இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழர்களிடம் எஞ்சியுள்ளது பதின்மூன்றாவது சீர்திருத்தம் மட்டுமே என்ற விவாதம் கருத்தியலாளர்களிடமும், அரசியல் கட்சிகளிடமும், அரசியல் வாதிகளிடமும் காணப்படுகிறது. அதே நேரம் அதனை நிராகரிப்பவர்களும் அதிகமாக உண்டு. ஈழத்தமிழர்கள் இலங்கை-இந்திய உடன்படிக்கையையின் கீழான பதின் மூன்றாவது திருத்தத்தை அங்கீகரித்து ஒப்பமிட்டவர்கள் அல்ல. அது மட்டுமன்றி ஈழத்தமிழர்கள் இலங்கை-இந்திய உடன்படிக்கையின் பங்குதாரராக இருக்கவில்லை. இலங்கையும் இந்தியாவும் இணைந்து செய்து கொண்ட புவிசார் அரசியல் உடன்பாட்டுக்கு கட்டுப்பட வேண்டியவர்களாகவே காணப்பட்டனர். அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் பலமான ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்ததனால் அதன் தேவைப்பாடு முதன்மைப்படுத்தாது கைவிடப்பட்டிருந்தது. ஆயுதப் போராட்டம் முடிபுக்கு வந்த பிற்பாடு மீண்டும் அதனை மையப்படுத்திய ஈழத்ததமிழரது அரசியல் தீர்வு பற்றிய உரையாடல் மேல் எழுந்துள்ளது. கடந்த 14 வருடமாக பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் என்ற வெற்றுக் கோசத்துடன் ஈழத்தமிழரது அரசியல் நகர்த்தப்படுகிறது. இக்கட்டுரை பதின்மூன்றாவது திருத்தம் ஓர் அரசியல் கோரிக்கையாக கொள்ள முடியுமா என்பதை தேடுவதாக அமையவுள்ளது.
ஈழத்தமிழர் ஐக்கிய இலங்கைக்குள் வாழமுடியாது என்பதன் விளைவாகவே சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து அதனை அடைவதற்கு போராடியவர்கள். அத்தகைய அதிகாரப் பரவலாக்கம் செய்முறை சாத்தியமற்றுப் போகும் நிலை ஏற்பட்ட போதே தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் விளைவாக மிதவாம் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்தது. அதில் திருப்தி காணமுடியாத நிலையிலேயே தீவிர இளைஞர்கள் எழுச்சியடைந்து ஆயுதப் போராட்டத்தின் மூலம் விடுதலையை அடைய முடியுமொன கருதி ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அத்தகைய போராட்டம் பிராந்திய, சர்வதேச நலன்களுக்குள் அகப்பட்டு முடிபுக்குவந்தது. ஆனால் ஒரு போதும் தனிநாட்டுக்கான கோரிக்கையையோ அல்லது சமஷ்டிக்கான கோரிக்கையையோ கைவிடாதது மட்டுமல்லாது மேற்குறித்த இரு கோரிக்கையையும் அடைவதற்காக பல வழிமுறையிலும் போராட்டத்தின் உச்சத்தை எட்டியவர்கள். ஈழத்தமிழரது தியாகங்களும் இழப்பீடுகளும் எல்லையற்றவை. ஆயிரக்கணக்கான படுகொலைகளையம் இலட்சக்கணக்கான உயிரிழப்புகளையும் பாரிய சொத்திழப்புகளையும் நூற்றுக்கணக்கான இடம்பெயர்வுகளையும் எதிர் கொண்டவர்கள். இவை அனைத்துமே ஈழத்தமிழரது சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தின் விளைவாகவே ஏற்பட்டவை. தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற திம்புக் கோட்பாட்டின் நியதிக்குள் செயல்பட்ட ஈழத்ததமிழர்களும் ஈழத்தமிழர்களது அரசியலும் பதின் மூன்றுக்குள் சமரசம் செய்யப்படுவதென்பது தீர்வாக கொள்ள முடியுமா என்ற கேள்வி நியாயமானதாக தெரிகிறது. காரணம் பதின்மூன்று திருத்தச் சட்டமூலம் இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டது. பதின்மூன்று அரசியலமைப்பின் திருத்த விதியாகும். இலங்கை அரசாங்கம் அரசியலமைப்புச் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றது என்பதை காட்டும் விதியே பதின்மூன்றாகும். எல்லாவற்றையும் எழுத்திலும் பாராளுமன்றத்திலும் வெற்றிகரமாக வரையும் திறனுடையது. ஆனால் அவை எவற்றையும் நடைமுறைப்படுத்தாது கையாளும் திறன் கொண்ட ஆட்சியாளரை பிரதிபலிக்கும் நாடு. 1947 ஆண்டு சோல்பரி யாப்பின் 29 வது விதியை மீறி 1956 தனிச்சிங்கள சட்டத்தை உருவாக்கியது போல் 1978 ஆண்டு முன்வைத்த அரசியலமைப்பின் தன்மையை மீறி 1983 இனக்கலவரத்தை மேற்கொண்டது. அரசின் கொள்ளை கோட்பாடுகளை மீறி பாரபட்சம் மிக்க சமூகக் கட்டமைப்பினை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாது முழுநீள இன ஒடுக்குமுறைக்குள்ளால் ஈழத்தமிழரை அழிவுக்கு தள்ளிய அரசியலமைப்புமாகும். 1978 இல் வரைந்த யாப்பினை சோஸலிஸ ஜனநாயக அரசியலமைப்பு எனக் கூறிக்கொண்ட போதும் தாராள ஜனநாயக மரபை பின்பற்றியதாக உரைத்த போதும் நடைமுறையில் இன ஒடுக்குமுறைகளையும், அழிப்புகளையும் புலம்பெயர்வுகளையும் அத்தகைய ஒற்றையாட்சி மரபுக்குள்ளால் நிகழ்த்தி முடித்துள்ளது. குடும்பங்களின் நலனுக்காகவும் கட்சியின் நலனுக்காகவும் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவந்ததுடன் அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்தாது செயல்படுவதில் வெற்றிகரமான நாடாக இலங்கை காணப்படுகிறது.
இது மட்டுமல்லாது பதின்மூன்றாவது திருத்தம் இந்திய-இலங்கையின் நலனுக்கு உட்பட்டது. அத்தகைய இரு தரப்பும் தமது நலனுக்காக வரைந்து கொண்டதன் விளைவே பதின்மூன்றாவது திருத்தமாகும். ஈழத்தமிழரது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக இலங்கைத் தரப்பும் இந்தியத் தரப்பும் முன்வைத்த திட்டமே பதின்மூன்றாவதாகும். அத்தகைய திருத்தச சட்டமூலத்தை ஒருபோதும் ஈழத்தமிழர்கள் கோரிக்கையாக முன்வைக்கவில்லை. இந்தியாவும் இலங்கையுமே அத்தகைய திருத்தத்தை தமிழர் மீது திணித்தது. தமிழர் கோராததென்றை அவர்கள் மீது திணிப்பதற்கு இரு நாடுகளும் முயன்றன. ஆனால் அது ஏற்படுத்திய விளைவு மற்றும் தந்திரம் அதனைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற நிலையைத் தோற்றுவித்தது. ஈழத்தமிழர்கள் சமஷ்டியையும், தனிநாட்டையுமே கோரிக்கையாக முன்வைத்தவர்கள். தற்போது அவர்களது தனிநாட்டுக் கோரிக்கை ஆயுத ரீதியாக முடிபுக்கு வந்துள்ளது. ஆனால் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதன் விளைவான கோரிக்கையும் அப்படியே உள்ளது. ஆனால் அவர்கள் சமஷ்டி கோரிக்கைக்குள்ளால் பிரிக்கப்படாத இலங்கைக்குள் அரசியல் அதிகாரத்தை பெறும் கோரிக்கையை கைவிடாதவர்களாக உள்ளனர். அத்தகைய கோரிக்கையை கைவிடாதவரை ஈழத்தமிழரது போராட்டமும் கோரிக்கையும் அதுவாகவே அமையும். பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவதென்ற கோரிக்கை அரசியல் ரீதியில் கோரிக்கையல்ல. அது இயலாமையின் சொல்லாடலே. தமிழ் அரசியலின் வங்குரோத்து நிலையின் வெளிப்பாடு. ஒரு தேசிய இனத்தின் இருப்பும் அதன் பாதுகாப்பும் வளர்ச்சியும் கோரிக்கையின் நியாயப்பாடு சார்ந்தது. இருபத்தியோராம் நூற்றாண்டின் தேசியங்களின் இருப்பானது கோரிக்கைகளை வெற்றெடுப்பதற்கான சர்வதேச வேலைத்திட்டத்திலேயே தங்கியுள்ளது. புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் ஒருங்குசேர கையாளும் திறனும் அதற்கான கட்டமைப்புகளின் விருத்தியும் ஈழத்தமிழரது கோரிக்கையை வென்றெடுக்க அவசியமான உத்திகளாகும். ஈழத்தமிழர் அகிம்சைப் போராட்டத்திலும் ஆயுதப் போராட்டத்திலும் அளவுக்கதிகமான அர்ப்பணிப்புகளை வெளிப்படுத்தியவர்கள். அத்தகைய ஈழத்தமிழரின் தியாகங்களும் அர்பணிப்புகளுமே இன்றைய இருப்புக்கான பாதுகாப்பு அரண்கள். அத்தகைய தியாகங்களை முன்னிறுத்தி பூகோள ரீதியில் அல்லது புவிசார் ரீதியில் Nலைத்திட்டத்தை செயல்படுத்துவதே தற்போதைய போராட்டமாகும். அத்தகைய வேலைத் திட்டம் எதனையும் மேற்கொள்ள இல்லாத அரசியலாலேயே பதின்மூன்று பற்றிய உரையாடல் மீளவும் முதன்மைப்படுததுவதற்கு காரணமாகும். ஏறக்குறைய திம்புக் கோட்பாட்டை கட்டமைத்த அனைத்து ஆயுதப் போராட்ட அமைப்புக்களும் பதின்மூன்றை கோரிக்கையாக முன்வைப்பதென்பது ஈழத்தமிழருக்கு துயரமானதே. தொடர்ந்தும் ஈழத்தமிழர் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு நிலவுகிறதே அன்றி தீர்வுக்கான உத்திகள் எவையும் முன்னிறுத்தப்படவில்லை.
பிராந்திய சர்வதேச நலன்களுக்குள் அகப்பட்டு தீர்மானம் எடுப்பதும் அதற்கு அமைவாக அசைவதும் தேசிய இனத்தின் மீட்சிக்கு உதவாது. அது அந்த அரசுகளின் நலனுக்கு தீனிபோடுவதாக அமையுமே அன்றி தேசியத்திற்கு பாதுகாப்பளிக்காது. இத்தகைய பதின்மூன்றே ஈழத்தமிழரின் தேசிய வலிமை கரைந்து போவதற்கு காரணமாக அமைந்தது. கடந்த நாற்பது வருடங்களாக தென் இலங்கை பதின்மூன்றை முதன்மைப்படுத்திக் கொண்டு கிழக்கை மட்டுமல்ல வடக்கையும் கைப்பற்ற தொடங்கிவிட்டது. அடுத்துவரும் நாற்பது வருடங்களும் இத்தகைய பதின்மூன்றினால் வடக்கு கிழக்கு மட்டுமல்ல ஈழத்தமிழரின் தேசியத்திற்கான அனைத்து தூண்களும் உடைத்து நெருக்கப்படும். தமிழ் தேசியம் காணாமல் போய்விடும். அதாவது ஈழத்தமிழர்கள் தமது மொழியையும் பண்பாட்டையும் பிரதேசத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியாத நிலையில் தமது திரட்சியை இழக்கும் நிலை ஏற்படும். அத்தகைய வெறுமைக்குள் ஈழத்தமிழரது அரசியல் பயணிக்கிறது. அதனைத் தடுக்க முடியாத நிலையே பதின்மூன்று பற்றிய உரையாடலை கோரிக்கையாக முதன்மைப்படுத்த முயலுகிறது.
எனவே ஈழத்தமிழர் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதென்பதை கோரிக்கையாக கொள்ள முடியாது. அது அரசியலமைப்பிலுள்ள விடயம். அதனை அமுல்படுத்துவது அரச இயந்திரத்தின் பணி. அதனை கோரிக்கையாக வைத்தல் என்பது சட்ட எதிர்ப்பு போராட்டமாக அமையுமே அன்றி கோரிக்கையாக அமையாது. ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்தும் நிலைவரை அவர்களது உயர்ந்தபட்சமான கோரிக்கையாக சமஷ்டியாகவே தெரிகிறது. அதனைக் கடந்துள்ள கூட்டுச் சமஷ்டியும் தற்போதைய கோரிக்கையாக மாறியுள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
