இந்திய-இலங்கை நட்புறவினை வலுப்படுத்தியுள்ள ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் இரு நாள் இந்தியாவுக்கான விஜயம் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியின் இந்திய விஜயம் உள்நாட்டிலும், பிராந்திய, சர்வதேச அரசியலிலும் அதிக உரையாடலை தந்துள்ளது. இதில் இந்தியா இலங்கையுடன் ஐந்து உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளதுடன் உள்நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வில் பதின்மூன்றாம் திருத்தத்திற்கு அப்பால் செல்லவேண்டும் என இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதியுடன் உரையாடியதாக வியாக்கியானம் செய்யப்படுகிறது. அத்தகைய வியாக்கியானம் இராஜதந்திர மொழிக்குள்ளாலேயே புரிந்து கொள்ளப்படுகிறது. தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற வெளிப்படுத்துகை மூலமே அத்தகைய வியாக்கியானம் கொள்ளப்படுகிறது. கூட்டுறவுச் சமஷ்டி பற்றியோ, சமஷ்டி பற்றியோ எந்த உரையாடலையும் இந்தியப்பிரதமர் தெரிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படியாயின் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் பயனடைந்த தரப்பு எதுவென்பதை தேடுவது அவசியமானதாக உள்ளது. இக்கட்டுரையும் அத்தகைய நோக்கத்தை சார்ந்து அமையவுள்ளது.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகள் எட்டப்பட்டன. அதில் திருகோணமலை பொருளாதார அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பிலான ஒப்பந்தம், சூரியசக்தி திட்டத்திற்கான எரிசக்தி அனுமதி ஒப்பந்தம், ஐ.பி.எல் மற்றும் லங்கா பே ஆகியவற்றுக்கிடையிலான வலையமைப்பு ஒப்ந்தம் மற்றும் யு.பி.ஐ விண்ணப்ப ஏற்பு ஒப்பந்தம் என்பன அடங்குகின்றன. ஏனைய உரையாடப்படும் விடயங்கள் அனைத்தும் இரு நாட்டுத்ட தலைவர்களும் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இரு தலைவர்களாலும் வெளிப்படு:த்தப்பட்ட விடயங்களேயாகும். அதாவது இந்தியப் பிரதமர் ஊடகங்கள் முன், இலங்கையின் அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி தமிழ் மக்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடன் வாழ்வதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.தமிழ் மக்களின் அபிலாசைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் எனவும் சமத்துவம் நீதி மற்றும் சமாதானத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவது பற்றி இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதன்போது இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா அதிகாரங்களை பகிர்தல் உள்ளிட்ட வடக்கு அபிவிருத்தித் திட்டங்கள் (வடக்கு கிழக்கு என வியாக்கியானம் செய்யப்படுகிறது) தொடர்பான யோசனை ஒன்றினை இந்தவாரம் முன்வைத்துள்ளேன். தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு இந்த விடயத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என அனைத்துக் கட்சித்தலைவர்களுக்கும் நான் அழைப்பு விடுத்துள்ளேன். இது தொடர்பில் பொருத்தமான சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் என்றார். இது குறித்து இந்தியப் பிரதமருக்கு விரிவான விளக்கத்தை வளங்கியுள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடும் போது, இலங்கை-இந்திய பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் ஒன்றேறென்று இணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் தேவைகளை உணர்ந்து ஒன்றாக செயல்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் கூறியுள்ளார். நாகபட்டின-காங்கேசன் துறை பயணிகள் படகுச்சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும். கடற்றொழிலாளர் பிரச்சினை இரு தரப்பாலும் விவாதிக்கப்பட்டது. குறித்த விடயத்தை மனிதாபிமான கண்ணேட்டத்தில் பார்க்க வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி குறிப்பிட்டதாக ரணில்விக்கிரமசிங்ஹா தெரிவித்தார்.
இவற்றைவிட இந்திய ரூபாயை இலங்கையின் பரிவர்தனையில் பிரயோகப்படுத்துவது பற்றி உரையாடப்பட்டதாகவும் இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையிலான தரைவழிப் போக்குவரத்துப் பற்றி பேசப்பட்டதுடன் அதற்கான சாத்தியக் கூற்று ஆய்வினை விரைவில் மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணெய்க் குழாய்களை அமைப்பதன் மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குறித்த விடயங்களை அவதானிக்கும் போது இலங்கை-இந்திய தரப்புக்களது அணுகுமுறையை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒன்று, இந்தியத் தரப்பு அதீதமாக இலங்கையின் நிலப்பரப்புக்குள் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்த முனைகிறது. அத்தகைய ஒத்துழைப்பின் மூலம் இரு நாட்டுக்குமான பிணைப்பினை வலுப்படுத்த முனைவதனைக் காணமுடிகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த இடங்களை நோக்கி இந்தியாவின் செல்வாக்கு பொருளாதார குறிகாட்டியூடாக நகர்கிறதைக் காணமுடிகிறது. படிப்படியாக திருகோணமலையுடனான இந்திய நெருக்கம் விரிவாக்கம் பெறுகிறது. ஆரம்பத்தில் எண்ணெய்குதங்களை பராமரிப்பதென்ற நிலை காணப்பட்டது. தற்போது திருகோணமலையை வலுசக்தி மையமாக மாற்றுவது குறித்த உரையாடல் நிகழ்ந்துள்ளது. இது ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பனதாக அமைந்தாலும் மறுபக்கத்தில் ஈழத்தமிழருக்கு எதிரான நகர்வுகளை தென் இலங்கை மேற்கொள்வதற்கு வாய்பு அதிகமாகவே உள்ளது. அது மட்டுமன்றி இந்தியா ஜனாதிபதியுடனான உரையாடலிலேயே அதிக விடயம் முதன்மைப்படுத்தியுள்ளனர். அதற்கான ஒப்புதல் எதுவும் ஏறட்படுத்தப்பட்டதாகவோ இந்தியப் பிரதமருக்கு இலங்கை ஜனாதிபதி உறுதிமொழி ஏதும் வழங்கியதாகவோ தகவல்கிடையாது. இலங்கை உறுதிமொழிகளையே மீறுவதில் திறனுடைய ஆட்சியாளரைக் கொண்டது என்பது கடந்த கால அனுபவமாகும். இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவிடம் சரணடைவதையும் தந்திரமாக கையாளுவதில் தேற்சியுள்ளவர்கள். அவர்கள் எப்போது சரணடைவார்கள் எப்போது தந்திரமாக நகர்வார்கள் என்பதை அறிதல் கடினமாதாகும். நெருக்கடிவரும் போதெல்லாம் இந்தியாவை அரவணைக்கவும் ஏனைய சந்தர்ப்பத்தில் இந்தியாவை நிராகரிக்கவும் தயங்காதவர்கள். பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள புவிசார் பொருளாதார சக்தியாக இந்தியாவை முன்னிறுத்தியுள்ள தென் இலங்கை அதனை வெற்றிகரமாக கையாண்டுவருகிறது. ஆனால் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு அரச முறைப்பயணம் மேற்கொண்ட போது சீனாவின் கம்யூனிஸக்கட்சியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தது உரையாடியதுடன் எதிர்கட்சி தலைவரையும் சந்தித்துள்ளனர். இது ஏறக்குறை இந்தியாவை கையாளுவதற்கான உபாயமாகவே தெரிகிறது. அது மட்டுமல்ல அதன் மூலம் அமெரிக்காவின் நகர்வுகளுக்கும் செய்தி சொல்லப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு தனது ஆதிக்கத்தில் வைத்திருக்க முயலும் சீனாவின் முன் இந்தியாவின் நகர்வு எதுவுமே எந்த உடன்பாட்டையும் கொண்டிராதது மட்டுமன்றி இந்துப் பத்திரிகை குறிப்பிடுவது போல் Still Incomplete ஆகவே தெரிகிறது. இத்தகைய ஆபத்தான பயணத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை தமது Entangleக்குள் கொண்டுவந்துள்ளது. இரு நாட்டுக்குமான தரைவழிப்பாதை வெறும் வாய்வார்த்தையாகவே தெரிகிறது. இந்தியா இலங்கையில் காலூன்ற நாடாளுமன்ற பிரதிநிதிகள் எவரும் ஆதரவளிக்கக் கூடாது பொதுஜன பெரமுனக்கட்சியின் பராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரா தெரிவித்துள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இரண்டு, ஈழத்தமிழர் தரப்பு இந்தியாவின் நகர்வுகளை வரவேற்றுள்ளது. இரு நாட்டுத் தலைவர்களது சந்திப்பில் தமிழருக்கு 13 ஆம் திருத்த சட்டமூலம் முழுமையாக அழுலாகிவிடும் எனக்கருதுகின்றனர். இது பொறுத்து இந்துப்பத்திரிகை வெளிப்படுத்திய தகவல் முக்கியமானது. புதுடில்லி மீது வேறு விவகாரங்களுக்காக இலங்கை தங்கியிருந்தாலும் இரு நாடுகளுக்குமிடையில் இரு தரப்பு உறவுக்குள் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் வரலாற்று ரீதியான அக்கறைகளை கொண்டுவருதை இனிமேலும் கொழும்பு விரும்பப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. இதுவே யதார்தமானதுமாகும். அமுலாக்கக் கூடாது என்பதற்காக செய்யப்பட்ட உடன்படிக்கையே இலங்கை-இந்திய உடன்பாடு. அதன் பிரகாரம் உருவான 13வது திருத்தச் சட்டமூலத்திற்கும் அதே நிலையே. ஆனால் இது இந்தியாவை கையாள கடந்த 35 வருடம் பயன்பட்டுள்ளது. இனிவரும் காலத்திலும் பயன்படும். ஆனால் அது ஒருபோதும் அமுலாகாது. இந்தியாவை சிக்கவைப்பதில் தென் இலங்கைக்கு 13 திருத்தம் போதுமானது.
எனவே இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் இரு நாட்டுக்கும் பொருளாதார ரீதியில் இலாபகரமானதாகவே தெரிகிறது. ஆனால் இலங்கைத் தீவை விட இந்தியாவுக்கு அதிக பயனுள்ளது போல் காட்சிப்படுத்தப்படுகிறது. இறுதியில் இலாபத்தை அடையும் நிலையில் தென் இலங்கையே காணப்படுகிறது. இதில் முழுமையான பாதிப்பினையும் இழப்பினையும் எதிர்கொள்ளும் தரப்பாக ஈழத்தமிழரே காணப்படுகின்றனர். இந்தியா தற்காலிக வெற்றி அடைந்துள்ளதாகவே உள்ளது. நிரந்தரமான இலாபத்தை தென் இலங்கையே பெற்றுள்ளது. நீண்ட காலத்திற்கு மாற்றமே இன்றி ஏமாற்றப்படும் இனமாக ஈழத்தமிழர் உள்ளனர். அவர்கள் இரு தரப்பாலும் ஏமாற்றப்படும் நிலையே உள்ளது. ஐந்து உடன்படிக்கையை இரு நாடுகளும் மேற்கொண்ட போதும் ஈழத்தமிழருக்கான தீர்வில் ஏதாவது ஒப்பந்தத்தையோ உறுதிமொழியையோ இரு தரப்பும் எட்டவில்லை. அப்படியாயின் ஈழத்தமிழர் தரப்பு எடுத்த முயற்சிகளும் வரைந்த கடிதங்களும் நடாத்திய சந்திப்புகளும் எதற்கானது. இந்தியாவுக்காக பரிந்து உரையாடுவதில் எத்தகை பயனை ஈழத்தமிழ் தரப்புக்கள் அடைந்து;ளளன என்ற கோள்வி தவிர்க்க முடியாததே. 13 க்குள் தீர்வு என கோரும் தரப்புக்கள் அதுவும் சாத்தியமற்றுள்ளது என்பதன் பின் எத்தகைய அரசியலை நகர்த்த திட்டமிடுகிறது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
-பேராசிரியர் கேரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
