அரசியல் கட்டுரைகள்

இந்தியப் பிரதமரது அமெரிக்க விஜயமும் இந்திய-அமெரிக்க நலன்களுக்கான போட்டியும்?

உலகளாவிய அரசியல் பரப்பு மேற்குலகம் எதிர் கீழைத்தேசம் என்ற பிரிவினை வலுவடைந்தாலும் இந்தியாவின் அணுகுமுறை அதிக குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் மேற்கத்தேச-கீழைத்தேச மோதலை பலவீனப்படுத்துவதாகவே நோக்கப்படுகிறது. அமெரிக்கர்களோ உலகத்தை ஆளும் பலத்தை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கில் நகர்வதையும் இந்தியாவை அரவணைப்பதன் மூலம் அதனை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் செயல்படுகின்றனர். ரஷ்சியாவின் நெருக்கமான நட்பு நாடு இந்தியா என்ற வகையிலும் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடு என்ற வகையிலும் அமெரிக்காவின் இந்தியா பொறுத்த கொள்கை அமைந்துள்ளது. இக்கட்டுரையும் இந்தியப் பிரதமரது அமெரிக்க விஜயம் ஏற்படுத்தியுள்ள விளைவுகளைத் தேடுவதாக அமையவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் அமெரிக்காவினால் அதிகம் விரும்பப்பட்டதாகவே அமைந்துள்ளது. உலக அரசியல்-பொருளாதார-இராணுவ ஒழுங்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அமெரிக்கா நலனுக்குட்பட்டவிதத்தில் மேற்குலகத்திற்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அதிலிருந்து மீளமுடியாது மேற்கு திணறுகிறது. ஒருபக்கம் பொருளாதார நெருக்கடி. மறுபக்கத்தில் உலகளாவிய அரசியல்-இராணுவ ஆதிக்கம் இழந்து போகிறதென்ற நெருக்கடி. இந்தச் சூழலிலேயே இந்தியாவின் ஒத்துழைப்பும் அரவணைப்பும் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல ஐரோப்பாவுக்கும் தேவையாக உள்ளது. இந்தியாவின் சந்தையும், மிதமான ஜனநாயகப் போக்கும் அமெரிக்காவுக்கு அவசியமாகிறது. அதற்கான சூழலை ஏற்படுத்துவதிலேயே மோடி மீதான கருசனையை அமெரிக்கா அதிகரித்துள்ளது. இந்தியப் பிரதமர் ஒருவருக்கு செங்கம்பள வரவேற்பு, 21 பீரங்கி வேட்டுக்கள், மற்றும் பிரமண்டமான சைவ உணவு விருந்து மடடுமல்லாது காங்கிரஸ்ல் உரையாற்றும் சிறப்பு (மோடிக்கு இரண்டாவது உரை) என தடல்புடலான வரவேற்பை அமெரிக்கா செய்துள்ளது. இத்தகைய வரவேற்புக்குப் பின்னால் அமெரிக்கா மறைவாகத் திட்டமிடும் அரசியலை தேடுவது அவசியமானது. அவ்வாறே இந்தியாவின் நோக்கங்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

முதலாவது, இந்தியப் பிரதமரின் அமெரிக்க விஜயத்திற்கு முன்னரே இந்தியாவை அமெரிக்க இராணுவ கூட்டணியான நேட்டோவில் இணைவது பற்றிய உரையாடலைத் தொடக்கியிருந்தது. அதாவது நேட்டோ பிளஸ்ல் இந்தியாவை இணைத்துக் கொள்வது பற்றியும் அதற்கான சமிச்சையை இந்தியப் பிரதமரிடமிருந்து பெற்றுவிட வேண்டும் என்ற திட்டமிடல் காணப்பட்டது. காரணம் உலகிலேயே 42 சதவீதமான இராணுவ ஆயுத தளபாடங்களை ஏற்றுமதி மூலம் வருமானத்தை ஈட்டும் நாடாக அமெரிக்கா காணப்படுவதும் உக்ரையின்-ரஷ்சியப் போருக்குப் பின்னர் அதில் வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ளது எனபதும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். உலகிலேயே அதிக ஆயுத தளபாடத்தை ஏற்றுமதி செய்யும் நாடான அமெரிக்காவும் அதிகளவான ஆயுத தளபாடத்தை இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவும் விங்குகின்றன. இந்தியாவை நேட்டோவில் இணைப்பதனால் இதற்கான வாய்ப்பு அதிகரிக்க இடமுண்டு. அது மட்டுமல்லாது நேட்டோ பிளஸ் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்திய அணியாகவும் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட குவாட்டின் (Quad) விஸ்தரிப்பாகவும் அதனை ஓர் இராணுவ விஸ்தரிப்பாகவும் உருவாக்கும் திட்டமிடலுடனேயே அமெரிக்கா நகர்கிறது. அத்துடன் இந்தியா தற்போது தனது ஆயுத தளபாட இறக்குமதிக்கு அதிகம் ரஷ்சியாவையே தங்கியுள்ளது. 1971 இல் இந்தியா-ரஷ்சியாவுடன் (சோவியத்யூனியன்) மேற்கொண்ட பாதுகாப்பு உடன்படிக்கையின் பிரகாரம் தற்போதுவரை ரஷ்சியாவிடம் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் பாரம்பரியமாக நாடாக விளங்குகிறது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேட்டோவில் இந்தியா இணைவது பற்றிய செய்தியை அடிப்படையாகக் கொண்ட பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது வெளிப்படையாக மறுத்ததோடு இந்தியாவுக்கு மேற்குலக நாடுகளின் ஆயுததளபாடங்களது பிரயோகம் பயன்படாக அமையாது என விவாதித்திருந்தார். ஆனால் தற்போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கைச்சாத்தான உடன்பாட்டில் போர் விமானங்களின் தயாரிப்பு, ட்ரோன்கள் இறக்குமதி மற்றும் விண்வெளி தொடர்பிலான இஸ்ரோ-நாஸா உடன்பாடு அதிக இராணுவ விடயங்களை உள்ளடக்கியுள்ளதாக விமர்சனங்கள் உண்டு. ஆனால் அமெரிக்கா இராணுவ விடயத்தில் எந்த நெருக்கமான நட்பு நாட்டுனும் மேற்கொள்ளும் உடன்படிக்கையின் பிரகாரம் செயல்படுவதில்லை என்ற விமர்சனம் உறுதியானதாகவே உள்ளது. இதனால் ரஷ்சிய-இந்திய உறவு பாதிக்குமா என்ற கேள்வி எழுகிறது. அதற்கான வாய்ப்பு மிகக் குறைவானதாகவே உள்ளது. காரணம் இந்தியப் பிரதமரது விஜயத்தில் இந்தியாவின் நோக்கம் அமெரிக்காவடனான வர்த்தக உறவையும் விஞ்ஞான-தொழில்நுட்ப பரிமாற்றத்தை அதிகரிப்பதுமாகவே தெரிகிறது. மோடி-எலான்மாஸ் சந்திப்பு மற்றும் அமெரிக்கவாழ் இந்திய வர்த்தகர்களுடனான சந்திப்பு என்பன முதன்மையானவை. அவ்வாறே காங்கிரஸ்ல் மோயின் உரையின் போது உலகிலேயே பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்திலுள்ள இந்தியா விரைவில் மூன்றாவது இடத்தை அடையும் என்றார். மோடியின் விஜயத்தில் அமெரிக்காவின் நோக்கம் இராணுவ ரீதியானது என்றால் இந்தியாவினது பொருளாதார ரீதியானதாகவே அமைந்துள்ளது.

இரண்டு, அமெரிக்காவின் நலன்சார்ந்து மோடி அமெரிக்காவில் மகிழ்விக்கப்படுகிறார். இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மிக மோசமாக உள்ளதாகவே விமர்சனங்கள் உண்டு. கீழைத்தேசத்தில் எழுச்சி பெறும் சீனா இந்தியா மற்றும் ரஷ்சியாவிடம் ஜனநாயகமோ மனித உரிமையோ இல்லை என்ற விவாதம் மேற்குலகில் உண்டு. அத்தகைய சக்திகளிடமே உலகப் பொருளாதாரத்தின் இயங்குதிறன் நகரப் போவதாக றிச்சட் வோல்ப் குறிப்பிடுகின்றார். அதனை எப்படி தகர்ப்பதென்பதே அமெரிக்காவினதும் மேற்குலகத்தினதும் உத்தியாகும். இந்தியா அத்தகைய பொருளாதா இடமாற்றத்தின் பிரதான நாடு என்ற வகையில் அமெரிக்காவால் நோக்கப்படுகிறது. ரஷ்சியாவிடமிருந்து மசகு எண்ணெய்யை குறைந்த விலையில் பெற்றுக்கொண்ட இந்தியா அதனை சந்தைவிலையில் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்த நாடு என்ற வர்த்தக உத்தியை மேற்கும் உலகமும் இலகுவில் மறந்துவிடாது. அதுவே அமெரிக்காவின் இராணுவ ஆயுததளபாடங்களுக்கும் நேரலாம் என்பது இலகுவான சமன்பாடாகும். அதனால் அமெரிக்கா தனது நலனுக்குட்பட்ட விதத்தில் ஜனநாயம் மற்றும் மனித உரிமை பற்றி எந்த உரையாடலையும் அரச மட்டத்தில் முன்வைக்க முயலாது. வேண்டுமாயின் ஊடகங்கள் கேள்வி எழுப்பிவிட்டு போக முடியுமே அன்றி அதன் விளைவுகளாக எதுவும் சாத்தியமற்றது.

மூன்று, இந்திய-ரஷ்சிய உறவைத் தகர்ப்பதே அமெரிக்காவின் பிரதான நோக்கம். காரணம் ரஷ்சியாவின் நகர்வு உக்ரையின் போரால் மட்டுமல்ல அதன் பொருளாதார நடவடிக்கையாலும் மேற்குக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு தனக்குள் குழப்பமடைந்துள்ளது. ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடி அத்தகைய குழப்பத்திற்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது. பிரான்ஸ் பிரித்தானியா போன்று ஐரோப்பிய-அமெரிக்க உறவை தகர்க்க முயலுகிறதாகவே மேற்குலக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. பிறிக்ஸ்ல் பிரான்ஸ் இணைவதற்கான அழைப்பு அதிக சர்ச்சையை மேற்கிடம் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவு செயலாளார் பிளிங்டனது சீன விஜயம் அத்தகைய குழப்பத்தின் எதிரொலி என்பதை தெளிவுபடுத்துகிறது. இதனால் இந்தியாவை சீன-ரஷ்சிய அணியிலிருந்து பிரித்துவிட்டால் கீழைத்தேசத்தின் பொருளாதார எழுச்சியை தகர்துவிடலாம் என்ற கணியத்துடன் அமெரிக்கா இந்தியாவை அணுகுகிறது. ரஷ்சிய-இந்திய உறவு இராணுவ ரீதியானது மட்டுமல்ல பொருளாதார ரீதியிலும் பலமானது. எவ்வாறு சவுதியரோபியா-ஈராக் உறவு சரிசெய்யப்பட்டதோ அவ்வாறே இந்திய-பாகிஸ்தானிய உறவும் நகர்வதாக தெரிகிறது. குறிப்பாக அண்மையில் ரஷ்சியாவின் மசகு எண்ணெய் பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவ்வாறே பாகிஸ்தானின் போர்க்கப்பலும் இந்தியாவின் நீர்மூழ்கியும் கொழும்புத் துறைமுகத்தில் சமகாலத்தில் நகர்ந்துள்ளன. இது பற்றி இந்தியா அதிக நெருக்கடியை இலங்கைக்கு கொடுக்கவில்லை.

நான்கு, இந்தியாவை சீனாவுடன் மோதவிடுவது அமெரிக்காவின் இன்னோர் உத்தியாக உள்ளது. அதன் மூலம் சீனாவின் பொருளாதரப் பாச்சலை மட்டுமல்ல இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் கட்டுப்படுத்திவிடலாம் என்ற எண்ணத்தை அமெரிக்க கொண்டுள்ளது. 1962 இந்திய-சீனப் போரை தூண்டியதில் அமெரிக்காவே பிரதான காரணமாக அமைந்தது என்ற மதிப்பீடு இந்திய ஆய்வாளர்களிடமுண்டு. அந்த போரில் இந்தியா அதிக பாடங்களைக் கற்றதோடு அதுவே இந்திய-ரஷ்சிய நெருக்கத்திற்கும் அப்போது சீன-அமெரிக்க உறவுக்கும் அடிப்படையானது. காரணம் இந்தியாவும் சீனாவும் நட்பு சக்திகளாக இருத்தல் என்பது உலக ஆதிக்க சக்திகளுக்கு ஆபத்தானதாகவே அமையும். அதனால் அத்தகைய உடைவை மீளவும் பலப்படுத்த வேண்டும் என்ற உத்தியை அமெரிக்கா கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவோ அதற்கான வாய்ப்பினை முற்றாகவே தவிர்க்க முனைகிறது.

எனவே மோடியின் அமெரிக்க விஜயத்திற்கு பின்னால் பாரிய முரண்பாட்டையும் பகைமையையும் தோற்றுவிக்கும் நகர்வு உள்ளது. முதலாளித்துவம் அல்லது தாரண்மைவாதத்தை அதிகம் நேசிக்கும் பாரதீய ஜனதாக்கட்சியின் ஆட்சியின் கீழ் இந்தியாவின் மனித உரிமை, ஜனநாயகம், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கான அனுசரணை,மற்று உலக சமாதானம் என்பன முடிபுக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது. இவை அனைத்தையும் கடந்து பிரதமரது அமெரிக்க விஜயம் இந்திய நலன்களுடன் நகர முயலுகிறதாகவே தென்படுகிறது. இதற்கு பின்னால் மோடி-அம்பானி கூட்டைவிட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரது நகர்வுகளே அதிகம் முதன்மையானதாக உள்ளது. நரோந்திர மோடிக்கு எதிரான அணியொன்றி பலப்படுத்தல் உள்நாட்டில் நிகழ மோடி அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பது அதிக செய்திகளை வெளிப்படுத்துகிறது. அடுத்த பிரதமர் மோடியா, ராகுல்காந்தியா அல்லது வேறு எவராவரே ஆட்சிக்கு வந்தாலும் அவர் அமெரிக்காவினதும் மேற்கினதும் பொம்மையாக வேண்டும் என்பதே மேற்குலகத்தின் தேவையாகும். இந்தியாவை இந்தியர்கள் ஆட்சி செய்து மிக நீண்டகாலமாகிவிட்டது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)