அரசியல் கட்டுரைகள்

ஜனாதிபதியின் அரசியலும் பதின்மூன்றாவது சீர்திருத்திற்கான பாராளுமன்ற விவாதமும்?

இலங்கைத்தீவின் அரசியல் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் சாத்தியப்பாட்டை அடைய முயல்வதாகவே தெரிகிறது. அதனை நோக்கி அயல்நாடான இந்தியாவும் நகர்வதாகவே விளங்கிக் கொள்ளப்படுகிறது. இந்திய-இலங்கை கூட்டு முயற்சியில் மீளவும் ஒரு தீர்வுக்கான நடவடிக்கை சாத்தியப்படப் போவதாகவே தெரிகிறது. அத்தகைய அரைகுறை தீர்வு முயற்சியை தமிழ் தரப்பு எதிர்கொள்வதற்கு திராணியற்றுள்ளது. கடந்த காலங்களில் எழுந்த அனைத்து முயற்சிகளையும் தமிழ் தரப்பாக கட்சிகளும் ஆயுதப் போராட்ட அமைப்டபுக்களும் எதிர் கொண்டிருந்தன. தற்போது கட்சிகள் பெருமளவுக்கு ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முன்வைக்கும் தீர்வுக்கு உடன்படும் நிலைக்குள்ளேயே காணப்படுகின்றனர். அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன. ஒருசில கட்சிகள் எதிர்த்தாலும் அவை அதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் திறனற்றவையாக உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக பதின்மூன்றாவது சீர்திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறப்படுவதில் ஏன் கவனம் கொள்ளப்படுகிறது என்பதே தற்போதுள்ள பிரதான கேள்வியாகும். இதனை விளங்கிக் கொள்ள இக்கட்டுரை முயலுகிறது.

ஒன்று, பதின்மூன்றாவது சீர்திருத்தமானது இலங்கை-இந்திய உடன்படிக்கையில் எட்டப்பட்டு இலங்கை அரசியலமைப்பில் (42.இலக்க) சட்டமூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு 35 வருடமாக அமுலாக்கத்திற்கு உட்பட்ட வரைபொன்றினை மீளவும் பாராளுமன்றத்தில் விவாதிப்பது வாக்கெடுப்புக்கு விடுவதென்பது பாராளுமன்றத்தின் இறைமையை வறிதாக்கும் செயலாகும்.ஏற்கனவே வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மீறப்பட்டுள்ளது. அதனைக்கூட நீதிமன்றத் தீர்ப்பென நியாயப்படுத்திக் கொண்டாலும் நல்லிணக்கத்திற்கு அபாயமானதாகவே உணரப்படுகிறது. ஆனால் இலங்கை ஆட்சியாளர்களுக்கு அரசியலமைப்பை மீறுவதென்பது புதியவிடயமல்ல. பாராளுமன்ற முறைமையையோ சட்டத்தின் வலிமையையோ தமது இன ஜனநாயகத்திற்கு பலியிடும் மரபை தென் இலங்கைத் அரசியல் தலைவர்கள் கொண்டவர்கள். அத்தகைய ஒரு மீறல் மீளவும் நிகழப்போகிறது. அதற்கு தமிழ் தரப்பும் இந்தியாவும் துணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா நலன்சார்ந்து நகர்ந்து கொண்டாலும் தமிழ் அரசியல் தலைவர்கள் பலியிடப்படுகிறதாகவே உணரப்படுகிறது. சட்டத்திலுள்ளவற்றை நிறைவேற்றுவதற்கே நிர்வாகத்துறையும் நிறைவேற்று நிர்வாகத்துறையுமுண்டு. அவ்வகை சட்டம் மக்களுக்கு பயனுடையதா இல்லையா என்பதையும் முழுமையாக அமுலாக்கப்படுகிறதா என்பதையும் கண்காணிப்பதே நீதித்துறையின் பணியாகும். ஆனால் அவை எதுவும் இலங்கையில் சாத்தியமற்றதாகவே விளங்குகிறது. அமுலாக்கத்திலுள்ள ஒரு விடயத்தை முழுமையாக அமுலாக்கம் செய்வதற்கு பாராளுமன்றத்தில் விவாதித்து வாக்கெடுப்பு மேற்கொள்ள முயலும் ஓரே நாடு இலங்கை மட்மே. அதனை தென் இலங்கை ஆட்சியாளர்களால் மட்டுமே முடியும்.

இரண்டு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலமுடைய கட்சியாகவும் ஆளும் தரப்பாகவும் பொதுஜனப் பெரமுன விளங்குகிறது. அதன் பெரும்பான்மை உறுப்பினர்கள் பதின்மூன்றாவது சீர்திருத்தினை முழுமையாக அமுலாக்கம் செய்வதற்கு பதிலாக முழுமையாக நீக்கிவிட வேண்டும் எனக் கருதுபவர்கள். அதனால் ஏற்படப் போகும் விவாதம் எத்தகையதாக அமையும் என்பதில் அதிக குழப்பம் கொள்ளத் தேவையில்லை. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட பதின்மூன்றை நீக்கிவிட்டு உள்ளூராட்சி அதிகாரங்கள் இனப்பிரச்சினை தீர்வுக்கு போதுமானது என்ற கருத்தை அதிகம் கொண்டவர். தற்போது கூட இனப்பிரச்சினைக்கான தீர்வை இலங்கைக்குள் எட்ட முடியுமென தெரிவித்துவருகிறார். இதே கருத்தினையே பொதுஜனப் பெரமுன உறுப்பினர்கள் அதிகம் கொண்டுள்ளனர். அது மட்டுமல்ல பொதுஜன பெரமுனாவிலிருந்து பிரிந்து சென்றவர்களும் அதே கருத்தினைக் கொண்டுள்ளனர். அண்மையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த வேட்பாளரான டலஸ் அழகப்பெருமாளும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரமற்ற பதின்மூன்றை தமிழருக்கு வழங்க வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். எனவே இதற்கூடாக ஜனாதிபதி பதின்மூன்றாவது திருத்தத்தினை முடிபுக்கு கொண்டுவருதல் என்ற அணியின் நிலையை பலப்படுத்த முயலுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. அல்லது அவ்வாறே பலவீனமான பதின்மூன்றை அமுல்படுத்தவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வை முழுமைப்படுத்திவிட முடியுமென கருகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

மூன்று, பதின்மூன்றாவது திருத்தம் இந்த நாட்டுக்கு அவசியம் என தனது உரையைத் பாராளுமன்றத்தில் தொடக்கிய ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எழுந்துள்ள பதில்கள் அபாயமான நிலையையே தோற்றுவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினரான விமல்வீரவம்சாவும், அத்துரளிய ரத்தின தேரரும் வெளிப்படுத்திய தகவல்கள் அதிகம் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மீண்டும் ஒரு இன வன்முறைக்கு கொண்டு செல்லும் சூழலை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை அவர்களது உரைகள் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லீம்கள் பற்றிய கரிசனையை தென் இலங்கைத் தலைவர்கள் எழுப்பியதுடன் வடக்கு கிழக்கிலுள்ள சிறுபான்மையான சிங்கள மக்கள் பற்றியும் தென் இலங்கைத் தலைவர்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களுக்கான தீர்வையும் உரையாடுமாறும் அவர்களை இணைத்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். இது பதின்மூன்றாவது திருத்தத்திற்கு முன்னாலோ பின்னாலோ செல்ல முடியாது என்பதை கேடிட்டுக் காட்டுவதாக தெரிகிறது. இத்தகைய அனுபவம் தென் இலங்கைப் பாராளுமன்றத்திற்கு அதிக காலமாக உண்டு என்பதை மறந்துவிட முடியாது. சமாதானம் பேசுவதிலேயே கடந்த எழுபத்தைந்து வருடங்கள் சென்றுள்ளது. தீர்வு எதுவுமே எட்டப்படவில்லை. எட்டிய தீர்வுகளும் குழப்பப்பட்டுள்ளது.

நான்கு, ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் சாரம்சம் முழுமையாக இந்தியாவை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. அவரது உரையின் தொடக்கமே பதின்மூன்றாவது சீர்திருத்தம் நாட்டுக்கு அவசியமானது என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. அவ்வாறே இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ள உடன்பாடுகள் சார்ந்தும் அதனால் ஏற்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் சார்ந்தும் உரையாற்றியிருந்தார். இந்தியாவுடன் இணைந்து வடக்கு கிழக்கிலும் ஏனைய பிராந்தியங்களிலும் கட்டமைக்கப்படவுள்ள பசுமைத் திட்டங்களையும் முதலீட்டு ஈர்ப்பு முயற்சிகளையும் தனது உரையில் முதன்மைப்படுத்தியிருந்தார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றியும் அதானி குழுமத்தின் முதலீடுகள் பற்றியும் உரையில் தெரிவித்திருந்தார். ஒருவகையில் ஜனாதிபதியின் பதின்மூன்றாவது சீர்திருத்த அமுலாக்குவதற்கான நகர்வு இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்புக்கான நகர்வாகவே தென்படுகிறது. அதன் முக்கியத்துவத்தை அதிகம் கோடிட்டுகாட்டியதாகவே உரையின் கணிசமான பகுதி அமைந்திருந்தது.

ஐந்து, வடக்கு கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளது விடுவிப்புக்கான தகவலும் காணாமல்போனோருக்கான அலுவலகத்தின் செயல்பாடும் நிதிப்பிரயோகமும் அதிகம் உரையில் காணப்பட்ட இன்னோர் விடயமாகும். இதன்வாயிலாக ஒரு செய்தியை இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் தெரியப்படுத்த முயலுகிறதாகவே தெரிகிறது. அத்தகைய அலுவலகத்தினதும் நிதிப்பங்களிப்பினதும் பிரயோகம் எந்தளவுக்கு பயனற்றதென்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரிந்த விடயம். ஆனால் அதனை ஜனாதிபதி தனது உரையின் மூலம் மறைத்துள்ளதுடன் செயல்படுத்தப்படாத விடயங்களை பட்டியலிடுவதன் வாயிலாக அத்தகைய செயல்பாடுகளை கையாள முயன்றுள்ளார் என்பது புலனாகிறது. நல்லிணங்க செய்முறை பற்றிய புதிய திட்டங்களை சமர்ப்பித்த ஜனாதிபதி பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான புதிய வரைபுகள் சார்ந்தும் விவாதத்தை தொடக்கியுள்ளார். தமிழ் மக்களுக்கு ஒர் அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற உரையாடலை பல இடத்தில் சுட்டிக்காட்டும் ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தது.

ஆறு, கடந்த நாட்களில் ஐலண்ட பத்திரிகை தனது ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிடுவது போல் தமிழ் மக்களுக்கு ஒர் அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொள்ள முயலுவதாக கருதிக் கொள்ள முடியும். ஆனால் ஜனாதிபதி தேர்தலைவிட பெரும்பான்மைத் தேசியத்தின் இருப்பினை அதிகம் பாதுகாக்க எத்தனிக்கு தலைவராக கடந்த காலத்தில் விளங்கியவர் என்பது கவனத்திற்கு உரியதாகும். இதன் மூலம் சிங்கள பெரும்பான்மை தேசியத்தின் பாதுகாவலனாக அடையாளப்படுத்துவதுடன் அதன் சார்பில் எழுந்துள்ள சவாலை வெற்றி கொள்ள முயலும் அரசியல் தலைவராக ஜனாதிபதி விளங்குவார். இலங்கைத் தீவின் அரசியலும் பொருளாதாரமும் ஒன்றாக பாதுகாக்கப்பட வேண்டும் எனக்கருதும் ஜனாதிபதி இந்தியாவின் பலத்தை ஒத்துழைப்பாக மாற்ற முயலுகிறதாகவே தெரிகிறது. சீனா பொறுத்து இந்தியாவின் நகர்வுகளே ஜனாதிபதியின் அரசியலும் இலங்கைத் தீவின் அரசியலுமாகும். அதன் உண்மைத் தன்மையைக் காட்டிலும் அதி தீவிரம் பொருந்தியதாக காட்டப்படுகிறது.

எனவே, பதின்மூன்றாவது சீர்திருத்த அமுலாக்கத்திற்கான பாராளுமன்ற விவாதம் அதன் அடிப்படையை இழக்க செய்யும் செய்முறையாக மாறுவதாகவே தெரிகிறது. அதற்கான உரைகளும் எதிர்ப்புகளும் ஆரம்பமாகியுள்ளன. தென் இலங்கைப் பாராளுமன்றம் தமிழருக்கான தீர்வு முயற்சிகள் பலவற்றை உரையாடியுள்ளது. ஆனால் ஒருபோதும் முழுமையான தீர்வை உத்தரவாதப்படுத்தவில்லை. தற்போது மீளவும் அத்தகைய நகர்வை ஆரம்பித்துள்ளது. இதன் சாரமும் கடந்த காலத்தைப் போன்று நகர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. மீண்டும் ஓர் துயரத்திற்குள் ஈழத்தமிழரது அரசியல் பக்கம் கட்டமைக்கப்படுகிறது. இந்தியாவின் அடுத்த பிரதமரென கருதப்படுபவரும் தற்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான அமித்ஷா இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை என தெரிவித்துள்ளார். இதே கருத்தினை 1980களில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் தெரிவித்திருந்தார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் ஏற்பட்ட மாற்றங்களை தென் இலங்கை எவ்வாறு கையாண்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் ஜனாதிபதியின் இந்திய விஜயம் இந்தியத் தரப்புக்கு திருப்தியை கொடுக்கவில்லை என்பதை அமித்ஷாவின் டுவிட்ரர் பதிவு உறுதிப்படுத்தியுள்ளது. (வாசகர்களே, இது பற்றிய புரிதலை அடுத்தவாரம் உரையாடுவது பொருத்தமானதாக அமையும்.)

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)