிலைக்குள் அகப்பட்டுள்ளது. ஒருவகையில் கூறுவதானால் இரட்டை நிலைக்குள் இயங்கும் வெளியுறவாக கட்டமைத்துள்ளது.

அமெரிக்காவின் இலக்கு நிறைவடையும் போது இந்தியா அமெரிக்காவின் எதிரியாகும் அல்லது கடுமையான விளைவுகளைக் கொண்ட தேசியங்களின் வடிவத்தால் ஆளுகைக்குட்படும் நிலை ஏற்படும். சீனாவைவிட அமெரிக்காவே அதிக நெருக்கடியை இந்தியாவுக்குக் கொடுக்கும் நாடாக விளங்கும். எனவே அமெரிக்கா கட்டமைக்கும் வெளியுறவானது நாடுகளையும் அதன் அணிகளையும் மாற்றுவதுடன் ஆயுததளபாடங்களினதும் நிதியினதும் ஆளுகைக்குள் புதிய வெளியுறவை உருவாக்கி வருகிறது. இது கீழைத்தேச சக்திகளின் எழுச்சியை சிதைக்க வழிவகுக்குமா அல்லது மேற்குலகம் கட்டுப்பட வேண்டிய நிலைக்குள் தள்ளப்படுமா என்பதே தற்போதுள்ள கேள்வியாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)