அரசியல் கட்டுரைகள்

மணிப்பூர் வன்முறையும் தென்னாசியாவின் மரபார்ந்த அரசியல் ஒடுக்குமுறையும்?

தென்னாசிய அரசியல் சூழல் அதிகம் இந்தியாவை மையப்படுத்தியே காணப்படுகிறது. சுதந்திர இந்தியா அடைந்த வன்முறைகள் அதிகம். சுதந்திரத்திற்கான போராட்டத்தை எதிர்கொள்ளும் விதத்தில் பிரிட்டிஷ்ஆட்சியாளர்களால் அதிகம் வன்முறை உணர்த்தப்பட்டது மட்டுமன்றி இராட்சியங்களாக இருந்த இந்தியா தமக்குள்ளே அதிக வன்முறைகளை எதிர்கொண்டது. அதனை போர்கள் என வரையறுத்துக் கொண்டாலும் அதன் விளைவுகள் வன்முறையை தந்தவையாக அமைந்திருந்தன. இந்தியத் துணைக்கட்டம் மீது ஆரியப்படையெடுப்புக்கு பின்னர் இஸ்லாமியர்களது படைநகர்வு பாரிய அழிப்புகளை ஏற்படுத்தியது. இதன் பின்னர் ஐரோப்பியரது படைநகர்வு வாலியன்யாலாபாக் படுகொலையில் அதன் உச்சத்தைக் காட்டியது. மகாத்மா காந்தி அகிம்சையை முதன்மைப்படுத்தினாலும் அவரது காலத்திலும் அதன் முன்பும் பின்னரும் வன்முறை இந்தியாவிலும் அதன் பிராந்தியத்திலும் ஓர் அரசியல் பரிமாணத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் சமகால வன்முறைக்களமாக மணிப்பூர் மாறியுள்ளது. இக்கட்டுரை மணிப்பூர் வன்முறையையும் அதன் இயல்புகளை தேடுவதன் மூலம் தென்னாசியாவின் அரசியலில் வன்முறை கலாசாரத்தை புரிந்டது கொள்ள முயலுகிறது.

முதலில் மணிப்பூர் வன்முறையின் பின்னணியைத் தேடுவது பொருத்தமானது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் வங்களாதேஷ் மற்றும் மியான்மாரை எல்லையாகக் கொண்டது. ஏறக்குறைய 3.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மாநிலமான மணிப்பூர் மெய்தீஸ் (Meiteis) இனப்பிரிவினர் ஏறக்குறைய மக்கள் தொகையில் அரைப்பங்கினர். ஏனைய 50 சதவீதத்தில் 43 சதவீதமானவர்கள் குக்கீஸ் (Kukis and Nagas) மற்றும் நாகாஸ் காணப்பட 7சதவீதம் பழங்குடிகள் வாழும் மாநிலமாகவும் உள்ளது. இதில் மெய்தீஸ் இனத்தவரே மணிப்பூரின் மூத்த இனத்தவராக கொள்ளப்படுகின்றனர். மணிப்பூரில் இந்துக்களே பெரும்பான்மையினர். மெய்தீஸ் இனத்தவரே அதிகம் இந்துக்களாவார். குக்ஸ் இனத்தவரில் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்களே. மணிப்பூரின் இனப்பரம்பல் மற்றும் மத அடையாளத்தில் அதிகம் மியான்மார் சார்ந்ததாகவே அமைந்துள்ளது. மெய்தீஸ் இனத்தவர் இம்கால் பள்ளத்தாக்கை அதிகம் மையப்படுத்தியே வாழ்கின்றனர். குக்கீஸ் அதனை அண்டிய மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர். இத்தகைய மெய்தீஸ் மற்றும் குக்கீஸ் இனப் பிரிவினருக்கிடையே மோதல் நிகழ்ந்துவருகிறது.

பிரித்தானியர் காலத்திலிருந்து இத்தகைய வன்முறை இரு தரப்பினருக்குமே நிகழ்ந்துவருவதாகவும் தற்போது மெய்தீஸ் இனத்தவர் தமக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான கோரிக்கையின் நிமித்தமே வன்முறை ஆரம்பமாகியது. அதிலும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப்பிடிப்பதற்காக இந்து மதத்தை அதிகம் பேணும் மெய்தீஸ் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக உத்தரவாதம் கொடுத்திருந்தது. அது மட்டுமன்றி பெரும்பான்மையான சட்டசபையையும் அரசாங்க அதிகார நிலைகளை தமதாக்கிக் கொண்டவர்களாக மெய்தீஸ் இனத்தவர் காணப்படுகின்றனர். அரச அதிகாரம் மட்டுமல்லாது நிலத்தை தமது கட்டுபாட்டில் கொண்டுவருவதற்கான நோக்கத்துடன் நடவடிககையில் ஈடுபட்டுள்ள மெய்தீஸ் இனத்தவரது நடவடிக்கைக்கு எதிர்பாகவே மணிப்பூர் வன்முறை தொடங்கியது. இத்தகைய மோதல் பல காலப்பகுதியாக நிகழ்ந்த வருகின்றது. இதில் குக்கீஸ் இனத்தவருக்கு மியான்மார் வங்களாதேஷ; மற்றும் மிசேராம் மாநிலமும் ஆதரவு வழங்குவதாக மெய்தீஸ் பிரிவினர் குற்றம் சாட்டிவருகின்றனர். இதே நேரம் வன்முறைக்கு பாரதீய ஜனதாக் கட்சியின் அணுகுமுறையே அடிப்படைக்காரணம் என மணிப்பூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிலும் பழங்குடியினப் பெண்கள் இருவரை நிர்வாணமாக்கி வீதியில் இழுத்துச் சென்றதுடன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்யதமை பெரும் அதிர்ச்சியை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ளது. இச்செயலை மெய்தீஸ் தரப்பினர் மேற்கொள்ளும் போது பொலிஸ் படையினர் அவர்களுடன் காணப்பட்டதாக இந்திய இராணுவப்படைப்பிரிவில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயகமும் காந்திய சிந்தனையும் அவமதிக்கப்பட்டதுடன் அவமானமாகத் தெரிவதாக இந்திய அளவில் இயங்கும் பெண்கள் அமைப்புக்கள் தெரிவித்துவருகின்றன. இது பெண்களுக்கு எதிராக மிகக் கொடுமையான வன்முறையாக அமைந்துள்ளது. இத்தகைய வன்முறைக் கலாசாரத்தின் அடிப்படை தென்னாசியா எங்கும் வளர்ச்சியடைந்துள்ளது.

தென்னாசியாவில் உபதேசியங்களது எழுச்சிகளும் விடுதலைக்கான அணுகுமுறைகளும் வன்முறையாலேயே அடக்கப்பட்டுள்ளது. தென்னாசியாவிலேயே முதலில் ஆரம்பமான தெலுங்கானா விடுதலைப் போராட்டம் இந்திய பிரதமர் நேருவின் காலத்தில் அரச படைகளையும் இராணுவத்தையும் தூண்டிவிட்டு வன்முறையினாலேயே அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறே அகிம்சைப் போராட்டங்கள் பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியதுடன் அவை ஆட்சியாளரினால் அழித்தொழிக்கப்பட்டது. இதே போன்றே காலிஸ்தான் விடுதலைப் போராட்டமும் காஷ;மீர் விடுதலைப் போராட்டமும் வன்முறையால் முடிபுக்கு கொண்டுவரப்டபட்டது. இந்தியாவில் மட்டுமல்ல வங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்த்தான், மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் எழுச்சி பெற்ற விடுதலைப் போராட்டங்கள் வன்முறையால் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டது. அதில் பெண்களே அதிகம் கேடயமாகவும் வன்முறையின் முதல் பலியிடலாகவும் காணப்படுகின்றன. இதன் அடிப்படையே வன்முறைக்கான மூலகாரணமாக அமைந்துள்ளது.

தென்னாசியாவில் காணப்படும் அரசியலமைப்புக்கள் அனைத்துமே ஏதேவொரு ஆதிக்கச செய்முறைக்குள் அகப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பெரும்பான்மையினரது ஆதிக்கம் அல்லது பெரும்பான்மை மதத்தின் அல்லது மொழியின் ஆதிக்கத்திற்குள் அரசியலமைப்புக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவை ஏற்படுத்தும் அரசியல் கலாசாரம் முழுமையாக பிற இன,மத,மொழிப் பிரிவுகளினை இல்லாதொழிக்க முயலும் போது வன்முறை பிரதான ஆயுதமாக மாறுகின்றது. அதனையே இந்தியா பல போர்களாகவும் வன்முறையாகவும் செயல்படுத்தியுள்ளது. ஆணாதிக்க அரசியலமைப்புக்களாலும் பெரும்பான்மை இன மத மொழி அரசியலமைப்புக்களாலும் ஆழப்படும் தென்னாசியா வன்முறையை அரசியலமைப்புக்குள் வைத்துள்ளது. தென்னாசிய நாடுகள் அனைத்தும் வன்முறைக்கான கட்டமைப்பாகவே பொலிஸ், இராணுவம் என்பனவற்றை அரசுடன் வைத்துள்ளது. இந்நாடுகளில் இராணுவ ஆட்சிக்கான நகர்வுகள் அடிக்கடி நிகழ்வதற்கும் இத்தகைய அரசியலமைப்பு வடிவமே காரணமாகத் தெரிகிறது. இந்நாடுகள் அரசியலமைப்புக்குட்பட்ட சர்வாதிகாரமே ஆட்சியாக கொண்டுள்ளன.

இராணுவமும், ஒரு கட்சியும், குடும்பங்களும், மற்றும் தனிக்கட்சிகளும் ஆட்சியை அமைப்பதற்கு அரசியலமைப்புக்களே அடிப்படைக் காரணமாக தெரிகிறது. இதில் உயர்வர்க்கங்கள் தமது நலனையும் தமக்கு உதவியான மத்திய தரவர்க்கத்தினையும் பாதுகாப்பதற்கான வடிவமாகவே அரசியலமைப்பினை அமைத்து;ள்ளன. பலவீனமான அரசியலமைப்புக்கள் மட்டுமல்ல அத்தகைய அரசியலமைப்புக்கள் எழுத்திலுள்ளவற்றை பின்பற்றாமையும் அவற்றை மீறுகின்றமையையும் மரபாகக் கொண்டு இயங்குகிறதைக் காணமுடிகிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடாக அரசியலமைப்புக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் மத சக்திகளது ஆட்சியே நிகழ்ந்துவருகிறது. அத்தகைய மதசிந்தனையே பணிப்பூர் கலவரத்திற்கு காரணமாகவுள்ளது.

ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அருணாசலப் பிரதேசத்தில் கணிசமான நிலப்பரப்பை இந்தியா இழந்துள்ளது. மீளவும் அந்த பிராந்தியத்தை நோக்கி வன்முறை அதிகரித்துவருவது அபாயகரமானதாகவே தெரிகிறது. இந்தியாவின் எல்லையோரங்களில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துவருகின்றமை மற்றும் எதிர்கால இந்தியாவின் இருப்புக்கான நெருக்கடி போன்ற விடயங்கள் மணிப்பூர் வன்முறைக்கு பின்னாலுள்ள அரசியலை தேடவேண்டிய தேவை எழுந்துள்ளது. வன்முறை பர்மாவுக்குள்ளால் தூண்டப்படுகிறதா என்ற கோள்வியும் இந்திய தரப்புக்களால் எழுப்பப்பட்டு வருகிறது. எதுவாயினும் வன்முறை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பாதிப்புக்குள்ளாக்க வாய்ப்புள்ளது. நீண்ட அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியதாகவே தெரிகிறது. இந்தப் பிராந்தியம் சார்ந்து எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தகவல்கள் அதிகமுண்டு.

எனவே பணிப்பூர் வன்முறையானது தென்னாசியாவின் அரசியல் கலாசாரத்தின் ஒரு வடிவமாகவே தெரிகிறது. நாகரீகங்களின் வளர்ச்சியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வன்முறை இயல்பாகவே தென்னாசியாவை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பல்லினத் தேசியங்களது இருப்பினை நிராகரிக்கும் அரசியலமைப்புக்களும் ஆட்சி அதிகார அமைப்புக்களும் அத்தகைய வன்முறையை முதன்மைப்படுத்தி வருகிறது. தென்னாசியா முழுமையாக இன,மத,மொழி ஆதிக்கம் உடைய பிராந்தியமே அன்றி ஜனநாயக மரபை கொண்ட பிராந்தியம் கிடையாது. பல்லினத் தேசியங்களை அரவணைத்த ஆட்சி முறைமையும் கிடையாது. பகுதியளவில் வன்முறை அரசியலமைப்பையே தென்னாசியா கொண்டுள்ளது. இதன் எதிர்காலமும் சிறுபான்மைத் தேசியங்களுக்கும், பழங்குடிகளுக்கும் ,ஒடுக்கு முறைக்குட்பட்ட தேசியங்களுக்கும் ஆபத்தான காலமாகவே தெரிகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)