தென் இலங்கை அரசியலில் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பிரதிபலிப்பு முடிபுக்கு வராத நிலையில் ஜெனீவா அரசியல் நிகழ்ந்துள்ளது. அதனால் ஜெனீவா அரசியல் அதிக முக்கியத்துவத்தை கொண்டிராத போதும் அங்கும் தென் இலங்கைக்கு ஆதரவான அரசியல் களம் ஒன்றின் நிலை காணப்படுகிறதை அவதானிக்க முடியும். அதில் இந்தியாவும் சீனாவும் தென் இலங்கை அரசியலை பாதுகாப்பதில் முனைப்புச் செலுத்தியுள்ளன. ஆனால் அதில் இந்தியாவின் நகர்வு ஈழத்தமிழர் அரசியலை அதிகம் மையப்படுத்தியே உள்ளது. சீனாவின் அணுகுமுறை தென் இலங்கையை முழுமையாக பாதுகாக்கும் விடயங்களில் கவனம் கொண்டுள்ளது. இக்கட்டுரை ஜெனீவா அரசியல் அரங்கின் யதார்த்தத்தை தேடுவதாக அமைந்துள்ளது.
கடந்த 04.09.2023இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 54வது கூட்டத்தொடர் நிகழ்துள்ளது. ஆன்றைய தினம் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் மனித உரிமைப் பேரவையின் பிரதி ஆணையாளர் நாடாஅல்-நஷிப் தலைமையில் நாடுகளின் பிரதிநிதிகள் உரை நிகழ்ந்துள்ளது. அதில் இந்தியா மற்றும் சீனப் பிரதிநிதிகள் உரையாற்றியிருந்தனர். அந்த உரையின் ஐ.நா வின் இந்தியப் பிரதிநிதி உரையாற்றியிருந்தார். அவரது உரையின் உள்ளடக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது.
இலங்கையின் அயல்நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடு என்ற ரீதியில் கடந்த 2009 இல் தொடக்கம் நிவாரணம், புனர்வாழ்வளித்தல், மீள்குடியேற்றம், மிளக்கட்டியெழுப்புதல் என முன்னிறுத்திய இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ச்சியான ஆதரவை வழங்கிவருகிறது. அது மாத்திரமன்றி இலங்கை சமகாலத்தில் முகங்கொடுத்துவரும் பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கு சுமார் 400 கோடி அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட பெறுமதியுடைய உதவிகளை வழங்கியிருக்கிறது. இந்தியா எப்போதும் இரண்டு அடிப்படைக் கொள்கையின் பிரகாரமே செயல்பட்டுவருகிறது. ஒன்று, நீதி, சமத்துவம், கௌரவம், சமாதானத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசைக்கு ஆதரவளிப்பது. இரண்டு, இலங்கையின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பது என்பதாகும். இதனை பூர்த்தி செய்யும் விதத்தில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினை அமுல்படுத்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தலை நடத்துதல் ஆகிய கடப்பாடுகளை நிறைவேற்றும் என்று எதிர்பார்கிறோம் எனத் தெரிவித்தார். இதனை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் வழங்கிவரும் உத்தரவாதங்களை கவனத்தில் கொள்ளும் அதேவேளை அடையாளப்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் போதுமானவையில்லை. எனவே அர்தபூர்வமான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாக மணி பாண்டே தெரிவித்துள்ளார்.
இதில் இரு பிரதான விடங்கள் ஈழத்தமிழர் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று இலங்கையின் இறையாண்மையும், ஒருமைப்பாடும் இந்தியாவால் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஆதனை எல்லாக்காலத்திலும் இந்தியா பாதுகாத்துவருகிறது. குறிப்பாக 1971ஆம் ஆண்டு ஜே.வி.பி. எழுச்சி ஏற்பட்ட போதும் பின்னர் 1980களுக்கு பின்னர் ஈழவிடுதலைப் ஆயுதப் போராட்டங்கள் எழுச்சி பெற்ற போதும் இந்தியாவே இலங்கையின் இறையாண்மையை பாதுகாத்தது என புரிந்து கொள்ள முடியும். 2009கள் அதன் உச்ச வளர்சியடைந்த காலமாக அமைந்திருந்தது. இதற்கு அமைவாகவே பதின்மூன்று பற்றிய உரையாடலை முதன்மைப்படுத்துகிறது. அதனாலேயே இலங்கைத் தீவின் இறைமையும் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்படுமென இந்தியா கருதுகிறது. இரண்டு, அதே நேரம் இலங்கைத் தமிழரது இனரீதியான பிரச்சினைக்கு இந்தியா கருதுவது போன்ற இறைமையும் ஒருமைப்பாடும் கொண்ட இலங்கைத் தீவுக்குள் தீர்வை எட்ட முடியுமா என்ற கேள்வி தமிழர் தரப்பிடம் அதிக காலமாக உண்டு. அதற்கான கோரிக்கைகள் 1949இலிருந்து தமிழர் தரப்பிடம் காணப்படுகிறது.
இறைமையும், ஒருமைப்பாடும் ஈழத்தமிழரது கோரிகையினால் மட்டுமே காணாமல் போகிறதா என்ற கேள்வி நியாயமானதாகவே தெரிகிறது. காரணம் ஈழத்தமிழர் சமஷ்டிக் கோரிக்கையை மிக நீண்டகாலமாக முன்வைத்துவருகின்றனர். ஆயுதப் போராட்டம் எழுச்சியடைந்த போது தனிநாட்டுக் கோரிக்கை பலமடைந்தது. ஆனால் சுதந்திர காலத்திலிருந்து சமஷ்டியானது ஒரு ஆக்கபூர்வமான தீர்வாக அமையும் என்ற உரையாடல் தமிழர் மத்தியில் உண்டு. உலக நடைமுறையும் அதன் புலமையும் இனரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வாக சமஷ்டியை தேர்வு செய்து செயல்படுத்திவருகிறது. சமஷ்டியில் ஒரு தேசத்தின் இறைமை பலவீனப்படுத்தப்படுகிறது எனக்கருதும் நிலை ஏற்பட்டால் உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான நாடுகள் ஐ.நா.சபையின் அங்கத்துவ நாடுகளாக காணப்படும் நிலை ஏற்பட்டிருக்கும். அது மட்டுமல்ல இலங்கைத் தீவின் இறைமை பாதுகாக்கப்படுவதென்பது அதன் மீதான ஆக்கிரமிப்பினையும் அந்திய சக்திகளின் தலையீட்டையும் பொருளாதார பண்பாட்டு இறைமையும் பாதுகாப்பதாக அமைய வேண்டும். ஏற்கனவே இலங்கைத் தீவு சீனா, இந்தியா, அமெரிக்காவினால் பங்குபோடப்படுவதாக அரசியல்வாதிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத் திட்டமிடல்கள் அனைத்துமே இலங்கையின் இறைமைசார்ந்த கேள்வியை எழுப்புகிறது. இலங்கை ஒரு இறைமை படைத்த நாடு என்ற நியதியை இத்தகைய விடயங்கள் எந்தளவுக்கு பாதித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதனால் இலங்கையின் ஒருமைப்பாடு பேணப்படுகிறதா என்பது முக்கியமான உரையாடலாக உள்ளது. இங்கு ஆரசியல் இறைமை பற்றிய உரையாடலே முதன்மையானதாக உள்ளதே அன்றி ஏனைய விடயங்கள் முதன்மைப்படுத்தப்படுவதில்லை. 1453இல் ஐரோப்பிய அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட வெஸ்பாலிய உடன்பாட்டின் கீழேயே தேசியங்களின் இறைமை வரையறுக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தேசியங்களின் இருப்பினால் தேசங்கள் கட்டமைக்கப்பட்டு அத்தகைய தேசங்களின் வளங்கள் பாதுகாக்கப்படுவதே உடன்பாட்டின் இலக்காக இருந்தது. அதுவே தேசிய அரசின் உதயமும் இருப்புமாகும். அதனாலேயே வெஸ்பாலியா ஐரோப்பிய வரலாற்றில் முதன்மையானதாக கருதப்படுகிறது. ஆனால் அதன் வளர்ச்சிக் கட்டத்திலேயே இன்றைய அரசறிவியல் உலகம் உள்ளது. 1776 இல் அமெரிக்கா ஐக்கிய அமெரிக்காவாக கட்டமைக்கப்பட்டது. அதனை அடியெற்றி ஐரோப்பாவிலும் ஏனைய கண்டங்களிலும் சமஷ்டி மாதிரி இனப்பிரச்சினைக்களுக்கு வலுவான தீர்வாக அமைந்திருந்தது. இவை எதுவும் சாத்தியமற்ற போதே பிரிவினை ஒரு தீர்வாக உலகளாவிய ரீதியில் முன்மொழியப்படுகிறது. இது மக்கள் இறைமையின் சகாப்தமாகும். இதன்பால்பட்டே தேசியங்களும், தேசங்களும் கட்டமைக்கப்பட்டுவருகிறது. இறைமையும், ஒருமைப்பாடும் மக்கள் சார்ந்ததே அன்றி அரசுகள் சார்ந்தது மட்டுமல்ல.
மறுபக்கத்தில் சீனாவின் ஐ.நா.பிரதிநிதி உரையாற்றும் போது இலங்கையின் மனித உரிமையை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் 51/1தீர்மானம் பக்கச்சார்பற்ற வகிபாகத்தைக் கொண்டிருக்கவில்லை எனவும் நல்லிணக்கம் மீளக்கட்டியெழுப்புதல், பயங்கரவாதத்தை தோற்றடித்தல், நலிவடைந்த மக்களின் உரிமையை பாதுகாத்தல்,பொருளாதார மீட்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தல் என்பவற்றில் இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகளை பாராட்டுவதாக தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடும் போது, ஐ.நா.மனித உரிமைப் பேரவை நாடுகளின் இறையாண்மை மற்றும் அரசியல் சுயாதீனத்தற்கு மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இது தென் இலங்கையை வெளிப்படையின் அனைத்துவகை அரசியலையும் ஆதரிப்பதாக உள்ளது. அதுவே சீனாவுக்கான நிலைப்படாகும். காரணம் சீனா அரசியல் இறைமையை மட்டும் வலியுறுத்தும் நாடு. அதிலும் அரச இறைமையை மட்டும் கொண்ட நாடு. ஆனால் இந்தியா மக்கள் இறைமைக்குள்ளால் ஆளப்படும் நிலைப்பாட்டை கொண்டது. இரண்டுமே இலங்கைத் தீவின் அரசியலில் ஒரே வரையறையைக் கொண்டுள்ள நாடுகளாகவே உள்ளதாகவே தெரிகிறது. அடிப்படையில் இறைமை சார்ந்து இரு நாட்டுப் பிரதிநிதிகளும் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் ஆற்றிய உரைகள் ஒன்றாகவே தெரிகிறது. அது மட்டுமல்லாது இந்தியா தொடர்ச்சியாக மேற்குறித்த உரையாடலையே அதிககாலமாக மேற்கொண்டுவருகிறது. அதில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. அப்படியாயின் இந்தியா பிராந்திய அரசியலைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு நகர்வதாகவே புரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசியலுக்குள் இனப்பிரச்சினை குறித்து மாற்றம் ஏற்படும் என்பதில் சமகாலம் தெளிவான புரிதல்களைத் தந்துள்ளது. அதனை இந்தியத் தரப்பு புரிந்து கொள்ளத்தவறுவதும் அதன் விளைவுகளே இலங்கைத் தீவின் சீனா போன்ற வல்லரசுகளது நகர்வுகள் அதிதீவிரமாக அமைவதையும் கண்டு கொள்ள முடிகிறது. சீனாவின் தீவிர தலையீடு இலங்கைத் தீவின் இறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற உரையாடலை தமிழ் அரசியல்வாதிகள் முன்வைத்துவருசின்றனர். அதுவே அனேக புலமையாளர் மத்தியிலும் காணப்படுகிறது. அப்போது இலங்கைத் தீவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமை பற்றிய புரிதல் தெளிவாக அமைய வாய்ப்புள்ளதாகவே தென்படுகிறது. பிராந்திய சர்வதேச நலன்களுக்குள்ளால் ஈழத்தழிரது அரசியலுக்கான தீர்வும் கோரிக்கையும் நகர்கிறது என்பது மட்டுமே தற்போதைக்கு பொருத்தப்படானதாக அமையும்.
எனவே ஜெனீவா அரங்கில் நிகழ்ந்துவரும் அரசியல் மாற்றங்கள் அதிகமான உரையாடலை ஈழத்தமிரது தீர்வில் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் சீனாவும் பயணிக்கும்திசையை கணக்கிட்டுக் கொள்வதற்கும் தென் இலங்கையின் அரசியல் இருப்பினைப் பாதுகாக்கும் தரப்புகளது நிலைப்பாடுகளும் உணரமுடிகிறது. இதுவே ஈழத்தமிழரது அரசியல் யதார்த்தமாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.-
(நன்றி: தினக்குரல்)
