இலங்கை -இந்திய உறவின் பரிமாணம் எப்போதும் ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது. தென் இலங்கையின் அரசியல் தலைவர்களது தந்திரமும் இந்தியத் தலைவர்களின் அணுகுமுறையும் மாறிமாறி இரு நாட்டுக்குமான உறவை தீர்மானிக்கும் சக்தி படைத்ததாக அமைந்துள்ளது. சமகாலத்தில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு பின்னர் இந்திய-இலங்கை உறவு தளம்பல் அடைகிறதா என்ற சந்தேகத்தை தரமுயலுகிறது. அதற்கான அடிப்படைக்காரணமாக அமைந்திருப்பது அமித்ஷாவின் உரையும் அதன் பின்பான அவரது டுவிட்ரர் பதிவுமாகும். அமித்ஷா இலங்கையில் 2009 இல் நடைபெற்றது இனப்படுகொலை என இராமேஸ்வரத்திலிருந்து (28 யூலை 2023)பேசியதுடன் இரு வாரங்களாக அமித்ஷாவின் டுவிட்ரரில் பதிவிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் அமித்ஷாவின் வெளிப்படுத்துகையின் அரசியலைத் தேடுவதாக உள்ளது.
14 ஓகஸ்ட் மாதம் 1983 இல் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி 1983 இல் இலங்கையில் தமிழருக்கு எதிராக நிகழ்ந்த யூலை இனக்கலவரம் ஓர் இனப்படுகொலை எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அத்தகைய இந்திராகாந்தியின் கருத்தினை தெளிவான அரசியலாக ஈழத்தமிழ் அரசியல்-சிவில் தலைவர்கள் முன்னெடுத்திருந்தால் முள்ளிவாய்க்காலை எதிர்கொள்ளாது தவிர்த்திருக்கலாமா என்ற எண்ணம் தவிர்க்க முடியாததாகும். யூலை இனக்கலவரமே ஆயுதப் போராட்டத்திற்கு தூண்டியது மட்டுமல்லாது இந்தியாவின் அனுசரணையுடன் அதனை ஈழத்தமிழர் மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. ஏறக்குறைய ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை என்ற சொல்லை 2009களுக்கு பின்பே அதிகம் பயன்படுத்தினர். ஆனால் இந்திராகாந்தி அம்மையார் 1983இலே அதனை முதன்மைப்படுத்தியிருந்தார். ஈழத்தமிழரது அரசியல் வறுமையே அதனை முன்னகர்த்த முடியாமல் போனமைக்கான காரணமாகும். மீளவும் ஒரு உரையாடல் மத்திய அரசாங்கத்திடமிருந்து எழுந்துள்ளது. அதுவே அமித்ஷாவின் அறிவிப்பாகும்.
இந்த அறிவிப்பு ஈழத்தமிழருக்கும் இந்தியாவுக்குமான புரிதலை மேலும் பலப்படுத்துவதாகவே உள்ளது. கடந்த காலத்தில் அதிக கசப்புணர்வைத் தந்திருந்த ஈழத்தமிழர்-இந்திய உறவானது மீளவும் நம்பிக்கையுடன் எழுச்சிபெற ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் ஈழத்தமிழர் தமது அரசியல் இருப்புக்கு நம்பிக்கை அளிப்பதாக கருதுகின்றனர். உள்நாட்டில் ஏற்பட்டுவரும் நெருக்கடிகளை எல்லாம் கடந்து பாதுகாப்பான இருப்புக்கு இந்தியாவின் கரிசனை முதன்மையானதாக அமைந்துள்ளது என்ற விடயத்தை கவனத்தில் கொள்ள ஈழத்தமிழர்கள் தவறவில்லை. இது புதுடில்லியுடன் ஆரோக்கியமான அரசியல் உறவை உருவாக்க ஈழத்தமிழருக்கு உதவுகிற விடயமாகவே தெரிகிறது. இது படிபப்டியாக அரசியல்-சிவில் மற்றும் புலம்பெயர்ந்த தரப்புக்களால் கட்டி வளர்க்கப்பட வேண்டிய விடயமாகும். இந்தியாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை பொறுத்த கொள்கையில் ஏற்படும் மாற்றங்களை ஈழத்தமிழர் கையாள வேண்டும்.
இந்தியாவின் உள்த்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து ஈழத்தமிழர் அரசியலில் முக்கியமானது. அதனை 2024 க்கான தேர்தல் உரையாடல் என குறிப்பிட்டுவிட்டு கடந்து செல்ல முடியாது. அமித்ஷாவின் உரையில் ‘காங்கிரஸ் மற்றும் திமுக வின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதே இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழக மீனவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது தேர்தல் அரசியலாகவே தெரிகிறது. ஆனால் அரசியல் தலைவர்கள் மக்களையும் அவர்களது பிரச்சினையையும் எப்போது உரையாடுகிறார்கள் என்ற புரிதல் எல்லோருக்கும் வேண்டும். தேர்தல் காலங்களிலேயே தலைவர்களும் கட்சிகளும் மக்களை அணுகுகிறார்கள். அப்போதே தீர்மானங்களும் முடிபுகளும் அறிவிப்புகளும் முன்வைக்கப்படுகிறது. அதில் சிலவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள் பலவற்றை கைவிட்டுவிடுகிறார்கள். ஆனால் தற்போது ஆளும் மத்திய அரசாங்கம் தமிழகத்தில் தனது தேர்தல் செல்வாக்கை பலப்படுத்த முயலுகிறது. தமிழகத்தில் அரசியல் செல்வாக்கை பலப்படுத்த திட்டமிடுகிறது. இந்த சந்தர்ப்பத்தை ஈழத்தமிழர் கையாள வேண்டிய அல்லது பயன்படுத்த வேண்டிய பொறுப்புடையவர்களாக உள்ளதென்பது தவறான புரிதலாக கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 1983இல் தவறவிட்டதன் விளைவைப் போன்று மீளவும் தவறவிடுவதன் மூலம் ஈழத்தமிழர் துயரத்தை மீளவும் அனுபவிக்கப் போகிறார்களா என்ற சந்தேகம் பலமடைகிறது. அதனால் அமித்ஷாவின் கருத்தினை பலப்படுத்த ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளும் புலம்பெயர்ந்த அரசியல் தலைமைகளும் கவனம் கொள்ள வேண்டும். அதனை லோக்சபாவில் தீர்மானமாக கொண்டுவருவதன் மூலம் தமிழர்களது அரசியல் பிரச்சினைக்கு இலகுவான தீர்வென்றை எட்டமுடியும்.
அமித்ஷாவின் உரை பற்றி தவறான புரிதல்கள் ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளிடமும் அதன் தலைமைகளிடமும் நிலவுகிறது. குறிப்பாக இதனை ஆதரித்தால் பாரதீய ஜனதாவின் விருப்புக்கு இசைவதாக அமைந்துவிடும் என்றும் அதனால் திமுக, அதிமுக, மதிமுக, மற்றும் நாம் தமிழர் கட்சிகளுடன் முரண்பாட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று கருதுகின்றனர். இது ஒரு தவறான புரிதலாகும். மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதனை கட்சியாகப் பார்ப்பதை விடுத்து அரசாங்கமாக நோக்குவதே மரபாகும். இதுவே மாநில ஆட்சியிலும் கருதப்பட வேண்டிய விடயமாகும். ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமாக தம்மை அடையாளப்படுத்த வேண்டுமே தவிர கட்சி மரபுக்குள்ளால் விடயத்தை கையாள வேண்டியதில்லை. அதனை உள்ளாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாமே அன்றி வெளிநாட்டு அரசியலில் பின்பற்ற வேண்டியதில்லை. கட்சிகளே அரசாங்கமாகவும் அரசின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களாகவும் உள்ளன. அத்தகைய அடிப்படையை புரிந்து கொள்ளாத அரசியல் கட்சிகளாலும், அரசியல்வாதிகளாலும் தமிழ் மக்கள் எதனைப் பெற்றுவிடப் போகிறார்கள் என்பது கேள்வியாகவே உள்ளது.
அமித்ஷாவின் அறிவிப்பை ஈழத்தமிழ் பரப்பில் எந்த அரசியல் கட்சியோ அரசியல்வாதிகளோ இக்கட்டுரை எழுதப்படும் வரை உரையாடவில்லை என்பது துயரமானதே. இனப்படுகொலை என ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என ஓயாமல் உரைக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் கூட கருத்தில் கொள்ளவில்லை. கனடியப் பிரதமர் இனப்படுகொலை எனக் குறிப்பிட்டதற்கு வரவேற்பு தெரிவித்த தமிழ் அரசியல் கட்சிகள் அயல் நாடான இந்தியாவின் உள்த்துறை அமைச்சர் தெரிவித்த கருத்திற்கு எத்தகைய எதிர்வினையும் ஆற்றாமை அதிக குழப்பத்தையும் சந்தேகத்தையும் தருகிறது. ஐ.நா.சபை என்பது நாடுகளின் சபையே அன்றி தேசியங்களின் சபை அல்ல. அத்தகைய நாடுகளின் இருப்பினாலேயே சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. அதில் இந்தியாவின் பங்கு ஈழத்தமிழர் விடயத்தில் முக்கியமானது. அதனைப் புரிந்து கொள்ளாத அரசியல் கட்சிகள் எதனை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப் போகிறார்கள் என்பது பிரதான கேள்வியாகவே உள்ளது. இதில் பழைய கூட்டமைப்பு, புதிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் தமிழரசுக் கட்சி என்ற வேறுபாடின்றி அமித்ஷாவின் அறிவிப்பை எத்தகைய கையாளுகையும் இன்றி கைவிட்டுள்ளனர். எவ்வாறு 1983 இல் இனப்படுகொலை என்ற எண்ணம் கவனிப்பாரின்றி காணப்பட்டதோ அவ்வாறே புலத்திலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளால் கைவிடப்பட்டுள்ளது. முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மட்டுமே அமித்ஷாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்தை பதிவு செய்துள்ளார். ஏனைய எந்த அரசியல் கட்சியோ, தலைவர்களோ அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை என்பது ஈழத்தமிழரது அரசியல் பலவீனத்தை காட்டுவதாக உள்ளது.
எனவே அமித்ஷாவின் இனப்படுகொலை என்ற அறிவிப்பு எத்தகைய அரசியல் நோக்கத்தைக் கொண்டிருந்தாலும் ஈழத்தமிழரது அரசியலுக்கானது. இந்திய மத்தியரசின் நலனும் ஈழத்தமிழரது அரசியல் நலனும் சந்திக்கும் புள்ளி தான் அரசியல் அடைவாகும். அத்தகைய அடைவுக்கான வாய்ப்புக்கள் இந்திராகாந்தியால் 1983 இல் ஏற்பட்டது. மீளவும் 2023 இல் அமித்ஷாவினால் ஏற்பட்டுள்ளது. ஈழத்தமிழருக்கு கிடைத்துவரும் வாய்ப்புக்கள் தவறவிடுவதும் பின்னர் அதற்காக போராடுவதாக காட்டுவதும் பொருத்தமற்ற அரசியலாகும். 1983 தவறுகளை மீளவும் 2023 இல் தமிழ் அரசியல் தரப்புக்கள் மேற்கொள்வது போலித்தனத்தின் பிரதிபலிப்பாகவே தெரிகிறது. கனடா போன்று இந்தியாவின் மத்திய அரசாங்கம் லோக்சபாவில் இனப்படுகொலை எனும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உரையாடலை தமிழ் தரப்பு முன்னெடுக்க வேண்டிய தருணமாகும். ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து துயரத்திற்கும் தீர்வை முன்னெடுக்கும் நிலையில் தென் இலங்கை அரசியலோ மத அமைப்புக்களோ தயாரில்லை என்பது தெளிவான புரிதலாகும். இந்தியப் புலனாய்வுத் துறையின் அண்மைய அறிவிப்பானது 1980களை நோக்கி இலங்கைத் தீவு பயணிக்கிறதா என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. 1983ஆம் ஆண்டைப் போன்று ஒரு இனக்கலவரத்தை தூண்டும் நகர்வுகள் இலங்கைத் தீவில் காணப்படுவதாக இந்தியப் புலனாய்வுத்துறை அறிவித்ததாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன. தென் இலங்கையில் காணப்படும் அரசியல் பொருளாதார நெருக்கடியும் வடக்கு கிழக்கு மீதான பௌத்தமத தீவிரமும் புவிசார் மற்றும் பூகோள அரசியல் சக்திகளாலேயே கவனிக்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனாவின் ஆய்வுக்கப்பல்களும் புலனாய்வுக் கப்பல்களும் அத்தகைய அரசியலை தீவிரப்படுத்தும் என்பது யதார்தமான செய்தியாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
